அசாமில் வாக்காளர் பட்டியலை ‘சிறப்பு திருத்தம்’ செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது - இந்த செயல்முறை என்ன, ஏன் நடத்தப்படுகிறது?

அசாம் வாக்காளர் பட்டியல் திருத்தம், அசாம் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு : அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முக்கிய அங்கமாக, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (Booth Level Officers (BLO)) வீடு வீடாகச் சென்று, ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல்களை நேரில் சென்று சரிபார்ப்பார்கள்.


அசாம் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு : தேர்தல் நடைபெறவிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் அடுத்த இரண்டரை மாதங்களில் நடைபெறவிருக்கும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம் (Special Revision of Electoral Rolls) என்பது மாநிலத்திற்கே உரித்தான தனித்துவமான செயல்முறையாக இருக்கும். ஏனெனில் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens - NRC) நடத்தியிருக்கிறது, ஆனால் அது இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்ற “தனித்தன்மை வாய்ந்த” (peculiar) நிலைமை உள்ளது என்று அஸ்ஸாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுராக் கோயல் செவ்வாய்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தார். இது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை பாதிக்க வாய்ப்பில்லை. மேலும், வாக்காளர்களால் நிரப்பப்பட வேண்டிய எந்த கணக்கீட்டுப் படிவமும் இதில் இல்லை.


சிறப்பு திருத்த செயல்முறை (special revision process) என்ன?


அசாமில் சிறப்பு திருத்தச் செயல்பாட்டின் முக்கிய அங்கமாக, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் சென்று, தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்களை நேரில் சென்று சரிபார்ப்பதை நம்பியிருக்கும். இந்த அணுகுமுறையில், அசாம் தலைமை நிர்வாக அதிகாரி கோயல் கூறுகையில், "வாக்காளர் பட்டியல்களின் சுருக்கமான திருத்தத்தைவிட இது கடுமையானது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். ஆனால், பீகாரில் நடைபெற்று 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஆவண சரிபார்ப்புக்கு இது செல்லாது" என்றார்.


வீடு வீடாகச் சென்று வாக்குச் சரிபார்ப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் உள்ள 29,656 வாக்குச் சாவடிகளிலும் இது நடைபெறும்.


ஒவ்வொரு வீட்டிலும் தற்போதுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் கொண்ட பதிவேடுகளை வாக்காளர் அதிகாரிகள் அச்சிடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்பத் தலைவரிடம் பேசி ஏதேனும் புதுப்பிப்புகள் உள்ளதா எனப் பார்ப்பார்கள். சரிபார்ப்பின்போது, ​​ஒரு வாக்காளர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தாலோ தேவையான படிவங்களை நிரப்புவார்கள். வீட்டில் ஒரு புதிய வாக்காளர் இருந்தால், அவர்கள் படிவம்-6-ஐ நிரப்புவார்கள். புதிய வாக்காளருக்கும் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் ஆவணங்கள் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படும். முதல் வருகையின்போது வீட்டில் யாரையும் காணவில்லை என்றால், வாக்குச்சாவடி அதிகாரிகள் (BLO) ஒரு வீட்டிற்கு குறைந்தது மூன்று முறையாவது வருவார்கள்” என்று கோயல் கூறினார்.


இந்தப் பயிற்சியின் நோக்கம், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகும். தகுதியற்ற நபர் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை முந்தைய 1,500 என்ற வரம்பிலிருந்து 1,200 ஆகக் கட்டுப்படுத்த, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்க ஒரு தனி செயல்முறையும் நடைபெறும். இதன் விளைவாக, அசாமில் கூடுதலாக 1,826 வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டியிருக்கும்.


இந்த இரண்டு செயல்முறைகளையும் பின்பற்றி, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 27 அன்று வெளியிடப்படும். அதன்பிறகு, ஜனவரி 22 வரை மக்கள் உரிமைகோரல்கள் மற்றும் கருத்துகணிப்புகளை தாக்கல் செய்ய அவகாசம் இருக்கும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 10 அன்று வெளியிடப்படும். வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது ஏன் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (SIR) பதிலாக அசாமில் நடத்தப்படுகிறது?


தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிப்பதற்கான பயிற்சியை ஏற்கனவே மேற்கொண்ட ஒரே மாநிலம் அசாம் என்பதால், தேர்தல் குழு அதன் காலக்கெடுவை வகுத்து, மாநிலத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான (Special Intensive Revision (SIR)) தகுதிக்கான ஆவணங்களின் பட்டியலை தீர்மானிக்கும் போதெல்லாம் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அசாம் அரசு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) கூறியதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) 2019-ல் வெளியிடப்பட்டது. இது 3.3 கோடி விண்ணப்பதாரர்களிடமிருந்து 19.6 லட்சம் நபர்களை விலக்கியது. இருப்பினும், இது இன்னும் இந்திய தலைமைப் பதிவாளரால் (Registrar General of India (RGI)) அறிவிக்கப்படவில்லை. கடந்த வாரம், வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மேல்முறையீட்டு செயல்முறை தொடங்கப்பட வேண்டும் என்றும் கோரிய மனுவில் மத்திய அரசு, அசாம் மற்றும் குடிமக்கள் பதிவு தலைமைப் பதிவாளரின் நிலைப்பாட்டைக் கோரி உச்சநீதிமன்றம் அறிவிப்புகளை வெளியிட்டது.


"இந்தப் பிரச்சினை ஆகஸ்ட் 2026-க்குள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தவுடன், சேர்க்கப்பட்ட நபர்கள் குடிமக்கள் என்பது உறுதியாக நிரூபிக்கப்படும். மேலும், அவர்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை எளிதாக்கப்படும். நாங்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளோம். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்குப் (NRC) பிறகு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன," என்று கோயல் கூறினார்.


ஜூன் 24 அன்று சிறப்பு தீவிர திருத்தத்திற்கான (SIR) அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவைப் போலன்றி, இந்திய தேர்தல் ஆணையம் அசாமுக்கு அத்தகைய எந்த உத்தரவையும் பதிவேற்றவில்லை. சிறப்பு தீவிர திருத்தத்திற்குப்  (SIR) பின்னால் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் காரணம் மற்றும் செயல்படுத்தப்பட்ட சட்ட விதிகள் ஜூன் 24 உத்தரவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறப்பு தீவிர திருத்தத்தைப் போல விரிவாக இல்லாவிட்டாலும், சிறப்புத் திருத்தம் வருடாந்திர சிறப்பு சுருக்கத் திருத்தத்தை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. சிறப்புத் திருத்தத்தில், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பின்போது வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்த, "அறிக்கை-1" ஆவணத்தில் அனைத்து வாக்காளர்களின் (அல்லது வாக்காளர் சார்பாக வயது வந்த குடும்ப உறுப்பினரின்) கையொப்பங்கள் அல்லது கட்டைவிரல் ரேகைகளை இந்திய தேர்தல் ஆணையம் கோருகிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950-ன் (Representation of the People Act) கீழ், பிரிவு 21 (3) வாக்காளர் பட்டியல்களின் "சிறப்பு திருத்தத்தை" (special revision) வழங்குகிறது. இருப்பினும், இது ஒரு தொகுதி அல்லது ஒரு தொகுதியின் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.


"துணைப் பிரிவு (2)-ல் உள்ள எதையும் பொருட்படுத்தாமல், தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும், பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, எந்தவொரு தொகுதிக்கோ அல்லது ஒரு தொகுதியின் ஒரு பகுதிக்கோ வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்ய உத்தரவிடலாம்," என்று பிரிவு 21 (3) கூறுகிறது.


இந்தப் பயிற்சி ஏற்கனவே உள்ள வாக்காளர்களைப் பாதிக்குமா?


இது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்று கோயல் கூறுகிறார். "ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்கள், அவர்கள் செல்லுபடியாகும் சாதாரண குடியிருப்பாளர்கள் என்று கருதப்படுகிறது," என்று அவர் கூறினார். இந்த புரிதல் அசாமில் பெரிய அளவிலான வெளியேற்றங்களை எதிர்கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் பொருந்தும். இந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தன. ஆனால், அவர்கள் இன்னும் சாதாரண குடியிருப்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.


"அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தால், அந்த முகவரியில் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியாது என்று அவர் கூறினார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். வெளியேற்றப்பட்ட மக்கள் இனி அங்கு வசிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். ஆனால் வெளியேற்றப்பட்டவர்கள் ஏற்கனவே வாக்காளர்கள் மற்றும் சாதாரண குடியிருப்பாளர்கள். எனவே அவர்கள் படிவம்-8-ஐப் பயன்படுத்தி தங்கள் முகவரியை மாற்ற வேண்டும். அவர்கள் வேறொரு தொகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும் அல்லது அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் இருந்தாலும், அது ஒரு முகாமாக இருந்தாலும்கூட இதைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்தப் படிவத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், அது ஒரு சிக்கலை உருவாக்கக்கூடும்.


இது தவிர, அசாமில் தற்போது 94,277 D-வாக்காளர்கள் (சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள்) உள்ளனர். அவர்களின் வழக்குகள் இன்னும் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு தீர்ப்பாயம் அவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்தும் வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறப்புத் திருத்தத்தில், அவர்களின் அனைத்து விவரங்களும் எந்த மாற்றங்களும் இல்லாமல் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். "நீக்கம் அல்லது அகற்றல் உட்பட எந்தவொரு மாற்றமும், தகுதிவாய்ந்த வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அல்லது பொருத்தமான நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு பெறப்பட்ட பின்னரே இது மேற்கொள்ளப்படும்" என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவிப்பு கூறுகிறது.

Original Article: Assam electoral roll update | ECI orders ‘special revision’ of voter list in Assam: What is this process, and why is it being conducted?


Share: