ஜூலை மாதத்தின் 5 முக்கிய வரலாற்று நிகழ்வுகள். - குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி


 ஜூலை மாதத்தில் பல முக்கிய நபர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்கள் வருகின்றன. அதேவேளையில், சுதந்திரச் சட்டம்  (Independence Act) இயற்றப்பட்டது முதல் கார்கில் போர் வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகளும் இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளன.  


முக்கிய அம்சங்கள்:


1.சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement)


1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உருவானது. இந்தப் போரின் முடிவிலேயே கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் தனி நாடாக உருவானது.


போருக்குப் பிறகு, பிரதமர் காந்தியும் குடியரசுத் தலைவர் புட்டோவும் அமைதியின் புதிய யுகத்தை உருவாக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்தனர். 1972-ஆம் ஆண்டு ஜூன் 28-அன்று, இரண்டு தலைவர்களும் சிம்லா மலையில் சந்தித்தனர். இதற்கான ஒப்பந்தம் 1972-ஆம் ஆண்டு ஜூலை 2-அன்று கையெழுத்தானது.


சிம்லா ஒப்பந்தம் முக்கியமாக இரண்டு விவகாரங்களைக் கையாள்கிறது: இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது மற்றும் 'எல்லை கட்டுப்பாட்டுக் கோடு' (Line of Control (LoC)) என்பதை நடைமுறை எல்லையாக (de facto border) அங்கீகரிப்பதாகும்.




இரண்டு நாடுகளும் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் அல்லது இரு தரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் பிற அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதாக உறுதி அளிதுள்ளன. இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் இறுதியாகத் தீர்க்கப்படும் வரை, எந்தத் தரப்பும் ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சிக்கக் கூடாது. மேலும், அமைதியான மற்றும் சகோதரத்துவமான உறவுகளை பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் அமைப்பு உருவாக்குதல், உதவி வழங்குதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றை இரண்டு தரப்பும் தடுக்க வேண்டும் என்று முக்கியமான விதி குறிப்பிடுகிறது.


இவை சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தும் விதிகள் அல்ல. இருப்பினும், இரு நாடுகளும் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்ட “சிறந்த முயற்சி விதிகள்” (Best Endeavour Clauses) இதில் இடம்பெற்றுள்ளன.


2. இந்திய சுதந்திரச் சட்டம் (Indian Independence Act), 1947


— மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில், 1947 ஜூலை 5 அன்று ஆங்கிலேய நாடாளுமன்றம் இந்திய சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச்சட்டம் 1947 ஜூலை 18 அன்று அரசரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச்சட்டம் 1947-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 15 அன்று நடைமுறைக்கு வந்தது.


இந்தச்சட்டம் முறையே 1947 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உருவாக வழிவகுத்தது. பிரதமர் கிளமென்ட் அட்லி தலைமையிலான தொழிலாளர் கட்சி (Labour Party) அரசாங்கத்தால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், எதிர்க்கட்சியின் சக்திவாய்ந்த தலைவரான வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியாவின் சுதந்திரத்தை விருப்பம் இல்லாமல்  ஏற்றுக்கொண்டார்.


இந்தச்சட்டத்தின் பயனுள்ள செயல்பாட்டிற்குப் பொறுப்பான ஒரு கவர்னர்-ஜெனரல் (Governor-General) ஒவ்வொரு சுயாட்சிப் பகுதிக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய சுதந்திரச் சட்டம் குறிப்பிட்ருந்தது. ஒவ்வொரு சுயாட்சி பகுதியின் அரசியலமைப்பு நிர்ணய சபையும் சட்டமியற்றும் அதிகாரங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த மத்திய சட்டப்பேரவை மற்றும் மாநிலங்கள் அவை (Council of States) ஆகியவை தானாகவே கலைக்கப்பட வேண்டும் என்றும் இந்தச்சட்டம் கூறியது. ஒவ்வொரு சுயாட்சிப்பகுதியும் தங்களுக்கென புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் வரை, அந்தந்த அரசுகள் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டவிதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.


— இந்திய சுதந்திரச் சட்டம், 1947-ன் படி, பாகிஸ்தான் 1947 ஆகஸ்ட் 14 அன்று சுதந்திரம் அடைந்தது. இந்தியா 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.  இதற்கு மாறாக, இந்தியா, இடைக்கால மாற்றக் காலத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத் தொடர்ச்சியின் அடையாளமாக, மவுண்ட்பேட்டன் பிரபுவை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக தொடர்ந்து பதவி வகிக்குமாறு கேட்டுக்கொண்டது. இது, சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆட்சிமாற்றம் சுமுகமாக நடைபெறவும், நிர்வாகத் தொடர்ச்சி உறுதிசெய்யப்படவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்பட்டது.


3. சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்


“எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்!  (Arise! Awake! And stop not until the goal is reached)” என்பது சுவாமி விவேகானந்தரின் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பொன்மொழிகளில் ஒன்றாகும். விவேகானந்தர் 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி, தனது 39-வது வயதில் காலமானார். நரேந்திர நாத் தத்தா என்ற பெயரில் பிறந்த விவேகானந்தர், துறவியான பிறகு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்றார்.


ஜனவரி 12 அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இவர் 1863-ல் கொல்கத்தாவில் நரேந்திர நாத் தத்தா என்ற பெயரில் பிறந்தார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, இந்திய அரசு 1984-ல் இவரது பிறந்தநாளை ‘தேசிய இளைஞர் தினமாக’ (National Youth Day) அறிவித்தது.




யோகா மற்றும் வேதாந்தம் சார்ந்த இந்து தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இளம் வயதிலிருந்தே மேற்கத்திய தத்துவம், வரலாறு மற்றும் இறை நம்பிக்கை போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்த விவேகானந்தர், பின்னர் தனது குருவான  ஆன்மீகத் தலைவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.


 ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு, விவேகானந்தர் தனது வாழ்வை இந்து சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக அர்ப்பணித்தார். தனது குருவிடமிருந்து பெற்ற த்வைதம் எனப்படும் இருமைவாதத் தத்துவத்தையும் (Dualistic Philosophy), தான் கொண்டிருந்த அத்வைத தத்துவ நம்பிக்கையையும் ஒருங்கிணைக்க அவர் முயன்றார்.


1893-ஆம் ஆண்டில், கேத்ரி சமஸ்தானத்தின் மகாராஜா அஜித் சிங்கின் வேண்டுகோளுக்கு ஏற்ப, முன்பு பயன்படுத்திய ‘சச்சிதானந்தா’ (Sachidananda) என்ற பெயரை மாற்றி ‘விவேகானந்தர்’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.


1893-ல் சிகாகோவில் நடைபெற்ற ‘உலக மதங்களின் நாடாளுமன்றம்’ (Parliament of the World’s Religions) எனும் மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்காக உலகம் முழுவதும் விவேகானந்தர் நினைவுப்படுத்துகிறார். அவரது உரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுதல், சகிப்புத்தன்மை மற்றும் மதம் உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டு இருந்தது. இந்த உரை அவருக்கு எழுந்து நின்று கைதட்டும் வகையிலான பாராட்டைப் பெற்றுத் தந்தது.


இந்தியா திரும்பிய பிறகு, 1897-ல் ராமகிருஷ்ண மடத்தை (Ramakrishna Mission) உருவாக்கினார். மிகவும் ஏழ்மையான மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் வீட்டு வாசலுக்கும் உன்னதமான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.


1899-ல் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் பேலூர் மடத்தை (Belur Math) உருவாகினார். இதுவே அவரது நிரந்தர இருப்பிடமாகவும் அமைந்தது.



1902-ல் தன் மரணத்திற்கு முன்பு, விவேகானந்தர் ஒரு மேலைநாட்டு சீடருக்கு, “என் உடலிலிருந்து வெளியேறி, அதை ஒரு தேய்ந்து போன உடையைப் போல் களைந்தெறிவது நல்லதாக இருக்கலாம். ஆனால் நான் வேலை செய்வதை நிறுத்த மாட்டேன். எல்லா இடங்களிலும் மனிதர்களை நான் ஊக்கப்படுத்துவேன், உலகம் முழுவதும் தன்னை இறைவனுடன் ஒன்றாக அறியும் வரை.” என்று எழுதினார்.


 4.பால கங்காதர திலகரின் பிறப்பு


'லோகமான்ய திலகர்' என்று பரவலாக அறியப்படும் பால கங்காதர திலகர், 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-அன்று மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்தார். மகாத்மா காந்தி அவரை "நவீன இந்தியாவின் சிற்பி" (the Maker of Modern India) என்றும், ஜவஹர்லால் நேரு அவரை "இந்தியப் புரட்சியின் தந்தை" (Father of the Indian Revolution) என்றும் அழைத்தனர்.


வழக்கறிஞரும், அறிஞரும், பத்திரிகையாளருமான திலகர், 1890-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். தொடக்கத்தில், இந்தியர்களுக்கான சீர்திருத்தங்களையும் கூடுதல் உரிமைகளையும் கோரிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து அவரது நிலைப்பாடு பெரிய அளவில் மாறுபட்டிருக்கவில்லை. ஆனால், முழுமையான புரட்சியை அவர் விரும்பவில்லை.


திலகர் பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார். 1881-ஆம் ஆண்டில், ஜி.ஜி. அகர்கருடன் இணைந்து 'கேசரி' (மராத்தி மொழியில்) மற்றும் 'மராட்டா' (ஆங்கிலத்தில்) ஆகிய செய்தித்தாள்களைத் தொடங்கிய அவர், அவற்றின் மூலம் ஆங்கிலயே ஆட்சிக்கு எதிரான தேசியவாத எதிர்ப்பைப் பரப்பினார். மேலும், 'கீதா ரகசியம்' (Geeta Rahasya), 'ஓரியன்' (Orion), 'தி ஆர்டிக் ஹோம் ஆஃப் தி வேதாஸ்' (The Arctic Home of the Vedas) உள்ளிட்ட பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.


1893-ஆம் ஆண்டில், கணபதி வழிபாட்டை ஒரு சமூக விழாவாகக் கொண்டாடும் புதிய மரபை அவர் தொடங்கினார். இந்த விழாக்களின் மூலம் தேசபக்திப் பாடல்கள் பாடப்பட்டன மற்றும் தேசியவாதக் கருத்துகள் பரப்பப்பட்டன.



தேசியவாத எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, 1896-ஆம் ஆண்டில் திலகர் சிவாஜி விழாவை (Shivaji festival) அறிமுகப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களிடையே தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதே இதன் நோக்கமாக இருந்தது.


 லாலா லஜபதி ராய் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோருடன் இணைந்து, திலகர் 'லால்-பால்-பால்' (Lal Bal Pal) என்ற மூவர் கூட்டணியின் ஒரு பகுதியாகத் இருந்தார். இந்தக் கூட்டணி ஆங்கிலயேர்களிடமிருந்து முழுமையான சுதந்திரம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததுடன், அதை அடைவதற்காக வன்முறை உள்ளிட்ட அரசியலமைப்பை தாண்டிய வழிமுறைகளை ஆதரித்தது.


5. கார்கில் வெற்றி தினம் (Kargil Diwas) 

 

ஆண்டுதோறும் ஜூலை 26-அன்று கடைபிடிக்கப்படும் 'கார்கில் வெற்றி தினம்', 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியையும், கார்கில் போரில் வெற்றிபெற பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களைத் தாண்டி பல சவால்களை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகங்களையும் நினைவுகூர்கிறது.


லாகூர் பிரகடனம் கையெழுத்தான சிறிது காலத்திலேயே கார்கில் போர் தொடங்கியது. பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் (LoC) தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி, குளிர்காலத்திற்காக இந்திய ராணுவம் காலி செய்திருந்த பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியதே இந்தப்போருக்குக் காரணமாக அமைந்தது.


இந்த ஊடுருவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் விஜய்' (Operation Vijay) என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. 'தடுத்தல்-வெளியேற்றுதல்-மறுத்தல்' (Contain-Evict–Deny) என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. மே மாத நடுப்பகுதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், கடும் உயிரிழப்புகளைச் சந்தித்த நிலையிலும், இந்தியப் படைகள் பாகிஸ்தானியர்களிடமிருந்து முக்கிய நிலைகளை படிபடியாக மீட்டெடுத்தன. ஜூலை 26 அன்று, கார்கிலிலிருந்து பாகிஸ்தானின் அனைத்து படைகளும் முழுமையாக வெளியேறிவிட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.


அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, போரின் முடிவில் இந்தியாவின் தரப்பில் 527 பேர் உயிரிழந்தனர். 1,363 பேர் காயமடைந்தனர். விமானப்படை அதிகாரி ஃப்ளைட் லெப்டினன்ட் கே. நாச்சிகேதா தாக்குதலின் போது இவரது மிக்-27 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க்கைதியாகப் பிடிபட்டார்.


கார்கில் பகுதியானது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் (LoC) வடக்குப் பகுதியில், ஸ்ரீநகருக்கு வடகிழக்கே 200 கி.மீ தொலைவிலும், லே நகருக்கு மேற்கே 230 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கார்கில் நகரம் கடல் மட்டத்திலிருந்து 2,676 மீட்டர் (8,780 அடி) உயரத்திலும், டிராஸ் பகுதி 3,300 மீட்டர் (10,800 அடி) உயரத்திலும் அமைந்துள்ளன. மேலும், இந்தப்பகுதியைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்கள் 4,800 மீட்டர் (16,000 அடி) முதல் 5,500 மீட்டர் (18,000 அடி) உயரத்தைக் கொண்டுள்ளன.


அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 


அமெரிக்காவிற்கும் ஜூலை மாதம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு, அமெரிக்கா 2026-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அன்று தனது சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடுகிறது.


1. பிரிட்டனிடமிருந்து விடுவிக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியமாக அமெரிக்கா உருவாவதற்கான அடித்தளத்தை அமைத்த 'சுதந்திரப் பிரகடனம்' (Declaration of Independence) என்ற ஆவணம் கையெழுத்தான நாள் 4-ஆம் தேதியாகும்.


2. சுதந்திரத்தை அறிவிப்பதற்கான சூழல் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை விளக்கும் ஒரு அறிக்கையைத் தயாரிப்பதற்காக, 1776-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்தக்குழுவில் தாமஸ் ஜெஃபர்சன், ஜான் ஆடம்ஸ், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், ரோஜர் ஷெர்மன் மற்றும் ராபர்ட் ஆர். லிவிங்ஸ்டன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


3. இந்த அறிக்கையின் முக்கியப்பகுதியை தாமஸ் ஜெஃபர்சனே எழுதினார். இவர் முன்னதாக 1775-ல் 'ஆங்கிலயே அமெரிக்காவின் உரிமைகள் குறித்த ஒரு கண்ணோட்டம்' (A Summary View of the Rights of British America) என்ற நூலை எழுதியிருந்தார். அதில் அவர், "அதிகாரத்தின் தனிப்பட்ட அடக்குமுறைச் செயல்களை ஒரு குறிப்பிட்ட நாளின் தற்செயலான முடிவாகக் கருதலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடங்கி, அமைச்சர்கள் மாறினாலும் தொடர்ந்து மாற்றமின்றி மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள், எங்களை அடிமைத்தனத்திற்குள் தள்ளுவதற்கான ஒரு திட்டமிட்ட மற்றும் முறையான சதியையே தெளிவாக நிரூபிக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார். முரண்பாடான விவாகரம் என்னவென்றால், ஜெஃபர்சன் 600-க்கும் மேற்பட்ட அடிமைகளைத் தன்வசம் வைத்திருந்தார்.


4. இருப்பினும், முந்தைய ஆவணத்தின் அடிப்படையிலேயே இந்தச் சுதந்திரப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய 5 பேர் கொண்ட குழு உட்பட மொத்தம் 56 பிரதிநிதிகள் இதில் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்ட அனைவரும்   அமெரிக்காவின் 'நிறுவுநர்கள்' (Founding Fathers) என்று போற்றப்படுகிறார்கள்.


5. 1783-ல் நடைபெற்ற புரட்சிப் போரில் (Revolutionary War) தோல்வியடைந்த பிறகு, அமெரிக்காவின் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் அங்கீகரித்தது. பிரிட்டனின் ஐரோப்பியப் போட்டியாளர்களான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் டச்சு குடியரசு போன்ற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றி பெற்றது.


Original articles : July in History : 5 key events. -Khushboo Kumari

Share: