யாருக்கும் வெற்றி இல்லாத ஒரு பதவி நீக்க நடவடிக்கை. -அசோக் லவாசா

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR)) நடவடிக்கை மேற்கொள்ளபட்ட விதத்தினால், தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட விடுபட்டிருந்தால், எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மீதான விமர்சனங்களை அது நியாயப்படுத்துவதாக அமைந்துவிடும் என்கின்றனர். 


இருதரப்பு வெற்றிச் சூழல் என்பது, நடைமுறைக்கு ஏற்ற மாற்றத்தைத் தேடும்போது சிறு சமரசங்கள் செய்துகொண்டாலும், அதில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பலன் கிடைப்பதாகும். சில சமயங்களில் இது ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். அதாவது, தோல்வியுற்ற தரப்பினர் தங்கள் இழப்பை, நிலைத்திருப்பதற்கான அவசியமான விலையாகக் கருதும்படி, வெற்றிபெற்ற தரப்பு அவர்களை நம்பவைக்கும் வழியாகவும் இது அமையும் என்கின்றனர்.


தலைமைத் தேர்தல் ஆணையருக்கு (Chief Election Commissioner (CEC)) எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவிநீக்கத் தீர்மானம் அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, இருப்பினும் இதைத் தொடங்கியவர்கள் இதனை ஒரு தோல்வியாகக் கருதமாட்டார்கள். ஆனால், அவர்களின் அந்தத் தோல்வியைத் தலைமைத் தேர்தல் ஆணையர் தனது வெற்றியாகக் கருத முடியுமா?


எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை தெளிவாக ஒரு நாடகம்போல் உள்ளது. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) மீது அக்கறை கொண்டவர்கள், வெற்றிபெற முடியாத ஒரு போரில் அவர்கள் ஏன் ஈடுபடத் துணிந்தார்கள் என்று கேட்க வேண்டும். சில நேரங்களில், ஒரு போர் என்பது வெற்றி பெறுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை, மாறாக எதிராளியைக் காயப்படுத்துவதற்காகவும் நடத்தப்படுகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) ஒரு எதிராளியாகப் பாவிப்பதுதான்.


உறுதியான எதிர்ப்பு


இந்திய தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் வரலாற்றிலேயே, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். 2001-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும், மிக உயர்ந்த நேர்மையுடன் ஜனநாயகத்திற்குப் பணியாற்றுவதில் இந்தியத் தேர்தல் ஆணையமே மக்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.


இப்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 193 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மான அறிவிப்பாணையைச் சமர்ப்பித்துள்ளனர். அவர் ஒருதலைப்பட்சமாகவும் பாரபட்சமாகவும் செயல்படுவதாகவும், தேர்தல் மோசடி தொடர்பான விசாரணைகளைத் தடுப்பதாகவும் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்த (Special Intensive Revision (SIR)) நடவடிக்கை மூலம் வாக்காளர்களின் உரிமையைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளுங்கட்சியைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்ட விதமும், இந்த பதவிநீக்க அறிவிப்பாணையும் முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகும். இந்த பொதுவான கவலை எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்ததுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான விமர்சனங்களையும் தீவிரப்படுத்தியது. தேர்தல் நடந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை எதிர்க்கட்சித் தலைவர் தனது தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகள் மூலம் சுட்டிக்காட்டியது, தேர்தல் ஆணையம் என்ற அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் கேள்விக்குட்படுத்தி, எதிர்க்கட்சிகள் தொடுத்த தாக்குதலின் ஆக்ரோஷமான பாணியும் தீவிரமும் ஆச்சரியமளித்தாலும், அதன் செயல்பாடு மற்றும் நடுநிலைமை குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு நம்பகமான பதிலை அளிக்காமல் தேர்தல் ஆணையம் காட்டிய பிடிவாதம் அதைவிட ஆச்சரியமளித்தது. தாக்குதல்கள் மேலும் மேலும் கடுமையாகியதால், தேர்தல் ஆணையத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு வழிகள் தடைபட்டன.


தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் தொடுத்த வலுவான மற்றும் கடுமையானத் தாக்குதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தனது செயல்பாடுகள் மற்றும் நடுநிலைமை குறித்த சந்தேகங்களுக்குத் தெளிவான மற்றும் நம்பகமான பதிலை அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பிடிவாதமாக மறுத்ததுதான் அதைவிட ஆச்சரியமான விஷயம் ஆகும். இந்தத் தாக்குதல்கள் மேலும் கசப்பானதாக மாறியதால், தேர்தல் ஆணையத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு படிப்படியாக முறிந்துபோனதாகக் கூறப்படுகிறது.


உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரின் (CEC) முடிவுகளுக்கு எதிராகப் பல மனுக்கள் விசாரிக்கப்பட்ட போதிலும், அவருக்கு எதிராக இவ்வளவு நீண்டகாலப் போராட்டத்தை இந்த நாடு இதற்கு முன் பார்த்ததில்லை. இந்த மனுக்கள் மூலம் எந்தவிதமான குறிப்பிடத்தக்கத் தீர்வும் கிடைக்காத நிலையில், அதிருப்தியும் ஏமாற்றமும் அதிகரித்தன. அதேநேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையரும் மக்களின் கோரிக்கைகளில் அக்கறை காட்டாமல் அலட்சியமாகவே இருந்தார். குறிப்பாக, பீகார் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு வாரங்கள் நீடித்த வாக்கு அதிகார் யாத்திரை (Vote Adhikar Yatra) நடைபெற்றபோதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது முறையான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வை (SIR) தொடர்ந்து மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


சில பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை பதற்றத்தையே அதிகரித்தன. தேர்தல் ஆணையத்திற்கும் (ECI), திரிணாமுல் காங்கிரஸிற்கும் (Trinamool Congress (TMC)) இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை முற்றி, இறுதியில் மம்தா பானர்ஜி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் நிலைக்குச் சென்றது. இதற்கு முன்பு எந்தவொரு முதலமைச்சரும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக வாதாட நீதிமன்றத்திற்குச் சென்றதில்லை. மேற்கு வங்கத்தில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்த போதும், அந்தப் பணியின்போது அதிகாரிகள் உயிரிழந்த போதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தனது முடிவில் பின்வாங்கவில்லை; வாக்காளர் பட்டியலை "தூய்மைப்படுத்தும்" தனது நோக்கத்தை தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளவுமில்லை.


இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைக் கண்டறிய வாக்காளர்களைச் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அமைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் "தர்க்கரீதியான முரண்பாடு" (Logical Discrepancy) கருவியை அறிமுகப்படுத்தியது. மேற்குவங்கத்தில், இந்த முறையின் மூலம் வரைவுப் பட்டியலில் 58,20,899 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், 60,06,675 வாக்காளர்களின் விபரங்கள் இறுதிப் பட்டியலில் இன்னும் ஆய்விலேயே இருந்தன. இவ்வாறு  ஏறக்குறைய 10% வாக்காளர்களின் நிலை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையிலும், தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய ‘Micro-observers’ எனப்படும் நுண்-பார்வையாளர்களையும் ஆணையம் பயன்படுத்தியது. இந்தச் சிக்கலான சூழலில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க 500-க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு அரசியலமைப்பு அமைப்பு தனது வழக்கமான பணிகளில் மற்றொரு அரசியலமைப்பு அமைப்பை ஈடுபடுத்துவது என்பது வழக்கத்திற்கு மாறானது என்கின்றனர். குறிப்பாக, தான் பாதுகாக்க வேண்டிய வாக்காளர்களின் உரிமைகளை அலட்சியப்படுத்திவிட்டு இவ்வாறு நடந்து கொள்வது முறையற்றது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி (SIR) நடத்தப்பட்ட முறையினால், தகுதியுள்ள ஒரே ஒரு வாக்காளர் விடுபட்டாலும்கூட, இந்த கடுமையான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையை விமர்சிப்பது நியாயமானதாகவே கருதப்படும்.


சாமானிய மனிதனுக்கு ஏற்பட்ட இழப்பு


இருப்பினும், இவை அனைத்தும் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் பதவிநீக்கத் தீர்மானத்திற்கு நியாயமான காரணங்களாக அமையுமா? இதற்கான பதில் ஒரு நபர் எந்தத் தரப்பை ஆதரிக்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள், தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சாதாரணப் போராட்டமாகவே இந்தத் திருத்தச் செயல்பாட்டின் சிரமங்களை ஏற்றுக்கொண்டு, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு தேர்தல்களில் தங்கள் வாக்கினைப் பத்தி செய்யும்  அதிகாரமே இல்லாமல் போய்விடுகிறது.


இதன் விளைவாக, வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பது குறித்த உண்மையான அக்கறையானது, தோல்வியுற்றவர்களின் புகாராகப் பார்க்கப்பட வாய்ப்புள்ளது. அத்தகையவர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அதன் தலைமைப் பொறுப்பில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்துப் போராட அரசியலமைப்பு வழங்கியுள்ள ஆயுதத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலும் உருவாகியுள்ளது.


இதற்கிடையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுமாறும், தேர்தல் ஆணையத்தைக் குறைகூற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதுடன், தற்போது நிலைமையை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் வெற்றிகரமாக முடிவடைந்தால், ஆணையத்தின் முடிவுகள் நியாயமானவையாகக் கருதப்படும் சூழல் ஏற்படும் என்கின்றனர். 


இறுதியில், நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் நம்பகத்தன்மை இல்லாத ஒரு தேர்தல் ஆணையத்தை இந்த நாடு எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


அசோக் லவாசா, இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் முன்னாள்  ஒன்றிய நிதிச் செயலாளர் ஆவார்.


Original article :An impeachment move with no winners. -Ashok Lavasa

Share: