இடஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிராவின் உள்ளாட்சித் தேர்தல்களை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் எச்சரித்தது ஏன்?

இந்த வாரத் தொடக்கத்தில், உச்சநீதிமன்றம் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்தது. தேவைப்பட்டால் தலையிட்டு நிறுத்துவோம் என்றும் எச்சரித்தது. இங்கே இந்த வழக்கின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்த தீர்ப்பில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC_) இடங்களை ஒதுக்கீடு செய்யும் போது, மகாராஷ்டிரா அரசு 50 சதவீத உச்சவரம்பை தாண்டக்கூடாது என்று கூறியது. அவ்வாறு தாண்டினால், தேர்தலை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 


பாந்தியா ஆணையமானது (Banthia Commission) அறிக்கையை 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு இருந்தவாறே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


பாந்தியா ஆணைய அறிக்கை


உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்த கேள்வியை ஆராய, மார்ச் 11-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசாங்கத்தால், ஜெயந்த் குமார் தலைமையில்  பந்தியா ஆணையம் அமைக்கப்பட்டது. சட்டமன்றச் சட்டங்கள் மூலம் பல்வேறு இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


மகாராஷ்டிராவின் முன்னாள் தலைமைச் செயலாளரான பாந்தியாவைத் தலைவராகக் கொண்ட ஏழு பேர் கொண்ட ஆணையம், உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்க இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறித்த அனுபவப்பூர்வமான தரவுகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டது. ஜூலை மாதம் 7-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு தனது அறிக்கையை ஆணையம்  சமர்ப்பித்தது. மொத்த 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்புக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத பிரதிநிதித்துவத்தை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. 


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதைய இடஒதுக்கீடு என்ன, என்னென்ன பிரச்சனைகள் உள்ளன?


இந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த எச்சரிக்கையின் அர்த்தம், மாநிலத்தில் உள்ள மொத்த 27 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  இடஒதுக்கீட்டை இது தாண்டமுடியாது என்பதைக் குறிக்கிறது. மகாராஷ்டிரா அரசின் புதிய OBC இடஒதுக்கீடு, நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு 1992-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திரா சாஹ்னி மற்றும் பலர் vs இந்திய யூனியன் வழக்கில் நிர்ணயித்த 50 சதவீத உச்சவரம்பை மாநிலம் மீறிவிட்டது என்று சில மனுதாரர்களின் முறையீடுக்குப் பின்னரே இது நடந்தது.


இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Caste (SC)) மற்றும் Scheduled Tribe (ST)) இடஒதுக்கீடு தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விகிதத்தில் உள்ளது. இருப்பினும், பழங்குடி மக்கள் தொகை கணிசமாக உள்ள நாசிக், பால்கர், நந்தூர்பார், துலே, ராய்காட், கட்சிரோலி, யவத்மால் மற்றும் சந்திரபூர் போன்ற மாவட்டங்களில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 14 முதல் 24 சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இது தவிர, இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பட்டியல் சாதியினர் சுமார் 12 சதவீதமாக உள்ளனர். 27 சதவீத முழுமையான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைத் தவிர, மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கு என்ன?


ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை தொடர்பான பாந்தியா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இடஒதுக்கீடு 50 சதவீத உச்சவரம்பை மீறமுடியுமா என்றும் அந்த மனுக்கள் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


மகாராஷ்டிராவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மையின்  தாக்கங்கள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.


மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இழுபறியின் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 2022-ஆம் ஆண்டில் இந்த விஷயத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் ஏன் தேர்தலை நடத்த உத்தரவிட்டது?


மே 6-ஆம் தேதி, உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு (State Election Commission (SEC)) உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


"அடிமட்ட அளவில் ஜனநாயகத்தின் அரசியலமைப்பு ஆணையும், உள்ளாட்சி அமைப்புகளின் அமலாக்கமும் அவ்வப்போது தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்" என்று நீதிபதி காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.


"தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒரு நிலையான காலம் உள்ளதால், குறிப்பிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ப்பதற்கோ அல்லது விலக்குவதற்கோ தற்போதுள்ள சட்டங்களில் பொருத்தமான திருத்தங்களை கோருபவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது" என்று அந்த அமர்வு கூறியது.


நான்கு மாதங்களுக்குள் தேர்தல் செயல்முறையை முடிக்குமாறு கோரிய உச்சநீதிமன்றம், இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உரியநேரத்தில் பரிசீலிக்கலாம் என்றும், இதற்கிடையில், "இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்றும் கூறியது.


தேர்தல்களை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் ‘ஒரு முறை’ கால நீட்டிப்பு வழங்கியது?


செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி, நீதிமன்றம் வகுத்த கால அட்டவணை இருந்தபோதிலும், தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலத் தேர்தல் ஆணையமும் மாநில அரசும் தேர்தல்களை நடத்த கால அவகாசம் கோரியபோது, பொதுத் தேர்வுகளால் வாக்குச்சாவடிகள் அமைக்க பள்ளிகள் கிடைக்காதது, வார்டு மறுவரையறைப் பணியில் தாமதம் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் (Electronic Voting Machine (EVMs)) பற்றாக்குறை போன்ற காரணங்களைத் தெரிவித்தபோது நீதிமன்றம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.


"விதிக்கப்பட்ட கால அட்டவணைக்குள் தேர்தல்களை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் எடுக்கத் தவறிவிட்டது" என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதுடன், "சரியாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளே, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஆன்மா" என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.


மேலும், தேர்தல்களை நடத்துவதில் மேலும் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, உச்ச நீதிமன்றம் "ஒரு முறை மட்டுமே சலுகை" வழங்கியதுடன், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும், "மேலும் எந்தக் கால நீட்டிப்பும்" வழங்கப்படாது என்றும் உத்தரவிட்டது.


இருப்பினும், மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வேறு ஏதேனும் பொருளாதார உதவிகள் (logistic support) தேவைப்பட்டால், அது அக்டோபர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்னர் உடனடியாக ஒரு முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகு அத்தகைய கோரிக்கை எதுவும் ஏற்கப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கு எதிராக மகாராஷ்டிரா மாநில அரசை உச்சநீதிமன்றம் ஏன் எச்சரித்தது?


திங்கட்கிழமை அன்று, மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சதவீதம் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்றும் இது இந்திரா சாஹ்னி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நிர்ணயித்த 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பிற்கு எதிரானது என்றும் சில மனுதாரர்கள் கவலை தெரிவித்தனர்.


நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளில் சமூகப் பிரிவு அடிப்படையிலான (செங்குத்து) இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்க முடியாது என்று அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு தெளிவாகக் கூறுவதாகத் தெரிவித்தது.


"அரசியலமைப்பு அமர்வு நிர்ணயித்த 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நாங்கள் ஒருபோதும் மீற விரும்பவில்லை. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமர்ந்து நாங்கள் அதைச் செய்ய முடியாது," என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


அரசு வழக்கறிஞர் மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினார். மேலும், தற்போதுள்ள இடஒதுக்கீட்டின்படி தேர்தல் செயல்முறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு, தேவைப்பட்டால் நீதிமன்றம் தேர்தலுக்குத் தடை விதிக்கும் என்றும் எச்சரித்தது. "இந்த நீதிமன்றத்தின் அதிகாரங்களை சோதிக்க வேண்டாம்" என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டது.


மகாராஷ்டிராவில் உள்ள 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆகும்.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களை அடுத்து நவம்பர் 19-ஆம் தேதி விசாரிக்கும்.

Original Article:  Why Supreme Court warned it would stay Maharashtra’s local body elections over reservations?.


Share: