50 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் ஒரு முக்கிய அங்கமாக சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது. இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) நிறுத்தி வைத்தபோது, சிம்லா ஒப்பந்தத்திற்கும் அவ்வாறே செய்வதாக பாகிஸ்தான் கூறியது.
1972-ஆம் ஆண்டு ஜூன் மாதம், திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே பிரதமர் இந்திரா காந்தி சிம்லா வந்து சேர்ந்தார். சந்திப்பு நடைபெறும் அறைகள் குறைபாடற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர் புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனிலிருந்து அலங்காரப் பொருட்களையும் தளவாடங்களையும் கொண்டு வந்திருந்தார்.
பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ மற்றும் அவரது மகள் பெனசீர் ஆகியோருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் விளைவாக, 1972 ஜூலை 2 அன்று சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
50 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்த ஒப்பந்தம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. இருப்பினும், அது கையெழுத்திடப்பட்டது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணமாகவே உள்ளது. கடந்த ஆண்டு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை "நிறுத்தி வைத்தபோது", பாகிஸ்தான், "சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தும்" என்று கூறியது.
சிம்லா ஒப்பந்தத்திற்கான பாதை வங்காளதேசத்தின் வழியாக அமைந்தது.
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் உருவாவதற்கு வழிவகுத்த 1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் பின்விளைவுகளிலிருந்து சிம்லா ஒப்பந்தம் உருவானது. இந்தியாவின் இராணுவத் தலையீடு தீர்க்கமானதாக நிரூபிக்கப்பட்டு, தெற்காசியாவின் புவிசார் அரசியல் சூழலையே மாற்றி அமைத்தது.
போருக்குப் பிறகு, பிரதமர் இந்திரா காந்தியும், அதிபர் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ இருவரும் அமைதி நிறைந்த ஒரு புதிய காலகட்டத்தைத் தொடங்க விரும்புவதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தனர். 1972, ஜூன் 28 அன்று, அவ்விரு தலைவர்களும் மலைப்பிரதேசமான சிம்லாவில் சந்தித்துப் பேசினர்.
நல்லிணக்கம் (reconciliation) என்ற பொதுவான இலக்கைக் கொண்டிருந்தாலும், இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தன.
1971 போரில் வெற்றி பெற்ற இந்தியா, இராணுவ பலத்தைப் பயன்படுத்தி, இந்தியாவுக்குச் சாதகமான நிபந்தனைகளின் பேரில் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண பிரதமர் இந்திரா காந்தி முயன்றார்.
இதற்கு மாறாக, பாகிஸ்தான் அதிபர் சுல்பிகார் அலி பூட்டோ சுமார் 93,000 பாகிஸ்தானியப் போர்க் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதிலும், போரின்போது இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிட்டத்தட்ட 5,000 சதுர மைல் நிலப்பரப்பைத் திரும்பப் பெறுவதிலும் முதன்மையாகக் கவனம் செலுத்தினார். எழுத்தாளர் ஃபைசல் கோசா, The Making of Martyrs in India, Pakistan & Bangladesh என்ற தனது நூலில், பாகிஸ்தானின் கொள்கைகளை இந்தியா சந்தேகத்துடனேயே பார்த்ததாக ஆசிரியர் ஃபைசல் கோசா விளக்குகிறார். சீன-இந்திய மோதலின்போது பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள், சீனாவுடனான அதன் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு மற்றும் 1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் ஆகியவை இதற்குக் காரணங்களாகும். அயூப் கானின் ஆட்சியின்போது பாகிஸ்தான்-சீனா இடையிலான கூட்டுறவை உருவாக்கியதில் பூட்டோ முக்கியப் பங்காற்றினார் என்று கோசா குறிப்பிடுகிறார்.
சிம்லா விமான நிலையத்தில் ரஷ்ய எம்-8 (M-8) ஹெலிகாப்டரிலிருந்து பூட்டோ இறங்கியபோது, இந்திரா காந்தி அவரை நேரில் வரவேற்றதோடு சிம்லா உச்சிமாநாடு தொடங்கியது. பல ஆண்டுகளாக நிலவிய பகைமைக்கு மத்தியிலும், இரு தலைவர்களும் கைகுலுக்கி, பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் பயனற்றதாக அமைந்தன. எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல், இருதரப்பு ரீதியாகவே நடத்தப்பட வேண்டும் என்று இந்திரா காந்தி வலியுறுத்தினார். மேலும், ஜம்மு & காஷ்மீரில் தற்போதுள்ள போர்நிறுத்தக் கோட்டை (existing ceasefire line) ஒரு நிரந்தர சர்வதேச எல்லையாக மாற்றவும் அவர் முன்மொழிந்தார். இதற்குப் பதிலாக, காஷ்மீர் பகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, போரின்போது இந்தியா கைப்பற்றிய ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளையும் மீட்டுக் கொடுக்க அவர் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக, பூட்டோ இந்த முன்மொழிவுகளை, குறிப்பாக காஷ்மீர் தொடர்பானவற்றை நிராகரித்தார். கோசா குறிப்பிடுவதுபோல, “காஷ்மீர் விவகாரத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பதற்கு பூட்டோ மிக நெருக்கமாக இருந்த தருணமானது, ‘அமைதிக்கான ஒரு எல்லைக்கோடு இருக்கட்டும், மக்கள் வந்து செல்லட்டும், அதற்காக நாம் சண்டையிட வேண்டாம்’ என்று அவர் கூறியதுதான்.”
ஜூலை 2 ஒப்பந்தம்
ஒரு தேக்கநிலைக்குப் பிறகு, இந்திரா காந்தியுடன் தனிப்பட்ட முறையில் (நேருக்கு நேர்) சந்திப்பு ஒன்றை நடத்த பூட்டோ முன்மொழிந்தார். அவரும் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். தங்கள் குழுவினரை விட்டுவிட்டு, அந்த இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறிய அறைக்குச் சென்றனர். இந்திரா காந்தியும் பூட்டோவும் சந்தித்து, தங்கள் தூதுக்குழுக்களுடன் கலந்தாலோசனைக்காகப் பிரிந்து சென்று, மீண்டும் கூடியபோது, அவர்களது உதவியாளர்கள் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். 1972 ஜூலை 2 அன்று, ஒரு தீர்க்கமான சந்திப்பு திட்டமிடப்பட்டது, அது சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) கையெழுத்திடப்பட்டதோடு நிறைவடைந்தது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, “இரு நாடுகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது தங்களுக்குள் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட வேறு ஏதேனும் அமைதியான வழியிலோ தீர்த்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றுக்கு இறுதித் தீர்வு காணப்படும்வரை, எந்தத் தரப்பும் தன்னிச்சையாக நிலைமையை மாற்றக்கூடாது. மேலும், அமைதியான மற்றும் நல்லிணக்கமான உறவுகளைப் பேணுவதற்குப் பாதகமான எந்தவொரு செயலையும் ஏற்பாடு செய்வதையோ, உதவுவதையோ அல்லது ஊக்குவிப்பதையோ இரு தரப்பினரும் தடுக்க வேண்டும்...” என்று அறிவித்தது.
இரு நாடுகளும் ஒப்புதல் அளித்த 30 நாட்களுக்குள், இந்தியா ஆக்கிரமித்துள்ள 5,000 சதுர மைல் பாகிஸ்தான் பாலைவன நிலத்திலிருந்து இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் நிறுவியதாக கோசா குறிப்பிடுகிறார். “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை என்னவென்றால், 1971 டிசம்பர் 17 முதல் ஜம்மு & காஷ்மீரில் இருந்து வந்த போர்நிறுத்தக் கோட்டை (ceasefire line), இரு தரப்பினரின் நிலைப்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், இரு தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு முறையான ‘கட்டுப்பாட்டுக் கோடாக’ (Line of Control(LoC)) மாற்றுவதே ஆகும்”.
விமர்சகர்களின் கருத்துகள்
காஷ்மீரில் மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) நடத்துவது குறித்து சிம்லா ஒப்பந்தத்தில் எந்தக் குறிப்பும் இல்லை என்று கோசா (Khosa) குறிப்பிடுகிறார். அதேபோல், 93,000 பாகிஸ்தானியப் போர்க்கைதிகள் (Pakistani prisoners of war (POW)) குறித்தும் அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்குக் காரணம், பேச்சுவார்த்தை கூட்டத்தில் வங்காளதேசம் இல்லாமல் அவற்றைப் பற்றி விவாதிக்க இந்திரா காந்தி மறுத்ததே ஆகும்.” மாறாக, இந்திரா காந்தி மற்றும் வங்காளதேசம் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்ளும் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் இந்தப் பிரச்சினைகள் கையாளப்படும் என்று பூட்டோ உறுதியளித்தார்.
இருப்பினும், பூட்டோவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் சில நன்மைகளையும் அளித்தது. போரின்போது இந்தியா கைப்பற்றியிருந்த சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளைத் திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, போர்க்கைதிகள் விவகாரத்திற்கு "இன்ஷா அல்லாஹ் (கடவுளின் விருப்பப்படி), நாம் ஒரு தீர்வைக் காண்பதில் வெற்றி பெறுவோம்" என்று பாகிஸ்தான் மக்களிடம் பூட்டோ உறுதியளித்தார். மேலும், "எங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள், எங்கள் நிலப்பகுதியைக் கைப்பற்றாதவர்கள் மற்றும் எங்கள் போர்க்கைதிகளைத் தங்கள் வசம் வைத்திருக்காதவர்களுடன் நாங்கள் நட்புறவுடனும் அமைதியுடனும் இருப்போம்" என்றும் அவர் அறிவித்தார். இருப்பினும், கோசா குறிப்பிடுவதாவது, “அவர்களின் சிறைவாசம், பூட்டோவின் கொள்கைகளின் ஒரு கசப்பான, தொடர்ந்து குறிப்பிடப்படும் தோல்வியாகவே இருந்தது.”
புதிதாக சுதந்திரம் பெற்ற வங்காளதேச நாட்டை பாகிஸ்தான் அங்கீகரித்தது குறித்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த விடுபடல் பாகிஸ்தானுக்குள் சந்தேகங்களை வலுப்படுத்தியது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டைப் பூட்டோ ரகசியமாக விட்டுக் கொடுத்துவிட்டதாக அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்க அவர் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, கோசா குறிப்பிடுவதாவது "சிம்லா ஒப்பந்தம் இந்திராவின் தரப்பில் ஒரு பெரிய தவறான முடிவாக அமைந்தது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். காஷ்மீரில் போர்நிறுத்தக் கோட்டை ‘கட்டுப்பாட்டுக் கோடாக’ (line of control) மாற்றுவதற்கான பூட்டோ கடைசி நேரத்தில் எடுத்த முடிவின் காரணமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அவர்கள் நம்புகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும், அவர் தன்னை உண்மையாக ‘நம்ப வேண்டும்’ என்றும் பூட்டோவின் மூலம் இந்திராவுக்கு தொடர்ந்து உறுதியளித்தார் என்றும் வாதிடப்படுகிறது”. பூட்டோவின் உறுதிமொழிகளில் இந்திரா காந்தி அதீத நம்பிக்கை வைத்ததற்காக பலர் அவரைக் குறை கூறுகின்றனர்.
வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன், 1971: A Global History of the Creation of Bangladesh என்ற தனது நூலில், தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தானை "சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில்" நடத்த அவர் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தார் என்று வாதிடுகிறார். இந்த ஒப்பந்தம், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பாக இருதரப்பு உறவை நிறுவியது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோடு (LoC) படிப்படியாக ஒரு சர்வதேச எல்லையின் "தன்மைகளைப்" பெறும் சாத்தியத்தையும் உருவாக்கியது. இது காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வழிவகுத்தது.
இருப்பினும், இது ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் குறிப்பிடுகையில், “ஆனால் விஷயங்கள் அப்படி அமையவில்லை. பூட்டோ அவர்களின் புரிந்துணர்விலிருந்து விரைவாகப் பின்வாங்கி, பாரம்பரியமான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குத் திரும்பினார். 1974-ம் ஆண்டின் நடுப்பகுதியில், பூட்டோவிடமோ அல்லது இந்திரா காந்தியிடமோ ஒரு நீடித்த தீர்வை உருவாக்குவதற்கான அரசியல் விருப்பமோ அல்லது மூலதனமோ இருக்கவில்லை” என்று கூறுகிறார்.
அதன் தாக்கம்
ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு, 1999-ம் ஆண்டு கார்கில் போர், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் தொடர்ந்து நிகழும் மோதல்கள் உள்ளிட்டவற்றால், நீடித்த அமைதிக்கான அந்த ஒப்பந்தத்தின் வாக்குறுதி பலமுறை சோதிக்கப்பட்டது. தாஷ்கண்ட் பிரகடனம்-1966 (Tashkent Declaration), லாகூர் பிரகடனம்-1999 (Lahore Declaration) மற்றும் ஆக்ரா உச்சிமாநாடு-2001 (Agra Summit) உள்ளிட்ட அடுத்தடுத்த இராஜதந்திரரீதியாக முயற்சிகள் அமைதியைக் கொண்டுவரத் தவறிவிட்டன.
Original articles : When Indira met Bhutto : How Simla Agreement shaped, and limited, India-Pakistan ties. -Nikita Mohta