நாட்டின் தூய்மையான எரிசக்தியின் எதிர்காலம், வேகமான மற்றும் திறமையான மின்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தலைச் சார்ந்துள்ளது.
இந்தியா பல்லாயிரக்கணக்கான கிகாவாட் (GW) அளவிலான குறைவான சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தியை பயன்படுத்த முடியாமல் வீணடித்து வருகிறது. இதற்குக் காரணம், அந்த மின் உற்பத்தித் திட்டங்கள் தயாராக இல்லாததால் அல்ல. தற்போதுள்ள மின்கட்டமைப்பை மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதன் மூலமும், முக்கிய முனைகளில் சேமிப்பு இடங்களைச் சேர்ப்பதன் மூலமும், மின் பரிமாற்றத்திற்காகக் கூடுதலாக எந்த ஒரு நிலத்தை கையகப்படுத்தாமலேயே 1,000 ஜிகாவாட் புதிய தூய்மையான ஆற்றலைப் பெற முடியும்.
இந்தியாவின் மின்சார அமைப்பு ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி நாட்டில் மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் மின்சார ஆதாரங்களாக மாறியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 45 கிகாவாட்-க்கும் அதிகமான திறன் சேர்க்கப்பட்டு, அந்த அளவு அமெரிக்கா சேர்த்த அளவுக்கு ஏறத்தாழ சமமானதாக இருந்தது. உலகின் மிகக் குறைந்த மின்கலன் செலவுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதன் மூலம், இந்தியாவால் இப்போது ஒரு கிலோவாட்-மணிக்கு ₹3.5 என்ற விலையில் நிலையான மற்றும் தூய்மையான மின்சாரத்தை வழங்க முடியும்.
இருப்பினும், தொழில்நுட்பமும் விலைகளும் ஒருங்கிணையும் அதே வேளையில், மின் பரிமாற்றமே ஒரு முக்கிய தடையாக உருவெடுத்துள்ளது. 50 ஜிகாவாட்டிற்கும் அதிகமான தூய்மையான எரிசக்தி உற்பத்தி திறன்கள், அதற்கான மின்சார பரிமாற்றக் கட்டமைப்பு (Transmission) போதிய அளவில் இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றன. திட்டங்கள் 12 முதல் 18 மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முறையான அனுமதிகள் போன்ற காரணங்களால் பரிமாற்றக் கட்டமைப்பை உருவாக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றன. மின் வலையமைப்பை (Grid) வேகமாகவும் திறமையாகவும் விரிவுபடுத்தாவிட்டால், குறைந்த செலவிலான தூய ஆற்றலின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.
இந்தியாவில் தற்போது சுமார் 250 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உள்ளது. மேலும் 100 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்கள் ஆரம்பகட்டத்தில் உள்ளன. அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், தொழில் மற்றும் போக்குவரத்து துறைகளை மின்மயமாக்குவதற்கும், 2050-ஆம் ஆண்டுக்குள் 2,000 ஜிகாவாட் திறன் தேவைப்படும். இது போன்ற திட்டங்கள் உலகின் மிகப்பெரிய மின் கடத்திக் கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்களில் ஒன்றைச் செயல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இப்போது கேள்வி, இந்தியா மேலும் மின்பரிமாற்றக் கோடுகளை அமைக்க வேண்டுமா என்பது அல்ல, கண்டிப்பாக அவற்றை அமைக்க வேண்டும். ஆனால், புதிய மின்பரிமாற்றக் கோடுகள் மட்டும் போதுமா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. அதற்கான பதில், "போதாது" என்பதாகும். இந்தியாவிற்குப் புதிய மற்றும் பெரிய அளவிலான மின் கட்டமைப்பு வசதிகளும், ஏற்கனவே உள்ள கட்டமைப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் முறையும் தேவைப்படுகின்றன.
தூய ஆற்றல் கொண்ட அதிவேகப் பாதைகளை உருவாக்குதல்
இந்தியாவில் புதிய மின் இணைப்புகளை அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் மின்கட்டமைப்பைப் (grid) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம் 1,000 ஜிகாவாட் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வேகமாகப் பெற முடியும். இந்த வழிகள் நிலப்பற்றாக்குறையைத் தவிர்த்து, தூய்மையான ஆற்றலை பல மடங்கு உதவி செய்கின்றன.
சேமிப்பகம் அதே கம்பிகளிலிருந்து அதிகப் பயனைப் பெற உதவுகிறது. முதலாவதாக, இன்று பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆலைகள் தங்களின் மின் செலுத்து இணைப்புகளை 25% நேரம் மட்டுமே பயன்படுத்துகின்றன. உதாரணமாக, சூரிய மின்சாரம் பகல் நேரத்தில் மின்பரிமாற்றக் கம்பிகளை முழுமையாகப் பயன்படுத்துகிறது. ஆனால் அதே இணைப்பு மாலை நேர உச்சநிலைகளிலும் இரவிலும் பயன்பாடின்றி இருக்கும். இது, நெரிசல் நேரங்களில் (Rush Hour) மட்டுமே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலையைப் போன்றதாகும். சில மணிநேரங்கள் பரபரப்பாகவும், அந்த நாளின் மற்ற நேரங்களில் வெறிச்சோடியும் காணப்படும். இது போன்ற இடங்களிலேயே மின்கலன் (Battery) சேமிப்பு அமைப்புகளை நிறுவினால், பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைத்து, மாலை மற்றும் இரவு நேரங்களிலும் வழங்க முடியும். இதன் மூலம், புதிய மின்பரிமாற்ற வழித்தடங்களையோ (corridors) அல்லது கூடுதல் நிலப்பரப்பையோ உருவாக்காமல், ஏற்கனவே உள்ள மின்பரிமாற்ற இணைப்புகளின் பயன்பாட்டை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்க முடியும். இதன் விளைவாக, கூடுதலாக 400 ஜிகாவாட் அளவிலான தூய்மையான ஆற்றலை (Clean Energy) சமமான அளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தும் திறன் கிடைக்கிறது.
நிலக்கரி வழித்தடங்கள் தூய்மையான மின்சாரத்தையும் கொண்டு செல்ல முடியும். இரண்டாவதாக, நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுடன் இணைக்கப்பட்ட மின் இணைப்புகள் மற்றொரு முக்கிய வாய்ப்பை வழங்குகின்றன. 100 ஜிகாவாட் மொத்தத் திறன் கொண்ட பல அதிக செலவுள்ள அல்லது பழைய நிலக்கரி ஆலைகள், மதிப்புமிக்க மின் பரிமாற்ற இணைப்புகளைக் வைத்து இருந்தாலும், அவை நீண்ட காலத்திற்கு குறைந்த உற்பத்தித் திறனில் இயங்குகின்றன. இந்த நிலையங்களுக்கு அருகில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை அமைப்பது, நிலக்கரி அலகுகள் முழுமையாகச் செயல்படாத நேரங்களில், இந்த முழுமையாகப் பயன்படுத்தப்படாத திறனைத் தூய்மையான மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. பல மணிநேரங்களில், நிலக்கரி ஆலையை இயக்குவதைவிட, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது செலவு குறைந்ததாக இருக்கிறது. இது, உருவாக்குநர்களுக்கு அரிதான மின்கட்டமைப்பு இணைப்பைப் பெறவும், நிலக்கரி ஆலை உரிமையாளர்களுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படாத சொத்துக்களிலிருந்து புதிய வருவாயைப் பெறவும் வழிவகுக்கிறது. இந்த அணுகுமுறை, கூடுதலாக 100 ஜிகாவாட் அளவிலான தூய்மையான ஆற்றல் உற்பத்திக்குச் தேவையான திறனை உருவாக்க உதவும்.
தற்போதுள்ள துணை மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது வாய்ப்பு, தற்போதுள்ள மின்பரிமாற்ற துணை மின் நிலையங்களில் உள்ளது. இவற்றில் பல இடங்களில் புதிய மின் வலையமைப்பு இணைப்புகளை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதன் மூலம், மேலும் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) திட்டங்கள் நேரடியாக மின் வலையமைப்புடன் இணைக்கப்பட முடியும். இந்த முனைகளை மின்கல சேமிப்பு அமைப்புகளுடன் (Battery Storage Systems) இணைப்பது, உச்சபட்ச தேவையின்போது கூடுதல் மின்சாரத்தை வழங்கவும், மின் விநியோகத்தை சீராக வைக்கவும் உதவும். இந்த அணுகுமுறையின் மூலம், தேசிய அளவில், 100 ஜிகாவாட் கூடுதல் தூய்மையான ஆற்றல் திறனை உருவாக்க முடியும்.
நவீன மின்கம்பிகள் இரண்டு மடங்கு மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்டவையாக உள்ளன. நான்காவதாக, இந்தியாவின் மின்கட்டமைப்பின் பெரும்பகுதி, வெப்பத்தால் தொய்வடைந்து மின் ஓட்டத்தைத் தடுக்கும் பழைய கம்பிகள் அல்லது கடத்திகளையே பயன்படுத்துகிறது. அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் குறைந்த தொய்வுள்ள கடத்திகளால் மாற்றுவதன் மூலம், அதே கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களில் மின் பரிமாற்றத் திறனை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். அதே வழித்தடங்களையும் பயன்படுத்தி மின்சார பரிமாற்றத் திறனை இருமடங்காக உயர்த்த முடியும். இது, ஒரே ரயில் பாதையில் அதிக சரக்குகளை இழுத்துச் செல்லும் வகையில் ரயிலின் இயந்திரங்களை மேம்படுத்துவது போன்றதாகும். புதிய நிலம் தேவையில்லை. மேம்பட்ட தொழில்நுட்பம் மட்டும் போதுமானது. இந்த கூடுதல் திறன், மின்சார சேமிப்பு மற்றும் பகிரப்பட்ட பரிமாற்ற இணைப்புகள் மூலம் கிடைக்கும் தூய்மையான மின்சார சக்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க உதவும். இதன் மூலம், தற்போதுள்ள பரிமாற்றக் கட்டமைப்பிலேயே 1,000 ஜிகாவாட்க்கு மேற்பட்ட தூய்மையான மின்சாரத்தை பரிமாறும் திறனை உருவாக்க முடியும். இதனால் இன்றைய மின்வழித்தடங்கள், எதிர்காலத்தின் தூய்மையான ஆற்றல் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைகளாக (clean-energy superhighways) மாறும்.
ஒரு விரைவான பாதை
முக்கியமாக, இந்த தீர்வுகளை ஆண்டுகள் அல்ல, சில மாதங்களுக்குள்ளேயே செயல்படுத்த முடியும். புதிய மின் பரிமாற்ற வழித்தடங்களுக்கு (Transmission Corridors) தேவையான நிலம், அனுமதிகள் மற்றும் பல்வேறு ஒப்புதல்கள் இதற்கு குறைவாகவே தேவைப்படும். இவை உடனடியாக மின்வலையில் உள்ள சிக்கல்களை குறைத்து, பயன்படுத்தப்படாமல் இருக்கும் தூய்மையான மின்சக்தியை இணைக்கவும், புதிய மின்கம்பிகள் அமைக்கப்படும் வரை புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் முன்னேற்றமடையாவும் உதவும். மேலும், இதுபோன்ற திட்டங்கள் மின்கட்டமைப்பின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, மின்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான சராசரி செலவையும் குறைக்கின்றன.
புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கணிசமான நிலம் தேவைப்பட்டாலும், தேவையான நிலத்தைப் பெறுவது கடினமாகி வரும் நிலையில், ஏற்கனவே ஓரளவு நிலமும் மின்கட்டமைப்பு அணுகலும் உள்ள நிலக்கரி ஆலைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்கள் அல்லது துணை மின் நிலையங்களுக்கு அருகில் அவற்றை அமைப்பது, நடைமுறைக்கு ஏற்றதாகவும் குறைந்த முரண்பாடுகளைக் கொண்ட ஒரு பாதையை வழங்குகிறது.
இந்தியா புதிய மின் பரிமாற்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால், அதைத் திறமையாக உருவாக்க வேண்டும். மேம்பட்ட கடத்திகளைக் கொண்டு, சேமிப்பு வசதியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மின்பாதையானது, குறைந்த கூடுதல் செலவில் நான்கு முதல் ஐந்து மடங்கிற்கு மேலான தூய்மையான மின்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன்க்கும் அதிகமான செலவில் தனது மின் கட்டமைப்பை 40% விரிவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாலும், இது உலகின் மிகப்பெரிய விரிவாக்கங்களில் ஒன்றாகத் திகழ்வதாலும், ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதியும் தொடக்கத்திலிருந்தே எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வலுவானதாக அமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு இந்த இரண்டு அணுகுமுறைகளும் தேவைப்படும். தற்போதுள்ள மின்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இன்றைய சிக்கல்களுக்கு விரைவான தீர்வை அளிக்கும் அதே வேளையில், அடுத்த பத்தாண்டுகளில் தேவைப்படும் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்க, மேம்பட்ட மற்றும் அதிகத் திறன் கொண்ட புதிய மின்பரிமாற்ற உள்கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கும்.
வெற்றியைத் தீர்மானிக்கும் கொள்கை மாற்றங்கள்
ஒருங்கிணைந்த தேசிய மின் கட்டமைப்பு மற்றும் பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட வேகமாக மின் பரிமாற்றத் திறனை அதிகரித்த சாதனைப் பதிவு போன்ற கட்டமைப்புரீதியான அமைப்புகளை இந்தியா ஏற்கனவே கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின் கட்டமைப்புடன் இணைக்க முடியாத நிலை, ஆற்றல் மாற்றத்தில் கடுமையான தடையாக உருவெடுத்துள்ளது. இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டைத் வேகப்படுத்தும் போது, தொலை நோக்கு பார்வை கொண்ட கொள்கையின் மூலம் சிக்கலைத் தவிர்க்க முடியும்.
மூன்று மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. முதலாவதாக, சூரிய மின் நிலையங்கள் தங்களின் மின் கட்டமைப்பு அணுகலைச் சேமிப்பு அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் விதிகளை இந்தியாவின் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இந்த அணுகுமுறை இப்போது மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், ஒழுங்குமுறை ஆணையங்களும் பயன்பாட்டு நிறுவனங்களும் இதைத் தங்களின் திட்டமிடல் மற்றும் கொள்முதல் முடிவுகளில் தீவிரமாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, தற்போதைய ஒழுங்குமுறை மற்றும் கொள்முதல் விதிமுறைகள், ஆரம்ப முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும், புதிய மின் பரிமாற்றப் பாதைகளை (Transmission Corridors) உருவாக்காமல், ஏற்கனவே உள்ள அமைப்பின் திறனை அதிகரித்து, முழுமையான நன்மைகளை வழங்கும் மேம்பட்ட மின் பரிமாற்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மண்டலங்கள் மற்றும் மின் பரிமாற்றத்திற்கு ஏற்ற வழித்தடங்கள் (Optimised Transmission Corridors) ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவது முக்கியமானதாகும். இது இடத் தேர்வு, திட்டமிடல் மற்றும் காலநிர்ணயம் தொடர்பான சவால்களை குறைப்பதோடு, குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் பெரிய அளவிலான தூய்மையான மின்சாரத்தை வேகமாக பரிமாறறம் செய்ய உதவும்.
இந்த நடவடிக்கைகள், எஃகு, அலுமினியம், சிமெண்டு, தரவு மையங்கள் இரசாயனத் தொழில்கள் போன்ற துறைகள், நம்பகமான 24×7 மின்சாரத்தை நிலையான விலையில் அதிகமாக ஆராய்ந்து வரும் சூழலில், குறைந்த செலவிலான தூய்மையான மின்சார உற்பத்தியில் இந்தியா தனது முன்னிலை நிலையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். எதிர்காலப் பாதை தெளிவாக உள்ளது: இந்தியாவுக்குத் தேவையான அனைத்து மின் பரிமாற்ற வசதிகளையும் உருவாக்குவதோடு, ஏற்கனவே உள்ள ஒவ்வொரு மின் பரிமாற்றக் கோட்டிலிருந்தும் அதிகபட்ச பயனைப் பெற வேண்டும். மின்வலையமைப்பு இனி வெறும் பின்னணி உள்கட்டமைப்பு அல்ல. அது இந்தியாவின் அடுத்த வளர்ச்சிக்கு இயந்திரமாகவும், குறைந்த செலவிலும் அதிக உற்பத்தித் திறனுடனும் கூடிய எதிர்காலத்திற்க்கான அடித்தளமாகவும் விளங்குகிறது.
அமோல் ஃபட்கே, அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோல்ட்மேன் பொதுக் கொள்கைப் பள்ளியில் பேராசிரியராக உள்ளார். நிகித் அப்யங்கர், அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோல்ட்மேன் பொதுக் கொள்கைப் பள்ளியில் பேராசிரியராக உள்ளார்.
Original link:
India’s cheapest power is here, the grid must catch up.