ஷேக் ஹசீனா தீர்ப்பு : கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதில் அவரது பங்கிற்காக "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்பதன் அடிப்படையில் முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது என்ன நிகழ்கிறது?
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை விளக்கம் : முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக" குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இது அரசியல் எதிரிகளை குறிவைக்க பயன்படுத்தப்பட்டதாக 2009-ல் அவரே அமைத்த ஒரு தீர்ப்பாயத்தால் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நவம்பர் 17, திங்கட்கிழமை அன்று வழங்கப்பட்ட 453 பக்க தீர்ப்பில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Crimes Tribunal(ICT)) 78 வயதான ஹசீனாவையும், அவருடன் தொடர்புடைய இருவரையும் கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை பயன்படுத்த அனுமதித்ததற்காகவும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும் அவர் குற்றவாளிகளாகக் கண்டறிந்து தீர்ப்பளித்தது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு வேலைகளில் போதுமற்ற இடஒதுக்கீடு முறை தொடர்பாக அவருக்கு எதிராக பல மாதங்களாக நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, வங்காளதேசத்தில் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி கடந்த ஜூலை மாதம் திடீரென முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து அவர் இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார்.
முன்னாள் பிரதமர் மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் தீவிரமாக நடந்த போராட்டங்களில் 46 நாட்களில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக, பிப்ரவரி மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights (OHCHR)) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் ஆயிரக்கணக்கான மக்களும் காயமடைந்தனர்.
"முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரிகள், அதன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்பு, முன்னாள் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய வன்முறை சக்திகளுடன் சேர்ந்து, கடுமையான மற்றும் முறையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன" என்று அறிக்கை கூறியது.
ஹசீனா பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான தற்போதைய அரசாங்கம், முந்தைய ஆட்சி செய்த குற்றங்களுக்கு "நீதி" வழங்குவதாக இந்த அரசாங்கம் உறுதியளித்தது.
ஹசீனா ஆஜராகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், அவர் மீது (மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது) ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை,
வன்முறையை ஊக்குவிக்கும் உரைகளை நிகழ்த்தியது,
போராட்டக்காரர்களை அடக்கவும் அழிக்கவும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டது,
ரங்பூரில் உள்ள பேகம் ரோகியா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை அவர் சுட்டுக் கொன்றது,
டாக்காவின் சங்கர்புல் பகுதியில் ஆறு போராட்டக்காரர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டது, மற்றும்
அஷுலியாவில் ஆறு பேரை எரித்துக் கொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி சங்கர்புல்லில் ஆறு ஆயுதம் இல்லாத போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக, ஹசீனா அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நிலை-4-ல் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹசீனா மறுக்கிறார். கடந்த வாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், போராட்டங்களுக்கு வங்காளதேசத்தில் தற்போதைய ஆளும் கட்சியை அவர் குற்றம் சாட்டினார்.
“போராட்டங்களின் ஆரம்ப நாட்களில், எனது அரசாங்கம் மாணவர்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் போராட்டம் செய்ய அனுமதித்தது. இருப்பினும், தீவிரவாத அமைப்புகள் கூட்டத்தை வன்முறையில் இட்டுச் சென்றபோது இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்தது. வெளிநாட்டு கூலிப்படையினர் (foreign mercenaries) இருந்ததாகவும், அவர்களைத் தூண்டிவிடுபவர்களாகச் செயல்பட்டதாகவும் அவர் கூறினார். முகமது யூனுஸும் அவரது ஆதரவாளர்களும் எழுச்சியைத் தூண்டுவதில் ஈடுபட்டிருந்தனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்று அவர் கூறினார்.
ஹசீனாவின் படைப்பு அவர் மீது திரும்புகிறது
2008 பொதுத் தேர்தலின் போது, ஹசினாவின் அவாமி லீக், 1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் ஒத்துழைத்த "போர்க்குற்றவாளிகளை" விசாரிப்பதாக உறுதியளித்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, ஹசினா 2009-ல் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைத்தார்.
போர்க் குற்றவாளிகள் என்று கூறப்படும் குற்றவாளிகளை தீர்ப்பாயம் ஆர்வத்துடன் விசாரித்து, பொதுமக்களின் முழு ஆதரவையும் பெற்றது. 2010-களின் முற்பகுதியில் வங்காளதேசத்தின் கருத்துக் கணிப்புகள், ஹசீனா எடுத்த மிகவும் "நேர்மறையான" நடவடிக்கைகளில் ஒன்றாக தீர்ப்பாயத்தை அமைப்பதை தொடர்ந்து மதிப்பிட்டன.
பலர் ஆஜராகாத நிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மற்றவர்கள் காவலில் வைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். தீர்ப்பாயம் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையை வழங்கியது. இவர்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியுடன் (Jamaat-e-Islami) தொடர்புடையவர்கள். மேலும் ஹசீனாவின் முக்கிய அரசியல் எதிரியும் ஆவர்.
ஜமாத் பாகிஸ்தான் தரப்பை ஆதரித்ததாகவும், போர்க்குற்றங்களில் பங்கேற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஹசீனா தனது அரசியல் எதிரிகளை குறிவைக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தைப் பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நடுநிலையான வெளிநாட்டு பார்வையாளர்கள்கூட தீர்ப்பாயத்தின் சட்டபூர்வமானத் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பினர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ், நவம்பர் 2012-ல் விசாரணைகள் மிகவும் சிக்கலானவை என்று கூறினார். நீதிபதிகளின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் செயல்முறையின் நியாயத்தன்மை குறித்து அவை கடுமையான கேள்விகளை எழுப்பியதாக அவர் கூறினார்.
ஹசீனா கடந்த ஆண்டு அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டபிறகு, அவர் உருவாக்கிய தீர்ப்பாயம் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்பாயம் "சமரசம்" செய்யப்பட்டதாக அவரது அரசியல் எதிரிகள் முன்னதாகவே கூறினர். அவர் டாக்காவை விட்டு வெளியேறிய பத்து நாட்களுக்குப் பிறகு, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 10 பேர் மீது விசாரணையைத் தொடங்கியது. இதில், ஹசீனா அவர்களில் ஒருவர் ஆவர். இதில் கொலை, இனப்படுகொலை மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களால் இவர்களின் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
அரசு தரப்பு 135 பக்க குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து, அதனுடன் 8,747 பக்க ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களையும் சமர்ப்பித்தது. தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு பல மாதங்களாக சாட்சியங்களைக் கேட்டது. ஹசீனாவுக்கு இப்போதைக்கு எதுவும் மாறவில்லை
இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், முன்னாள் வங்காளதேசத்தின் பிரதமருக்கு உடனடி விளைவுகளை ஏற்படுத்தாது.
கடந்த ஒரு வருடமாக டெல்லியில் ஒரு இரகசிய இடத்தில் வசித்துவரும் ஹசீனா, டாக்காவின் நாடுகடத்தல் கோரிக்கையை இந்தியா ஏற்கும் வரை அவர் இந்தியாவில் தங்குவார். இது விரைவில் நடக்க வாய்ப்பில்லை, அல்லது அப்படி நடந்தாலும் நிறைவேற வாய்ப்பில்லை.
ஹசீனா இந்தியாவிற்கு எல்லா காலங்களிலும் நட்புரீதியில் இருந்தார். அவரது தலைமையின் கீழ், புது தில்லி மற்றும் டாக்கா பொருளாதார, கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகள் வளர அவர் உதவினார். மேலும், அவருக்கு முன்பு பதவியில் இருந்த கலீதா ஜியாவைப் போலல்லாமல், ஹசீனா இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுடன் வலுவாக இணைந்திருந்தார். குறிப்பாக, வங்கதேசத்திற்குள் உள்ள முகாம்களில் இருந்து வடகிழக்கில் செயல்பட்ட அனைத்து போராளிக் குழுக்களுக்கும் எதிராக அவர் செயல்பட்டார்.
இந்தியா-வங்காளதேச ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் (India-Bangladesh extradition treaty) பிரிவு-8, ஒப்படைப்புக்கான கோரிக்கையை மறுப்பதற்கான பல காரணங்களை பட்டியலிடுகிறது. இதில் "நீதியின் நலன்களுக்காக நல்லெண்ணத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத" வழக்குகள் அல்லது "பொது குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் அல்லாத" இராணுவ குற்றங்கள் ஆகியவை அடங்கும்.
டாக்காவின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றாலும், இந்த ஒப்பந்தம் மறுப்பை வெளியிடுவதற்கு போதுமானதாக இடமளிக்கிறது. டாக்காவில் (வங்காளதேசம்) இன்னும் முறையான வாரிசு அரசாங்கம் அமையாததால், வங்காளதேசம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலை சந்திக்கிறது. இதன் காரணமாக, ஹசீனாவை மீண்டும் ஒப்படைக்க வங்காளதேசத்தின் எந்தவொரு அழுத்தத்திற்கும் இந்தியா அடிபணிய வாய்ப்பில்லை.
Original Article: Sheikh Hasina sentenced to death: what happens now?