ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது அல்ல; அது அனைத்து தரப்பினரின் நியாயமான குரலுக்கும் மதிப்பளிப்பதாகும். தேர்தல் கணக்குகளைவிட, கூட்டாட்சி நிலைத்தன்மை என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 81 (Article 81), மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் இடையிலான இடஒதுக்கீடு மக்கள்தொகையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதன் மூலம், அனைத்து மாநிலங்களிலும் இடங்களுக்கும் மக்கள்தொகைக்கும் இடையிலான விகிதம் ஏறக்குறைய சமமாக இருப்பதை இந்தச் சட்டப்பிரிவு உறுதி செய்கிறது. 1951 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களின் மக்கள் தொகையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாததால், இந்த விகிதம் சீராக இருந்தது. இருப்பினும், தற்போது நிலைமை அவ்வாறு இல்லை என்றும் மாநிலங்களுக்கிடையே மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பெருமளவில் மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நெருங்கி வருவதால், தொகுதிகளை மறுவரையறை செய்யும் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மாநிலங்கள் தொடர்ந்து மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கும் காலக்கெடுவை, 2002-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (84th Constitutional Amendment Act (CAA)) 2000-லிருந்து 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. எனவே, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை மக்களவை இடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் அக்டோபர் மாதம் 2028-ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) அமைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவருக்கும் சமமான பங்கு
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த இருபது ஆண்டுகளில் மாநிலங்களுக்கிடையிலான கருவுறுதல் விகிதங்கள் (Fertility Rates) எந்தளவுக்கு சமமாக மாறியுள்ளன என்பதை ஆராய்வது அவசியமாகிறது. மக்கள் தொகை வளர்ச்சியை நிலைப்படுத்துவதற்குத் தேவையான மொத்தக் கருவுறுதல் விகிதமான (Total Fertility Rate (TFR)) ஒரு பெண்ணிற்கு 2.1 குழந்தைகள் என்ற அளவை எந்தெந்த மாநிலங்கள் எட்டியுள்ளன என்பதை, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS)) தரவுகளைக் கொண்டு கட்டுரையாசிரியர் ஆய்வு செய்துள்ளார். 2005-06-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஒன்பது மாநிலங்கள் ஏற்கனவே 2.1 அல்லது அதற்கும் குறைவான (TFR) அளவை எட்டியிருந்தன. ஆனால், 2021-ஆம் ஆண்டிற்குள் பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து முக்கிய மாநிலங்களும் இந்த இலக்கை அடைந்துவிட்டன.
நாடு முழுவதும் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) மேம்பட்டிருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே இன்னும் வேறுபாடுகள் நீடிக்கின்றன. தேசிய சராசரிக்குக் கீழே உள்ள மாநிலங்களின் சராசரி மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 1.64-ஆகவும், அதற்கு மேல் உள்ள மாநிலங்களில் 2.38-ஆகவும் உள்ளது. இதன் பொருள், அதிகக் கருவுறுதல் விகிதம் கொண்ட மாநிலங்கள், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னால் இருக்கும் மாநிலங்களைவிட இன்னும் 45% அதிகமாக உள்ளன. 2002-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் தற்போதைய பகுப்பாய்வின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்கள் காட்டிய இந்தச் செயல்பாட்டுத் திறனையும் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், தொகுதிகள் மறுவரையறை (Delimitation) செய்யப்படும்போது, மக்கள் தொகை நிலைப்படுத்துதல் முயற்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
நிதி ஆணையத்தின் (Finance Commission (FC)) செயல்பாட்டு முறையை இங்கும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் என்கின்றனர். இது மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்தளிக்கும்போது வெறும் மக்கள்தொகையை மட்டும் (50% முக்கியத்துவம்) கணக்கில் கொள்ளாமல், மக்கள்தொகை செயல்திறன் (Demographic Performance) போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்கிறது. அதாவது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இந்த நிதி ஆணையம் வெகுமதி அளிக்கிறது. இதே போன்ற முறையைத் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்பாட்டிலும் பின்பற்றலாம் என்கின்றனர். இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை தொகுதிகள் என்பதைத் தீர்மானிக்கும்போது, இந்தியத் தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission of India) மக்கள்தொகை எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், அந்த மாநிலம் மக்கள்தொகையைக் குறைக்க எடுத்த முயற்சிகளையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தொகுதிகளை வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு நிலவரப்படி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதுள்ள 543-மக்களவைத் தொகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த 543-இடங்களுக்கு மேலாகச் சேர்க்கப்படும் கூடுதல் இடங்களுக்கு மட்டுமே மக்கள்தொகை செயல்திறன் (Demographic Performance (DemPer)) கொள்கை பொருந்தும், எனவே மக்கள்தொகை அடிப்படையிலான கொள்கையே இன்னும் முதன்மையான காரணியாக இருக்கும் என்கின்றனர். இந்த மக்கள்தொகை செயல்திறன் கொள்கையின்கீழ், இரண்டு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன: முதலாவதாக, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் ஆரம்பகால சாதனை (2005-ஆம் ஆண்டுக்கு முன்பே மொத்தக் கருவுறுதல் விகிதத்தை (TFR) 2.1 அல்லது அதற்குக் குறைவாக எட்டியது) இடஒதுக்கீட்டில் 10% முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவதாக, 2005-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்த வேகம் 90% முக்கியத்துவம் பெறுகிறது. இதன் விளைவாக, அனைத்து மாநிலங்களும் கூடுதல் இடங்களைப் பெறும், இருப்பினும் மக்கள்தொகை குறைந்த மாநிலங்களைவிட அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெறும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மக்கள்தொகையை வெற்றிகரமாகக் குறைத்த மாநிலங்கள் தங்கள் தற்போதைய இடங்களின் பங்கினை இழக்காது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். இது ஒரு நியாயமான கூட்டாட்சித் தத்துவத்தைப் பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துதல்
மக்கள்தொகை செயல்திறன் (DemPer) கொள்கையானது, மாநிலங்கள் என்பவை முக்கியமான அரசியல் அலகுகள் (Political Units) என்பதை அங்கீகரிக்கிறது. மக்களாட்சி என்பது வெறும் மக்கள்தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் மாறாக, அது அனைத்து மாநிலங்களுக்குமான நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பற்றியது என்றும் இந்தக் கொள்கை விவரிக்கிறது. தேர்தல் கணக்குகளைவிட கூட்டாட்சி நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது. இந்த மக்கள்தொகை செயல்திறன் கொள்கையை மக்களவையில் அமல்படுத்துவதன் மூலம், மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவத்தையும் நீதியையும் சமநிலைப்படுத்த முடியும் என்கின்றனர். இது நாட்டின் பல பகுதிகளில் ஏற்படும் பதற்றங்களைக் குறைக்கவும், சிறந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், அதே நேரத்தில் தேர்தலின் நம்பகத்தன்மை பாதிக்கப்படாமல் மக்கள் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தொகுதிகளின் எண்ணிக்கை விரிவாக்கத்திற்குப் பிறகு மக்களவையின் சரியான எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும்? 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 54.1 கோடியாக இருந்தபோது, ஒரு மாநிலத்தின் சராசரி மக்கள் தொகை ஒரு தொகுதிக்கு சுமார் 10 முதல் 11.1 இலட்சமாக இருந்தது. இன்று இந்தியாவின் மக்கள் தொகை சுமார் மூன்று மடங்கு அதிகரித்து (140 கோடி) உள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் தொகையிலும் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படவும், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களுக்குப் போதிய நேரம் கிடைக்கவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 700-க்கு மிகாமல் இருப்பதே சரியாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தொகுதி மறுவரையறை என்பதை இனி வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒரு பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது. தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா போன்ற இந்தியாவின் பல மாநிலங்களும் தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. எனவே, நமது இந்திய ஒன்றியத்தின் நிலைத்தன்மைக்கு, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான மற்றும் நியாயமான கூட்டாட்சித் தத்துவம் மிகவும் அவசியமாகிறது.
Original Link: Ensuring federalism within delimitation.