சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இந்தியாவால் குளிரூட்டும் வசதிகளைப் பயன்படுத்த முடியுமா? இதற்கு நிலைத்தன்மை ஏன் மிக அவசியம் என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகிறார்கள். -பிரஞ்சலி சௌத்ரி மற்றும் நிமிஷ் சிங்

 மக்களுக்குக் குளிரூட்டும் வசதிகள் தேவையா இல்லையா? என்பதல்ல கேள்வி, மாறாக மின்சாரத் தட்டுப்பாடு, காற்று மாசுபாடு மற்றும் நச்சு வாயு வெளியேற்றம் போன்ற பாதிப்புகளை மேலும் அதிகரிக்காமல் இந்தியாவால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வி ஆகும்.


கடுமையான வெப்பம் என்பது இப்போது வெறும் பருவகால பாதிப்பு மட்டுமல்ல; அது பொது சுகாதாரம், உழைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. வெப்ப அலைகளின்போது, குளிர்ச்சியான சூழல் கிடைப்பதைப் பொறுத்தே மக்கள் நிம்மதியாக உறங்க முடியுமா, வேலை செய்ய முடியுமா, படிக்க முடியுமா, நோயிலிருந்து மீள முடியுமா அல்லது வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், வெளியில் வேலை செய்பவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் காற்றோட்டம் இல்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் அவசியமானதாகிறது.


கோடைக்காலம் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்குவதோடு, நீண்டநாட்களுக்கு நீடித்து, மிகக் கடுமையானதாகவும் மாறி வருவதால், இந்தியாவில்  குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இப்போது கேள்வி என்னவென்றால், மக்களுக்குக் குளிரூட்டும் வசதி தேவைப்படுகிறதா என்பது அல்ல; மாறாக, மின்சாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தாமலும், காற்று மாசுபாடு மற்றும் நச்சு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்காமலும் இந்தியாவால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாகும்.




இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்த எதிர்காலக் கணிப்பு 


இந்தக் கோடைகாலத்தில் இந்தியாவின் உச்சபட்ச மின்சாரத் தேவை ஏற்கனவே சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியன்று 252.07 ஜிகாவாட்டாக (GW) இருந்த மின்சாரத் தேவை, மே மாதம் 21-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு 270.8 ஜிகாவாட்டாக (GW) உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்குக் கடுமையான வெயிலும், குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததே முக்கியக் காரணமாகும்.


மேலும் பல குடும்பங்கள் குளிரூட்டிகளை (Air conditioners (ACs)) வாங்கத் தொடங்குவதாலும், வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் தீவிரமாக வீசுவதாலும், மின்சாரத் தேவை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சாரக் கட்டமைப்பில் ஏற்கனவே அழுத்தம் அதிகமாக இருக்கும் வெப்பமான மாலை நேரங்களில், இந்த குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடே உச்சபட்ச மின்தேவை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக மாற வாய்ப்புள்ளது.


குளிர்ச்சி முரண்பாடு


ஆபத்தான வெப்ப அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அதிக குளிரூட்டும் வசதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், நாம் பயன்படுத்தும் வழக்கமான குளிர்ச்சி முறைகளே இந்த வெப்பப் பிரச்சினையை மேலும் மோசமாக்கக்கூடும் என்கின்றனர். குளிர்சாதன உபகரணங்கள் மின்சாரத் தேவையை அதிகரிக்கின்றன. இந்த மின்சாரம் பெரும்பாலும் நிலக்கரி போன்ற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால், இது வளிமண்டலத்தில் கார்பன் (CO2) உமிழ்வை மேலும் அதிகரிக்கிறது.


மேலும், குளிர்விக்கும் அமைப்புகள் ஹைட்ரோபுளோரோகார்பன்கள் (Hydrofluorocarbons (HFCs)) போன்ற குளிரூட்டிகளைப் (Refrigerants) பயன்படுத்துகின்றன. இவை குளிரூட்டும் சாதனங்கள் (ACs), குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் இதர குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் ஆகும். ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பழைய வேதிப்பொருட்களுக்கு மாற்றாக இவை கொண்டுவரப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை மிக அதிக புவிய வெப்பமயமாதல் திறனைக் (Global Warming Potential (GWP)) கொண்டுள்ளன. இவை கார்பன்-டை-ஆக்சைடைவிட பல மடங்கு அதிக வெப்பத்தைத் தக்கவைத்து, வீரியமிக்க பசுமைக்குடில் வாயுக்களாகச் செயல்படுகின்றன. இவை குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்தும் போதோ, பழுதுபார்க்கும் போதோ காற்றில் கசிந்தால், புவி வெப்பமடைவதை கணிசமாக அதிகரிக்கும் என்கின்றனர்.


மான்ட்ரியல் உடன்படிக்கைக்கான கிகாலி திருத்தத்தின்படி (Kigali Amendment to the Montreal Protocol), இந்தியா தனது ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) வெளியேற்ற அளவை 2028-ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தி, பின்னர் 2047-ஆம் ஆண்டிற்குள் படிப்படியாகக் குறைக்கும். இந்தியாவின் குளிரூட்டும் சாதனங்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்துவரும் இதேவேளையில், இந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமானால் குறைந்த புவி வெப்பமயமாதல் திறன் (Low-GWP) கொண்ட குளிரூட்டிகள், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயன்படுத்திய குளிரூட்டிகளைப் பாதுகாப்பாகச் சேகரித்து, மறுசுழற்சி செய்து, அழிப்பதற்கான கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.


எனவே, மக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் அதே அமைப்புகள்தான், கடுமையான வெப்பம் உருவாவதற்கான சூழ்நிலைக்கும் காரணமாக அமைகின்றன. இதுதான் இந்தியாவின் "குளிர்ச்சி முரண்பாடு" (Cooling paradox) ஆகும். இதற்காகக் குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கும், அதிக ஆற்றல் திறன் கொண்ட மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய குளிர்சாதனப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.


இந்தியாவின் குளிர்விப்புச் செயல் திட்டம்


2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய குளிர்விப்புச் செயல் திட்டம் (India Cooling Action Plan (ICAP)), குளிரூட்டும் வசதிகளை அனைவருக்கும் விரிவுபடுத்துவதையும், அதேசமயம் 2037-38-ஆம் ஆண்டிற்குள் குளிர்விப்புத் தேவையை 20-25% ஆகவும், குளிரூட்டும் வாயுக்களின் தேவையை 25-30%-ஆகவும் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டிடங்கள், குளிர்சாதனச் சங்கிலிகள், போக்குவரத்து, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் தொழில்துறை எனப் பொருளாதாரம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு முக்கியப் பிரச்சினையாகக் குளிரூட்டும் வசதியை அணுகுவதே இந்தத் திட்டத்தின் பலமாகக் கருதப்படுகிறது.


இருப்பினும், இதைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. மின்சாதனங்களின் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிரூட்டிகளைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டும் பெரும்பாலும் தனித்தனியாகவே கவனிக்கப்படுகின்றன. கட்டிட வடிவமைப்பு, மின்சாதனத் திறன், குளிரூட்டித் தேர்வு, மின்கட்டமைப்புத் திட்டம் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான அணுகல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறைதான் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.


திறன்மிக்க குளிரூட்டிகள் (ACs), குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் விசிறிகள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும். கடுமையான தரநிலைகளை வகுப்பதும், திறன்மிக்க சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. ஏனெனில், குறைந்த திறன் கொண்ட குளிரூட்டும் சாதனங்கள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கக்கூடும் என்பதால் இது மிக முக்கியமானது.


ஆனால், குளிரூட்டும் சாதனங்களின் திறன் மட்டும் போதாது. கட்டிடங்கள் வெப்பத்தைத் தடுத்து வைத்திருந்தாலும், வீதிகளில் நிழல் இல்லாவிட்டாலும், வீடுகளில் காற்றோட்டம் குறைவாக இருந்தாலும் குளிர்விப்புத் தேவை அதிகமாகவே இருக்கும். நிலையான குளிர்விப்பு என்பது சாதனத்தை இயக்குவதற்கு முன்பே தொடங்க வேண்டும். சிறந்த கட்டிட வடிவமைப்பு, குளிர்ச்சியான கூரைகள், நிழல், நல்ல காற்றோட்டம், வெப்பத்தைப் பிரதிபலிக்கும் கட்டுமானப் பொருட்கள் போன்ற இயற்கையான குளிர்விப்பு முறைகள், இயந்திரங்கள் மூலம் குளிர்விக்கும் தேவையை பெருமளவு குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


நிலையான குளிர்விப்பு முறை 


சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் உமிழ்வை அதிகரிக்காமல், குளிரூட்டும் வசதிகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக் கூடிய இந்தியா ஒரு பல அடுக்கு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்:


தேவையைத் தொடக்கத்திலேயே குறைத்தல்: சிறந்த நகரத் திட்டமிடல் மற்றும் கட்டிட வடிவமைப்பு ஆகியவை - குறிப்பாகப் பொது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் - வெறும் கட்டிடப் பாதுகாப்பை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், உட்புற வெப்பத்தைக் குறைத்து இயல்பான குளிர்ச்சியைத் தருவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


திறமையான குளிர்ச்சியூட்டலை முதன்மையாக்குதல்: குளிரூட்டும் சாதனங்கள் (ACs), மின்விசிறிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான ஆற்றல் திறன் தரநிலைகளைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும். அதேநேரத்தில், அதிக ஆற்றல் திறன் கொண்ட இந்தத் தயாரிப்புகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.


