இந்தியாவின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்தப் போரிலிருந்து கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் முக்கியமானவை: உயர்தரமான ட்ரோன் கூட்டங்கள் (Swarm Drones - கூட்டமாகச் செயல்படும் ஆளில்லா விமானங்கள்) மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பங்களை கையகப்படுத்துவதாகும். இவை எதிரியின் தளவாடப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், அவர்களின் உற்பத்தித் திறனைக் குறிவைத்துத் தாக்கவும் பெரிதும் உதவுகின்றன.


• இந்தியா மறைமுகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அதாவது, படைகளை ஒரே இடத்தில் குவிக்காமல் பிரித்து வைத்தல், எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருத்தல் (Concealment), உருமறைப்பு நுட்பங்களைப் பயன்படுத்துதல் (Camouflage), மற்றும் படை வலிமையைப் பாதுகாத்தல் (Force Preservation) போன்ற யுக்திகளைக் கையாள வேண்டும். மேலும், நிலத்தடி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதிகாரக் குவிப்பு இல்லாத பரவலாக்கப்பட்ட முறையில் போரிடுவதும் அவசியம் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


• ஈரான் தனது தாக்குதல் முறைகளில் ட்ரோன் கூட்டங்களை (Swarm Drones) முதன்மையான ஒன்றாகப் பயன்படுத்துவது, இந்தியாவின் ட்ரோன் எதிர்ப்புத் திறனைக் குறைந்த செலவில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.


• கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தொடர்ந்த போர்க்காலச் சூழலின்போது, பாகிஸ்தான் மிகக்குறைந்த விலையிலான ட்ரோன்களை இந்திய எல்லைக்குள் பெருமளவில் அனுப்பியதாகவும் அதேநேரத்தில், சில ஆயுதம் ஏந்திய மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை அடையாளம் காண முடியாதபடி மறைத்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவச் செய்ததாகவும் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


• இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியப் போரின்போதுதான் முதன்முதலில்  ட்ரோன்கள் (Unmanned Aerial Vehicles (UAVs)) எனப்படும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை முக்கியமாக விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சில குறிப்பிட்ட தாக்குதல் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பின்னர், 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரில் (Gulf War) இவை அடைந்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து, 1990-களுக்குப் பிறகு நவீன ராணுவ நடவடிக்கைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்தது.


• ட்ரோன் கூட்டங்கள் (Swarm Drones) என்பது பறவைகள் அல்லது மீன்களின் கூட்டத்தைப் போலவே, ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்களாக இணைந்து செயல்படும் தன்னாட்சி அல்லது பகுதி அளவில்-தன்னாட்சி (Semi-autonomous) திறன் கொண்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles (UAV)) ஆகும். இவை கம்பியில்லா இணைப்புகள் மூலம் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுடன், ஒரு பொதுவான இலக்கை அடைவதற்காக அந்தந்த சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொண்டு செயல்படும் திறன் கொண்டவை ஆகும்.


— வழக்கமான ட்ரோன்களைவிட ட்ரோன் கூட்டங்கள் (Drone Swarms) அதிகத் திறன் கொண்டவை ஆகும். ஏனெனில், இவற்றில் "மிகைமை" (Redundancy) அம்சம் உள்ளது—அதாவது, ஒரு ட்ரோன் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், மற்ற ட்ரோன்கள் தொடர்ந்து இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும். இதன் விளைவாக, எதிரிகளின் வான் பாதுகாப்பு மண்டலங்களை நிலைகுலையச் செய்யவும் (மிகவும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி சில வெடிபொருட்கள் அல்லது தகவல்களை உள்ளே அனுப்ப இது உதவுகிறது), உளவுத் தகவல்களைச் சேகரிக்கவும், மற்றும் மிக முக்கியமான இலக்குகளைத் தாக்கயும் இந்த ட்ரோன் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


• ‘Fortune Business Insights’ நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலகளாவிய ராணுவ ட்ரோன் சந்தையின் (Global Military Drone Market) மதிப்பு 2023-ஆம் ஆண்டில் 14.14 பில்லியன் டாலராக இருந்தது. இதுவரும் காலங்களில் மிகவேகமாக வளர்ச்சியடைந்து, 2032-ஆம் ஆண்டிற்குள் 47.16 பில்லியன் டாலர் அளவிற்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


• ட்ரோன்களை (Drones) எதிர்கொள்வதற்கான முதற்படி அவற்றைக் கண்டறிவதே ஆகும். நவீன பாதுகாப்பு அமைப்புகள் இதற்காக AESA (Active Electronically Scanned Array) ரேடார்கள், மின்-ஒளியியல் (Electro-optical) மற்றும் அகச்சிவப்பு (Infrared) சென்சார்கள், ஒலி கண்டறியும் கருவிகள் (Acoustic detectors) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒருங்கிணைந்த அமைப்புகள் ஆகியவற்றை ஒருசேரப் பயன்படுத்துகின்றன. 


— ட்ரோன்கள் (Drones) கண்டறியப்பட்டவுடன், அவற்றை ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் போன்ற நேரடித் தாக்குதல் முறைகள்  மூலம் அழிக்க முடியும் என்கின்றனர். இருப்பினும், பாரம்பரிய பாதுகாப்பு அமைப்புகள், குறிப்பாக நிலத்திலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் (Surface-to-Air Missiles (SAMs)), அதிக செலவுகளை ஏற்படுத்துபவை மற்றும் கூட்டமாக வரும் ட்ரோன் தாக்குதல்களை (Drone Swarms) எதிர்கொள்வதில் குறைந்த செயல்திறன் கொண்டவை ஆகும். இதற்குப் பதிலாக, இலக்குகளைத் தானாகவே கண்காணித்துச் சுடும் திறன் கொண்ட Counter Rocket, Artillery, and Mortar (C-RAM) மற்றும் Phalanx போன்ற தானியங்கி துப்பாக்கி அமைப்புகள் இந்த வேலையைச் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 


• மிகவும் குறைந்த செலவிலான மாற்று வழிகள் பின்வருமாறு:


— நேரடி ஆற்றல் ஆயுதங்கள் (Directed Energy Weapons (DEWs)): லேசர்கள் மற்றும் மைக்ரோவேவ் கதிர்களைப் பயன்படுத்தி ட்ரோன்களின் சென்சார்களைச் சிதைப்பது அல்லது அவற்றில் உள்ள மின்னணு பாகங்களைச் செயலிழக்கச் செய்வது.


— மின்னணுப் போர்முறை (Electronic Warfare (EW)): உலகளாவிய இருப்பிட கணிப்பு அமைப்பு (GPS) சிக்னல்கள் அல்லது தகவல் தொடர்பு இணைப்புகளைத் தடுத்து நிறுத்துவது.


— ஏமாற்றுதல் (Spoofing): ட்ரோன்களுக்கு அவற்றின் இருப்பிடம் குறித்த தவறான தகவல்களை வழங்குவது அல்லது தவறான கட்டளைகளைப் பிறப்பிப்பதன் மூலம் அவற்றைத் திசைதிருப்புவது.


— சைபர் தாக்குதல்கள் (Cyber Attacks): ட்ரோன்களின் மென்பொருள் குறைபாடுகளைப் பயன்படுத்தி, அவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து செயலிழக்கச் செய்தல்; மற்றும்


— இடைமறிப்பு ட்ரோன்கள் மற்றும் வலைகள் (Interceptor drones & nets): மிக நெருக்கமான எல்லைக்குள் இலக்குகளைச் செயலிழக்கச் செய்வதற்கும், முக்கியமான சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.


• இந்தியாவின் திறன்கள்: 2020-ஆம் ஆண்டு முதல், இந்தியா தனது டிரோன் எதிர்ப்பு உள்கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பம், மின்னணுப் போர்முறை (EW) மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு பன்முகப் பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா அமைத்துள்ளது. இதில் உள்ள முக்கியமான அமைப்புகள் பின்வருமாறு:


— ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு (Akashteer Air Defence Control System): ‘Bharat Electronics Ltd’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது, எதிரிகளின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்க இந்திய விமானப் படையின் ஒருங்கிணைந்த கட்டளை இணைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.


—பார்கவாஸ்த்ரா (Bhargavastra): ‘Solar Defence and Aerospace Ltd’  நிறுவனத்தின் இந்த ஆயுத அமைப்பு, கூட்டமாக வரும் ட்ரோன்களை (Drone Swarms) அழிக்க ஒரேநேரத்தில் 64 மைக்ரோ-ராக்கெட்டுகளை சரமாரியாகச் சுடும் திறன் கொண்டது.


—பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation (DRDO)) ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இது 360-டிகிரி ரேடார் கண்காணிப்பை வழங்குகிறது. இதில் ட்ரோன்களைச் செயலிழக்கச் செய்ய மென்-திறன் (Jamming) மற்றும் ட்ரோன்களை நேரடியாக அழிக்கும் வன்-திறன் (Laser) ஆகிய இரண்டு வசதிகளும் உள்ளன. இந்த அமைப்பால் 4 கி.மீ. தொலைவிலேயே ட்ரோன்களைக் கண்டறிய முடியும் என்றும் மேலும் 1 கி.மீ. சுற்றளவிற்குள் அவற்றை முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


—இந்திரஜால் (Indrajaal): இது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு புத்தொழில் (Startup) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு பாதுகாப்பு வலையமைப்பாகும். இது ஜாமர்கள் (Jammers), ஸ்பூஃபர்கள் (Spoofers) மற்றும் நுண்ணறிவுத் தகவல்களை ஒருங்கிணைத்து, சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் வரையிலான பகுதிகளைப் பாதுகாக்கிறது. இது ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடகாவில் உள்ள கடற்படைத் தளங்களில் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


— கடந்த மே மாதம் 2025-ஆம் ஆண்டில் நடந்த அந்த ஆளில்லா விமானக் கூட்ட (Swarm attacks) தாக்குதல்களின்போது, இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) தனது ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிர்ப்பு கட்டமைப்பை (Integrated Counter-UAS Grid) செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. வழக்கமான ரேடார்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளுடன் இணைந்து செயல்பட்ட இந்த அமைப்பு, 15 ராணுவ தளங்கள் மற்றும் பல நகரப்பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளை முறியடித்ததாகத் தெரிவிக்கின்றனர்.


Original Link: What is India’s anti-drone system?


Share: