2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட உள்ளது? - பிரியா குமாரி சுக்லா

 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி புதன்கிழமையான இன்று 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டம் தொடங்கியுள்ள நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பு இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்டமானது மக்கள்தொகைக் கணக்கீடு என்று அழைக்கப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்:


• செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியத் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General and Census Commissioner (RGCC)) மிருத்யுஞ்சய் குமார் நாராயண், தேசிய அளவிலான இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின் இருமுனை கட்டமைப்பு குறித்து விளக்கினார்.


—முதற்கட்டமானது, வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு (House listing and Housing Census (HLO)) ஆகும். இதில் வீடுகளின் நிலை, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் குடும்பத்தின் சொத்துக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இரண்டாவது கட்டமானது இடப்பெயர்வு மற்றும் மகப்பேறு உள்ளிட்ட மக்கள்தொகை, சமூக-கலாச்சாரம் மற்றும் பொருளாதார அளவீடுகள் குறித்த தரவுகளை வழங்குகிறது.


• 2026-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Census) ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி 'சுய-விவரப் பதிவு' முறையுடன் தொடங்குகிறது. இதன்மூலம், முதற்கட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே, மக்கள் 15 நாட்கள் கால அவகாசத்திற்குள் தங்கள் விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்களால் வீடுவீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி தொடங்கும் என்றும் இந்த முதல் கட்டப் பணியானது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 2026-ஆம் ஆண்டுக்குள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


• 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 28-மாநிலங்கள், 8-யூனியன் பிரதேசங்கள், 784-மாவட்டங்கள், 5,127 சட்டரீதியான நகரங்கள், 4,580 கணக்கெடுப்பு நகரங்கள் மற்றும் 6,39,902 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


• மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு விஷயமாகும். இது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) வரிசை எண் 69-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.


• கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி, ஒன்றிய அரசு 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.




உங்களுக்குத் தெரியுமா?


• இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது 1872-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒட்டுமொத்தமாக 16-ஆவது கணக்கெடுப்பாகவும், நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்படும் 8-ஆவது கணக்கெடுப்பாகவும் அமையும் என்கின்றனர். இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு (HHC), இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


• மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India (RGI)) அலுவலகம், வீடுகளைப் பட்டியலிடும் பணியின் போது சேகரிக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது. கட்டிடங்கள் மற்றும் வீட்டிலுள்ள சொத்துக்கள் உட்பட மொத்தம் 33 வகையான தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக ₹11,718.24 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


• இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India (RGI)), 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளை நிர்வகிப்பதற்காக இணைய அடிப்படையிலான 'மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பை' (Census Management and Monitoring System (CMMS)) உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு, கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமிப்பதற்கும், தரவு சேகரிப்பு பணிகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கும் உதவும் என்று தெரிவிக்கின்றனர்.


Original article : How the 2027 Census is proposed to be conducted? -Priya Kumari Shukla

Share: