இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த கொள்கைக் கட்டமைப்பு. - அஞ்சன் ரே, ஃபமிதா கான்

 இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy (INSA)) அறிவியல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் கொள்கை மையம் வெளியிட்ட கொள்கைப் பற்றிய சுருக்க அறிக்கை, நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பை விவரிக்கிறது.


கடந்த 10- ஆண்டுகளில் இந்தியா தனது எரிசக்தி நிலப்பரப்பை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து வீடுகளுக்கும் மின்மயமாக்கலை அடைவது, தூய்மையான சமையல் எரிபொருளுக்கான அணுகலை விரிவுபடுத்துவது, உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக மாறுவது என, நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில் எரிசக்திக்கான அணுகலை உறுதி செய்வதில் தனது வலுவான அர்ப்பணிப்பைக்  காட்டியுள்ளது.


2047-க்குள் எரிசக்தித் துறையில் தன்னிறைவு மற்றும் 2070-க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு (net-zero emissions) ஆகிய இலக்குகளை இந்தியா நோக்கிச் செல்லும்போது, ​​எரிசக்தி மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்குத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு எரிசக்தி வளங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவனங்களை பொதுவான தேசிய நோக்கங்களை நோக்கி ஒருங்கிணைக்க உதவும் ஒரு தேசிய எரிசக்தி கட்டமைப்பின் முக்கியத்துவத்தை, மே 2026-ல் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் (INSA) வெளியிட்ட கொள்கை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.




இந்தியாவின் எரிசக்தி அமைப்பின் சிக்கலான தன்மை


இந்தியாவின் எரிசக்தி அமைப்பின் அளவு மற்றும் சிக்கலான தன்மையிலிருந்து இத்தகைய அணுகுமுறையின் தேவை தெளிவாக தெரிகிறது. உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைகளின் கணிசமான பங்கிற்கு இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதே சமயம், பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் தொடர்வதால் எரிசக்தி தேவை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி பாதுகாப்பு, கட்டுப்படியாகும் விலை, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய பல்வேறு முன்னுரிமைகளை நிர்வகிப்பதற்கு, பல்வேறு துறைகள் மற்றும் எரிபொருள் வகைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடல் தேவைப்படுகிறது.


சௌபாக்யா (Saubhagya Scheme) திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) மற்றும் முக்கிய இலக்குகளை கொண்ட  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் போன்ற முயற்சிகள் மூலம் இந்தியா ஏற்கனவே வலுவான அடித்தளங்களை அமைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறன், 2015-ல் 40 ஜிகாவாட்டிலிருந்து 2025-க்குள் 260 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது, எரிசக்தி கலவையைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற உறுதியைப் காட்டுகிறது. இருப்பினும், எரிசக்தி சூழல் அமைப்பு மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாறிவருவதால், மின் உற்பத்தி, கடத்தல், சேமிப்பு, விநியோகம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?


இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் (Indian National Science Academy (INSA)) கொள்கை அறிக்கையானது, போதுமான தன்மை, அணுகல், கட்டுப்படியாகும் தன்மை மற்றும் பொருத்தமான நிலைத்தன்மை போன்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பை முன்மொழிகிறது.



முதலாவதாக, ஆற்றல் போதுமான்மை (Adequacy) என்பது நம்பகமான மற்றும் பல்வகைப்பட்ட ஆற்றல் வழங்கலை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக பாரம்பரிய மற்றும் புதிதாக உருவாகி வரும் ஆற்றல் திட்டங்களின் சமநிலையான கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், நவீன உள்கட்டமைப்பு வசதிகள், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஆதரவும் வழங்கப்படுகிறது. நீண்டகால பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைப்பதோடு, எரிசக்தி  சார்ந்த மீள்திறனை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


இரண்டாவதாக, அனைத்து குடிமக்களுக்கும் நம்பகமான மற்றும் சமமான ஆற்றல் சேவைகள் கிடைப்பதை இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. மின்மயமாக்கல் மற்றும் தூய்மையான சமையல் எரிசக்தி அணுகலில் நாடு ஏற்கனவே பெற்றுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, இறுதிக்கட்டம் வரையிலான (Last-mile) சேவை வழங்கலை வலுப்படுத்துதல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தேவைப்படும் இடங்களில் பரவலாக்கப்பட்ட எரிசக்தித் தீர்வுகளை விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்கிறது.


மூன்றாவதாக, ஒரு வெற்றிகரமான எரிசக்தி மாற்றம் என்பது குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு பொருளாதாரரீதியாக சுமையாக இருக்கக்கூடாது என்பதை இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஆதரிப்பதில், புதுமையான நிதி அமைப்புகள், திறமையான சந்தைகள் மற்றும் நுகர்வோரை மையமாக கொண்ட பாதுகாப்புகளின் பங்கினை இந்த கட்டமைப்பு கோடிட்டுக்காட்டுகிறது


நான்காவது தூணான, பொருத்தமான நிலைத்தன்மை (appropriate sustainability) என்பது, இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் வளங்களுக்கு ஏற்ப நிலைத்தன்மையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. அனைவருக்கும் தேவைபடக்கூடிய ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சூழலைப் வெளிக்காட்டும் தீர்வுகளை இந்தக் கட்டமைப்பு பரிந்துரை செய்கிறது. இதில் உள்ளூர் சமூகங்களுக்கான ஆதரவு, பணியாளர் திறன் மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றத்திற்கான வழிமுறைகள் போன்றவை அடங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை வலுப்படுத்தவும், தொழில் துறைகளிலிருந்து வெளியேறும் உமிழ்வைக் குறைக்கவும் உதவக்கூடிய முக்கியமான மற்றும் பல்வேறு துறைகளுக்கும் பொருந்தக்கூடிய காரணிகளாக, வட்டப் பொருளாதார நடைமுறைகள் மற்றும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (carbon capture, utilisation and storage (CCUS)) ஆகியவற்றை இந்தக் கொள்கை அறிக்கை அடையாளம் காட்டுகிறது.


எரிசக்தி மாற்றங்கள் பல ஆண்டுகளாக நிகழ்கின்றன என்பதை அங்கீகரித்து, இந்தக் கட்டமைப்பு ஒரு படிப்படியான அணுகுமுறையை முன்மொழிகிறது. உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை விரைவுபடுத்துதல், பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் நீண்டகால ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்கும் அமைப்புரீதியான வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை குறுகியகால முன்னுரிமைகளில் அடங்கும். சில காலங்களுக்கு பின்னர், குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களை ஆழமாக ஒருங்கிணைத்தல், உயிர்வளங்களின் (Bio-resources) பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் அதிக இணைப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் நிலைத்தன்மை கொண்ட ஆற்றல் சூழலமைப்பை உருவாக்குதல் போன்றவற்றின்மீது கவனம் திரும்பும்.


ஆற்றலை ஒருங்கிணைந்த அமைப்பாகப் பார்ப்பது


இந்தக் கட்டமைப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவின் எரிசக்தி அமைப்பை ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பாகக் மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும். நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரித் திணிவு (Biomass), இயற்கை எரிவாயு, கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் (Waste-to-Energy) அமைப்புகள் மற்றும் உருவாகி வரும் தூய்மையான தொழில்நுட்பங்கள் போன்றவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இந்த வளங்களின் செயல்திறனை மேம்படுத்த, அவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால இராஜதந்திர திட்டமிடல்  முக்கியமானதாகும்.



இந்தியாவின் எரிசக்தி மாற்றம் என்பது உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அது எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய, மீள்திறன் கொண்ட, குறைவான மற்றும் நீடித்த ஒரு எரிசக்தி அமைப்பை உருவாக்குவதாகும். பல்வேறு எரிசக்திப் பாதைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முன்மொழியப்பட்ட அணுகுமுறை தேசிய முன்னுரிமைகளை முன்னேற்றுவதற்கும், அதே நேரத்தில் வருங்கால தலைமுறைகளுக்கான எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள வழிகாட்டும் செயல் திட்டத்தை வழங்குகிறது.


அஞ்சன் ராய், நவம் கேபிட்டலின் முதலீட்டுப் பங்குதாரரும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்ற (Council of Scientific and Industrial Research (CSIR)) இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் ஆவார்; ஃபாமிதா கான், இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் திட்ட அறிவியலாளர்-II  ஆவார்.


Original article : A unified policy architecture for India’s energy future. -Anjan Ray, Famida Khan

Share: