சில ஆய்வாளர்கள், உலகளாவிய நினைவக குறைமின்கடத்திகளுக்கான (memory chips) தேவை, “குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அதன் விநியோகத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அதேசமயம், நிலைமையின் தீவிரத்தை தங்கள் இந்திய வாடிக்கையாளர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று குறைமின்கடத்தி தயாரிப்பு நிறுவனம் (chip manufacturer) ஒன்றும் கவலை தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் (refrigerators), சலவை இயந்திரங்கள் (washing machines), குளிரூட்டிகள் (air conditioners), மின்கலங்கள் (electric batteries), திறன்பேசிகள் (smartphones), மடிக்கணினிகள் (laptops), தொலைக்காட்சிகள் (televisions), செவிபேசிகள் (earphones), மற்றும் பென்-டிரைவ்கள் (pen drives) ஆகியவற்றின் விலைகளும், ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு அளவுகளில் உயர்ந்துள்ளன. இதற்கெல்லாம் காரணம், இவை அனைத்திற்கும் பொதுவான ஒரு மிகச்சிறிய உதிரிபாகமாக, நினைவக குறைமின்கடத்திகள் (memory chips) ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பட்டியலில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளில், இந்த ஒன்பது பொருட்களும் சேர்ந்து வெறும் 1% பங்கை மட்டுமே வகிக்கின்றன. அப்படியிருந்தும், இவை ஒட்டுமொத்த சில்லறை விலை பணவீக்கத்தை அதிகரித்து வருகின்றன. இந்த அழுத்தம் பல ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஏற்பட்ட உலகளாவிய முதலீட்டு வளர்ச்சி காரணமாக, TSMC, Samsung மற்றும் SK Hynix போன்ற முன்னணி குறைமின்கடத்தி தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களில் (data centres) பயன்படுத்தப்படும், அதிகத் தேவையுள்ள மற்றும் மேம்பட்ட குறைமின்கடத்திகளைத் தயாரிக்க இந்த உற்பத்தியாளர்களை அதிகக் கவனம் செலுத்த தூண்டியுள்ளது. இதன் விளைவாக, குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிரூட்டிகள், திறன்பேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் செவிபேசிகள் போன்ற அன்றாட மின்னணுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் DRAM என்ற இயக்கநிலைத் தற்காலிக அணுகல் நினைவகம் (Dynamic Random Access Memory(DRAM)) மற்றும் பிற மெமரி குறைமின்கடத்திகளின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு அத்தியாவசியமான குறைமின்கடத்திகளின் விநியோகப் பற்றாக்குறையின் விளைவாக, அவற்றின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. மேலும், மின்னணு உற்பத்தியாளர்கள் தற்போது இந்த உயர்ந்த குறைமின்கடத்தி விலைகளை நுகர்வோர் மீது சுமத்துவதால், அது நாட்டின் முக்கிய சில்லறைப் பணவீக்கத் தரவுகளில்கூடப் பிரதிபலிக்கிறது.
நினைவகப் பணவீக்கம்
மே மாதத்தில், மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான விலைக் குறியீடு தொடர்ந்து 7-வது மாதமாக மாதாந்திர அடிப்படையில் உயர்ந்திருந்தது. கைபேசிகளுக்கு இது ஆறு மாதங்களாகவும், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு இது நான்கு மாதங்களாகவும், மேலும் குளிரூட்டிகள், மின்சார மின்கலங்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் செவிபேசிகளுக்கு இது தொடர்ந்து மூன்று மாதங்களாகவும் உயர்ந்திருந்தது.
ஆனால், பென் டிரைவ்கள் (pen drives) மற்றும் ஹார்டு டிஸ்க்குகளுக்குத்தான் (hard disks) மிகப்பெரிய மற்றும் நீண்டகால தொடர்ச்சியான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தூய நினைவகச் சேமிப்புச் சாதனங்களைப் (pure memory storage devices) பொறுத்தவரை, 2023-24-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடரில் உள்ள கடந்த 16 மாதங்களில், இந்த வகையின் விலைக் குறியீடு 15 மாதங்களில் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது.
தொலைபேசி மற்றும் பிற மின்னணுப் பொருட்கள் உற்பத்தியாளர்களால் அறிவிக்கப்பட்ட விலை உயர்வுகளின் பணவீக்கத் தாக்கம் மிக அதிகமாக இல்லை. ஆனால், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிரூட்டிகள், தொலைபேசிகள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் விலைக் குறியீடுகளில் மாதந்தோறும் ஏற்படும் உயர்வுகள் ஏற்கனவே 1% அளவில் உள்ளன அல்லது அதை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பென் டிரைவ்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளைப் பொறுத்தவரை, இந்த உயர்வு 3%-ஐ நெருங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், பணவீக்கத்தின் இந்த புதிய காரணியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம், உலகின் மிக முக்கியமான மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் (Federal Reserve) பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்காவின் தனிநபர் நுகர்வுச் செலவினங்கள் விலைக் குறியீட்டின் "கணினி மென்பொருள் மற்றும் துணைக்கருவிகள்" (Computer Software and Accessories) பிரிவில் காணப்பட்ட விரைவான விலை உயர்வுகளால், அடிப்படைப் பணவீக்கத்திற்கு (core inflation) ஏற்பட்ட "முன்னெப்போதும் இல்லாத பங்களிப்பை" அளிப்பதாகச் சுட்டிக்காட்டினர்.
அடிப்படைப் பணவீக்கம் என்பது, உணவு மற்றும் எரிபொருள் அல்லாத பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுகிறது. இப்பொருட்களின் விலைகள் நிலையற்றதாக இருக்கக்கூடும்.
கட்டமைப்புரீதியான பற்றாக்குறை
இந்தியாவில், மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது மின்னணுப் பொருட்களின் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கான பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதற்கான ஒரு முக்கியக் காரணம், அவை மொத்த நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொகுப்பில் (CPI) வெறும் 1% மட்டுமே பங்களிக்கின்றன. இதை, ஒப்பிட்டுப் பார்த்தால், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய மூன்று முக்கிய காய்கறிகள் மட்டும் நுகர்வோர் விலைக் குறியீட்டுக் (CPI) கூடையில் கிட்டத்தட்ட 2% பங்களிக்கின்றன. மேலும், விவசாயிகள் செய்வது போல மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் மூலப்பொருள் செலவு உயர்வை அவ்வளவு விரைவாகவோ அல்லது தீவிரமாகவோ நுகர்வோர் மீது சுமத்துவதில்லை. ஏன்? ஏனெனில், உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இறுதி விலையில் ஒரு கணிசமான லாப வரம்பைச் (profit margin) சேர்த்துள்ளனர். இருப்பினும், இதுவரை அறிவிக்கப்பட்ட விலை உயர்வுகள் விற்பனையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.
உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' (Counterpoint Research) கூற்றுப்படி, 2026-ம் ஆண்டில் உலகளாவிய திறன்பேசி ஏற்றுமதி 14% சரிந்து 108 கோடி (1.08 பில்லியன்) யூனிட்டுகளாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2013-ம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். இதில் குறைந்த விலை திறன்பேசிகளையே (smartphones) அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைமின்கடத்தி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறனை, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த 'HBM' (உயர் அலைவரிசை நினைவகம்) மற்றும் சர்வர் 'DRAM' தயாரிப்புக்கு மாற்றி வருவதால், மொபைல் சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நினைவக வகையான 'LPDDR4'-ன் விநியோகம் 2026-ல் 40%-க்கும் அதிகமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆரம்பநிலைத் தயாரிப்புகளை வழங்குவதை மேலும் சிக்கனமற்றதாக ஆக்குகிறது," என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை ஜூன் 1 அன்று கூறியது. 150 டாலருக்கும் குறைவான விலையிலான சில திறன்பேசி வகைகள் சந்தையிலிருந்து நிரந்தரமாகவே வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொள்கின்றன.
நிதிச் சேவை நிறுவனமான நோமுராவின் (Nomura) ஆய்வாளர்கள் இன்னும் தீவிரமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். ஜூன் 7 அன்று வெளியிட்ட ஒரு குறிப்பில், அவர்கள், குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு விநியோகத்தை விடத் தேவை அதிகமாகவே இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்தப் பற்றாக்குறையானது கட்டமைப்புரீதியானது மட்டுமல்லாமல், தானாகவே தீவிரமடையும் தன்மையையும் கொண்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். உற்பத்தித் திறனை உறுதிப்படுத்திக்கொள்ள வாங்குபவர்கள் பல ஆண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதுடன், முன்கூட்டியே நிதியையும் வழங்கி வருகின்றனர்.
இந்தியாவின் நிலைமை
கிடைத்த தகவல்களின்படி, அனைத்து வாங்குபவர்களும் நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
மைக்ரான் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும் தலைமை வணிக அதிகாரியுமான சுமித் சதானா, கடந்த மாதம் ஒரு ஊடகத்திடம் பேசுகையில், தங்கள் நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர்கள் இச்சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக உணரவில்லை என்று கூறினார். இந்திய குறைமின்கடத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் நீண்டகாலத் தேவை குறித்த "நம்பகமான குறியீட்டுத் தேவை" மைக்ரான் நிறுவனத்திற்குத் தேவைப்பட்டது மட்டுமல்லாமல், தற்போதைய சூழ்நிலைகளில் அத்தகைய தேவைக்கான ஒரு "உறுதிப்பாடும்" தேவைப்பட்டது. இருப்பினும், இந்திய வாங்குபவர்களிடம் இத்தகைய உறுதியான வாக்குறுதிகள் பெரும்பாலும் காணப்படுவதில்லை.
இதன் விளைவாக, இந்தியர்களுக்கான நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் மற்றும் சில்லறைப் பணவீக்கத்தின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது, 2026-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் சராசரியாக 5.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது, அந்நிறுவனம் நிர்ணயித்த 2% முதல் 6% என்ற இலக்கு வரம்பின் மேல் எல்லையைவிட சற்றே குறைவாகும். அக்காலகட்டத்தில், இந்த மின்னணுப் பொருட்களால் பணவீக்கத்திற்கு ஏற்படும் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கலாம். மேலும், நிபுணர்கள் எச்சரிப்பது போல் விநியோகப் பற்றாக்குறை கடுமையாக இருந்தால், 2026-ம் ஆண்டு இந்தப் பிரச்சனையின் தொடக்கமாக மட்டுமே இருக்கும்.
original article : How a tiny electronic component is slowly driving up inflation in India?. -Siddharth Upasani