அதிகரித்துவரும் தேவை, அரசின் கொள்கை சீர்திருத்தங்கள், உற்பத்தித் திறனின் அதிகரிப்பு மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சிறப்பு எஃகு (Speciality steel) தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற காரணங்களால், இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவின் எஃகு (Steel) உற்பத்தி மிக அதிகமாக வளர்ந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில், உலக ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியில் இந்தியா 1%-க்கும் குறைவாகவே உற்பத்தி செய்து, உலக அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்தது. உலகளாவிய எஃகு உற்பத்தியில் ஏறக்குறைய 9% பங்களிப்பை இந்தியா வழங்குகிறது. உலக எஃகு உற்பத்தியில் சுமார் பாதியை உற்பத்தி செய்து முதலிடத்தில் இருக்கும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையைச் செய்துள்ளது.
இந்தியாவின் கச்சா எஃகு (Crude steel) உற்பத்தி, 2002-ஆம் நிதியாண்டில் 28 மில்லியன் டன்னாக இருந்தது, 2025-ஆம் நிதியாண்டில் 152 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான உள்நாட்டு எஃகு பயன்பாடு காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியமானது. 2002 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எஃகு பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 7.6% என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. வேகமாக நகரமயமாகி வரும் மற்றும் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வரும் ஒரு வளரும் நாடாக இருப்பதால், இந்தியாவில் எஃகுக்கான தேவை மிகவும் வலுவாக உள்ளது; இது எதிர்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஃகு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோமா?
இந்தியா தனது ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதுமான எஃகை உற்பத்தி செய்கிறது. இருந்தாலும், அது இன்னமும் 'சிறப்பு ரக எஃகை' (Speciality steel) இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறது. நம் நாடு முக்கியமாக உள்கட்டமைப்புத் துறைக்குத் தேவையான சாதாரண அடிப்படை எஃகையே உற்பத்தி செய்கிறது. இருப்பினும், வேகமாக வளர்ந்துவரும் வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளின் தேவைகளுக்கு, சில குறிப்பிட்ட தனித்துவமான பண்புகளைக் கொண்ட சிறப்பு ரக எஃகு தேவைப்படுகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நம் நாட்டுத் தொழில்துறைகள் ஜப்பான் மற்றும் தென்கொரியாவிலிருந்து உயர்தர எஃகை இறக்குமதி செய்கின்றன. எனவே, எதிர்காலத்தில் இந்த வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு, இந்தியா தனது சொந்த நாட்டிலேயே இந்த சிறப்பு ரக எஃகு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் உள்ள முக்கிய எஃகு உற்பத்தியாளர்கள் யார் யார்?
இந்திய எஃகுத் தொழிற்துறையின் வளர்ச்சியானது, முக்கியமாகப் பெரிய தனியார் எஃகு நிறுவனங்களாலேயே இயக்கப்படுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, நாட்டின் ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியில் சுமார் 40 முதல் 45 சதவீதத்தை முதன்மையான ஐந்து முன்னணி உற்பத்தி நிறுவனங்களே இணைந்து வழங்கி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் ‘Tata Steel’, ‘JSW Steel’, ‘SAIL, ‘Jindal Steel & Power’ மற்றும் ‘ArcelorMittal Nippon Steel India’ ஆகியவை ஆகும். 2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி, ‘Tata Steel’ மற்றும் ‘JSW Steel’ ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சந்தையில் தலா 12% பங்கைக் கொண்டுள்ளன. இதற்கடுத்தபடியாக ‘SAIL’ நிறுவனம் 9% பங்கைக் கொண்டுள்ளது. இதே காலகட்டத்தில் (2000 முதல் 2024 வரை), ‘JSW Steel’ நிறுவனத்தின் சந்தைப் பங்கு 2000-ஆம் ஆண்டில் இருந்த 1%-லிருந்து, 2024-ஆம் ஆண்டில் 11.6%-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், ‘SAIL’ நிறுவனத்தின் சந்தைப் பங்கோ 29%-லிருந்து 9%-ஆகக் குறைந்துள்ளது.
இந்த ஐந்து நிறுவனங்களுமே வெவ்வேறு அளவுகளில் தங்களுக்கெனச் சொந்தமாக இரும்புத் தாதுச் சுரங்கங்களை வைத்துள்ளன. அதாவது, எஃகு (Steel) தயாரிப்பதற்கான முக்கியமான மூலப்பொருளான இரும்புத் தாதுவை, இந்த நிறுவனங்கள் தங்களின் சொந்த சுரங்கங்களிலிருந்தே வெட்டி எடுக்கின்றன. சந்தையில் வெளிப்படையாக விலை கொடுத்து வாங்குவதைவிட, சொந்த சுரங்கங்களில் இருந்து இரும்புத் தாதுவை எடுப்பதற்கான செலவு 40-50% வரை குறைவாக இருக்கும். இதன் காரணமாக, சொந்தமாகச் சுரங்கங்களை வைத்திருப்பது இந்த எஃகு தயாரிப்பாளர்களுக்கு உற்பத்திச் செலவில் ஒரு மிகப்பெரிய சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.
எஃகு உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள முக்கியக் கொள்கை மாற்றங்கள் என்னென்ன?
எஃகுத் தொழில் இரண்டு முக்கியமான கொள்கைக் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. 1990-களின் தொடக்கத்தில், இத்துறைக்கான உரிமக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தாராளமயமாக்கப்பட்டது. இதன் மூலம் எஃகுத் துறையில் 51% வரை வெளிநாட்டு முதலீடுகளைப் பெறத் தானியங்கி அனுமதி வழங்கப்பட்டது. 1990 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இறக்குமதி வரிகள் 93%-லிருந்து 7%-ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அரசாங்கம் படிப்படியாக இத்துறைக்கான பாதுகாப்பையும் ஆதரவையும் அதிகரித்தது.
2007-ஆம் ஆண்டில், எஃகு தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான இரும்புத் தாது ஏற்றுமதிக்கு அரசாங்கம் ஏற்றுமதி வரியை விதித்தது. இந்த வரி முதலில் 15%-ஆகத் தொடங்கப்பட்டு, பின்னர் 30%-ஆக உயர்த்தப்பட்டது. இரும்புத் தாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் குறைத்து, உள்நாட்டு எஃகு தொழில்துறைக்கு தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பின்னர் 2017-ஆம் ஆண்டில், அரசாங்கத் திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஃகை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியது. இது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் போட்டியைத் தடுத்தது. தற்போது, தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் எஃகு தொடர்பான 556 வகையான எட்டு இலக்க சரக்குக் குறியீடுகளுக்குப் (Harmonized System Codes (HS codes)) பொருந்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில், கலப்பு இல்லாத மற்றும் கலப்பு எஃகு தகடு பொருட்களின் (Non-alloy and alloy steel flat products) மீது, ஏற்கனவே உள்ள 7% வரியுடன் சேர்த்து மேலும், 12% கூடுதல் வரியை அரசாங்கம் விதித்தது. இந்தக் கூடுதல் வரியானது அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 0.5% வீதம் குறைக்கப்படும்.
எஃகு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள மிக சமீபத்திய திட்டங்கள் என்னென்ன?
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கவும், சிறப்பு ரக எஃகு (Speciality steel) தயாரிப்பிற்கான 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (Production-Linked Incentive Scheme (PLI)) திட்டத்தை அரசாங்கம் 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், உற்பத்தியை அதிகரித்தல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறனை விரிவாக்குதல் ஆகியவற்றிற்காக நிறுவனங்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை முற்றிலும் இல்லாததாக்க (Net-zero emissions) இந்தியா எடுத்துள்ள நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரும்பு மற்றும் எஃகுத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கான ஒரு வழிகாட்டி திட்ட வரைவை 2024-ஆம் ஆண்டில் மத்திய எஃகு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதற்கான முன்னோடித் திட்டங்களுக்காக 2029-30-ஆம் நிதியாண்டு வரை 455 கோடி ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில், எஃகை மூலப்பொருளாகப் பயன்படுத்தி மற்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள் (Downstream industries) எஃகு இறக்குமதி செய்வதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்களை நிதி ஆயோக் (National Institution for Transforming India (NITI Aayog)) பரிந்துரைத்தது. அதன்படி, 100 எஃகுப் பொருட்கள் மீதான 'தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை' நீக்க அது பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 எஃகுப் பொருட்கள் மீதான தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை எஃகு அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கார்பன் எல்லைச் சீரமைப்பு முறை இந்தியாவின் எஃகு தொழிற்துறையை எவ்வாறு பாதிக்கும்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லைச் சீரமைப்பு முறை (European Union’s Carbon Border Adjustment Mechanism (EU-CBAM)) என்பது ஒரு காலநிலை மாற்றக் கொள்கையாகும். இது சுற்றுப்புறச் சூழல் விதிகளை அத்தனை கடுமையாகப் பின்பற்றாத ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 'கார்பன் வரிகளை' விதிப்பதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தைக் (Carbon leakage) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லைச் சீரமைப்பு முறையின்கீழ் (CBAM) கார்பன் வரி விதிப்பால் பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் ஏற்றுமதி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.2% மட்டுமே என்றாலும், இந்த ஏற்றுமதியில் 90% இரும்பு மற்றும் எஃகு துறையைச் சேர்ந்ததாகும். இதனால், இரும்பு மற்றும் எஃகு துறைதான் இந்த வரியால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய தொழிற்துறையாக மாறுகிறது.
சிஷிர் குப்தா, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் மூத்த ஆய்வாளராகவும், ரிஷிதா சச்தேவா, இணை ஆய்வாளராகவும் பணியாற்றுகின்றனர்.
Original article : How India’s steel industry became the world’s second-largest producer. -Shishir Gupta and Rishita Sachdeva