PM-KUSUM திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. -குஷ்பூ குமாரி

 மின்கல ஆற்றல் சேமிப்பு ஏற்பாடுகள் முதல், முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட PM-KUSUM திட்டத்தின் 'வேளாண்-சூரிய மின்சக்தி கூறு வரை — PM-KUSUM திட்டத்தின் முக்கியக் கூறுகளை  தெரிந்துகொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


 ஒன்றிய  அரசு தனது முக்கிய திட்டமான பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான்  மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட (revamped) திட்டத்தில், மின்கலம் சேமிப்பு (battery energy storage) என்ற புதிய அம்சத்தை சேர்ப்பது பற்றி ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது என்று The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய  அம்சங்கள்:


1. 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்,  ஊரக பகுதிகளில் சிறிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் நிலையங்கள், தனியாக  இயங்கி வரும்  சூரிய சக்தி பம்புகள் (standalone solar pumps) ஆகியவற்றை நிறுவுவதையும், ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பம்புகளைச் சூரிய ஆற்றலாக மாற்றுவதையும் ஊக்குவிக்கிறது.


காலநிலை இலக்குகள்


கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவின்  3-வது 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின்' (nationally-determined contribution (NDCs)) படி, 2035-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் குறைந்தது 60 சதவீதம் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக இந்தியா உறுதியளித்துள்ளது. மேலும், 26-வது கால நிலை மாநாட்டில், 2030-ஆம் ஆண்டிற்குள் 500 GW அளவிலான புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை அடைய வேண்டும் என்ற இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான்  மகாபியான் திட்டம் இந்தியாவின் பசுமை ஆற்றல் மாற்றம் (clean energy transition) மற்றும் அதன் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய தூணாக தொடர்ந்து  செயல்ப்பட்டு  வருகிறது.


2.  இந்தத் திட்டம்,  உழவர்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சில சமயங்களில், உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டவும் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் வழங்கும் இரண்டு நன்மைகள் மின்சார அணுகல் (energy access) மற்றும் வருமான உருவாக்கம் (income generation) ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் முந்தைய   வேளாண் மின்சார திட்டங்களிலிருந்து இதை தனித்தும்  மிக்கதாக  காட்டுகின்றன.


3. வேளாண் துறையில் சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, மார்ச் 2026-க்குள் 34,800 மெகாவாட் சூரிய ஆற்றல் திறனைச்   மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின்கீழ் மொத்தம் 12,164 மெகாவாட் திறன்  உருவாக்கப்பட்டுள்ளது. இது மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது: அவை,


கூறு அ: பரவலாக்கப்பட்ட சூரிய மின் நிலையங்களை அமைத்தல்,


கூறு ஆ: மின்சாரம் இல்லாத பகுதிகளில் தனியாக இயங்கும் சூரிய ஆற்றல் இணைப்புகளை உருவாக்குதல்,


கூறு இ: சூரிய ஆற்றலால் இயங்கும் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட உழவர்களுக்கான  குழாய்கள் உருவாக்குதல்  ஆகும்.

4. கூறு இ-ன் கீழ், தனிப்பட்ட அலகுகளை சூரிய ஆற்றல்மயமாக்கல் (Individual Pump Solarisation (IPS)) மற்றும் முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் (Feeder-Level Solarisation (FLS)) ஆகிய இரண்டையும் ஒன்றிய அரசு ஆதரிக்கிறது. மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட உழவர்களுக்கானப் பம்புகளைக் கொண்ட உழவர்கள் தங்களின் தனிப்பட்ட அலகுகளைச் சூரியசக்தியால் இயங்க வழிவகை செய்யும் அதே வேளையில், முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் (FLS) முறையின் மூலம், ஒவ்வொரு பம்பையும் தனித்தனியாக மாற்றுவதற்குப் பதிலாக, அனைத்து  வேளாண் மின்விநியோக அலகுகளை மாநிலங்களே ஒரேநேரத்தில் சூரிய ஆற்றல்மயமாக்க முடியும்.


5. நாடாளுமன்றத்தில் மின்சார அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of Power and the Ministry of New and Renewable Energy (MNRE) வழங்கிய தரவுகளின்படி, கூறு அ-ன் கீழ் 839.4 மெகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. கூறு ஆ-ன் கீழ், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்த வேளாண் பம்புகள் நிறுவப்பட்டுள்ளன. கூறு இ-ன் கீழ், 12,787-க்கும் மேற்பட்ட பம்புகள் தனிப்பட்ட அலகுகளை சூரிய ஆற்றல்மயமாக்கல் (Individual Pump Solarisation (IPS)) மூலம் சூரிய ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளன. அதே, நேரத்தில் முழு வேளாண் மின் தொடர் அளவிலான சூரிய ஆற்றல்மயமாக்கல் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகளை கொண்டுள்ளது. இதன் மொத்த நிறுவப்பட்ட திறன் 6,636.9 மெகாவாட் ஆகும்.


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தின் நோக்கம்


டீசல் மற்றும் ஒழுங்கற்ற மின் கட்டமைப்பு ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைத்து,   உழவர்களின்  பாசனத்திற்கு நம்பகமான மின்சாரம் கிடைக்கும்.


சூரிய மின் உற்பத்தி, அதிக மின்சாரத்தை விற்பனை செய்தல் மற்றும் நிலம் வாடகைக்கு விடுதல் மூலம் உழவர்களுக்கு கூடுதல் வருமானத்தை கிடைக்க செய்யும்.  


 டீசல் பயன்பாட்டைக் குறைத்து, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை நிறைவேற்றுவதன் மூலம் தூய்மையான ஆற்றலை நோக்கி நகர வேண்டும். இது வேளாண்மையிலிருந்து வெளியாகும் கரியமில வாயு (CO2) வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. 3-வது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின்படி (NDCs), 2005-ஆம் ஆண்டின் அடிப்படை அளவிலிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வெளியேற்ற  அளவை (ஒரு யூனிட் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வெளியேற்றம்) குறைந்தபட்சம் 47 சதவீதம் குறைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.


 மின் விநியோக நிறுவனங்களின் (Distribution Company) நிதி நிலையை மேம்படுத்துவதன் மூலம், மாநிலங்கள் மீதான உழவர்களின்  மின்சார மானியச் சுமையைக் குறைக்க வேண்டும். வேளாண் மின் உற்பத்தி சார்ந்த மானியம் மாநிலக் கருவூலத்திற்கு (State’s exchequer) சுமையாக அமைந்துள்ளது.


டீசல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், பெட்ரோலியப் பொருட்கள் சார்ந்த இறக்குமதிச் செலவைக் குறைத்தது.


புதிய  மின்கலன் சேமிப்பு ஏற்பாடுகளுக்கான காரணம்


வேளாண்மைக்கான மின்சார தேவைகள் காலை நேரத்தில் அதிகரித்து, பகல் முழுவதும் நிலையாக இருந்து, சூரியன் மறைந்த பிறகு குறைகிறது. இதற்கு மாறாக, சூரிய மின் உற்பத்தி பகல் முழுவதும் படிப்படியாக அதிகரித்து, நண்பகலில் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு படிப்படியாகக் குறைகிறது. இந்தச் சீரற்றத் தன்மை காரணமாக, மின்விநியோகம் மற்றும் மின்கட்டமைப்பு மேலாண்மையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


முன்மொழியப்பட்ட மின்கலன் சேமிப்புக் கூறு, அதிகபட்ச தேவை உள்ள நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் உபரி சூரிய மின்சாரத்தைச் சேமித்து, தேவை நீடித்தாலும் உற்பத்தி குறையும் சமயங்களில் அதை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.


வேளாண்-சூரிய ஒளி கூறு (Agri-PV component)


4-வது தேசிய வேளாண்-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய  ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, பயிர்களுடன் சேர்த்து சூரிய மின் தகடுகளை அமைக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில், PM-KUSUM 2.0 திட்டத்தில் 10 ஜிகாவாட் பிரத்யேக வேளாண்-சூரிய ஆற்றல் மின்சக்திப் பிரிவை அரசு சேர்க்கக்கூடும் என்று தெரிவித்தார்.


வேளாண் ஒளிமின்னழுத்தவியல் (Agriphotovoltaics) என்பது, சோலார் மின்சாரம் உற்பத்தி மற்றும் வேளாண் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இணைக்கும் முறையாகும்.  உழவர்களின்  நிலத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம் மற்றும் உழவுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளலாம். இதன் மூலம், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான புதிய மாதிரி உருவாகிறது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்கான முக்கியத் திட்டங்கள்


பிரதம மந்திரி சூர்யா கர்: இலவச மின்சாரத் திட்டம் (Muft Bijli Yojana): பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 1 கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சக்திப் பலகைகளை (rooftop solar panels) நிறுவுவதையும், மாதம் ஒன்றுக்கு 300 அலகுகள் வரை இலவச மின்சாரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கணிசமான மானியங்களை வழங்குகிறது: 2 kW வரையிலான திறனுக்கு ஒரு kW-க்கு ₹30,000; 3 kW வரையிலான கூடுதல் திறனுக்கு ஒரு kW-க்கு ₹18,000 ஆகும். மேலும் வழங்கப்படும் மொத்த மானியம் அதிகபட்சமாக ₹78,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026- ஆம் ஆண்டு மார்ச் மாத  நிலவரப்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளின் கூரைமேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவியதன் மூலம் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே பயனடைந்துள்ளன. இது குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளவும், மின்சாரக் கட்டணங்களைக் குறைவாக செலுத்தவும்  வழிவகுத்துள்ளது.


பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தின் கீழ் புதிய சூரிய சக்தித் திட்டம் (PVTG குடியிருப்புகள்/கிராமங்களுக்கு): பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN))  9 துறை அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கான (PVTGs) 11 முக்கியத் தலையீடுகளில் கவனம் செலுத்துகிறது. இந்தத் தலையீடுகளில் ஒன்று, புதிய சூரிய மின்சக்தித் திட்டம் (PVTG குடியிருப்புகள்/கிராமங்களுக்கானது) ஆகும். மின் கட்டமைப்பு சார்ந்த மின் விநியோகம் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்ற பகுதிகளில், மின் கட்டமைப்பு  இல்லாத  சூரிய மின்சக்தி அமைப்புகளை வழங்குவதன் மூலம், மின்வசதி இல்லாத ஒரு லட்சம் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


சூரிய மின் பூங்காக்கள் மற்றும் வேகமாக  வளர்ந்து வரும் சூரிய மின் நிலையங்களின் மேம்பாடு: இந்தத் திட்டம் டிசம்பர் 2014-ல் தொடங்கப்பட்டது. இந்தத் சூரிய மின்சக்தித் திட்ட உருவாக்குநர்கள் தங்கள் திட்டங்களை விரைவாக அமைப்பதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி, சூரிய ஆற்றல் திட்டங்களின் விரைவான வளர்ச்சிக்காக, "மின்பரிமாற்ற உள்கட்டமைப்பு, சாலை, நீர், வடிகால், தகவல் தொடர்பு வலையமைப்பு போன்றவற்றை அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளுடன்" நிறுவுவதற்கு  உதவியாக இருந்து வருகிறது.

Original article : PM-KUSUM revamp on the cards. -Khushboo Kumari

Share: