16-வது நிதிக் குழுவின் கீழ், தன்னிச்சையான அளவீடுகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைப் பாதிக்கின்றன.
அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட நிதிக் குழு (Finance Commission (FC)), செங்குத்து மற்றும் கிடைமட்ட நிதி ஏற்றத்தாழ்வுகளைக் சரி செய்வதற்காக, ஒன்றியத்தின் மொத்த வரி வருவாயை ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. முந்தைய நிதிக் குழுக்களைப் பின்பற்றி, 16-வது நிதிக் குழுவும் மாநிலங்களுக்கான செங்குத்து நிதிப் பகிர்வு விகிதத்தை 41 சதவீதமாக தக்கவைத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட நிதிப் பகிர்வுகளைத் (horizontal transfers) தீர்மானிப்பதில் “சமத்துவத்தை” வழிகாட்டும் கொள்கையாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நிதி குழுவுடனான கலந்தாய்வுகளின்போது, நிதிப் பரிமாற்றங்களின் கட்டமைப்பு குறித்து மாநிலங்கள் பல்வேறு கவலைகளை எழுப்பின. செஸ் மற்றும் கூடுதல் வரிகள் மொத்த வரி வருவாயில் 15%-ஐத் தாண்டுவதால், அந்த வரிகள் பிரிக்கக்கூடிய நிதிக் வருவாயில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது 8%-10%-ஆகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, ஒன்றிய அரசு இயற்கை வளங்களை வெட்டி எடுப்பது, சொத்துக்களை பணமாக்குவது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதிகள் ஆகிய வழிகள் மூலமாக வரி இல்லாத வருவாயைப் பெறுகிறது.
மாநிலங்கள் மற்றும் அழுத்தங்கள்
மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. கோவிட்-19 பெருந்தொற்று, சரக்கு மற்றும் சேவை வரியால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் நான்கு விகிதங்களிலிருந்து இரண்டு முதன்மை விகிதங்களாக விகித முறைப்படுத்தல் மற்றும் அதிகரித்துவரும் பொதுக் கடன் ஆகியவை அவற்றின் நிதிச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளன. மேலும், ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களின் அதிகரித்துவரும் ஆதிக்கம் மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைக் குறைத்துள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மறுசீரமைப்பின் மூலம், திட்டச் செலவுகளில் 40% மாநிலங்கள் ஏற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதே வேளையில், ஒன்றிய அரசு நிதி வழங்கும் வேகம் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உண்மையான நிதிப் பகிர்வை குறைக்கக்கூடும் என்பதால், பல மாநிலங்கள் 50 சதவீத செங்குத்து நிதிப் பகிர்வைக் (vertical share) வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
நிதிரீதியாகப் பலவீனமான மாநிலங்களுக்கு அதிக வளங்களை மாற்றுவதற்காக, அடுத்தடுத்த நிதிக் குழுக்களில் அதிகாரப் பகிர்வு அளவுகோல்களிலும் (devolution criteria) அவற்றுக்கு ஒதுக்கப்படும் முக்கியத்துவத்திலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது மற்றொரு முக்கிய கவலையாகும். இது, மாநிலங்கள் தங்களின் எதிர்காலப் பங்குகளைக் கணிப்பதைச் சிரமமாக்குகிறது. பல மாநிலங்கள், வருமான இடைவெளி அளவுகோலுக்கான முக்கியத்துவத்தைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. வாழ்க்கைச் செலவுகளில் உள்ள வேறுபாடுகளைச் சரியாக வெளிக்காட்டும் வகையில், இந்த அளவுகோலை வாங்கும் திறன் (purchasing-power) வேறுபாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளன.
காலப்போக்கில், சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பங்குகள், அதிக பயன்பெறும் முக்கிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கணிசாமாக குறைந்துள்ளன. 6-வது நிதிக்குழு காலத்தில் பீகார் (ஜார்கண்ட் உட்பட), மத்தியப் பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட), உத்தரப் பிரதேசம் (உத்தரகாண்ட் உட்பட) மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் பெற்ற மொத்த பங்கு 42.5%-ஆக இருந்தது. அது 15-வது நிதிக்குழுவின் காலக்கட்டத்தில் 51%-ஆக அதிகரித்தது. இதற்கு மாறாக, நான்கு தென் இந்தியா மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்கு 24.8%-லிருந்து 15.8%-ஆகக் குறைந்து, இடைவெளி 35.2%-ஆக விரிவடைந்தது. நிபந்தனையற்ற சமன்பாட்டுப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து நம்பியிருப்பது, கடுமையான பற்றக்குறையில் உள்ள மாநிலங்களில் வருவாய் திரட்டல் மற்றும் நிதிக்கட்டுப்பாடிற்கான ஊக்கங்களைக் குறைக்கக்கூடும். மேலும், ஏழை மாநிலங்களுக்கு அதிகரித்து வரும் பரிமாற்றங்கள், அடிப்படை சேவைகளில் பொதுச் செலவினங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவில்லை. 2022-23-ஆம் ஆண்டில், பீகார் மாநிலம் சுகாதாரம் தொடர்பாக ஒரு நபருக்கு ₹937 மட்டுமே செலவிட்டது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் செலவான ₹10,148-ஐ விட 10.8 மடங்கு குறைவான தொகையாகும். அதேவேளையில், 2023-24-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்விக்காக ஒரு மாணவருக்கு பீகார் செலவிட்ட தொகை ₹20,282-ஆக இருந்தது. இது சிக்கிம் மாநிலத்தின் செலவான ₹1,30,498-உடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான தொகையாகும். பொதுச் சேவை வழங்கலில் மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையை உறுதி செய்வதற்கு, நிதிப் பரிமாற்றங்கள் மட்டும் போதுமானதாக அமையவில்லை என்பதையே இந்த இரண்டு இடைவெளிகளும் காட்டுகின்றன.
நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்
மேல்வரி மற்றும் கூடுதல் வரிகள் (cesses and surcharges) பெரும்பாலும் மாநிலங்களுக்கு மறைமுகமாகப் பயனளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதால், அவற்றைப் பகிரமுடியாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை 16-வது நிதிக் குழு ஏற்றுக்கொண்டதுடன், 41% செங்குத்துப் பங்கையும் (vertical share) தக்கவைத்துக் கொண்டது. மேலும் ஒன்றிய அரசு, வருவாய் பற்றாக்குறை மானியங்களையும், துறை மற்றும் மாநிலம் சார்ந்த மானியங்களையும் ரத்து செய்ததுடன், மாநில அரசுகள் அரசின் வரவு-செலவு கணக்கில் வராத மறைமுகக் கடன்களை (off-budget borrowings) கைவிட வேண்டும் என்றும் அனைத்துப் பொறுப்புகளையும் தங்களது வரவு செலவுத் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளவும், நிதிப் பற்றாக்குறையை 3%-க்கும் குறைவாகப் பராமரிக்கவும் பரிந்துரைத்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகளுக்குக் குறுகிய காலத்தில் நிதி நெருக்கடியை அதிகப்படுத்தலாம்.
15-வது நிதி குழுவால் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களில், நிதி ஆணையம் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்தது. அதில்,
வருமான வித்தியாசம் (Income Distance) – 42.5% முக்கியத்துவம்,
மக்கள்தொகை (Population) – 17.5%,
பரப்பளவு (Area) – 10%,
வனப் பரப்பிறக்கு (Forest Cover) – 10% வழங்கப்பட்டது.
மேலும், வரி முயற்சிக்குப் பதிலாக, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலங்களின் பங்களிப்புக்கு 10% மதிப்பெண் வழங்கப்பட்டது. இருப்பினும், உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) பங்குகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நிதி ஆணையம் மாநிலங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்குகளின் மீது வர்க்கமூல மாற்றத்தைப் (square-root transformation) பயன்படுத்தியது. இதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் 10% மட்டுமே. இது எதிர்பார்க்கப்பட்ட 25%-ஐ விட மிகக் குறைவான அளவாகும். இது பொருளாதாரரீதியாக வலுவான மாநிலங்களின் சாதகத்தை கணிசமாகக் குறைத்து, தரவரிசைகளையும் மாற்றியமைத்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவின் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 14.23%-லிருந்து 8.31%-ஆகக் குறைந்தது. அதேவேளையில், தமிழ்நாட்டின் உடைய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 9.09%-லிருந்து 6.67%-ஆகவும், கர்நாடகாவின் உடைய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி பங்கு 8.95%-லிருந்து 6.59%-ஆகவும் சரிந்தன. அதே சமயம், பல சிறிய மாநிலங்களின் பங்குகள் அதிகரித்தன.
இதன் விளைவாக, 15-வது நிதிக் குழுவின் கூட்டத்துடன் ஒப்பிடுகையில், 14 மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வுப் பங்குகள் சிறிதளவு அதிகரித்தன. நிதியியல் பகிர்வில் கர்நாடகம் அதிகபட்சமாக (0.484 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைப் பெற்று ஆதாயம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து கேரளா (0.457) மற்றும் குஜராத் (0.277) ஆகிய மாநிலங்கள் ஆதாயம் பெற்றன. தமிழ்நாட்டில் 4.079%-லிருந்து 4.097%-ஆக மட்டுமே மிகவும் சிறிதளவு உயர்ந்தது. இதற்கிடையில், 14 மாநிலங்களின் பங்குகள் சரிந்தன. இதில் மத்தியப் பிரதேசம் மிகப்பெரிய (0.503 சதவீதப் புள்ளிகள்) சரிவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (0.403) மற்றும் உத்தரப் பிரதேசம் (0.32) ஆகிய மாநிலங்கள் சரிவைச் சந்தித்தன.
இருப்பினும், நீண்ட காலக் கண்ணோட்டத்தில், ஏற்றத்தாழ்வுகள் கணிசமான அளவில் நீடிக்கின்றன. 16-வது நிதிக் குழுவின்கீழ், தென்னிந்திய மாநிலங்களின் பங்கு 17% ஆகச் சிறிதளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதிக நன்மை பெறும் மாநிலங்களின் பங்கு 50%-க்கும் குறைவாக குறைந்துள்ளது. சமத்துவம் மற்றும் செயல்திறனுக்கு (equity and efficiency) இடையிலான சமநிலைக் குறைவாகவே மாறியுள்ளது. 15-வது நிதிக் குழுவின் கீழ், செயல்திறன் தொடர்பான அளவுகோல்கள் 25% அளவையும், சமத்துவ அளவுகோல்கள் 75% என்ற அளவையும் கொண்டிருந்தன. 16-வது நிதிக் குழுவின் கீழ், இந்த அளவுகோல்கள் முறையே 30% மற்றும் 70% ஆக மாறியுள்ளது. இது முடிவுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றும் அளவுக்கு மிகச் சிறிய சரிசெய்தல் ஆகும். உத்தரப் பிரதேசம் (17.62%), பீகார் (9.95%), மத்தியப் பிரதேசம் (7.35%) மற்றும் மேற்கு வங்காளம் (7.22%) போன்ற குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்கள், நிதிரீதியாக வலுவான மற்றும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைவிடத் தொடர்ந்து அதிகப் பங்குகளைப் பெற்று வருகின்றன.
மாற்றுத் திட்டங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுகள்
மாற்றுத் திட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கக்கூடும். உதாரணமாக, நிதிக் குழு மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பின் வர்க்கமூல மதிப்புக்கு 25% மதிபெண்ணை வழங்கி, வருமான வித்தியாசத்திற்கான (income distance) மதிபெண் 27.5%-ஆகக் குறைத்திருந்தால், கர்நாடகாவின் பங்கு 4.131%-லிருந்து 4.928% ஆகவும், மகாராஷ்டிராவின் பங்கு 6.441%-லிருந்து 7.218%-ஆகவும், தமிழ்நாட்டின் பங்கு 4.097%-லிருந்து 4.867%-ஆகவும் உயர்ந்திருக்கும். அதேபோல், ஆறு அளவுகோள்களுக்கும் சமமான மதிபெண்ணை வழங்கும் முறையைப் பயன்படுத்தியிருந்தால், இந்த மாநிலங்களின் பங்குகள் அதிகரித்து முறையே 5.544%, 7.845% மற்றும் 5.246% ஆகிய மதிபெண்ணை அடைந்திருக்கும்.
நிதிக்குழு வர்க்கமூல சூத்திரத்திற்குப் பதிலாக, 10% என்ற மதிப்புடன் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) பங்கைப் பயன்படுத்தியிருந்தால், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் அதிகாரப் பகிர்வுப் பங்குகள் முறையே 7.033%, 4.367% மற்றும் 4.342% ஆக அதிகரித்திருக்கும். 25% மதிப்பெண் மற்றும் வருமான இடைவெளிக்கு 27.5% மதிப்பெண்ணுடன் அவை 8.698%, 5.517% மற்றும் 5.478% ஆக அதிகரித்திருக்கும். சம மதிப்பெண் முறையின் கீழ், அவற்றின் அந்தந்தப் பங்குகள் 8.833%, 5.937% மற்றும் 5.653%-ஆக அதிகரித்திருக்கக்கூடும். அவர்களின் முறையான பங்குகள் 2.392%, 1.806% மற்றும் 1.556% அதிகரித்தன.
16-வது நிதிக் குழுவின் மதிப்பீட்டின்படி, ஒதுக்கீட்டுக் காலத்தில் மொத்தமாக ₹104 லட்சம் கோடி செங்குத்து நிதிப் பரிமாற்றங்கள் நடைபெறும் என்பதால், இந்த வேறுபாடுகள் முக்கியமானவை. மகாராஷ்டிராவின் பங்கில் 2.392% அதிகரிப்பு என்பது, கூடுதலாக ₹2.49 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு ₹49,744 கோடியாக மாறும். கர்நாடகாவின் கூடுதல் 1.806% பங்கு, ₹1.88 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு ஏறக்குறைய ₹37,565 கோடியை ஈட்டித் தரும். தமிழ்நாட்டின் 1.556% அதிகரிப்பு என்பது, தோராயமாக ₹1.62 லட்சம் கோடி அல்லது ஆண்டுக்கு ₹32,365 கோடியாக அமையும்.
இந்தியாவில், ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற பிற பெரிய கூட்டாட்சிகளைப் போல் இல்லாமல், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அதிக அரசியல் செல்வாக்குள்ள மாநிலங்கள் பொருளாதாரரீதியில் வலுவான மாநிலங்களாக இருப்பதில்லை. இதன் விளைவாக, இந்த மாநிலங்கள் அதிக நிதிப் பரிமாற்றங்களைப் (fiscal transfers) பெற முனைகின்றன. தொகுதி மறுவரையறைக்குப் (delimitation) பிறகு இந்தப் பிரச்சினை தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஏனெனில், அரசியல் செல்வாக்குள்ள மாநிலங்களுக்குச் சாதகமாகச் செயல்பட அரசாங்கங்களுக்கு வலுவான கோரிக்கைகள் ஏற்படக்கூடும். நிதி ஆணையத்தின் முக்கிய நோக்கம் செங்குத்து மற்றும் கிடைமட்ட நிதி ஏற்றத்தாழ்வுகள் இரண்டையும் சரிசெய்வதே என்பதால், எதிர்கால நிதி ஆணையங்கள் நிதிசாரா குறிகாட்டிகளை அதிக அளவில் சார்ந்திருப்பதைவிட, நிதித் திறன் மற்றும் நிதி விளைவுக் குறிகாட்டிகளுக்கு (fiscal outcome indicators) அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், மதிப்பெண்களை ஒதுக்குவதற்கு, முக்கியக் கூறுப் பகுப்பாய்வு முறை (Principal Component Analysis) போன்ற, தரவு சார்ந்த அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
கே.ஆர். சண்முகம், மெட்ராஸ் பொருளியல் பள்ளியின் முன்னாள் இயக்குநரும், தமிழக அரசின் ஆலோசகரும் ஆவார்.
ORIGINAL LINK:
Finance Commission transfers and equity issue.