முதுமையடைந்து வரும் மக்கள்தொகையைக் கொண்ட எதிர்கால இந்தியாவிற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகையியல் நிலைமையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கான ஆதாரம் இந்தியாவிற்கு தேவைப்பட்டிருந்தால், சமீபத்திய மாதிரிப் பதிவு முறை அறிக்கை-2024 (Sample Registration System(SRS)), அதற்கான தெளிவான சான்றை வழங்கியுள்ளது. 'மாதிரிப் பதிவு முறையின் புள்ளியியல் அறிக்கை-2024'-ன் புள்ளிவிவரங்கள், இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் வேகம் கணிசமாகக் குறைந்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அதற்கான சான்றாக, குறைந்து வரும் கருவுறுதல் விகிதம் (falling fertility rate) மற்றும் குறைந்த அளவிலான மொத்தப் பிறப்பு விகிதம் (low crude birth rate) ஆகியவற்றின் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி இன்னும் குறைந்தது முப்பதாண்டுகளுக்குத் தொடரும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தாலும், தற்போது வேகமாகச் சரிந்து வரும் கருவுறுதல் விகிதம், நமக்கு ஆழ்ந்த சிந்தனையையும் நீண்டகாலத் திட்டமிடலையும் அவசியமாக்குகிறது. ஏனெனில், தற்போது வேறு பல நாடுகள் சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கும் வகையிலான நெருக்கடிகளைத் தவிர்க்க, இந்தியா முன்கூட்டியே தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமாகிறது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 'மாற்று விகித அளவான' (replacement level) 2.1-ஐ விடக் குறைவாகும். இந்த வீழ்ச்சிக்கான ஒரு முக்கியக் காரணம், குறைந்து வரும் பிறப்பு விகிதமே ஆகும். சமீபத்திய மாதிரிப் பதிவு முறை அறிக்கை (SRS) தரவுகளின்படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் 2014-ல் 21-ஆக இருந்து, 2024-ல் 18.3-ஆகக் குறைந்துள்ளது. அதே வேளையில், இறப்பு விகிதம் 6.7-லிருந்து 6.4-ஆகச் சிறிதளவு குறைந்துள்ளது. மக்கள் தொகை "வெடிப்பு" குறித்த அச்சங்களிலிருந்து நாடு படிப்படியாக விலகிச் செல்கிறது. அதற்கு மாறாக, முதுமையடைந்து வரும் மக்கள் தொகையையும், மெதுவான வேகத்தில் விரிவடையும் உழைக்கும் வர்க்கத்தையும் கொண்ட ஒரு எதிர்காலத்தை நோக்கி அது நகர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்தியா தனது 'மக்கள்தொகை பலனை' (Demographic Dividend) இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்தியாவின் சராசரி வயது (Median Age) 29.2 ஆண்டுகளாக உள்ளது. இது சீனா (சராசரி வயது 40.2) மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் சராசரி வயதோடு ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையாகும். 2026-ம் ஆண்டில், இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 370 முதல் 380 மில்லியன் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 27 சதவீதமாகும். மேலும், 35 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், உலகின் மிக இளமையான மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
மக்கள்தொகை அடிப்படையில், குறைந்துவரும் பிறப்பு விகிதமானது, நகரமயமாக்கல், சிறந்த கல்வி, கருத்தடைக்கான அணுகல் மற்றும் சிறிய குடும்பங்களுக்கான விருப்பம் போன்ற காரணிகளுடன் தொடர்புடைய கருவுறுதல் விகிதத்தில் ஏற்படும் சரிவைக் காட்டுகிறது. இந்தியாவில் பிறக்கும்போதே எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 72 ஆண்டுகளாக இருப்பதும், குறைந்துவரும் இறப்பு விகிதமும் இந்த மக்கள்தொகை மாற்றத்தின் மறுபக்கத்தைக் காட்டுகின்றன. இந்தப் போக்குகள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறந்த அணுகலைக் குறிக்கின்றன. மக்கள்தொகை பலன் (demographic dividend) மறைந்துவிடும்போது, எதிர்காலத்தில் வயதான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாட்டின் தேவைகளுக்குத் தயாராவதற்கு, இந்தியா தனது எதிர்காலப் பாதையை மறுமதிப்பீடு செய்து, தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், மாதிரிப் பதிவு முறை அறிக்கை (SRS) தரவுகள் பரந்த பிராந்திய மற்றும் கிராமப்புற/நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள் என்ற உடனடியான கவலையையும் சுட்டிக்காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக, கிராமப்புறங்களின் செயல்திறன் நகர்ப்புற மையங்களுக்கு இணையாக இல்லை. மேலும், தெற்கு மாநிலங்கள் தொடர்ந்து வடக்கு மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும் குழந்தைகளின் உயிர் பிழைப்பு விகிதம் மேம்பட்டுள்ளது, மேலும் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate (IMR)) 24 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், அதிக சுமையைக் கொண்ட வடக்கு மாநிலங்கள் இன்னும் மிக அதிக குழந்தை இறப்பு விகிதங்களைப் பதிவு செய்கின்றன. பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும், ஒரு தேசிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல், விழிப்புணர்வு அல்லது கல்வி வசதிகள் என எதுவாக இருந்தாலும், இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகள் தேவைப்படும்.
Original link:
From black to grey: on the Sample Registration System – Statistical Report, 2024