குளிரூட்டிகளின் மாற்றத்தை வேகப்படுத்துதல்: புவி வெப்பமடைதலைக் குறைவாகக் காட்டும் R-290, R-32, அம்மோனியா மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) போன்ற மாற்று குளிரூட்டிகளைத் தொழில்நுட்பரீதியாக சாத்தியமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். இதற்குத் தொழில்முனைவோர் ஆதரவு, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பயிற்சி மற்றும் இந்தத் திரவங்களைச் சேகரித்து மீண்டும் பயன்படுத்தும் அமைப்புகள் தேவைப்படுகிறது.


மின்சாரத் துறை திட்டமிடலுடன் குளிரூட்டல் அமைப்புகளை இணைத்தல்: மின்கலன் சேமிப்பு, தேவைக்கேற்ப மின்சாரப் பயன்பாட்டை மாற்றுதல், நேரத்திற்கு ஏற்ற மின்சாரக் கட்டணம் மற்றும் நவீன குளிரூட்டிகள் மூலம் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிரூட்டும் சுமையைக் குறைக்க முடியும். இது மின்சாரக் கட்டமைப்பின் அழுத்தத்தைக் குறைப்பதோடு, புதிய நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்களின் தேவையையும் குறைக்கும் என்கின்றனர்.


இந்தியா, குளிர்ச்சியூட்டும் தேவையைத் தனது காலநிலை, ஆற்றல் மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கையின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருத வேண்டும். அதாவது, இந்தியக் குளிரூட்டல் செயல் திட்டத்தை (ICAP) அளவிடக்கூடிய இலக்குகளுடன் செயல்படுத்துவது, உபகரணங்களின் ஆற்றல் திறனை அதிகரிப்பது, குறைந்த புவிவெப்பமயமாக்கல் குளிரூட்டும் சாதனங்களுக்கு மாறுவதை வேகப்படுத்துவது, இயற்கை வழி குளிர்ச்சியூட்டலில் முதலீடு செய்வது மற்றும் அதிகரித்து வரும் குளிரூட்டும் தேவைக்கேற்ப மின்சாரக் கட்டமைப்பைத் தயார்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கிறது.


இதன் நோக்கம் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது அல்ல. வெப்பம் அதிகரித்துவரும் இந்தியாவில், மக்களுக்கு வெப்பத்திலிருந்து கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும். எனவே, நமது நோக்கம் புத்திசாலித்தனமான குளிர்ச்சியூட்டலாக (Smarter cooling) இருக்க வேண்டும்: தூய்மையான, திறமையான, மலிவான மற்றும் கட்டிடங்கள், நகரங்கள் மற்றும் மின்சார அமைப்புடன் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


இந்தியாவின் இந்த சவாலே ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதைச் சரியாகத் திட்டமிட்டால், மக்களைக் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம், மின்சாரக் கட்டமைப்பின் அழுத்தத்தைக் குறைக்கலாம், ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உமிழ்வைக் குறைக்கலாம், காற்றின் தரத்தை மேம்படுத்தலாம், மேலும் வெப்பமான எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு 'குளிர்ச்சியூட்டும் பொருளாதாரத்தை' (Cooling economy) உருவாக்கலாம்.


பிரஞ்சலி சௌத்ரி, ‘Gateway Research Foundation’ நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை இணை ஆய்வாளராக உள்ளார். இவர் நிலையான குளிர்ச்சி முறைகள், கழிவு மேலாண்மை மற்றும் மாநில அளவிலான கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத மாசுக்களின் மதிப்பீடு ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.


நிமிஷ் சிங், ‘Gateway Research Foundation’ நிறுவனத்தில் அறிவியல் பிரிவின் இயக்குநராக உள்ளார். இவர் காற்றின் தரம், உமிழ்வுப் பட்டியல்கள், வளிமண்டல மாதிரி ஆய்வுகள் மற்றும் குறுகிய காலம் வளிமண்டலத்தில் தங்கும் காலநிலை மாசுபடுத்திகளைக் குறைத்தல் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.

original article : Can India cool down without heating up? Experts Explain why sustainability is key. -Pranjali Chowdhary and Nimish Singh

Share: