உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் நிலையற்றத் தன்மை நிலவிவரும் இந்த நேரத்தில், பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டணி, ஒரு நிலையான மற்றும் உறுதியான உறவுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வார இறுதியில் பிரான்ஸ் செல்கிறார். அவர் ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நீஸ் (Nice) நகரிலும், ஜூன் மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உச்சிமாநாட்டிற்காக எவியன் (Evian) நகரிலும், ஜூன் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பாரிஸ் (Paris) நகருக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் ஏழாவது அதிகாரப்பூர்வ பயணம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் 17-19 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இப்பயணம் அமைகிறது. அந்த வருகையின் போதுதான் இருநாடுகளின் இருதரப்பு உறவு "சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை" (Special Global Strategic Partnership) என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டது. ஐரோப்பாவில் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் விருப்பத்திற்குரிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் விளங்குகிறது. தன்னாட்சி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, கடந்த பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமாக தொடர்கிறது.
தற்போது மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம், இந்தியாவிற்கும் பாரிஸுக்கும் இடையே உள்ள நீடித்த மற்றும் பலமான உறவிற்கு ஒரு சான்றாகும்.
இந்த இருதரப்பு பயணத்தின் மூலம் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த இருதரப்பு சந்திப்பின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்ததாகவே இருக்கும்.
நீஸ் நகரில், அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி ‘Bharat Innovates’ நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். இது இந்தியா, பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஒரே மேடையில் இணைக்கும் ஒரு நிகழ்வாகும். 'இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்புகளுக்கான ஆண்டு' (India-France Year of Innovation) கொண்டாடப்படும் வேளையில் நடைபெறும் இந்த நிகழ்வில், 120-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளின் முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இருநாட்டு உறவுகள் "சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை" நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி நீஸ் நகரில் நடத்தும் முதல் இருதரப்பு உச்சிமாநாடு இதுவாகும்.
ஜூன் மாதம் 18-ஆம் தேதி பாரிஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (Startup) மாநாடான 'VivaTech Summit' பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார். இந்த ஆண்டு ‘VivaTech’ மாநாட்டிலேயே மிகப்பெரிய அரங்காக இந்தியாவின் அரங்கு அமையவுள்ளது.
…மற்றும் ஜி7 உச்சிமாநாடு
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் மோதல்கள், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அப்பகுதியில் வாழும் இந்தியர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற கப்பல்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா (US) நடத்திய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதித்துள்ள இந்த விவகாரம் குறித்த தனது கவலைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸும் ஐரோப்பாவும் இந்தியாவின் முக்கியமான கூட்டமைப்பு நாடுகளாக இருக்கும்; ஏனெனில் போர் தொடர்வது யாருடைய நலனுக்கும் ஏற்றதல்ல என்ற பொதுவான புரிதல் அவர்களிடம் உள்ளது.
வரலாற்றால் பிணைக்கப்பட்ட உறவுகள்...
இந்திய-பிரான்ஸ் உறவுகளின் நீடித்த வலிமையைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற பிரெஞ்சு அரசியல்வாதியான ஜாக் சிராக் என்பவரை உதாரணமாகப் பார்க்கலாம். 1976-ஆம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்தால் இந்தியா உலகளாவிய விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தபோது, அப்போதைய பிரெஞ்சு பிரதமரான அவர் இந்தியாவின் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்ள சம்மதித்தார்.
அதற்கடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை பிரான்ஸ் அதிபராக அவர் மீண்டும் குடியரசு தின முதன்மை விருந்தினராக இந்தியா வந்து, இந்தியாவுடனான 'உத்திசார் கூட்டாண்மையை' (Strategic Partnership) தொடங்கி வைத்தார். இந்த உத்திசார் கூட்டாண்மை என்பது எந்தவொரு மேற்கத்திய நாட்டுடனும் இந்தியா மேற்கொண்ட முதல் கூட்டாண்மையாகும்; அதேபோல் பிரான்ஸ் ஒரு மேற்கத்திய அல்லாத நாட்டுடன் மேற்கொண்ட முதல் கூட்டாண்மையும் ஆகும்.
சில மாதங்களுக்குப் பிறகு, மே மாதத்தில், இந்தியா பொக்ரான்-II (Pokhran-II) அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. மேற்கத்திய நாடுகள் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து, பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால், பிரான்ஸ் அவ்வாறு எந்தவிதப் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த அரசுமுறைப் பயணங்கள், பிரான்ஸ் நாடு தனது ராஜதந்திர உறவுகளின் நுணுக்கமான மற்றும் உணர்திறன் மிக்கத் தன்மைகளை எவ்வளவு நடைமுறைக்கு ஏற்றதாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் கையாண்டது என்பதற்கான ஒரு சான்றாகும். இருநாடுகளுக்கும் இடையே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைக்கு (Innovation and tech partnership) வழிவகுத்த மிக வலுவான பிணைப்பு எதுவென்றால், அது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் "உத்திசார் நம்பிக்கை" (Strategic trust) ஆகும்.
… மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில்
இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் புரிதல் மிகவும் முக்கியமானது, அது இருநாட்டு மிக உயர்மட்டத் தலைவர்களிடமும் தெளிவாகத் தெரிகிறது. தலைவர்கள் மட்டத்திலான இந்தத் தீவிர நம்பிக்கைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் நடந்தது. ஜனவரி மாதம் 2024-ஆம் ஆண்டு குடியரசுதின விழாவிற்கான அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுத்ததைத் தொடர்ந்து, இந்தியா கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனைத் தொடர்புகொண்டது. பிரான்சுக்கான இந்தியத் தூதர் நேரடியாக 'பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை' (Élysée Palace) அணுகியபோது, இந்தியாவின் இரண்டாவது தேர்வு (Second choice) என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், இந்தியாவின் நீடித்த உறவுக்காக மேக்ரோன் உடனடியாக வர ஒப்புக்கொண்டார்.
இதற்குப் பிரதிபலனாக, இந்தியப் பிரதமர் 2025-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் முதன்மைத் தலைவராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஜூன் மாதம் 16-17 ஆகிய தேதிகளில் ஏவியன் (Evian) நகரில் நடைபெறவுள்ள ஜி7 (G7) உச்சிமாநாட்டிற்கு இந்தியா மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்துகிறது. ‘வளரும் நாடுகள்’ (Global South) என்று அழைக்கப்படும் நாடுகளின் முன்னணி குரலாகவும், உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய நாடாகவும் இந்தியா திகழ்வதையே இந்த அழைப்பு பிரதிபலிக்கிறது என்று பிரான்ஸ் நம்புகிறது.
உண்மையில் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 2003-ஆம் ஆண்டுதான் முதன்முதலில் பிரான்ஸ் நாடு இந்தியாவை ஜி8 (G8) உச்சிமாநாட்டிற்கு அழைத்தது (2014-ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, அந்த நாடு நீக்கப்பட்டது, இதனால் ஜி8 அமைப்பு மீண்டும் ஜி7 ஆனது). அப்போது பிரான்ஸ் அதிபர் சிராக் விடுத்த அழைப்பை ஏற்று, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
மீண்டும் 2019-ஆம் ஆண்டில் பிரான்ஸ் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டின் பியாரிட்ஸ் (Biarritz) நகரில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி முதன்முறையாகக் கலந்துகொண்டார். அன்றிலிருந்து இந்தியா தொடர்ந்து இந்த மாநாடுகளில் பங்கேற்று வருகிறது. இது ஜி7 உச்சிமாநாட்டில் இந்தியாவின் 13-வது பங்கேற்பாகும், மேலும் பிரதமர் மோடி தொடர்ச்சியாகக் கலந்துகொள்ளும் 7-வது மாநாடு இதுவாகும்.
