தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை: தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம், மனுக்கள் குறித்து…

 அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் முரண்பாடான தன்மை இருக்கக்கூடாது.


கடந்த திங்கட்கிழமை, இந்திய உச்சநீதிமன்றம் 2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டத்தின் மூலம் தகவல் அறியும் உரிமை (Right to Information (RTI)) சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ல் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, அதன் "அரசியலமைப்பு முக்கியத்துவத்தை" கருதி ஒரு அரசியலமைப்பு அமர்விற்கு மாற்றியது. இந்திய தலைமை நீதிபதி, 'தனிநபர் தகவல்' என்பதன் உண்மையான விளக்கம் என்ன என்பதை நீதிமன்றம் வரையறுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்கு அவசியமான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 2005-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம், இந்த புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத் திருத்தத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முன்னதாக, பொது நலனுக்குத் தொடர்பில்லாத அல்லது தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை மட்டுமே வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க சட்ட வழிவகை இருந்தது, மேலும் பொது நலன் கருதி அத்தகைய தகவல்களையும் வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், தற்போதைய திருத்தம் இந்த அதிகாரத்தை நீக்கிவிட்டு, "தனிநபர் தொடர்பான எந்தவொரு தகவலையும்" வழங்கக்கூடாது என முழுமையான தடையை விதித்துள்ளது. இது அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், கொள்முதல் விவரங்கள் மற்றும் பொதுச் செலவினங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதைத் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், அரசு குடிமக்களின் தரவுகளை அனுமதியின்றி கண்காணிக்க முடியும், ஆனால் குடிமக்கள் அரசைத் தணிக்கை செய்யும் உரிமையை இழக்கிறார்கள் என்ற முரண்பாடான நிலை உருவாகியுள்ளதாக இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation (IFF)) சுட்டிக்காட்டியுள்ளது.


இந்தத் திருத்தம் பத்திரிகைத் துறையினரிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. 'The Reporters’ Collective' கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளபடி, புலனாய்வுச் செய்திகளுக்காகத் தகவல்களைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், இந்தத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (DPDP Act) 'தரவுப் பொறுப்பாளர்களாக' கருதப்பட வாய்ப்புள்ளது; விதிகளுக்குக் கட்டுப்படத் தவறினால் ₹250 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், இது செய்தி ஊடகத்தை வெறும் அரசுச் செய்திக் குறிப்புகளை வெளியிடும் ஒரு கருவியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. தொடக்கநிலை (Start-up) நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் இச்சட்டம், பத்திரிகைத் துறைக்கு அத்தகைய பாதுகாப்பை வழங்காதது முரண்பாடானது என்பதோடு, தனிநபர் சுதந்திரத்திற்கும் வெளிப்படைத்தன்மைக்கும் இடையே சமநிலையைப் பேணும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation (GDPR)) விதிகளுக்கு நேர்மாறாக உள்ளது. அரசியலமைப்பு அமர்வு, மத்திய பொதுத் தகவல் அலுவலர் (2019) தீர்ப்பைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர். அந்தத் தீர்ப்பு, பொதுமக்களின் பெரும் நலனுக்காகத் தேவைப்பட்டால் ஒழிய, ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) அரசுக்கும் குடிமக்களுக்கும் (குறிப்பாக ஏழை எளியவர்களுக்கும்) இடையே இருந்த தகவல் இடைவெளியை பெருமளவு குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் அமைவதற்கு இந்தச் சட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


Original aritcle :Privacy and transparency: On the RTI Act amendment, petitions

Share: