ஒன்றிய அரசு, 1952-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்குப் பதிலாக, 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026' (Employees’ Provident Funds Scheme, 2026) என்ற புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, 'சமூக பாதுகாப்புச் சட்டம், 2020'-ஐ (Code on Social Security, 2020) நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். இந்தப் புதிய திட்டம் ஜூன் மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஓய்வூதிய நிதி அமைப்பான 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு' (EPFO), பணத்தை முன்கூட்டியே எடுப்பது மற்றும் பணம் எடுக்கும் பிரிவுகளை முறைப்படுத்துவது குறித்து சமீபத்தில் எடுத்த முடிவுகள் இந்த புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, சட்டப்பூர்வ ஊதிய வரம்பிற்கு மேல் கட்டாயமாக மற்றும் விருப்பத்தின் பேரில் செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்புகள் குறித்தும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஒப்பந்ததாரரை நியமிக்கும் முக்கிய நிறுவனம் (Principal employer) என்ற கருத்து இந்தத் திட்டத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய தொழிலாளர் சட்டங்களின் விதிகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின்படி (EPF Scheme, 2026), ஒரு நிறுவனம் தன்னிடம் நேரடியாக வேலை செய்யும் ஊழியருக்கோ அல்லது ஒரு ஒப்பந்ததாரர் மூலமாக (சுயமாகப் பதிவு செய்யப்படாத ஒப்பந்ததாரர்) வேலை செய்யும் ஊழியருக்கோ, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் ஊழியரின் பங்களிப்பு ஆகிய இரண்டையும், அதற்கான நிர்வாகக் கட்டணங்களுடன் சேர்த்து, ஒவ்வொரு மாதமும் முடிந்த 15 நாட்களுக்குள் முதலில் செலுத்திவிட வேண்டும்.
ஒருவேளை, ஒப்பந்ததாரரே நேரடியாக வருங்கால வைப்பு நிதி தொகையைச் செலுத்தும்பட்சத்தில், அத்தொகை சரியாகச் செலுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதிப் பொறுப்பு ஒப்பந்ததாரரை நியமிக்கும் முக்கிய நிறுவனத்திடமே உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026-ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பணத்தை எடுப்பதற்கான (Withdrawal) விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்தது. இதன்படி, பணம் எடுப்பதற்கான பிரிவுகள் 13-லிருந்து மூன்றாகக் குறைத்து முறைப்படுத்தப்பட்டுள்ளன — 1) அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்); 2) வீட்டிற்குரிய தேவைகள்; மற்றும் 3) சிறப்புச் சூழ்நிலைகள். அத்துடன் கணக்கில் 25% குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 (EPF Scheme, 2026) அந்த மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்படி, ஒரு நபர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேர்ந்து மொத்தம் 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, தனக்கோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர் எடுக்க தகுதியான தொகையில் 100% வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பயன்பாட்டிற்குத் தகுதியான 100% உறுப்பினர் இருப்புத்தொகை என்பது, கணக்கில் உள்ள மொத்தப் பணத்தில் 75%-ஐத் திரும்பப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கும். ஏனெனில், 25% தொகையைக் கணக்கில் கட்டாயக் குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும். வேலை இல்லாமல் ஒரு வருடம் தொடர்ந்து இருக்கும்பட்சத்தில், கணக்கில் உள்ள முழு 100% தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
உறுப்பினர்கள் தங்களது சொந்தப் படிப்புக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் படிப்புக்கோ, இந்த நிதியத்தில் சேர்ந்து மொத்தம் 12 மாதங்கள் முடிந்தபிறகு பணத்தை எடுக்கலாம். இவ்வாறு படிப்பிற்காகப் பகுதித்தொகையாக எடுப்பது (Partial withdrawal) அவர்களது ஒட்டுமொத்த உறுப்பினர் காலத்தில் 10 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது. தங்களது சொந்தத் திருமணத்திற்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்கோ, தகுதியான உறுப்பினர் இருப்பில் இருந்து 100% வரை பணத்தை எடுக்க முடியும்; ஆனால், திருமணத்திற்காகப் பகுதித் தொகையாக எடுப்பது நிதியத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர் காலத்தில் 5 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது.
வீடுசார்ந்த தேவைகளுக்காக, ஒரு உறுப்பினர் ஒரு புதிய அடுக்குமாடி வீடு அல்லது தனி வீடு வாங்குவதற்கும்; வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்கும்; வீடு கட்டுவதற்கும்; வீடு அல்லது நிலம் வாங்குவதற்காக வாங்கிய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும்; ஏற்கனவே உள்ள வீடு அல்லது அடுக்குமாடி வீட்டைப் புதுப்பிப்பதற்கும் அல்லது கூடுதல் வசதிகள் செய்வதற்கும் பகுதித்தொகையாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம். இதற்கு, நிதியத்தில் மொத்தம் 12 மாதங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் மற்றும் எடுக்கப்படும் தொகை மொத்த நிதியில் 75% வரை மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன. மேலும், இந்த வீடு சார்ந்த தேவைகளுக்காகப் பகுதித் தொகையாகப் பணம் எடுப்பது 5 முறைகளுக்கு மேல் மிகக் கூடாது.
உடல்நலக்குறைவு, கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், அதேபோல வீடு கட்டுதல்/வாங்குதல் மற்றும் பிற குறிப்பிட்ட சிறப்புச் சூழ்நிலைகளுக்காகவும், எளிமையாக்கப்பட்ட விதிகளின்கீழ் உறுப்பினர்கள் தங்களது நிதியிலிருந்து ஒரு பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்; மேலும், அந்த நிதியத்திற்கு அவர்கள் வழங்கிய ஒட்டுமொத்தப் பங்களிப்பில் குறைந்தபட்சம் 25% தொகையைத் தங்களது கணக்கில் வைத்திருக்க வேண்டும், என்று ‘Ernst & Young India’ நிறுவனத்தின் மனிதவள மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் சிறப்புப் பிரிவின் பங்குதாரர் புனீத் குப்தா தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் எந்தெந்த விஷயங்கள் மாற்றமில்லாமல் அப்படியே தொடர்கின்றன?
முந்தைய திட்டத்தில் இருந்த பங்களிப்பு விகிதமே இந்தப் புதிய திட்டத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அதாவது, பெரும்பாலான நிறுவனங்களுக்கு 12%-ஆகவும், குறிப்பிட்ட சில அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 10%-ஆகவும் இருக்கும். சட்டப்பூர்வ ஊதிய வரம்பு வரை மட்டுமே இந்த பங்களிப்புகள் கட்டாயமானவை ஆகும்.
2026-ஆம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்படி, நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இருதரப்பினருமே தங்களது ஊதியத்தில் 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பாக வழங்க வேண்டும். ஒரு தொழிலாளியின் ஊதியம் சட்டப்பூர்வ ஊதிய வரம்பைவிட அதிகமாக இருந்தால், அந்த வரம்பு வரை மட்டுமே கட்டாயப் பங்களிப்பு கணக்கிடப்படும் என்று இத்திட்டம் தெளிவாகக் கூறுகிறது, என குப்தா தெரிவித்தார். இருப்பினும், தொழிலாளர்கள் விரும்பினால் இந்த ஊதிய வரம்பிற்கு மேல் உள்ள தொகைக்கோ அல்லது 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களது சுயவிருப்பப் பங்களிப்பை வழங்கலாம். இதற்கு இணையாக நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை உயர்த்திக் கொள்ள முன்வரலாம் என்றும் கூறினார்.
புதிய திட்டம் தெளிவாகக் கூறுவது என்னவென்றால், ஊழியர்கள் தங்களின் சட்டப்பூர்வ உச்சவரம்பிற்கு மேலான ஊதியத் தொகைக்கோ அல்லது 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களது விருப்பத்தின் பேரில் பங்களிக்க முடியும்; மேலும், நிறுவனங்களும் இந்த கூடுதல் பங்களிப்பிற்கு இணையாகத் தங்களின் பங்களிப்பை வழங்க முன்வரலாம். ஊழியர்கள் உச்சவரம்பிற்கு மேலான ஊதியத் தொகைக்கோ அல்லது 12 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்திலோ தங்களின் விருப்பத்தின் பேரில் பங்களிக்க முடியும். மேலும், நிறுவனங்களும் அதற்கு இணையான பங்களிப்பை வழங்க முடிவு செய்யலாம். இந்த விருப்பப் பங்களிப்புகளைப் பின்நாட்களில் ஊழியரோ அல்லது நிறுவனமோ குறைத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக நிறுத்திக்கொள்ளவோ முடியும். இது முன்பு இருந்த அதே நடைமுறைதான். புதிய திட்டத்தில் எந்தவொரு புதிய கட்டாய விதிகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை, என்றும் தெரிவிக்கின்றனர்.
புதிய விதியின்படி, ஊழியர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களின் கூடுதல் விருப்பக் காலமுறை வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை எப்போது வேண்டுமானாலும் குறைத்துக்கொள்ளவோ அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளவோ அனுமதி வழங்கப்படுகிறது. இது ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியச் சேமிப்பைத் திட்டமிடுவதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மேலும், ஊழியர்களின் கைக்குக் கிடைக்கும் நிகர ஊதியத்தை (Take-home pay) அதிகரிக்கவும் உதவுகிறது. இருப்பினும், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் செய்யும் கூடுதல் விருப்பப் பங்களிப்புத் தொகைக்கான நிர்வாகக் கட்டணங்களைத் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026 (EPF Scheme, 2026), குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு கட்டாயம் என்ற விதியைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறது. மேலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952-ன்கீழ் உறுப்பினர்களாக இருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026-ன் கீழும் தானாகவே உறுப்பினர்களாகத் தொடருவார்கள் என்றும் குறிப்பிடுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுவாக, இருநாடுகளுக்கு இடையே சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் இல்லாதபட்சத்தில், அவர்கள் தங்களது 58 வயதில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மட்டுமே தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகையை முழுமையாகப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Original articles : New EPF Scheme, 2026: What changes for provident fund subscribers -Aanchal Magazine