கல்வித்துறை முழுவதும் உயர்தரக் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், கண்டறிவதற்கும், அங்கீகரிப்பதற்கும் முதலிடம் அளிப்பது மிகவும் அவசியமாகும். அப்போதுதான், இந்தியாவின் பரந்த மனிதத் திறமைகளைப் பயன்படுத்தி இந்தியா உலகளவில் ஒரு உண்மையான முன்னணி நிலையை அடைய முடியும்.
ஆராய்ச்சி என்பது புதிய அறிவை உருவாக்குவதற்கான உண்மையான, ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுமையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வை உள்ளடக்கியதாகும். இதன் முடிவுகள் பொதுவாக அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களின் மறுஆய்வுக்குப் பிறகு, ஆராய்ச்சி இதழ்களில் (Research journals) வெளியிடப்படுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தலும் ஆராய்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்து ஆதரிக்கின்றன. இருப்பினும், பேராசிரியர்கள் பணி நியமனம், பதவி உயர்வு, விருதுகள் மற்றும் நிதி உதவி போன்றவை பெருமளவில் அவர்களின் ஆராய்ச்சி செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன.
ஒரு கல்வி நிறுவனம் பெறும் உயர்ந்த "தரவரிசை", அதிகப்படியான மாணவர்களை ஈர்க்கிறது, வருவாயை உயர்த்துகிறது மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளிடமிருந்து அதிக நிதி உதவியைப் பெற உதவுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரவரிசையானது, அங்கு வெளியிடப்படும் ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மேற்கோள் எண்ணிக்கையை பெரிதும் சார்ந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து, இந்தியாவின் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் (National Institutional Ranking Framework (NIRF)) 30 சதவீத மதிப்பெண்ணையும், ‘QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில்’ (QS World University Rankings) 50 சதவீத மதிப்பெண்ணையும் தீர்மானிக்கின்றன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரவரிசை முறை, முக்கியமாக ஆராய்ச்சிகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலின் உண்மையான கல்வித் தரத்தை துல்லியமாக அளவிடுவதில்லை. உண்மையில், குட்ஹார்ட்டின் விதியின்படி (Goodhart’s law) ஒரு குறிப்பிட்ட அளவீடு இலக்காக மாற்றப்படும்போது, அது தனது பயனை இழந்துவிடுகிறது. தற்போதைய தரவரிசை முறையானது இந்தியாவின் ஒட்டுமொத்த கல்விச் சூழலையே சீரழித்து வருகிறது.
உலகளாவிய ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உற்று நோக்கினால், இந்தத் தவறு மிகத் தெளிவாகப் புரிகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆராய்ச்சி வெளியீடுகளின் (Research publications) எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நெறிமுறையற்ற செயல்பாடுகளால் திரும்பப் பெறப்பட்ட (Withdrawn) ஆராய்ச்சித் தாள்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2025-ஆம் ஆண்டில், உலகளாவிய ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக இருந்தபோதிலும், திரும்பப் பெறப்பட்ட தாள்களில் இந்தியாவின் பங்கு 20 சதவீதமாக இருந்தது. உயரிய தரவரிசையில் உள்ள சில கல்வி நிறுவனங்களில்கூட, ஆராய்ச்சி முறைகேடுகள் காரணமாக அதிக அளவிலான ஆராய்ச்சித் தாள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலிருந்து வெளியாகும் பல "ஆராய்ச்சித் தாள்கள்" தரம் குறைந்த இதழ்களில் பெருமளவில் வெளியிடப்படுகின்றன. ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மேற்கோள் காட்டப்படும் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே தங்களின் முக்கிய இலக்காக மாறிவிட்டதால், பேராசிரியர்கள் அதிக அளவில் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றன. இது "போலி" மற்றும் "காசுக்காகக் கட்டுரை வெளியிடும்" இதழ்களின் வளர்ச்சிக்கும், தங்களுக்குள் கட்டுரைகளை மேற்கோள்காட்டி ஏமாற்றும் குழுக்களின் பெருக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பெயரளவில் மட்டுமே இருக்கும் பகுதிநேர அல்லது கௌரவப் பேராசிரியர்களுக்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கும் பணவெகுமதிகளை வழங்கும் தவறான கலாச்சாரத்தையும் இந்த முறை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படும் உலகளாவிய "மிகச்சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின்" 2025-ஆம் ஆண்டிற்கான “Stanford/Elsevier” பட்டியல், தற்பொழுது சில கடுமையான சிக்கல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியல், ஒரு விஞ்ஞானி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் பிற ஆய்வுகளில் அவை எவ்வளவு முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதை வைத்தே அவரது ஆராய்ச்சியின் தரத்தை மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களில் 12 சதவீதம் பேர், தங்களின் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையையாவது திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒரு ஆராய்ச்சியாளர் 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் திரும்பப் பெற்றுள்ளார். இந்த ‘Stanford’ பட்டியலில் 6,000-க்கும் மேற்பட்ட இந்திய ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றிருக்கும் வேளையில், தவறான கட்டுரைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பிற முறைகேடுகளுக்குக் கடுமையான புள்ளிக்குறைப்பு நடவடிக்கைகளை வழங்கும் ‘Clarivate Analytics’ நிறுவனத்தின் "மிகச்சிறந்த 1 சதவீத ஆராய்ச்சியாளர்கள்" பட்டியலில் வெறும் ஐந்து இந்தியர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி தொடர்பான இந்த அளவீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது, மிகப்பெரிய நிதிச்சுமையையும் ஏற்படுத்துகிறது. நாட்டின் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் அரசுப் பல்கலைக்கழகங்கள் தரம் குறைந்த இதழ்கள் உட்பட பல்வேறு ஆராய்ச்சி இதழ்களின் சந்தாக்களுக்காகவும், கட்டுரைகளை வெளியிடுவதற்கான கட்டணமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் சுமார் 2,000 கோடி ரூபாயைச் செலவிடுகின்றன. இதனுடன் தனியார் பல்கலைக்கழகங்களின் செலவுகளையும் சேர்த்தால் இந்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளை மதிப்பீடு செய்யும்போது, தற்போதுள்ள வெறும் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தரவரிசை முறைக்கு பதிலாக, நியாயமான, பொறுப்பான, வெளிப்படையான மற்றும் தரம் சார்ந்த மதிப்பீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். ஒட்டுமொத்தமாக எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவற்றில் சில முக்கியமான கட்டுரைகளின் தரம் மற்றும் அவை ஏற்படுத்திய உண்மையான தாக்கம் ஆகியவற்றை கவனமாக மதிப்பிட வேண்டும். தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களது சொந்தக் கட்டுரைகளைத் தாங்களே முறைகேடாகக் மேற்கோள் காட்டுவது, மற்றும் முறைகேடான நடைமுறைகளால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் திரும்பப் பெறப்படுவது போன்ற செயல்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும். சமீபத்தில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF), கட்டுரைகள் திரும்பப் பெறப்படுவதற்கு ஒரு குறைந்த அபராத முறையை அறிமுகப்படுத்தியது ஒரு நல்ல முதல் படியாகும். ஆனால், இன்னும் வலுவான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் வெளியிடப்படும்போது, அங்கு போலி ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தயாரித்து விற்கும் வணிகக் குழுக்கள் போன்ற முறைகேடான செயல்பாடுகள் ஏதேனும் நடக்கிறதா என்பதும் சரிபார்க்கப்பட வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் நிரந்தர, ஒப்பந்தகால மற்றும் தற்காலிக/கூடுதல் பேராசிரியர்கள் குறித்து வழங்கும் தரவுகள் கண்டிப்பாகச் சரிபார்க்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த எண்கள் பெரும்பாலும் முறைகேடான வழிகளில் மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. மேலும், கற்பித்தலின் தரத்தை மதிப்பிடும்போது, முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகள் போன்ற மாணவர்களின் இறுதி விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், கேள்வி கேட்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் திறனுள்ள சிந்தனையாளர்களை உருவாக்குவதே உயர்கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவின் பரந்த பரப்பளவு மற்றும் பன்முகத்தன்மை காரணமாக, நெறிமுறையான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடைமுறைகளைக் கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் ஒரு சுதந்திரமான "ஆராய்ச்சி நெறிமுறை அலுவலகம்" (Research Integrity Office) தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் உயர்தரக் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், கண்டறிவதற்கும், வெகுமதி அளிப்பதற்கும் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் பரந்த திறமையாளர்கள் மூலம் நாடு உண்மையிலேயே ஒரு முன்னணி நிலையை அடைய முடியும்.
அச்சல் அகர்வால், சுபாஷ் லகோடியா, சுனில் முகி ஆகியோர் இந்தியாவில் கல்வித்துறை சார்ந்த அறநெறிகளைப் பாதுகாப்பதற்காக வாதிடும் ‘India Research Watch’ அமைப்பின் வாரிய உறுப்பினர்கள் ஆவர். இந்தக் கட்டுரைக்கு அந்த வாரியத்தின் முழுமையான ஒப்புதல் கிடைத்துள்ளது.
ORIGINAL LINK:
India needs an autonomous Research Integrity Office.