வழக்கறிஞர் சங்கங்கள் ஒரு குற்றவாளிக்காக நீதிமன்றத்தில் வாதிட மறுக்க முடியுமா? இதுகுறித்து சட்டம் கூறுவது என்ன? -ரிஸ்மி லியா எம்.

 அயோத்தி ராமர் கோவில் நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடப் போவதில்லை என்ற ஃபைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (Faizabad Bar Association) தீர்மானம், ஒரு வழக்கறிஞர் சங்கம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, ஒரு குறிப்பிட்ட குற்றவாளிக்காக வாதாடக் கூடாது என முடிவு எடுக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?


ஒவ்வொரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் நியாயமான விசாரணை மற்றும் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து தீர்ப்பளித்து வருகிறது. இந்த உரிமையை மறுப்பது சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் வழக்கறிஞர்களின் தொழில்முறை நெறிமுறைகளுக்கு மாறானது ஆகும்.


2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த 'ஏ.எஸ். முகமது ரஃபி vs தமிழ்நாடு அரசு' (A.S. Mohammed Rafi vs State of Tamil Nadu) என்ற வழக்கில், கோயம்புத்தூரில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்த விவகாரம் எழுந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர் வழக்கறிஞர் சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், குற்றம்சாட்டப்பட்ட காவலர்களுக்குத் தங்களது சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் வாதாட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு மற்றும் ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் சங்கங்களின் இத்தகைய தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்றும், சட்ட மரபுகள் மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிரானவை என்றும் தீர்ப்பளித்தது.




அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு தீவிரமானதாகவோ அல்லது பொதுமக்களிடையே எவ்வளவு வெறுப்பைத் தூண்டுவதாகவோ இருந்தாலும், ஒவ்வொரு நபருக்கும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ பாதுகாப்பு பெற உரிமை உண்டு என்று நீதிபதி கட்சு குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றத்தில் அத்தகைய நபர்களுக்காக வாதாடி அவர்களைப் பாதுகாப்பது வழக்கறிஞர்களின் கடமையாகும் என்றும் கூறினார்.


இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் சங்கங்களால் நிறைவேற்றப்படும் இதுபோன்ற அனைத்துத் தீர்மானங்களும் செல்லாதவை மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்படுபவை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ள வழக்கறிஞர்கள், இத்தகைய தீர்மானங்களைப் புறக்கணிக்க வேண்டும் மற்றும் எதிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு காவல்துறை அதிகாரியாகவோ, பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவராகவோ, பாலியல் வன்புணர்வு குற்றவாளியாகவோ, தொடர் படுகொலைகள் செய்தவராகவோ அல்லது வேறு யாராக இருந்தாலும், அவருக்காகப் பொதுமக்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவதை ஒரு வழக்கறிஞர் சங்கம் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. இதுபோன்ற தீர்மானங்கள் நாட்டின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் வழக்கறிஞர்களின் தொழில்முறை நெறிமுறைகளை மீறுபவையாகும்.


நீதிபதி கட்சுவின் இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தையும் சுட்டிக்காட்டியது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்திய வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வாதாடினார்கள் என்பதை நினைவுகூர்ந்தது. சில குறிப்பிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜராக வழக்கறிஞர் சங்கங்கள் மறுப்பதாக வரும் செய்திகள் தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய 'நியூரம்பெர்க் விசாரணைகளின்' (Nuremberg trials) போதுகூட, கோடிக்கணக்கான மக்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாஜி போர்க் குற்றவாளிகளுக்குக்கூட வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு வழக்கறிஞர் உதவி பெறுவதற்கான உரிமை என்ன?


அரசியலமைப்பின் பிரிவு-22(1), கைது செய்யப்பட்ட எந்தவொரு நபருக்கும் அவர் விரும்பும் ஒரு வழக்கறிஞரைத் கலந்தாலோசிக்கவும், அவர் மூலமாகத் தனக்காக நீதிமன்றத்தில் வாதாடவும் உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது என்று உத்தரவாதம் அளிக்கிறது. பிரிவு-14 இந்திய எல்லைக்குள் சட்டத்தின்முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.


அரசியலமைப்பின் பிரிவு 21-ன்கீழ் உள்ள உயிர் வாழ்வதற்கும் தனிநபர் சுதந்திரத்திற்குமான உரிமையின் ஒரு முக்கியப் பகுதியாக, 'நியாயமான விசாரணை பெறுவதற்கான உரிமை' (Right to a fair trial) இருப்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.


அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றான பிரிவு-39A, நமது சட்ட அமைப்பு சம வாய்ப்பின் அடிப்படையில் நீதியை ஊக்குவிப்பதையும்; ஏழ்மை அல்லது இதர குறைபாடுகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பது மறுக்கப்படாமல் இருப்பதையும், இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலமாக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.


இந்த அனைத்து விதிகளும் ஒன்றிணைந்துதான், குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருக்குச் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான அரசியலமைப்புரீதியான அடித்தளமாக அமைகின்றன.


இந்திய வழக்கறிஞர் சங்க விதிகள் என்ன கூறுகின்றன?


இந்திய வழக்கறிஞர் சங்க (Bar Council of India) விதிகளின்கீழ் உள்ள 'தொழில்முறை நடத்தை மற்றும் நெறிமுறைகள்' (Standards of Professional Conduct and Etiquette) என்ற அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது: ஒரு வழக்கறிஞர், தான் பயிற்சி செய்யும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது பிற அதிகார அமைப்புகளில் வரும் எந்தவொரு வழக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான கட்டணம், அவரது அனுபவம் மற்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டும். இருப்பினும், ஏதேனும் சிறப்பான அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருந்தால் மட்டுமே, ஒரு குறிப்பிட்ட வழக்கை ஏற்க அவர் மறுக்க முடியும்.


விதிகள், ஒரு வழக்கறிஞர் சிறப்புச் சூழ்நிலைகளின்கீழ் ஒரு வழக்கை ஏற்க மறுக்க அனுமதிக்கின்றன. இருப்பினும், 2019-ஆம் ஆண்டு நடந்த 'குல்தீப் அகர்வால் vs உத்தராகண்ட் மாநிலம் மற்றும் பிறர்' (Kuldeep Agarwal vs State of Uttarakhand and Others) என்ற வழக்கில், உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் இந்த சிறப்புச் சூழ்நிலைகள் என்பது ஒரு வழக்கறிஞரின் தனிப்பட்ட முடிவுக்கு மட்டுமே பொருந்துமே தவிர, ஒட்டுமொத்த வழக்கறிஞர் சங்கத்திற்கு பொருந்தாது என்பதையும் தெளிவுபடுத்தியது.


தனிப்பட்ட ஒரு வழக்கறிஞர் ஏதேனும் ஒரு சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக, ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று அவராகவே முடிவு செய்யலாம். ஆனால், எந்தவொரு வழக்கறிஞர் சங்கமும் ஒரு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்ட நபருக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதைச் சட்டப்படியோ அல்லது நெறிமுறைப்படியோ தடுக்க முடியாது; அல்லது அப்படி ஆஜரானதற்காக அந்த வழக்கறிஞரின் உறுப்பினர் பதவியை நீக்கிவிடுவோம் என்று மிரட்டவும் முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இதற்கு முன்பும் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?


ஆம். பல்வேறு முக்கியக் குற்ற வழக்குகளிலும் வழக்கறிஞர் சங்கங்கள் இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.


2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு சட்டப்பூர்வ வழக்கறிஞர் உதவி வழங்குவதை எதிர்த்து ஒரு வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அவருக்கு முதலில் ஒதுக்கப்பட்ட இலவசச் சட்ட உதவி வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்துவிட்டார். அவருக்குப் பதிலாக வாதாட ஒப்புக்கொண்ட மற்றொரு வழக்கறிஞருக்கு அரசியல்ரீதியான மிரட்டல்கள் வந்தன. இறுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்.


டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, 2012-ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பாலியல் வன்கொடுமை (நிர்பயா) வழக்கிற்குப் பிறகு, சாக்கெட் (Saket) நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட மறுத்து இதேபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். அதேபோல், 2019-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட, வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர்.


2017-ஆம் ஆண்டு, பிரத்யுமன் தாக்கூர் கொலை வழக்கில் (Pradyuman Thakur murder case), ரையான் பள்ளி குழுமத்தின் மூத்த அதிகாரிக்குத் தங்களது வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என்று குர்கான் வழக்கறிஞர் சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழக்கறிஞரின் உதவியை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமானால், ஒருவருக்கு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளும் உரிமை பாதுகாக்கப்படுவது அவசியமாகும் என்று குறிப்பிட்டது.


இத்தகைய தீர்மானங்களை நீதிமன்றங்கள் எவ்வாறு கையாண்டுள்ளன?


முன்பு குறிப்பிட்டது போல, 2019-ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கோட்ட்துவார் வழக்கறிஞர் சங்கம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தைச் செல்லாது என்று அறிவித்தது. அந்தத் தீர்மானத்தில், ஒரு வழக்கறிஞரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்காக எந்தவொரு வழக்கறிஞராவது ஆஜரானால், அவரது வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், மாநில வழக்கறிஞர் குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்கீழ் (Contempt of Courts Act) நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.



2020-ஆம் ஆண்டில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட காஷ்மீரி மாணவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஹூப்ளி வழக்கறிஞர் சங்கத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. தார்வாட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பிற வழக்கறிஞர்கள் பிணை (Bail) மனு தாக்கல் செய்வதைத் தடுத்த செயலை நீதிமன்றம் "தூய்மையான வன்முறை" (Sheer militancy) என்று விவரித்தது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப்பிற்குக்கூட, வழக்கறிஞர் உதவியுடன்கூடிய நியாயமான விசாரணை வழங்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதோடு, இதுபோன்ற தீர்மானங்கள் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பின்கீழ் (Criminal contempt) வரக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


மிக சமீபத்தில், மணிகண்டன் நாயர் vs தமிழ்நாடு அரசு (Manikandan Nair vs State of Tamil Nadu (2025)) என்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்காகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதை வழக்கறிஞர் சங்கங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடுக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, வழக்கறிஞர் சங்கம் என்பது ஒரு தொழிலாளர் சங்கம் அல்ல; அது அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்று குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றத்தில் யாருக்கு ஆதரவாக வாதாட வேண்டும் அல்லது வாதாடக் கூடாது என்பதை இத்தகைய சங்கங்களே தீர்மானிப்பது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார்.


வழக்கறிஞர் சங்கங்களின் இத்தகைய தீர்மானங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளையும் பாதிக்கின்றன. இவை நெறிமுறையற்றவை மட்டுமல்லாமல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள 'நியாயமான விசாரணைப் பெறுவதற்கான' அடிப்படை உரிமையையும் மீறுபவையாகும்.


ஜெ. ஜெயலலிதா vs கர்நாடக அரசு (Jayalalithaa vs State of Karnataka (2014)) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், ஒரு நியாயமான விசாரணை என்பதே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்; அதை எந்த வகையிலும் தடுக்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. ஒரு நியாயமான விசாரணை மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் ஒட்டுமொத்த சமூகம் ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாக்கிறது. வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக, சுதந்திரமான, நியாயமான, நேர்மையான மற்றும் முறையான விசாரணையைப் பெற ஒவ்வொரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் உரிமை உண்டு, என்று குறிப்பிட்டிருந்தது.


எனவே, சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை என்பது ஒரு நியாயமான விசாரணையின் இன்றியமையாத பகுதி என்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


Original articles : Can Bar Associations refuse to represent an accused? What does the law say? -Rizmi Lia M.

Share: