வெனிசுலா நாட்டு கச்சா எண்ணெயின் குறைபாடுகள் என்ன? தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறதா?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த பிறகு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் மீண்டும் உலகச் சந்தையில் பயன்பாட்டுக்கு வருவதில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா எண்ணெய் உட்பட அமெரிக்காவிலிருந்து அதிக கச்சா எண்ணெயை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தானாகவே தெரிவித்தார். இருப்பினும், இரு நாடுகளின் கூட்டறிக்கையில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிக்கல்கள் என்ன?
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். பரதன் கூறுகையில், வெனிசுலா நாட்டு கச்சா எண்ணெய் மிகவும் கனமானது, அதிக அடர்த்தி (high viscosity) கொண்டது மற்றும் அதிக அமிலத்தன்மை (acid number) வாய்ந்தது என்று தெரிவித்தார். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சஞ்சய் கண்ணா கூறுகையில், இந்த எண்ணெயில் உலோகங்கள் மற்றும் நைட்ரஜன் அதிக அளவில் இருப்பதாகவும், சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பு இதை 10-15 சதவீதம் குறைந்த அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெயுடன் கலக்க வேண்டும் என்றும் கூறினார். அதிக அடர்த்தி தன்மை என்பது எண்ணெய் எளிதில் பாயாது என்பதையும், அதிக அமிலத்தன்மை என்பது அதில் இயற்கையிலேயே அதிக ரசாயனங்கள் கலந்திருப்பதையும் குறிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
எந்த ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும் ஏன் ஒரு பிரச்சனையாக இருக்கிறது?
ஆயில்ஃபீல்ட் சேவை வழங்கும் கேலிச் (Caliche) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் பிரியதர்ஷன் கூறுகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள குழாய்கள், வளைவுகள், அழுத்தக் கலன்கள் (pressure vessels), நுழைவாயில்கள், வெளியேறும் வழிகள் மற்றும் அடைப்பான்கள் (valve) போன்றவை ஒரு குறிப்பிட்ட அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெயைக் கையாளுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எண்ணெய்ப் பசையின் அடர்த்தி (viscosity) அந்த அளவைத் தாண்டினால், அதைச் சுத்திகரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், குழாய்கள் மற்றும் இயந்திர அமைப்புகளில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெயின் அமிலத்தன்மை (acidity) அந்த அமைப்பின் எல்லையைத் தாண்டினால், அது குழாய்கள் மற்றும் கலன்கள் என ஒட்டுமொத்த வலைப்பின்னலிலும் துருப்பிடித்தலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். கேலிச் (Caliche) நிறுவனத்தின் குழும முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் மேத்யூ கூறுகையில், கச்சா எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றுவதற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் வேதிப்பொருட்களையும் வினையூக்கிகளையும் (catalysts) பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இவை அந்தந்த சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளும் கச்சா எண்ணெயின் வகையைப் பொறுத்தே வாங்கப்படுகின்றன. எனவே, திடீரென வேறு வகை கச்சா எண்ணெயைப் பயன்படுத்தும்போது, இந்த வேதிப்பொருட்களைச் சந்தையிலிருந்து உடனடியாகப் பெற்றுவிட முடியாது, ஏனெனில், இவை நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன்கள் தேவைப்படுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களை புதிய வகைக்கு மாற்றி அமைப்பது அதிக செலவுகளை ஏற்படுத்தாது என்றாலும், அதை ஒரே இரவில் செய்துவிட முடியாது என்றும், போதிய சேமிப்பு வசதி இல்லாதது ஒரு தடையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட கட்டமைப்பானது வருங்காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உறுதிமொழி அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், சுமார் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் ஒரு பிரம்மாண்டமான கப்பலை வாங்கியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை, மிகவும் அடர்த்தியான மற்றும் கடினமான வகை கச்சா எண்ணெயையும் சுத்திகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன?
வணிகரீதியாக லாபகரமாக இருந்தால் வெனிசுலா உட்பட எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் அரசு நிறுவனமான Petróleos de Venezuela, S.A. (PDVSA) உடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார். 2019-20-ஆம் ஆண்டு வரை வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அமெரிக்கத் தடைகள் காரணமாக அது நிறுத்தப்பட்டு, பின்னர் 2023-24-ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, டிரம்ப் ஆட்சியின் முதல் காலத்தில் தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெனிசுலா சுமார் 10-13 சதவீத பங்களிப்பை வழங்கியது. ஆனால், இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, அதன் பங்கு வெறும் 1-2 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெனிசுலா நாட்டு எண்ணெய் வளத்தின் மீது அதிக ஆர்வம் காட்டப்படுவதற்கு அரசியல் நிச்சயமற்றத் தன்மையே ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். டிரம்ப் அவர்களின் நடவடிக்கைகள் ஐநா பாதுகாப்பு கூட்டமைப்பிலும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டணி நாடுகளாலும் விமர்சிக்கப்பட்டுள்ளன. எனவே, வெனிசுலாவில் முதலீடு செய்வதற்கு முன்னால் இந்தக் காரணிகளைக் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
மற்றுமொரு சிக்கலாக இருப்பது எண்ணெய் உற்பத்தியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதாகும். உலகில் அதிகப்படியான கச்சா எண்ணெய் இருப்பை (சுமார் 17%) வெனிசுலாவின் கராகஸ் (Caracas) நகரம் கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் அதன் பங்கு வெறும் 0.8 சதவீதம் மட்டுமே. அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் போதிய முதலீடு இல்லாத காரணத்தால், 2010-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பேரல்களாக இருந்த உற்பத்தி, 2024-ஆம் ஆண்டில் 0.88 மில்லியன் பேரல்களாகக் குறைந்துவிட்டதாக ஃபிட்ச் (Fitch) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவின் 'மேரி' (Merey) ரக கச்சா எண்ணெயை ஏப்ரல் மாத விநியோகத்திற்காக வாங்க முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை வெனிசுலாவிடமிருந்து இறக்குமதி செய்துகொண்டால், நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு சுமார் 3 பில்லியன் டாலர் வரை குறையக்கூடும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த இறக்குமதி லாபகரமாக அமைய வேண்டுமெனில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்க வேண்டும். மேலும், தென் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது இந்தியாவின் உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கொண்டு வருவதற்கான கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் மத்திய கிழக்கு நாடுகளைவிட ஐந்து மடங்கும், ரஷ்யாவைவிட இரண்டு மடங்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Original article : Are Indian firms intent on moving to Venezuelan oil? -Saptaparno Ghosh