பரந்த அளவிலான கூட்டமைப்புகள்
உலகம் கணிக்க முடியாததாகவும், ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவும் மாறியுள்ள இந்தச் சூழ்நிலையில், 'நம்பிக்கை' என்பது ஒரு அரிய பொருளாகிவிட்டது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளைப் பொறுத்தவரை, பல ஆண்டு கால உத்திசார் கூட்டாண்மை (Strategic partnership) மூலம் கட்டியெழுப்பப்பட்ட பரஸ்பர நம்பிக்கை, தற்போது பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற மிக முக்கியமான துறைகளில் முதிர்ச்சியடைந்துள்ளது.
பாதுகாப்புத் துறை: இந்திய-பிரெஞ்சு பாதுகாப்புத் துறை கூட்டாண்மை மிகவும் ஆழமானது ஆகும். இது போர் விமானங்கள், கடற்படை போர்க்கப்பல்கள் முதல் ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகள் வரை அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. இந்த ஒத்துழைப்பிற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்: ரஃபேல் போர் விமானங்கள் (Rafale aircraft), ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் (Scorpene submarines) மற்றும் சக்தி ஹெலிகாப்டர் இயந்திரங்கள் (Shakti helicopter engines) ஆகும்.
விண்வெளித் துறை: இந்தத் துறையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (Indian Space Research Organisation (ISRO)) பிரெஞ்சு தேசிய விண்வெளி முகமைக்கும் (Centre National d'Études Spatiales (CNES)) இடையே 60 ஆண்டுகள் நீண்டகால வரலாற்று ஒத்துழைப்பு உள்ளது. கூட்டு செயற்கைக்கோள் ஏவுதல்கள், 'Megha-Tropiques' மற்றும் 'SARAL’ (Satellite with ARgos and ALtiKa) போன்ற செயற்கைக்கோள் தயாரிப்புகள் மற்றும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான 'ககன்யான்' (Gaganyaan) திட்டத்தில் இணைந்து பணியாற்றுவது ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இவை தவிர, 'த்ரிஷ்ணா' (TRISHNA) என்ற மற்றொரு செயற்கைக்கோள் திட்டத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட ஆலோசித்து வருகின்றன.
அணுசக்தி: இந்தியாவில் அணுசக்தியை மாற்றியமைப்பதற்கான சாந்தி சட்டம் (நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம்) (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Act (SHANTI Act)) நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்திய மற்றும் பிரெஞ்சு தொழில்துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. சிறிய மட்டு அணு உலைகள் / மேம்பட்ட மட்டு அணு உலைகள் (Small Modular Reactors / Advanced Modular Reactors (SMRs/AMRs)) தயாரிப்பு குறித்து, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் கூட்டு ஒத்துழைப்புக்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில்நுட்பம்: தொழில்நுட்பக் கூட்டாண்மை என்பது மிக உயர்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இது குறித்து இந்திய தூதர் ஒருவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், யாராவது தங்களுக்குத் தெரியாத ஒரு அந்நியரிடமோ அல்லது தாங்கள் முழுமையாக நம்பாத ஒரு நபரிடமோ தங்களுடைய மொபைல் போனை ஒருபோதும் தரமாட்டார்கள் அல்லவா? அதே போன்றதுதான் இந்த அதிநவீன தொழில்நுட்பக் கூட்டாண்மையும். இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள், அங்குள்ள அரசாங்க அமைப்புகள் மற்றும் தலைவர்களுக்கு இடையே மிக உயர்ந்த அளவிலான நம்பிக்கையும் உறுதிப்பாடும் தேவைப்படுகிறது. இந்த ஒரு சிறந்த புரிதலால்தான் இந்திய-பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பக் கூட்டாண்மை இன்று இந்தளவிற்கு முதிர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
original article : PM Modi’s France visit: How trust has underpinned India-France ties. -Shubhajit Roy