முக்கிய அம்சங்கள்:
— சுதந்திரமான மனப்பான்மை கொண்ட காவல்துறைத் தலைவரை சில மாநில அரசுகள் மட்டுமே விரும்புவதால், நீதிமன்றத்தின் உத்தரவுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இன்றைய அரசியல் சூழலில், வலுவான நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரி பிரச்சனையாக பார்க்கப்படுகிறார்.
ஒரு தன்னம்பிக்கை கொண்ட காவல்துறை தலைவர், காவல் நிலையப் பொறுப்பாளராக (Station House Officer (SHO)) இருந்தாலும் அல்லது காவல் கண்காணிப்பாளராக (Superintendent of Police (SP)) ஆக இருந்தாலும், அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிவதைவிட சட்டத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார்.
விசாரணையை மேம்படுத்துதல், ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் குறைந்துவரும் தண்டனை விகிதங்களை அதிகரிப்பதில் காவல்துறைகள் கவனம் செலுத்துகிறார்கள்.
2023-ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) வெளியிட்ட தரவுகளின்படி, கொலைகளுக்கான தண்டனை விகிதம் 37.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை விகிதம் 22.7 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தது.
பல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் கவலைகளை உண்மையாக எழுப்பினாலும், பெரும்பாலானவர்கள் வெளிப்படையான மற்றும் திறமையான சேவைகளை வழங்கக்கூடிய அமைப்புகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
என் பார்வையில், இந்தத் தயக்கம் பயம் மற்றும் பாதுகாப்பின்மையிலிருந்து உருவாகிறது: வலுவான அமைப்புகள் அரசியல்வாதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கின்றன. குடிமக்கள் அலுவலகங்களை நேரடியாக அணுகி சரியான நேரத்தில் சேவையைப் பெறும்போது, அவர்கள் இனி அரசியல்வாதிகளின் அறைகளுக்கு வெளியே காத்திருக்க வேண்டியதில்லை.
காவல்துறை எப்போதும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றதில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம், ஊழல் போன்ற காரணிகள் உண்மையான கவலைகளை உருவாக்குகின்றன. காவல்துறைத் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளை அறிந்திருக்கிறார்கள். மேலும், சில அதிகாரிகள் அமைப்பை மேம்படுத்த உழைத்துள்ளனர்.
2006-ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டது காவல்துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்ட சிக்கலைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. வழங்கப்பட்ட ஏழு உத்தரவுகள் —
காவல் நிலையப் பொறுப்பாளர் (Station House Officer (SHO)), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்ற செயல்பாட்டுக் கடமைகளில் உள்ள அதிகாரிகளுக்கு நிர்ணயித்த பதவிக்காலம்.
தேசிய மற்றும் மாநில பாதுகாப்பு ஆணையங்கள்
வெவ்வேறு நிலைகளில் புகார் அதிகாரிகள்
சட்டம் ஒழுங்கிலிருந்து விசாரணையைப் பிரித்தல், மற்றும்
அமைப்பு ரீதியான வாரியங்களை உருவாக்குதல் - நிலைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மாநிலங்கள் இந்த சீர்திருத்தங்களை வடிவத்தில் மட்டுமே செயல்படுத்தியுள்ளன, உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவில்லை.
தற்காலிக நியமனங்கள் தொடர்கின்றன. புகார்கள் தொடர்பான அதிகாரிகள் பலவீனமாகவோ உள்ளனர். நீண்டகால காலியிடங்கள் காரணமாக விசாரணை மற்றும் சட்டம் ஒழுங்கு செயல்பாடுகள் அரிதாகவே பிரிக்கப்படுகின்றன.
இதன் விளைவாக குடிமக்கள் உதவியற்றவர்களாகவே உள்ளனர். நீதிமன்றங்களால் மட்டும் இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய முடியாது. காவல் சீர்திருத்தங்களை நீதித்துறை உத்தரவுகளால் மட்டுமே இயக்க முடியாது; அவை குடிமை சமூகம், ஊடகங்கள் மற்றும் அமைப்பிற்குள் உள்ள உறுதியான நிபுணர்களால் ஆதரிக்கப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு களத்தில் உண்மையான மாற்றங்கள் தேவை. காவல்துறை தலைவரின் அலுவலகத்தை வலுப்படுத்துவது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. காவல் நிலையம் சீர்திருத்தங்களின் முக்கிய மையமாக இருக்க வேண்டும். குடிமக்களின் தீவிர ஈடுபாடு, தொடர்ச்சியான பொது மேற்பார்வை இல்லாமல், அமைப்பை மேம்படுத்த முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
தேசிய காவல் ஆணையம், 1979-ஆம் ஆண்டு அறிக்கையில், "காவல்துறை அமைப்பில் வெளிப்புற ஆதாரங்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் தலையிடுவது, காவல்துறையினரை அவர்களின் தொழில் முன்னேற்றம் அவர்களின் தொழில்முறை செயல்திறனின் தகுதிகளைச் சார்ந்தது அல்ல, மாறாக சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம் அதைப் பெற முடியும், இது அமைப்பில் பாதிப்பையும் முழுமையான பயனற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது என்று கூறுகிறது.
உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் அசாம் காவல்துறையின் காவல்துறை தலைவராகப் பணியாற்றிய பிரகாஷ் சிங், ஓய்வு பெற்ற பிறகு, 1996-ல் காவல்துறை சீர்திருத்தங்களைக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். செப்டம்பர் 2006-ல் ஒரு முக்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் காவல்துறை சீர்திருத்தங்களைக் கொண்டுவர உத்தரவிட்டது.
எந்தவொரு அரசியல் தலையீடும் பற்றி கவலைப்படாமல் காவல்துறை தங்கள் பணியைச் செய்யமுடியும் என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர்ச்சியான நடவடிக்கைகளை இந்தத் தீர்ப்பு பட்டியலிட்டுள்ளது.
Original article : What is the role and function of DGP? -Khushboo Kumari, Roshni Yadav