Showing posts with label Finance Commission. Show all posts
Showing posts with label Finance Commission. Show all posts

நிதி ஆணைய பரிமாற்றங்கள் மற்றும் சமத்துவப் பிரச்சினை பற்றி. -கே.ஆர். சண்முகம்

16-வது நிதிக் குழுவின் கீழ், தன்னிச்சையான அளவீடுகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைப் பாதிக்கின்றன.


அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட நிதிக் குழு (Finance Commission (FC)), செங்குத்து மற்றும் கிடைமட்ட நிதி ஏற்றத்தாழ்வுகளைக் சரி செய்வதற்காக, ஒன்றியத்தின் மொத்த வரி வருவாயை ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. முந்தைய நிதிக் குழுக்களைப் பின்பற்றி, 16-வது நிதிக் குழுவும் மாநிலங்களுக்கான செங்குத்து நிதிப் பகிர்வு விகிதத்தை 41 சதவீதமாக தக்கவைத்துள்ளது.  மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட நிதிப் பகிர்வுகளைத் (horizontal transfers) தீர்மானிப்பதில் “சமத்துவத்தை” வழிகாட்டும் கொள்கையாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


நிதி குழுவுடனான கலந்தாய்வுகளின்போது, ​​நிதிப் பரிமாற்றங்களின் கட்டமைப்பு குறித்து மாநிலங்கள் பல்வேறு கவலைகளை எழுப்பின. செஸ் மற்றும் கூடுதல் வரிகள் மொத்த வரி வருவாயில் 15%-ஐத் தாண்டுவதால், அந்த வரிகள் பிரிக்கக்கூடிய நிதிக் வருவாயில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது 8%-10%-ஆகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, ஒன்றிய அரசு இயற்கை வளங்களை வெட்டி எடுப்பது, சொத்துக்களை பணமாக்குவது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதிகள் ஆகிய வழிகள் மூலமாக  வரி இல்லாத வருவாயைப் பெறுகிறது.


மாநிலங்கள் மற்றும் அழுத்தங்கள்


மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. கோவிட்-19 பெருந்தொற்று, சரக்கு மற்றும் சேவை வரியால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் நான்கு விகிதங்களிலிருந்து இரண்டு முதன்மை விகிதங்களாக விகித முறைப்படுத்தல் மற்றும் அதிகரித்துவரும் பொதுக் கடன் ஆகியவை அவற்றின் நிதிச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளன. மேலும், ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களின் அதிகரித்துவரும் ஆதிக்கம் மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைக் குறைத்துள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மறுசீரமைப்பின் மூலம், திட்டச் செலவுகளில் 40% மாநிலங்கள் ஏற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதே வேளையில், ஒன்றிய அரசு நிதி வழங்கும் வேகம் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உண்மையான நிதிப் பகிர்வை குறைக்கக்கூடும் என்பதால், பல மாநிலங்கள் 50 சதவீத செங்குத்து நிதிப் பகிர்வைக் (vertical share) வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து  வருகின்றன.


நிதிரீதியாகப் பலவீனமான மாநிலங்களுக்கு அதிக வளங்களை மாற்றுவதற்காக, அடுத்தடுத்த நிதிக் குழுக்களில் அதிகாரப் பகிர்வு அளவுகோல்களிலும் (devolution criteria) அவற்றுக்கு ஒதுக்கப்படும் முக்கியத்துவத்திலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது மற்றொரு முக்கிய கவலையாகும். இது, மாநிலங்கள் தங்களின் எதிர்காலப் பங்குகளைக் கணிப்பதைச் சிரமமாக்குகிறது. பல மாநிலங்கள், வருமான இடைவெளி அளவுகோலுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. வாழ்க்கைச் செலவுகளில் உள்ள வேறுபாடுகளைச் சரியாக  வெளிக்காட்டும் வகையில், இந்த அளவுகோலை வாங்கும் திறன் (purchasing-power) வேறுபாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன.




காலப்போக்கில், சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பங்குகள், அதிக பயன்பெறும் முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கணிசாமாக குறைந்துள்ளன. 6-வது நிதிக்குழு காலத்தில் பீகார் (ஜார்கண்ட் உட்பட), மத்தியப் பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட), உத்தரப் பிரதேசம் (உத்தரகாண்ட் உட்பட) மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் பெற்ற மொத்த பங்கு 42.5%-ஆக இருந்தது. அது 15-வது நிதிக்குழுவின் காலக்கட்டத்தில் 51%-ஆக அதிகரித்தது. இதற்கு மாறாக, நான்கு தென் இந்தியா மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்கு 24.8%-லிருந்து 15.8%-ஆகக் குறைந்து, இடைவெளி 35.2%-ஆக விரிவடைந்தது. நிபந்தனையற்ற சமன்பாட்டுப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து நம்பியிருப்பது, கடுமையான பற்றக்குறையில் உள்ள மாநிலங்களில் வருவாய் திரட்டல் மற்றும் நிதிக்கட்டுப்பாடிற்கான ஊக்கங்களைக் குறைக்கக்கூடும். மேலும், ஏழை மாநிலங்களுக்கு அதிகரித்து வரும் பரிமாற்றங்கள், அடிப்படை சேவைகளில்  பொதுச் செலவினங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவில்லை. 2022-23-ஆம் ஆண்டில், பீகார் மாநிலம் சுகாதாரம் தொடர்பாக ஒரு நபருக்கு ₹937 மட்டுமே செலவிட்டது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் செலவான ₹10,148-ஐ விட 10.8 மடங்கு குறைவான தொகையாகும். அதேவேளையில், 2023-24-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்விக்காக ஒரு மாணவருக்கு பீகார் செலவிட்ட தொகை ₹20,282-ஆக இருந்தது. இது சிக்கிம் மாநிலத்தின் செலவான ₹1,30,498-உடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான தொகையாகும். பொதுச் சேவை வழங்கலில் மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையை உறுதி செய்வதற்கு, நிதிப் பரிமாற்றங்கள் மட்டும் போதுமானதாக அமையவில்லை என்பதையே இந்த இரண்டு இடைவெளிகளும்  காட்டுகின்றன.


நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்


மேல்வரி மற்றும் கூடுதல் வரிகள் (cesses and surcharges) பெரும்பாலும் மாநிலங்களுக்கு மறைமுகமாகப் பயனளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதால், அவற்றைப் பகிரமுடியாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை 16-வது நிதிக் குழு ஏற்றுக்கொண்டதுடன், 41% செங்குத்துப் பங்கையும் (vertical share) தக்கவைத்துக் கொண்டது. மேலும் ஒன்றிய அரசு, வருவாய் பற்றாக்குறை மானியங்களையும், துறை மற்றும் மாநிலம் சார்ந்த மானியங்களையும் ரத்து செய்ததுடன், மாநில அரசுகள் அரசின் வரவு-செலவு கணக்கில் வராத மறைமுகக் கடன்களை (off-budget borrowings) கைவிட வேண்டும் என்றும் அனைத்துப் பொறுப்புகளையும் தங்களது வரவு செலவுத் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளவும், நிதிப் பற்றாக்குறையை 3%-க்கும் குறைவாகப் பராமரிக்கவும் பரிந்துரைத்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகளுக்குக் குறுகிய காலத்தில் நிதி நெருக்கடியை அதிகப்படுத்தலாம்.


15-வது நிதி குழுவால் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களில், நிதி ஆணையம் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்தது. அதில்,


வருமான வித்தியாசம் (Income Distance) – 42.5% முக்கியத்துவம்,


மக்கள்தொகை (Population) – 17.5%,


பரப்பளவு (Area) – 10%,


வனப் பரப்பிறக்கு  (Forest Cover) – 10% வழங்கப்பட்டது. 


மேலும், வரி முயற்சிக்குப் பதிலாக, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலங்களின் பங்களிப்புக்கு 10% மதிப்பெண் வழங்கப்பட்டது. இருப்பினும், உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) பங்குகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிதி ஆணையம் மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்குகளின் மீது வர்க்கமூல மாற்றத்தைப் (square-root transformation) பயன்படுத்தியது. இதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்  10% மட்டுமே. இது எதிர்பார்க்கப்பட்ட 25%-ஐ விட மிகக்  குறைவான அளவாகும். இது பொருளாதாரரீதியாக வலுவான மாநிலங்களின் சாதகத்தை கணிசமாகக் குறைத்து, தரவரிசைகளையும் மாற்றியமைத்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 14.23%-லிருந்து 8.31%-ஆகக் குறைந்தது. அதேவேளையில், தமிழ்நாட்டின் உடைய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 9.09%-லிருந்து 6.67%-ஆகவும், கர்நாடகாவின் உடைய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 8.95%-லிருந்து 6.59%-ஆகவும் சரிந்தன. அதே சமயம், பல சிறிய மாநிலங்களின் பங்குகள் அதிகரித்தன.


இதன் விளைவாக, 15-வது நிதிக் குழுவின் கூட்டத்துடன் ஒப்பிடுகையில், 14 மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வுப் பங்குகள் சிறிதளவு அதிகரித்தன. நிதியியல் பகிர்வில் கர்நாடகம் அதிகபட்சமாக (0.484 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைப்  பெற்று ஆதாயம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து கேரளா (0.457) மற்றும் குஜராத் (0.277) ஆகிய மாநிலங்கள் ஆதாயம் பெற்றன. தமிழ்நாட்டில் 4.079%-லிருந்து 4.097%-ஆக மட்டுமே மிகவும் சிறிதளவு உயர்ந்தது. இதற்கிடையில், 14 மாநிலங்களின் பங்குகள் சரிந்தன. இதில் மத்தியப் பிரதேசம் மிகப்பெரிய (0.503 சதவீதப் புள்ளிகள்) சரிவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (0.403) மற்றும் உத்தரப் பிரதேசம் (0.32) ஆகிய மாநிலங்கள் சரிவைச் சந்தித்தன.


இருப்பினும், நீண்ட காலக் கண்ணோட்டத்தில், ஏற்றத்தாழ்வுகள் கணிசமான அளவில் நீடிக்கின்றன. 16-வது நிதிக் குழுவின்கீழ், தென்னிந்திய மாநிலங்களின் பங்கு 17% ஆகச் சிறிதளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதிக நன்மை பெறும் மாநிலங்களின் பங்கு 50%-க்கும் குறைவாக குறைந்துள்ளது. சமத்துவம் மற்றும் செயல்திறனுக்கு (equity and efficiency) இடையிலான சமநிலைக் குறைவாகவே மாறியுள்ளது. 15-வது நிதிக் குழுவின் கீழ், செயல்திறன் தொடர்பான அளவுகோல்கள் 25% அளவையும், சமத்துவ அளவுகோல்கள் 75% என்ற அளவையும் கொண்டிருந்தன. 16-வது நிதிக் குழுவின் கீழ்,  இந்த அளவுகோல்கள் முறையே 30% மற்றும் 70% ஆக மாறியுள்ளது. இது முடிவுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றும் அளவுக்கு மிகச் சிறிய சரிசெய்தல் ஆகும். உத்தரப் பிரதேசம் (17.62%), பீகார் (9.95%), மத்தியப் பிரதேசம் (7.35%) மற்றும் மேற்கு வங்காளம் (7.22%) போன்ற குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள், நிதிரீதியாக வலுவான மற்றும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைவிடத் தொடர்ந்து அதிகப் பங்குகளைப் பெற்று வருகின்றன.


மாற்றுத் திட்டங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுகள்


மாற்றுத் திட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடும். உதாரணமாக, நிதிக் குழு மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பின் வர்க்கமூல மதிப்புக்கு 25% மதிபெண்ணை வழங்கி, வருமான வித்தியாசத்திற்கான (income distance) மதிபெண் 27.5%-ஆகக் குறைத்திருந்தால், கர்நாடகாவின் பங்கு 4.131%-லிருந்து 4.928% ஆகவும், மகாராஷ்டிராவின் பங்கு 6.441%-லிருந்து 7.218%-ஆகவும், தமிழ்நாட்டின் பங்கு 4.097%-லிருந்து 4.867%-ஆகவும் உயர்ந்திருக்கும். அதேபோல், ஆறு அளவுகோள்களுக்கும் சமமான  மதிபெண்ணை வழங்கும் முறையைப் பயன்படுத்தியிருந்தால், இந்த மாநிலங்களின் பங்குகள்  அதிகரித்து முறையே 5.544%, 7.845% மற்றும் 5.246% ஆகிய  மதிபெண்ணை அடைந்திருக்கும்.


நிதிக்குழு வர்க்கமூல சூத்திரத்திற்குப் பதிலாக, 10% என்ற மதிப்புடன்  உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்கைப் பயன்படுத்தியிருந்தால், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் அதிகாரப் பகிர்வுப் பங்குகள் முறையே 7.033%, 4.367% மற்றும் 4.342% ஆக அதிகரித்திருக்கும். 25%  மதிப்பெண் மற்றும் வருமான இடைவெளிக்கு 27.5%  மதிப்பெண்ணுடன் அவை 8.698%, 5.517% மற்றும் 5.478% ஆக அதிகரித்திருக்கும். சம மதிப்பெண் முறையின் கீழ், அவற்றின் அந்தந்தப் பங்குகள் 8.833%, 5.937% மற்றும் 5.653%-ஆக அதிகரித்திருக்கக்கூடும். அவர்களின் முறையான பங்குகள் 2.392%, 1.806% மற்றும் 1.556% அதிகரித்தன.


16-வது நிதிக் குழுவின் மதிப்பீட்டின்படி, ஒதுக்கீட்டுக் காலத்தில் மொத்தமாக ₹104 லட்சம் கோடி செங்குத்து நிதிப் பரிமாற்றங்கள் நடைபெறும் என்பதால், இந்த வேறுபாடுகள் முக்கியமானவை. மகாராஷ்டிராவின் பங்கில் 2.392% அதிகரிப்பு என்பது, கூடுதலாக ₹2.49 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு  ₹49,744 கோடியாக மாறும். கர்நாடகாவின் கூடுதல் 1.806% பங்கு, ₹1.88 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு ஏறக்குறைய ₹37,565 கோடியை ஈட்டித் தரும். தமிழ்நாட்டின் 1.556% அதிகரிப்பு என்பது, தோராயமாக ₹1.62 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு ₹32,365 கோடியாக அமையும்.


இந்தியாவில், ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற பிற பெரிய கூட்டாட்சிகளைப் போல் இல்லாமல், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அதிக அரசியல் செல்வாக்குள்ள மாநிலங்கள் பொருளாதாரரீதியில் வலுவான மாநிலங்களாக இருப்பதில்லை. இதன் விளைவாக, இந்த மாநிலங்கள் அதிக நிதிப் பரிமாற்றங்களைப் (fiscal transfers) பெற முனைகின்றன. தொகுதி மறுவரையறைக்குப் (delimitation) பிறகு இந்தப் பிரச்சினை தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஏனெனில், அரசியல் செல்வாக்குள்ள மாநிலங்களுக்குச் சாதகமாகச் செயல்பட அரசாங்கங்களுக்கு வலுவான கோரிக்கைகள் ஏற்படக்கூடும். நிதி ஆணையத்தின் முக்கிய நோக்கம் செங்குத்து மற்றும் கிடைமட்ட நிதி ஏற்றத்தாழ்வுகள் இரண்டையும் சரிசெய்வதே என்பதால், எதிர்கால நிதி ஆணையங்கள் நிதிசாரா குறிகாட்டிகளை அதிக அளவில் சார்ந்திருப்பதைவிட, நிதித் திறன் மற்றும் நிதி விளைவுக் குறிகாட்டிகளுக்கு (fiscal outcome indicators) அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும்,  மதிப்பெண்களை ஒதுக்குவதற்கு, முக்கியக் கூறுப் பகுப்பாய்வு முறை (Principal Component Analysis) போன்ற, தரவு சார்ந்த அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.


கே.ஆர். சண்முகம், மெட்ராஸ் பொருளியல் பள்ளியின் முன்னாள் இயக்குநரும், தமிழக அரசின் ஆலோசகரும் ஆவார்.

ORIGINAL LINK:

Finance Commission transfers and equity issue.


Share:

மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது மட்டுமே பேரிடர் அபாயத்தை அளவிடுவதற்கான சரியான முறையாகாது. - அஸ்வதி ரேச்சல் வர்கீஸ்

16-வது நிதி ஆணையத்தின் (16th Finance Commission (XVIFC)) பேரிடர் நிதி ஒதுக்கீட்டு முறையில் உள்ள கட்டமைப்புரீதியான குறைபாடுகள், இந்தியாவில் இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி கிடைக்காமல் செய்கின்றன.


இந்தியாவில் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக ஒடிசா உள்ளது. அதன் 574.7 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதி, இந்தியத் துணைக்கண்டத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த சூறாவளிகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக, ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems (EWS)), புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்ததன் மூலம், ஒடிசா மாநிலம் புயல் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்களை முழுமையாகக் குறைத்துள்ளது. இருப்பினும், 15-வது நிதி ஆணையத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 16-வது நிதி ஆணையம் அனைத்து 28 மாநிலங்களிலும் இல்லாத வகையில், ஒடிசாவிற்கு வழங்கப்படும் பேரிடர் நிதிப் பங்கீட்டில் 1.57 சதவீதப் புள்ளிகள் என்ற மிகப்பெரிய குறைப்பைச் செய்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.


அதிகப்படியான ஆபத்துக்களையும், அதே சமயம் வலுவான தயார்நிலைத் திறனையும் கொண்டுள்ள ஒரு மாநிலம், நிதி ஒதுக்கீட்டில் மட்டும் எப்படிப் பெரும் இழப்பை எதிர்கொள்கிறது? இதற்கான விடை, ஒன்றிய நிதி ஆணையத்தின் (Finance Commission (FC)) நிதிப் பகிர்வு முறையில் உள்ள கட்டமைப்புரீதியான குறைபாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


திருத்தப்பட்ட முறைகள் மற்றும் அதன் நியாயப்படுத்தல்


16-வது நிதி ஆணையம் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்காக (State Disaster Response Fund (SDRF)) ₹2,04,401 கோடியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆணையம் ஒதுக்கியதைவிட 59.5% அதிகமாகும். இதற்காக, ஒரு தத்துவார்த்த மாதிரியின் அடிப்படையில் அமைந்த பேரிடர் அபாயக் குறியீட்டை (Disaster Risk Index (DRI)) அந்த ஆணையம் பயன்படுத்தியது. DRI = ஆபத்து (Hazard) × வெளிப்பாடு (Exposure) × பாதிப்புத்தன்மை (Vulnerability) என்பதாகும். இது 15-வது நிதி ஆணையத்தின் முறையிலிருந்து மாறுபட்டது. முந்தைய ஆணையம் ஆபத்தையும் பாதிப்புத்தன்மையையும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளாகக் கருதாமல், தனித்தனி மாற்றுகளாகக் கருதியது. ஒரு ஆபத்தானது (Hazard), அந்தப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய மக்களையும் சூழலையும் (Exposure & Vulnerability) தாக்கும்போது மட்டுமே அது 'பேரிடர்' ஆகிறது. உதாரணமாக, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரையை ஒரு பலமான சூறாவளி தாக்கினால், அது ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமே, அது பேரிடராகக் கருதப்படாது. இந்தக் கோட்பாடு சரியானது என்றாலும், இதை நடைமுறைப்படுத்திய விதத்தில் சில குறைபாடுகள் உள்ளன.


முக்கியமான சிக்கல் என்னவென்றால், 'பாதிப்பு வாய்ப்பு' (Exposure) எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதுதான். நிதி ஆணையம் ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையையும் அடிப்படையாகக் கொண்டு, 1 முதல் 25 வரையிலான அளவில் இந்த மதிப்பைக் கணக்கிடுகிறது. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்திற்கு 25-புள்ளிகளும், சிக்கிமிற்கு 1-புள்ளியும் வழங்கப்படுகிறது. இந்த முறை பயன்படுத்துவதற்கு எளிதானது, ஆனால் அறிவியல்ரீதியாகச் சரியானது அல்ல என்கின்றனர். காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி (Intergovernmental Panel on Climate Change Sixth Assessment Report (IPCC AR6)), 'பாதிப்பு வாய்ப்பு' என்பது ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையைக் குறிப்பதல்ல; மாறாக, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மக்கள் வசிப்பதையே குறிக்கிறது. பாதுகாப்பான உள்நாட்டுப் பகுதியில் 10 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தைவிட, புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் 3 கோடி மக்கள் வாழும் மாநிலத்திற்கே பாதிப்பு வாய்ப்பு அதிகம் எனப்படுகிறது. எனவே, மொத்த மக்கள்தொகையும், அபாயகரமான மண்டலங்களில் வாழும் மக்கள்தொகையும் ஒன்றல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதன் உண்மையான விளைவுகள் மிகத் தெளிவாக உள்ளன. இந்தியாவிலேயே ஒடிசா மாநிலம்தான் மிக உயர்ந்த ஆபத்து மதிப்பெண்ணை (Hazard Score - 12) கொண்டுள்ளது. ஆனால், அதன் மக்கள்தொகை மதிப்பெண் (Population Score) 5-ஆக மட்டுமே இருப்பதால், அதன் பேரிடர் அபாயக் குறியீடு (Disaster Risk Index (DRI)) 79.8-ஆகக் குறைந்துள்ளது. இது பீகார் (224.2) மற்றும் உத்தரப் பிரதேசம் (413.2) ஆகிய மாநிலங்களைவிட மிகக் குறைவாகும், இருப்பினும் அந்த மாநிலங்களின் ஆபத்து மதிப்பெண்கள் ஒடிசாவைவிடக் குறைவாகவே உள்ளன. நடைமுறையில், இந்தக் கணக்கீட்டு முறையானது மக்கள்தொகையின் அளவிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், ஒரு மாநிலம் மிக அதிக ஆபத்தை எதிர்கொண்டாலும், அதன் மக்கள்தொகை குறைவாக இருந்தால் குறைவான நிதியையே பெற முடியும் என்கின்றனர். இத்தகைய பாரபட்சத்தைத் தவிர்க்கவே 'அபாய அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு முறை' உருவாக்கப்பட்டது, ஆனால், இந்த முறையானது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 


இரண்டாவது பிரச்சனை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. ஒரு மாநிலத்தின் பாதிப்புத் தன்மையானது, அந்த மாநிலத்தின் சராசரி தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic Product (NSDP0)) மூலம் அளவிடப்படுகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களிடம் பேரிடர்களைக் கையாளக் குறைந்த அளவே வளங்கள் இருக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள கருத்தாகும். இருப்பினும், மாநிலத்தின் சராசரி தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) என்பது ஒரு மாநிலத்தின் நிதித் திறனை மட்டுமே காட்டுகிறதே தவிர, உண்மையான பேரிடர் பாதிப்புத் தன்மையைக் காட்டுவதில்லை. ஒரு இடத்தின் பாதிப்புத் தன்மை என்பது வீடுகளின் தரம், அபாயகரமான பகுதிகளில் உள்ள சுகாதார வசதிகள், முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள் போன்ற பல காரணிகளைச் சார்ந்ததாகும். மேலும், சராசரி வருமானம் என்பது ஒரு மாநிலத்திற்குள் நிலவும் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறைத்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2018-ஆம் ஆண்டில், கேரளா ஒரு நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்டது, இதனால் சுமார் ₹31,000 கோடி மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், தற்போதுள்ள கணக்கீட்டு முறையின்படி, கேரளாவின் தனிநபர் வருமானம் (Per Capita Income) அதிகமாக இருப்பதால், அதன் பாதிப்புத் திறன் மதிப்பீடு 1.073 என்ற குறைவான அளவிலேயே காட்டப்படுகிறது. கேரளாவின் மக்கள் தொகை மதிப்பீடு 4-ஆக இருந்தபோதிலும், அதன் பேரிடர் அபாயக் குறியீடு (DRI) 34.5 என்ற அளவிலேயே உள்ளது. இது பேரிடர் வரலாறே இல்லாத பல மாநிலங்களைவிடக் குறைவானதாகும். மறுபுறம், ஜார்க்கண்ட் மாநிலம் உண்மையான வறுமை மற்றும் பழங்குடியின மக்களின் சவால்களால் காரணமாக இரண்டாவது மிக உயர்ந்த பாதிப்புத் திறன் மதிப்பீட்டைக் கொண்டிருந்தாலும், அதன் மக்கள் தொகை மதிப்பீடு ஈடுகொடுக்க முடியாததால், அந்த மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதியில் 0.78 சதவீத இழப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இருபது மாநிலங்கள் தங்களின் நிதிப் பங்கீட்டை இழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அவை பாதுகாப்பானவை என்பது அல்ல, மாறாக அவை சிறிய மாநிலங்களாகவோ, ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களாகவோ அல்லது இவை இரண்டுமே காரணமாகவோ இருக்கின்றன.


மாற்றப்பட வேண்டியவை எவை?


வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிகள், புயல் தாக்கும் கடற்கரைப் பகுதிகள் மற்றும் நிலநடுக்க மண்டலங்கள் போன்ற பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கையை, கட்டிடப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் (Building Materials and Technology Promotion Council (BMTPC)) வெளியிட்ட பாதிப்பு வரைபடம் (Vulnerability Atlas) மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் அளவிட வேண்டும். பாதிப்புத் தன்மை என்பது வெறும் மக்கள் தொகை மட்டுமல்லாது, ஓலைக்குடிசை வீடுகளின் (Kutcha houses) விகிதம், வேளாண்மையைச் சார்ந்து இருத்தல், அதிக அபாயம் உள்ள மாவட்டங்களில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு, பயிர்க் காப்பீட்டு வசதி மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளின் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த குறியீடாக வரையறுக்கப்பட வேண்டும். இதற்காக தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)), பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), தேசிய நல்வாழ்வுத் திட்டம் (National Health Mission (NHM)) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.  நிதி ஆணையம், வருடாந்திர 'மாநில பேரிடர் பாதிப்புக் குறியீட்டை' அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (National Disaster Management Authority (NDMA)) அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்கால நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒரு தரப்படுத்தப்பட்ட முறையைப் பின்பற்றவும், புள்ளிவிவரங்கள் குறித்த தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும் முடியும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.


பேரிடர் நிதியுதவி தொடர்பான விஷயத்தில் இந்தியா தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர். பருவநிலை முன்னறிவிப்புகள் இரு கடற்கரைப் பகுதிகளிலும் அடிக்கடி சூறாவளிகள் தாக்கும் என்றும், தீபகற்ப மற்றும் மத்திய இந்தியாவில் வறட்சிப் பகுதிகள் விரிவடையும் என்றும், ஏற்கனவே பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கின்றன. பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களான ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் ஆகியவற்றிற்கு தற்போதைய நிதி ஒதுக்கீடு முறை போதுமான நிதியுதவியை வழங்கத் தவறிவிட்டது. ஒட்டுமொத்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணக்கீடு முறை உண்மையான ஆபத்தை அளவிடப் பயன்படாது என்றும் அது வெறும் எண்ணிக்கை மட்டுமே தவிர, பாதிப்புக்குள்ளாகும் மக்கள தொகையை அது கணக்கில் கொள்ளவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


அஸ்வதி ரேச்சல் வர்கீஸ், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 

Original article :Counting people is not counting disaster risk. -Aswathy Rachel Varughese

Share:

இந்திய அரசியலமைப்பில் நிதிநிலை மசோதா (Finance Bill) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், புதன்கிழமை அன்று மக்களவையில் கொண்டு வந்த 33 அரசு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களை நிராகரித்தும், 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா (Finance Bill 2026) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


• இந்த மசோதா இனி மாநிலங்களவைக்கு (Rajya Sabha) அனுப்பப்படும். அங்கு மேலவை இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை  செயல்முறைகள் முழுமையடையும் என்கின்றனர்.


• 2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டம் மொத்தம் ₹53.47 லட்சம் கோடி செலவினத்தை மதிப்பிட்டுள்ளது. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 7.7 சதவீதம் அதிகமாகும். மேலும், 2026-27 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் 4.4 சதவீதத்தைவிடக் குறைவு ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு 110(1)-ன்கீழ், ஒரு மசோதா பின்வரும் விவகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பற்றிய விதிகளை மட்டுமே கொண்டிருந்தால், அது ஒரு பண மசோதாவாக (Money Bill) கருதப்படும், அவை:


(a) ஏதேனும் ஒரு வரியை விதித்தல், நீக்குதல், குறைத்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் தொடர்பான விஷயங்கள்.


(b) அரசின் கடன் பெறுதல் முறையை ஒழுங்குபடுத்துதல்;


(c) இந்தியாவின் தொகுப்பு நிதி (Consolidated Fund) அல்லது அவசரகால நிதி (Contingency Fund) ஆகியவற்றைக் கையாளுதல், அவற்றில் பணத்தைச் செலுத்துதல் மற்றும் நிதியைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.


(d) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணத்தைப் பயன்படுத்துதல்.


(e) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் கட்டாயச் செலவினங்களாக சில குறிப்பிட்ட செலவுகளை அறிவிப்பது அல்லது அத்தகைய செலவினங்களின் அளவை அதிகரிப்பது.


(f) இந்தியாவின் தொகுப்பு நிதி அல்லது பொதுக் கணக்கில் பணத்தைப் பெறுதல், அத்தகைய நிதியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், அதன் பயன்பாடு, அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் ஆகியவற்றை இது குறிக்கிறது.


(g) மேலே குறிப்பிடப்பட்டுள்ள (a) முதல் (f) வரையிலான நிபந்தனைகளுடன் தொடர்புடைய எந்தவொரு விவரமும் பணமசோதாவாகக் கருதப்படும்.


இருப்பினும், ஒரு மசோதாவில் அபராதங்கள், பணத்தண்டனைகள் (Financial Penalties), உரிமங்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணங்கள் இடம் பெற்றிருப்பதாலேயே அல்லது உள்ளூர் தேவைகளுக்காக உள்ளூர் அதிகார அமைப்புகளால் விதிக்கப்படும் வரிகளைக் கையாள்கிறது என்பதாலேயே, அந்த மசோதாவை ஒரு பண மசோதா (Money Bill) என்று கருதிவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 110(3)-ன்படி, “ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்ற கேள்வி எழும்போது, மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், சபாநாயகர் ஒரு மசோதாவைப் பண மசோதா என்று அங்கீகரித்துவிட்டால், அதன் தன்மையை நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது குடியரசுத் தலைவராலோகூட கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 109(1)-ன்கீழ், ஒரு பண மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சபாநாயகரின் ஒப்புதலுடன் மாநிலங்களவையின் பரிந்துரைகளுக்காக அனுப்பப்படுகிறது. மாநிலங்களவை இந்த மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது என்கின்றனர்.  மாறாக, 14 நாட்களுக்குள் அதைத் திருப்பி அனுப்ப வேண்டும். மாநிலங்களவை வழங்கும் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், எப்படி இருந்தாலும் மசோதா நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும் என்கின்றனர். ஒருவேளை மாநிலங்களவை 14-நாட்களுக்குள் மசோதாவைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், சட்டப்பிரிவு 109(5)-ன்படி தானாகவே நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


• சபாநாயகரால் சான்றளிக்கப்படாத நிதி மசோதாக்கள் இரண்டு வகைப்படும், அவை: முதலாவது, இந்திய அரசியலமைப்பின் 110-வது பிரிவில் உள்ள விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவை மட்டுமே தனித்துவமாக இல்லாமல் மற்ற விஷயங்களையும் சேர்த்துக்கொண்ட மசோதாக்கள் [பிரிவு 117(1)] ஆகும்.  இரண்டாவது, இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள வேண்டிய சாதாரண மசோதாக்கள் [பிரிவு 117(3)] ஆகியனவாகும்.


பண மசோதாவைப் போன்றே, முதல் வகை நிதி மசோதாக்களும் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு குடியரசுத் தலைவரின் பரிந்துரை கட்டாயம் தேவைப்படும் என்றும் இருப்பினும், பண மசோதாக்களுக்கு விதிக்கப்படும் மற்ற கட்டுப்பாடுகள் இந்த வகை மசோதாக்களுக்குப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் 117 (3)-ன்கீழ் வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் (மக்களவை அல்லது மாநிலங்களவை) அறிமுகப்படுத்தலாம் என்றும் ஆனால், இந்த மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கும் குடியரசுத் தலைவரின் பரிந்துரை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


Original Link: What is Finance Bill in Indian Constitution?


Share:

புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடரானது, புள்ளிவிவரம் மீதான நம்பகத் தன்மையை மேம்படுத்துகிறதா? - புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல. அது நிதிசார் விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது மற்றும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அடிப்படை ஆண்டு (base year) மாறும்போது, ​​பொருளாதார வளர்ச்சியின் தரவுகள் அதற்கேற்ப மாறக்கூடும். ஆனால், இந்தப் புதிய தொடர் ஒரு வலுவான கேள்விக்கான பதிலையும் அளிக்கிறதா? இதன் பொருள், இந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக, நிலையானதாக மற்றும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா என்பதைக் காட்டுகிறதா?


இன்று உலகளாவிய பொதுக் கடன் அதிகரித்து வரும் சூழலிலும், அதே நேரத்தில், நிதி நிலைத்தன்மை குறித்த கவலைகள் பெருகி வரும் நிலையிலும், 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்' (debt-to-GDP ratio) போன்ற பேரியல் பொருளாதாரக் குறியீடுகள், பொருளாதார நிலைத்தன்மை குறித்த மிக முக்கியமான மதிப்பீட்டை வழங்குகின்றன. நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட 'நிதி ஆரோக்கியக் குறியீடு-2026' (Fiscal Health Index (FHI)), சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய 'நிதி கண்காணிப்பு அறிக்கையை' (Fiscal Monitor) மேற்கோள் காட்டி, ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த பத்தாண்டின் முடிவில் உலகளாவிய பொதுக் கடன், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 100%-ஐ எட்டக்கூடும்.


இந்தச் சூழலில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றுவது என்பது வெறும் ஒரு தொழில்நுட்பரீதியான மேம்படுத்தலைவிட, அதற்கு பரந்த முக்கியத்துவம் உள்ளது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு அளவிடப்படும் கட்டமைப்பையும், நிதிசார் அளவீடுகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்படும் முறையையும் இது மாற்றக்கூடும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடப்படும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல, இது பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இது நிதி விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை ஆண்டு மாற்றப்படும்போது, ​​பொருளாதார வளர்ச்சியின் தரவுக்கான விளக்கமும் மாறக்கூடும்.


புதிய தரவுத் தொகுப்புகள் கூறுவது என்ன?


2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், பொருளாதாரத்தின் மாறிவரும் வேகத்தைப் பிரதிபலிக்கின்றன. கடந்த மாதம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நாட்டின் பொருளாதார உற்பத்தியைப் பற்றிய விரிவான மற்றும் முழுமையான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான மூன்று முக்கியமான தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது.


முதலாவதாக, 2025-26 நிதியாண்டிற்கான தனது இரண்டாவது முன்மதிப்பீட்டை அமைச்சகம் வெளியிட்டது. திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டின்படி, 2025-26 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2024-25 நிதியாண்டில் பதிவான 7.1 சதவீதத்தைவிடச் சற்று அதிகமாகும். அடிப்படை ஆண்டு மாற்றத்திற்குப் பிறகும் பொருளாதார வளர்ச்சி நிலையாகவே நீடித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


இரண்டாவதாக, 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) (அக்டோபர்-டிசம்பர் 2025) மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை இந்த அமைச்சகமானது வெளியிட்டது. இந்த ஆண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 8.6 சதவீதம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் மட்டும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 84.54 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பிரதிபலிக்கிறது. பொருளாதாரச் செயல்பாடுகள் ஆண்டு முழுவதும் வலுவாகவே இருந்துள்ளன என்பதை இந்தக் காலாண்டுத் தரவுகள் காட்டுகின்றன.


மூன்றாவதாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரில் (GDP series) பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு முறையிலான மாற்றங்களை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி எவ்வாறு புதிய அடிப்படை ஆண்டின்கீழ் மாறுபட்ட முறையில் அளவிடப்படுகிறது என்பதை இந்தக் குறிப்பு விளக்குவதால், இந்தப் புள்ளிவிவரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று இந்தக் குறிப்பு விளக்குகிறது..


திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு (revised base year) ஏன் தேவைப்பட்டது?


அடிப்படை ஆண்டு (Base Year) என்பது, பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கி, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஆண்டாகும். இருப்பினும், பொருளாதாரங்கள் காலப்போக்கில் மாற்றமடைகின்றன. ஒரு பழைய அடிப்படை ஆண்டை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தினால், அதன் விளைவாகக் கிடைக்கும் ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும்.


2011-12 மற்றும் 2022-23-க்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு தெளிவான மாற்றத்திற்கு உள்ளானது. 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதால் வணிகங்கள் மேலும் முறைப்படுத்தப்பட்டன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் (Digital payment systems) கணிசமாக அளவில் வளர்ந்தன. ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) இந்தியர்களிடையே அனைத்துப் பிரிவுகளிலும் விரும்பப்படும் பணப்பரிவர்த்தனை முறையாக மாறியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வேகமாக விரிவடைந்து, தூய்மையான ஆற்றல் மூலங்களை நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது.


இந்த முன்னேற்றங்கள் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளிலும் ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தன. மேலும், பெருந்தொற்று ஆண்டுகள் (2019-20 மற்றும் 2020-21) உற்பத்தி மற்றும் தேவையைச் சீர்குலைத்தன. இதன் காரணமாக, பொருளாதாரத்தை அளவிடுவதற்கான ஒப்பீட்டு ஆண்டுகளாக இந்த ஆண்டுகள் பொருத்தமானவையாக அல்ல.


எனவே, 2022-23-ஐ புதிய அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுப்பது, பெருந்தொற்றுக்குப் பிந்தைய, நிலையான ஒரு பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள் புதிய துறைகளையும் மாறிவரும் போக்குகளையும் மிகவும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இருப்பினும், இதில் ஒரு முக்கியமான வரம்பு உள்ளது. பழைய மற்றும் புதிய அடிப்படை ஆண்டை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி விகிதங்களை நேரடியாக ஒப்பிட முடியாது. திருத்தப்பட்ட பழைய தரவுத் தொடர் வெளியிடப்படும் வரை, பொது விவாதங்கள் புதிய தரவுகளிலிருந்து மிக விரைவாக நீண்டகால முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


திருத்தப்பட்ட தொடரின் ஒரு முக்கிய பலம், அது அதிக தரவு மூலங்களைப் பயன்படுத்துவதாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு பெரும்பாலும் கணக்கெடுப்புகளுக்கு இடையேயான வெளிப்புறகணிப்புகளைச் (extrapolations) சார்ந்திருந்தது. இது குறிப்பாக முறைசாரா மற்றும் பதிவு செய்யப்படாத துறைகளுக்குப் பொருந்தியது. புதிய கட்டமைப்பு, பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர தரவைப் பயன்படுத்துகிறது. முறைசாரா நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் பெரும் பங்கை வழங்கும் ஒரு நாட்டிற்கு, இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.


இப்போது நிர்வாகத் தரவுகள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி தரவுகள், மாநிலங்கள் முழுவதும் தனியார் பெருநிறுவனங்களின் உற்பத்தியைப் பகிர்ந்தளிக்க உதவுகின்றன மற்றும் காலாண்டு மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு (Public Financial Management System (PFMS)) அரசாங்கச் செலவினங்களை மிகவும் சரியான நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இ-வாகன் தரவுத்தளத்திலிருந்து (e-Vahan portal) பெறப்படும் வாகனப் பதிவுகூட, நுகர்வை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


பதிலீட்டு விகிதங்களிலிருந்து உயர்-அதிர்வெண் டிஜிட்டல் பதிவுகளுக்கு (high-frequency digital records) மாறும் இந்த மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. இருப்பினும், இது புதிய கேள்விகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் தரவுகள் முக்கியமாக முறைசார்ந்த பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதால், முறைசாரா அல்லது ரொக்க அடிப்படையிலான பரிவர்த்தனைகள் போதுமான அளவு பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.


பொருளாதாரம் மேலும் முறைசார்ந்ததாக மாறும்போது, அளவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கக்கூடும். தரவுப் பதிவு முறைகள் மேம்படுவதன் காரணமாக இது நிகழக்கூடும். இதன் பொருள், உண்மையான உற்பத்தி எப்போதும் அதிகரித்துள்ளது என்பதல்ல. எனவே, உண்மையான வளர்ச்சிக்கும் மேம்பட்ட புள்ளிவிவரத் தெளிவுக்கும் இடையிலான வேறுபாடு, புதிய தரவுகளின் பகுப்பாய்வுக்கு முக்கிய மையமாக உள்ளது.


பணவாட்டக் கட்டமைப்பின் விரிவாக்கம்


மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று, மிக முக்கியமானவற்றில் ஒன்றாகவும் பணவாட்டக் கட்டமைப்பின் (deflation framework) விரிவாக்கமாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் சுமார் 180 விலைக் குறியீடுகளைச் சார்ந்திருந்தன. இப்போது, திருத்தப்பட்ட தொடரானது 600-க்கும் மேற்பட்ட நுணுக்கமான, பொருள்-நிலை பணவாட்டக் காரணிகளைப் பயன்படுத்துகிறது.


இது ஏன் முக்கியமானது? உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் எவ்வளவு சிறப்பாக அளவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது. பணவீக்கம் மோசமாக அளவிடப்பட்டால், உண்மையான வளர்ச்சியின் எண்ணிக்கைகள் துல்லியமற்றதாகிவிடும். முன்னர், பெரிய நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) அல்லது மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)) போன்ற ஒட்டுமொத்தக் குறியீடுகளுக்குப் பதிலாக, இப்போது தனிப்பட்ட கூறுகள் குறிப்பிட்ட துணைக்குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காய்கறி நுகர்வைச் சரிசெய்ய காய்கறி விலைகள் குறைக்கின்றன. ஆடைச் செலவினங்களைச் சரிசெய்ய ஆடை விலைகள் குறைக்கின்றன. இயந்திரங்கள், இயந்திரங்களுக்கென பிரத்யேகக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. கட்டுமானம், விரிவான உள்ளீட்டு-நிலை விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது.


இது துறைகளுக்கிடையேயான சிக்கல்களைச் சரிசெய்கிறது. அதாவது, ஒரு துறையில் ஏற்படும் கடுமையான விலை உயர்வு, மற்ற துறைகளில் உண்மையான வளர்ச்சியை தவறாகப் பாதிக்கக்கூடும். இந்த மாற்றம் அந்தப் பிரச்சனையைச் சரிசெய்கிறது. இந்தச் சீர்திருத்தம் தொழில்நுட்பரீதியானது. ஆனால் அதன் ஒட்டுமொத்த தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.


வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை மூலம் முரண்பாடுகளைக் குறைத்தல்


தேசிய கணக்கியலில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) உற்பத்தி மற்றும் செலவின அணுகுமுறைகளுக்கு இடையிலான புள்ளிவிவர வேறுபாடு ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொடரானது வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை (Supply and Use Table (SUT)) கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது. இந்தக் கட்டமைப்பு மொத்த வழங்கல், மொத்தப் பயன்பாட்டுடன் ஒப்பிடுகிறது. இது, மொத்த வழங்கல் உற்பத்தி மற்றும் இறக்குமதிகள் அடங்கும். மொத்தப் பயன்பாட்டில் நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அடங்கும். இது தரவுத்தொகுப்புகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் குறைக்க உதவுகிறது. இந்த அணுகுமுறை தரவுகளுக்குள் நிலைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துகிறது.


2025-26 நிதியாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடரின் ஒரு முக்கிய தாக்கமானது நிதி விகிதங்களைப் பாதிக்கும். நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அத்தகைய விகிதங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த விகிதங்களில், பற்றாக்குறையானது கடன் தொகுதியாகவும் (numerator), மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பகுதியாகவும் (denominator) இருக்கும். மறுஅடிப்படைப்படுத்தல் (rebasing) அல்லது சிறந்த அளவீடு காரணமாக பகுதி அதிகரிக்கும்போது, உண்மையான பற்றாக்குறை அல்லது கடன் மாறாமல் இருந்தாலும்கூட, விகிதம் தானாகவே குறைகிறது. இது பகுதி விளைவு (denominator effect) என்று அழைக்கப்படுகிறது.


நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:


  • தொகுதி – நிதிப் பற்றாக்குறை. இது ஓர் ஆண்டில் அரசாங்கம் வாங்கும் கடனைக் குறிக்கிறது. 


  • பகுதி – மொத்த உள்நாட்டு உற்பத்தி. இது பொருளாதாரத்தின் அளவைக் குறிக்கிறது.


கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:


  • தொகுதி – மொத்த பொதுக் கடன்.

  • பகுதி      – மொத்த உள்நாட்டு உற்பத்தி.


இதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அரசாங்கக் கடன் 100 ஆகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 ஆகவும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 50 சதவீதம் ஆகும். இப்போது, மேம்பட்ட அளவீட்டின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 220-ஆக உயர்த்தப்படுகிறது என்றும், கடன் 100 ஆகவே நீடிக்கிறது என்றும் ஒரு உதாரணமாகக் கொள்வோம். அரசாங்கம் ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தாத போதிலும், இந்த விகிதம் சுமார் 45 சதவீதமாகக் குறைகிறது.


காகிதத்தில், நிதி நிலைமை வலுவாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், எதுவும் மாறவில்லை. இதனால்தான் புள்ளிவிவர மேம்பாட்டை நிதி ஒருங்கிணைப்பு என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. உண்மையான ஒருங்கிணைப்பு என்பது அதிக வருவாய், கட்டுப்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் குறைந்த கடன் வாங்குதல் போன்ற வருவாயிலிருந்து வருகிறது. ஒரு பகுதியை (denominator) பொதுவாக அதிகரிப்பதால் மட்டும் இது வந்துவிடுவதில்லை.


சந்தைகள் மற்றும் தரமதிப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடன் வாங்கும் போக்கும், வட்டி செலுத்துதலை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனுமே முக்கியமானவை. மறுஅடிப்படைப்படுத்தலால் (rebasing) ஏற்படும் குறைந்த விகிதம், நிலைத்தன்மை குறித்த கேள்வியை மாற்றுவதில்லை. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) புதிய அடிப்படையுடன் சீரமைக்கப்படும்போது, அவை இதேபோன்ற சரிசெய்தல்களை எதிர்கொள்ளும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட கடன் வாங்கும் வரம்புகள் இயல்பாகவே மாறக்கூடும்.


பணவியல் கொள்கையைப் பொறுத்தவரை, இதன் தாக்கங்கள் பொதுவாக முக்கியமானவை. மிகவும் துல்லியமான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறதா அல்லது வேகம் குறைகிறதா என்பதை இந்திய ரிசர்வ் வங்கி புரிந்துகொள்ள உதவுகிறது. மேம்பட்ட தரவுகள் பணவீக்க மதிப்பீடு மற்றும் வட்டி விகித முடிவுகளை மேம்படுத்துகின்றன.


திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன செய்கிறது?, என்ன செய்யவில்லை?


திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரானது, இந்தியா தனது பொருளாதாரத்தை அளவிடும் முறையை மேம்படுத்துகிறது. இது மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் முறைசாராத் துறையை மிகவும் சீராகக் கண்காணிக்கிறது. இது மிகவும் விரிவான விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பணவீக்கம் சரிசெய்தல்களை மிகவும் துல்லியமாகவும், உண்மையான வளர்ச்சி மிகவும் கவனமாகவும் அளவிடப்படுகிறது.


மேலும், வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளின் (Supply and Use Tables) பயன்பாடு, உற்பத்தி மற்றும் செலவின மதிப்பீடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) போன்ற நிர்வாக அமைப்புகள் மிகவும் சரியான நேரத்தில் தரவுகளை வழங்குகின்றன. காலாண்டு மற்றும் ஆண்டு எண்ணிக்கைகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எளிமையாகச் சொன்னால், அளவீட்டுக்கான கணக்கீடுகள் மிகவும் துல்லியமாகியுள்ளது.


ஆனால் ஒரு சிறந்த அளவீடு, அதன்மீது நிற்கும் நபரை மாற்றிவிடுவதில்லை. மேம்பாடுகளுக்குப் பிறகும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியால் யார் பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. அது சமத்துவமின்மை, வீட்டில் செய்யப்படும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் அல்லது உற்பத்தியின் சுற்றுச்சூழல் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதில்லை. மேலும், இன்றைய 7 சதவீத வளர்ச்சி விகிதம் நாளை போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதற்கும் அது உத்தரவாதம் அளிப்பதில்லை.


ஒரு பொருளாதாரம் எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடுகிறது. ஆனால், அந்த உற்பத்தி எவ்வளவு நியாயமாகப் பகிரப்படுகிறது என்பதை அது அளவிடுவதில்லை. இந்தப் புதிய தொடர் புள்ளிவிவர நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. ஆனால் அது மட்டுமே ஒரு வலுவான கேள்விக்குப் பதிலளிப்பதில்லை. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதா? என்பதுதான்.



Original Link: Does the new GDP series strengthen statistical credibility?


Share: