இந்திய ஆறுகளில் பெரும்பாலானவை ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாகப் பாய்வதால், நீர் பகிர்வு தொடர்பான சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது; குறிப்பாக, ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம், அணைகள் அல்லது தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் நீரோட்டத்தைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ முயலும்போது இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளை, அரசியலமைப்பு மற்றும் சட்டக் கட்டமைப்பு எவ்வாறு நெறிப்படுத்துகிறது?
அதிகரித்து வரும் வளர்ச்சித் தேவைகள், வேகமாக விரிவடைந்து வரும் நகர்ப்புற மக்கள்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு, இடம்சார்ந்த மற்றும் பருவகால மாறுபாடுகள் ஆகியவற்றால் அதிகரித்து வரும் நீர்த் தேவை, இந்தியாவில் தற்போதுள்ள நீர்வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வேளாண்மை அதிக நீரைப் பயன்படுத்தும் துறையாக இருப்பதால், அதிக உழவர்கள் உள்ள மாநிலங்களில் ஆற்று நீரைச் சமமாகப் பகிர்வது ஒரு சிக்கலான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலான இந்திய ஆறுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாகப் பாய்வதால், அவற்றுக்கிடையே நீர்ப் பகிர்வு தொடர்பாகச் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ஒரு மேல்நீர்ப் பகுதியில் உள்ள மாநிலம் அணைகள் அல்லது தடுப்பணைகளைக் கட்டி நீரோட்டத்தைத் தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ முயற்சிக்கும்போது இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன.
எடுத்துக்காட்டாக, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் சில நாட்களுக்கு முன்னர், 1960-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள “கட்டணம் செலுத்தப்படாத” நீர் பயன்பாட்டுக்காக ரூ.1.44 லட்சம் கோடியை ராஜஸ்தான் அரசு செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் பஞ்சாபில் உள்ள கங் கால்வாயிலிருந்து நீர் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், நீர்ப் பகிர்வு தொடர்பான பிரிட்டிஷ் கால ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் பக்வந்த் மான் வலியுறுத்தினார்.
மற்றொரு வழக்கில், பெண்ணையாறு நதிநீரைப் பகிர்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒரு தீர்ப்பாயத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இரு மாநிலங்களும் காவிரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், 10 உறுப்பினர்களைக் கொண்ட மகாநதி நீர்ப் பிரச்சனைகளைத் தீர்க்க தீர்ப்பாயம், தனது ஐந்து நாள் பயணத்தின்போது (பிப்ரவரி 26 – மார்ச் 2) கள ஆய்வை மேற்கொண்டது. ஒடிசா மாநிலம் மகாநதியின் கீழ்பகுதியில் அமைந்துள்ளதால், அதே ஆற்றின் மேல்பகுதியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்துடன் நீர் பகிர்வு குறித்து விவாதங்களில் ஈடுபட்டு வருகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய நதி நீர் பகிர்வு பிரச்சனைகள்
நதிநீர் பகிர்வு தொடர்பான மாநிலங்களிடையேயான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, 1956-ஆம் ஆண்டைய மாநிலங்களிடையேயான நதிநீர் பிரச்சனைகள் சட்டத்தின் (Inter-State River Water Disputes (ISRWD)) கீழ், ஒன்றிய அரசு இதுவரை 9 தீர்ப்பாயங்களை அமைத்துள்ளது. மேலும், பீகார் மாநிலம் பராகர்-தாதர் துணைப் படுகைகள் தொடர்பாகவும், தமிழ்நாடு பெண்ணையாறு படுகை தொடர்பாகவும் புதிய தீர்ப்பாயங்களை அமைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன.
ஆதாரம்: மக்களவையில் 20.03.2025 அன்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அளித்த மூலம் பெறப்பட்டது.
கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவேரி மற்றும் மகாதாயி மீதான தீர்ப்பாயங்களின் முடிவுகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. ரவி-பியாஸ், கிருஷ்ணா (தீர்ப்பாயம்-II) மற்றும் வம்சதாரா மீதான தீர்ப்பாயங்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டு இருந்தாலும், அவை இன்னும் அதிகாரப்பூர்வ அரசிதழ்களில் வெளியிடப்படவில்லை.
மகாநதி நீர் விவகாரம் தற்போது தீர்ப்பாயத்தில் விசாரணை நிலையில் உள்ளது. முன்பு குறிப்பிடப்பட்டதுபோல், உச்சநீதிமன்றம் பெண்ணையாறு நீர்ப் பகிர்வு தொடர்பான விவகாரத்திற்கு ஒன்றிய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
காவேரி நதி தகராறு தொடர்பான ஒரு வழக்கு
காவிரி நதி தொடர்பான விவகாரம், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கல்களின் மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். காவிரிப் ஆற்றுப் பகுதியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி (ஒரு நீர்நிலைக்குச் சுற்றியுள்ள நிலப்பரப்பு; மழைநீர் சேர்ந்து ஒரு பொதுவான வெளியேற்றப் பகுதியில் சேரும் பகுதி) 81,155 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் 34,273 சதுர கிலோமீட்டர் கர்நாடகாவிலும், 2,866 சதுர கிலோமீட்டர் கேரளாவிலும், மீதமுள்ள 44,016 சதுர கிமீ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ளது.
காவிரி நதியின் நீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்சனைகள் ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அப்போது 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில், மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணம் இடையே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் 50 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காவிரி நீர்ப் பகிர்வு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 75% அதிகப்படியான நீர் வழங்கப்பட்டது. கர்நாடகாவிற்கு 23% நீர் வழங்கப்பட்டது. மீதமுள்ள நீர் கேரளாவிற்கு வழங்கப்பட்டது.
1970-களில், அதிகரித்த பாசனத் தேவைகளின் காரணமாகத் தமிழ்நாடு கூடுதல் நீரை வலியுறுத்தியதுடன், 1986-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசை அணுகியது. ஒன்றிய அரசு, 1990-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி அன்று காவிரி நீர் விவகார நடுவர் மன்றத்தை (Cauvery Water Disputes Tribunal (CWDT)) அமைத்தது. இந்த நடுவர் மன்றம், 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அன்று ஓர் இடைக்கால உத்தரவையும், 2007-ஆம் ஆண்டில் இறுதி உத்தரவையும் பிறப்பித்தது. இந்த இறுதி உத்தரவு 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டில் தீர்ப்பாயம் (tribunal) கலைக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி ஒரு ஆண்டில் 740 ஆயிரம் மில்லியன் கனஅடி (thousand million cubic (TMC)) நீர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிப்ரவரி 2018-ஆம் ஆண்டு தீர்ப்பைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கான நீர் ஒதுக்கீடு பின்வருமாறு:
கர்நாடகாவிற்கு - 284.75 மில்லியன் கனஅடி நீரும்,
தமிழ்நாட்டிற்கு - 404.25 மில்லியன் கனஅடி நீரும்,
கேரளாவிற்கு – 30 மில்லியன் கனஅடி நீரும்,
புதுச்சேரிக்கு – 7 மில்லியன் கனஅடி நீரும் வழங்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள பகுதி, சூழலியல் நிலைத்தன்மை மற்றும் கடலில் கலப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான நீர் சிக்கல்களை நெறிப்படுத்தும் சட்டக் கட்டமைப்பின் மீதும் கவனத்தை ஈர்க்கின்றன.
மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பு
அரசியலமைப்பின் 246-வது பிரிவு, ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கிய 7-வது அட்டவணை மூலம், மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே சட்ட அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.
மாநிலப் பட்டியலின் 17-வது பிரிவு, ஒன்றியப் பட்டியலின் 56-வது பிரிவின் விதிகளுக்கு உட்பட்டு, நீர் பகிர்வு, பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் கரைகள், நீர் சேமிப்பு மற்றும் நீராற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய நீர் தொடர்பான விவகாரங்களைக் கையாள்கிறது.
ஒன்றியப் பட்டியலின் 56-வது பதிவு, மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆகியவை நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. மேலும், 262-வது பிரிவு, மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீரின் பயன்பாடு, கட்டுப்பாடு, பகிர்வு ஆகியவை தொடர்பான நீர்ச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கான அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது.
மேலும், சட்டப்பிரிவின் 262-வது பிரிவின்கீழ், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான தகராறுகளுக்குத் தீர்ப்பளிப்பதற்காக, நாடாளுமன்றம் 1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்று நீர் தகராறுகள் (Inter-State River Water Disputes (ISRWD)) சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தச்சட்டம் நான்குமுறை திருத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் கடைசித் திருத்தம் 2002-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே நதிநீர் தொடர்பான தகராறு ஏற்படும் நிலையில், எந்தவொரு மாநிலமும் ஒன்றிய அரசை அணுகலாம். ஒன்றிய அரசு, குறிப்பிட்ட நீர் தொடர்பான பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியாது என்று கருதினால், அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஒரு நீர் விவகார தீர்ப்பாயத்தை (Water Disputes Tribunal) அமைக்க முடியும்.
நீர் சிக்கல்கள் தீர்ப்பாயங்கள்: கட்டமைப்பு, அதிகாரங்கள், சவால்கள்
தீர்ப்பாயம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். உறுபினர்கள் இந்திய தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்படுவர். மேலும், அந்த நேரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள் இதில் தேர்வு செய்யப்படுவர். மேலும், தீர்ப்பாயத்திற்கு ஆலோசனை வழங்க, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்படலாம்.
ஒன்றிய அரசால் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். மேலும், உச்சநீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றங்களுக்கும் அதன் மீது அதிகார வரம்பு இல்லை. தீர்ப்பாயத்தின் முடிவைச் செயல்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு வகுக்கலாம்.
2019-ஆம் ஆண்டில், சிக்கல்கள் தீர்க்கும் செயல்முறையை நெறிப்படுத்தி விரைவுபடுத்தும் நோக்கில், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறுகள் (திருத்த) மசோதாவைக் கொண்டுவந்தது. வெவ்வேறு அமர்வுகளைக் கொண்ட ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதற்கும், தீர்ப்பு வழங்குவதற்கான கடுமையான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும் அதில் விதிகள் இருந்தன. இருப்பினும், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் இருந்ததுடன், 2024-ல் 17-வது மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது.
அரசியலமைப்பின் 262-வது பிரிவு, தீர்ப்பாயங்களால் கையாளப்படும் மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகள் மீது உச்சநீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறினாலும், பிரிவு 131, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் ஒன்றிய-மாநில தகராறுகள் தொடர்பான விஷயங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குகிறது.
அதேபோல், சட்டப்பிரிவு 136 சிறப்பு விடுப்பு மனு (Special Leave Petition), ஆயுதப் படைகள் தீர்ப்பாயங்களைத் தவிர, தனது மேல்முறையீட்டு அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்கள் வழங்கிய தீர்ப்புகள் அல்லது விருதுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
நீர் மேலாண்மையை மறுபரிசீலனை செய்தல்
அரசியலமைப்புச் சட்டம், ஆற்று நீரைப் ‘பயன்படுத்துவதற்கான’ உரிமையை மாநிலங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, மாநில எல்லைகள் புவியியல் உண்மைகள் மற்றும் சூழலியல் இயக்கவியலின் அடிப்படையில் இல்லாமல், மொழி சார்ந்த காரணங்களின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டன.
மேலும், 1951-ல் இந்தியாவின் தனிநபர் ஆண்டு நீர் இருப்பு 5200 கன மீட்டராக இருந்தது. அது 1991-ல் 2309 கன மீட்டராகவும், 2001-ல் 1902 கன மீட்டராகவும் குறைந்தது. தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர் இருப்பு 1700 கன மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. இது 'நீர்ப் பற்றாக்குறை' (water-stressed) உள்ள பகுதிகளுக்கான சர்வதேச அளவுகோலாகும். கிடைக்கக்கூடிய நீர் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்ய ஒரு கட்டமைப்பு தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.
புவியியல் யதார்த்தங்களின் அடிப்படையில், நீர்-நிலம்-உணவு ஆகியவற்றை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு அணுகுமுறையானது, சரியான திசையில் ஒரு நடவடிக்கையாக அமையும். பல்வேறு துறைகளின் அறிவைப் பொருத்து செயல்படும் இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, நீர்வளங்கள் வேளாண்மை, நகர வளர்ச்சி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பிற துறைகளில் வகிக்கும் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பங்களிப்புகளை புரிந்துகொள்ள உதவும்.
நதி இணைப்புத் திட்டங்கள், நதிகளை 'மிகை' மற்றும் 'பற்றாக்குறை' நதிப் பிடிப்பு பகுதிகளாக வகைப்படுத்துவதன் மூலம், அவற்றின் சூழலியல் நீரியல் (eco-hydrology) குறித்து ஒரு குறுகிய கண்ணோட்டத்தையே கொண்டிருந்தன. பல நாடுகள் நதிகளின் இயற்கையான நீரியல் ஓட்ட முறைகளை மீட்டெடுப்பதற்காக அணிகளையும் அதுபோன்ற பிற கட்டமைப்புகளையும் பயன்பாட்டிலிருந்து நீக்கிவரும் வேளையில், இந்தியா தனது வளர்ச்சி தேவைகளையும் சுற்றுச்சூழல் சமநிலையையும், நதிகளின் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அபினவ் ராய், டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளியல் பள்ளியின் புவியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார்.
Original Link: Rising water stress and inter-state river disputes.