பனிப்போர் காலத்தில் இந்தியாவின் ரகசிய சீஷெல்ஸ் திட்டம் -வப்பலா பாலச்சந்திரன்

 ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பின் (Central Intelligence Agency (CIA)) தலையீடு மற்றும் கூலிப்படையினரின் தாக்குதல்களுக்கு இடையில், ஆபத்தான சூழ்நிலையில் இருந்த அந்தத் தீவு நாட்டைப் பாதுகாக்க உதவுமாறு ராஜீவ் காந்தி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


ஏப்ரல் மாதம் 1986-ஆம் ஆண்டில், சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் அதிபர் பிரான்ஸ்-ஆல்பர்ட் ரினே இந்தியாவுக்கு வந்திருந்தபோது, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் ஒரு சிறப்புக் கோரிக்கையை முன்வைத்தார். தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல் துறையின் கட்டமைப்பை ரகசியமாக ஆய்வுசெய்து மதிப்பிடுவதற்கு, ஒரு சிறிய இந்தியப் பாதுகாப்புக் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.


தனது சொந்த நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின்மீதே அவருக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அந்தச் சமயத்தில், இந்தியப் பெருங்கடல் தீவுகள் வல்லரசு நாடுகளுக்கு இடையேயான பனிப்போரின் பதற்றத்தில் சிக்கியிருந்தன. இதன் விளைவாக, 1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கு செல்வதற்காக இருவர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்க இந்த எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழுவின் இரண்டாவது உறுப்பினர், இந்திய உளவுத்துறையின் (Intelligence Bureau (IB)) ஒரு மூத்த அதிகாரி ஆவார்.


இடதுசாரித் தலைவரான ரினே, சீஷெல்ஸ் நாடு சுதந்திரம் பெற்ற ஒரே ஆண்டிலேயே, அதாவது 1977-ஆம் ஆண்டில், அந்த நாட்டின் முதல் வலதுசாரி அதிபரான ஜேம்ஸ் மான்சமை பதவியில் இருந்து நீக்கினார். அதுமுதற்கொண்டு, மான்சாம் ஒரு எதிர்-ஆட்சி கவிழ்ப்பு மூலமாகவோ அல்லது தேர்தல் மூலமாகவோ மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, மேற்கத்திய நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் உளவு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.


பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா மித்திரோ மற்றும் தான்சானிய அதிபர் ஜூலியஸ் நெய்ரேரி உட்பட பல வெளிநாட்டுத் தலைவர்களை ரினேவுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்த போதிலும், இந்த மிக ரகசியமான மற்றும் முக்கியமான பணிக்கு இந்தியாவின் உதவியை நாடுவதற்கு அவரிடம் நியாயமான காரணங்கள் இருந்தன. அவர் வல்லரசு நாடுகளுக்கு இடையேயான 'பனிப்போர்' போட்டியில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. மேலும், சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வந்த பிரான்ஸ் நாடு, புவிசார் அரசியல் காரணங்களால் தனது ஆதரவை திரும்பப் பெற்றிருந்தது. இதனால், தனது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக தான்சானியா மற்றும் சோவியத் யூனியனிடம் இருந்து தற்காலிக உதவியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு ரினே தள்ளப்பட்டார்.


மே மாதம் 13-ஆம் தேதி, 1978-ஆம் ஆண்டு, கொமரோஸ் (Comoros) நாட்டில் பிரெஞ்சு கூலிப்படைத் தளபதி பாப் டெனார்ட் தலைமையில் நடந்த ஒரு ராணுவப் புரட்சி, இடதுசாரி அதிபரான அலி சொய்லியை வெற்றிகரமாகப் பதவியிறக்கியது. மேலும், 1975-ஆம் ஆண்டில் பதவியிழந்த முன்னாள் அதிபர் அகமது அப்தல்லாவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. ஆட்சிக்கு வந்தவுடன் அப்தல்லா, பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் இருந்த சுமுகமான உறவை மிக விரைவாக மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்.

இதற்கிடையில், மன்சாம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகத் தான் மேற்கொண்டு வந்த முயற்சிகளைப் பிரபலப்படுத்த சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டார். 1983-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதியன்று, லண்டனில் உள்ள 'The Observer' பத்திரிகையிடம் அவர் பேசுகையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரிட்டன் நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பிடமிருந்து (Military Intelligence, Section 6 (MI6)) 12,000 பிரிட்டிஷ் பவுண்டுகளைப் (GBP) பெற்றதாகத் தெரிவித்தார். மேலும், 1976-ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, அமெரிக்க உளவு அமைப்பான மத்திய உளவு அமைப்புடன் (CIA) தான் இரண்டு ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார். அந்த ஒப்பந்தங்களின்படி, மன்சாமின் அரசியல் எதிரிகளைக் கண்காணிப்பதற்கான ஒரு உளவு அமைப்பை உருவாக்குவது, சீஷெல்ஸ் நாட்டில் ஒரு துணை ராணுவப் படையை ஏற்படுத்துவது மற்றும் நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வழியாக மன்சாமின் வாராந்திரப் பத்திரிகையான 'Seychelles News' செய்தி நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவது ஆகிய பணிகளைச் செய்ய அமெரிக்க மத்திய உளவு அமைப்பு (CIA) ஒப்புக்கொண்டிருந்தது.


அதிபர் ரினே எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலை குறித்த கூடுதல் விவரங்கள், அமெரிக்க மத்திய உளவு அமைப்பு (CIA) தயாரித்த "The Mellowing of President Rene" (October 1983)” என்ற தலைப்பிலான மதிப்பீட்டு அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளன. இந்த அறிக்கை 2008-ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், ஏப்ரல் மாதம் 1979-ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் நாட்டில் தனக்கு எதிராக ஒரு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கலாம் என சந்தேகம் எழுந்தபோது, சோவியத் யூனியன் உடனடியாகத் தனது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று ரினே அவசரமாகக் கோரிக்கை விடுத்தது தெரியவந்துள்ளது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், தன்னை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான பிரான்ஸ் நாட்டின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக, அவர் மீண்டும் சோவியத் போர்க்கப்பல்களின் உதவியைக் கோரினார். இக்காலகட்டத்தில், ரினே தனக்கு ஆலோசகராக இருந்த பிரெஞ்சு காவல்துறை அதிகாரியைக் கைது செய்து, பிரான்ஸ் நாட்டிற்கே நாடு கடத்தினார். 'தி நியூயார்க் டைம்ஸ்' (டிசம்பர் 23, 1979) நாளிதழ், அந்த ஆலோசகரின் பெயர் ஜாக் செவாலிரோ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.


அமெரிக்க உளவு அமைப்பான மத்திய உளவு அமைப்பின் (CIA) அந்த ஆவணம், 'டோபாஸ்' (Topaz) என்ற சீஷெல்ஸ் நாட்டு ரோந்துப் படகில் பணிபுரிந்து வந்த பிரெஞ்சு ராணுவக் குழுவினரை அதிபர் ரினே சிறைப்பிடித்து வைத்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டின் தலையீடு குறித்து ரினேவுக்கு இருந்த சந்தேகங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை அல்ல என்று அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கைகள் தெரிவிப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.


அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான இந்த முயற்சிகள், 1981-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி அதன் மோசமான நிலையை எட்டின. அன்று, பிரிட்டிஷ்-ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கர்னல் தாமஸ் "மேட்" மைக் ஹோர் (Thomas "Mad" Mike Hoare) தலைமையிலான, தென்னாப்பிரிக்காவின் ஆதரவு பெற்ற 43 கூலிப்படையினர் "தி ஃப்ராத் ப்ளோயர்ஸ்" (The Froth Blowers) என்ற பெயரில், 'Air Swaziland' நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட ‘F-28 Fokker’ விமானம் மூலம் மாஹே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். இவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல நாட்டிற்குள் நுழைந்து, அதிபர் ரினேவுக்கு எதிரானவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுவதே இவர்களது திட்டமாக இருந்தது. அரசாங்கத்தைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இந்தச் சதி முயற்சியில், இந்தியா எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டது.


ஹோராவின் ஆட்கள் சுற்றுலாப் பயணிகளைப் போல ஆடை அணிந்திருந்த போதிலும், உள்ளூர் சுங்க அதிகாரி நடத்திய வழக்கமான சோதனையின்போது அவர்களின் கைப்பைகளில் (Luggage) ‘AK-47’ துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தாங்கள் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்த கூலிப்படையினர், விமான நிலைய ஊழியர்கள் 70 பேரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து, விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


அதே நேரத்தில், கேப்டன் உமேஷ் சக்சேனா தலைமையில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் 224 (Air India Flight 224 - போயிங் 707 ரக விமானம்), 64 பயணிகளுடன் சாலிஸ்பரியிலிருந்து (Salisbury - தற்போது ஹராரே) பம்பாய் செல்லும் வழியில் மாஹே (Mahe) தீவிற்கு வந்தடைந்தது. அந்த விமானம் அங்கு எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. விமானத்தைத் தரையிறக்க கூலிப்படையினர் அனுமதித்த போதிலும், தான்சானிய வீரர்களின் ஆதரவு பெற்ற உள்ளூர் பாதுகாப்புப் படையினர் அதைத் தரையிறக்க விடாமல் தடுக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில், கூலிப்படையினரின் ‘F-28 Fokker’ ரக விமானம் சேதமடைந்தது.


ஏர் இந்தியா விமானம் மூலமாக மட்டுமே தங்களால் தப்பிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்ட ஹோரின் (Hoare) கூலிப்படையினர், தங்களை ஜிம்பாப்வேக்கு (Zimbabwe) அழைத்துச் செல்லுமாறு கேப்டன் சக்சேனாவை மிரட்டினர். இருப்பினும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அவர்கள் இறுதியில் ஜிம்பாப்வேக்கு பதிலாக டர்பன் (Durban) நகருக்குப் பறக்க ஒப்புக்கொண்டனர். டர்பன் சென்றடைந்ததும், அந்தக் கூலிப்படையினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீஷெல்ஸ் நாட்டின் தலைநகரான விக்டோரியாவிற்கு அருகில் உள்ள மாஹே சர்வதேச விமான நிலையத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். இதற்கு முன்பு அங்கு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் காரணமாக, விமான நிலையமும் தலைநகரமும் பாதுகாப்புப் படைகளால் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும், வியப்பளிக்கும் விதமாக, விமான நிலையத்திலோ அல்லது நாங்கள் தங்கும் விடுதிக்கு செல்லும் வழியிலோ எந்தவொரு வழக்கத்திற்கு மாறான போலீஸ் அல்லது ராணுவப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அங்கிருக்கவில்லை.


அடுத்த நாள் காலை, நாங்கள் அதிபர் ரினேவை சந்திப்பதற்காக அதிபர் மாளிகைக்குச் சென்றோம். அங்கேயும் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நுழைவாயிலில் இருந்த ஒரே ஒரு பாதுகாப்பு காவலரைத் தவிர, மாளிகையின் நடைபாதைகள் அனைத்தும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தன. நாங்கள் முதலில் அதிபரின் செயலாளரைச் சந்தித்தோம், அவர்தான் எங்களை ரினேவின் எளிமையான அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அதிபர் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை எங்களுக்கு விளக்கிக் கூறினார்.




தனது பாதுகாப்பு அமைப்பில் இருந்த இனரீதியான (நிறவெறி) பிரிவினைகள் காரணமாக, அதன் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாக அதிபர் ரினே ஒப்புக்கொண்டார். தற்போதிருக்கும் வெள்ளையினக் காவல் ஆணையருக்கு பதிலாக, மக்களுடன், குறிப்பாகக் கருப்பின மக்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ள கலப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்கப்போவதாக அவர் கூறினார். மேலும், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளையும் நேரில் ஆய்வு செய்து, அவர்களின் தொழில்முறைத் திறனை மதிப்பிட்டு, அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்.


மேலும், அவர் சோவியத் கூட்டணியை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர் என்ற எண்ணத்தை மாற்றுவதற்காக, மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டியது அவசியமாக இருந்தது என்றும் கூறினார். சுவாரசியமாக, 1983-ஆம் ஆண்டின் அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் (CIA) ஆவணம் ஒன்றும் இதேபோன்ற ஒரு மதிப்பீட்டைச் செய்திருந்தது. அதில், சீஷெல்ஸ் நாட்டில் அமெரிக்காவின் முதன்மை ஆர்வமாக விளங்கும் 'மாஹே தீவில் உள்ள அமெரிக்க விமானப்படையின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தின்' (USAF tracking station in Mahe) மீது ரினே மிகவும் சாதகமான அணுகுமுறையைக் காட்டி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாங்கள் எங்கள் பணியை ஒரு வாரத்திற்குள் முடித்து, அதன் விவரங்களை அவரிடம் வாய்மொழியாக சமர்ப்பித்தோம். மேலும், எங்கள் விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை, இந்தியப் பிரதமரின் அலுவலகம் மூலமாக அனுப்பி வைப்போம் என்றும் அவரிடம் தெரிவித்தோம்.


இந்தக் கட்டுரையின் ஆசிரியர், அமைச்சரவைச் செயலகத்தின் முன்னாள் சிறப்புச் செயலாளர் ஆவார். இவர் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்.


Original articles : Inside India’s secret Seychelles mission: A Cold War story. -Vappala Balachandran

Share: