தொழில்நுட்பத் தளங்களுக்கு மேலாக மக்கள்நலன் : மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு -அபய் சுக்லா

 செயற்கை நுண்ணறிவு நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், சுகாதார சமத்துவத்தை மேம்படுத்துவதாகவும், பொது நலனுக்கு சேவை செய்வதாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில், சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவ நிபுணர்களுமே தொடர்ந்து மருத்துவ சிகிச்சையின் அடிப்படையாக இருக்க வேண்டும்.


இந்தியா உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க உச்சிமாநாட்டை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க பங்கைப் பற்றிய கருத்துக்கள் அதன் முக்கியமான நடைமுறை உண்மைகளையும் சிக்கல்களையும் மறைப்பதாக உள்ளன. பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற "சுகாதாரத்தில் மக்கள் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு" குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதார உரிமைகள், நோயாளிகள் மற்றும் சேவை வழங்குநர்களை மையமாகக் கொண்ட ஒரு மாற்று அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், பொது சுகாதார நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நோயாளி ஆர்வலர்கள் ஒன்று கூடி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக்  கொண்டாடுவதற்குப் பதிலாக, அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்று வழிகளை ஆராய்ந்தனர். இந்தியாவின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது ஒரு முக்கியத் தீர்வாக முன்வைக்கப்பட்டாலும், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் உரிமைகளை மீறும் வணிக ரீதியிலான மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் நன்மையைவிட அதிக தீங்கையே விளைவிக்கும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


உலகளவில், மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக எக்ஸ்கதிர் மற்றும் ஊடுருவல் படங்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நோயறிதலுக்கு உதவுதல் மற்றும் பணிச்சுமை மேலாண்மை போன்ற குறிப்பிட்ட துறைகளில் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இருப்பினும், ஆரம்பகட்ட சோதனைகளில் சிறப்பாகச் செயல்படும் கருவிகள்,  நடைமுறை உலகச் சூழலில் பெரும்பாலும் தோல்வியடைவதையே முறையான ஆய்வுகள் காட்டுகின்றன. தரவு வடிவங்களை அடையாளம் காண்பதில் செயற்கை நுண்ணறிவு சிறந்து விளங்கினாலும், மருத்துவம் என்பது அதையும் தாண்டியது — சிக்கலான மருத்துவ மற்றும் அறநெறி சார்ந்த முடிவுகள், நோயாளிகளின் சமூகப் பின்னணியைப் புரிந்துகொள்வது, அவர்களுக்கு விளக்கம் மற்றும் ஆறுதல் அளிப்பது, மற்றும் நேரடிப் பராமரிப்பு வழங்குவது என அனைத்தும் இதில் அடங்கும் என்கின்றனர். இவை அனைத்தும் வெறும் செயற்கை விதிமுறைகளை மட்டும் சார்ந்திருக்காமல், மனித உறவுகளையே சார்ந்துள்ளன.


உரிமைகளைப் பாதுகாப்பது அவசியமானது


டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிட்டல் சுரண்டல் (digital extractivism) குறித்த பல முக்கியமான கவலைகள் முன்வைக்கப்பட்டன: சுகாதாரத் தரவுகள் யாருக்குச் சொந்தம், அதன் மூலம் கிடைக்கும் அறிவால் யாருக்கு லாபம், மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை யார் எதிர்கொள்வது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. நோயாளிகளை வெறும் தரவு ஆதாரங்களாகக் கருதாமல், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு எளிதில் புரியக்கூடிய விளக்கங்களையும் வழங்க வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் பெரும்பாலும் நகர்ப்புற மக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டால், அவை சாதி, பாலினம், பிராந்தியம் மற்றும் சமூக-பொருளாதாரப் பாகுபாடுகளை மேலும் அதிகப்படுத்தக்கூடும். எனவே, சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இதில், நோயாளிகள் தங்கள் தரவை வெறும் அணுகுவதோடு மட்டுமல்லாமல், அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் உரிமையும் (Right to understand) அடங்கும் என்கின்றனர். அதாவது சிக்கலான மருத்துவத் தகவல்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது எளிமையான விளக்கங்களாக மாற்றிக் கொடுக்க வேண்டும். தரவுகளை அந்தந்த இடங்களிலேயே கையாளுதல், தரவுப் பகிர்வை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யும் அதிகாரம், மற்றும் ஒருமுறை வழங்கப்படும் ஒப்புதல் என்பது நிரந்தரமானது அல்ல என்பதை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான கட்டுப்பாடு ஆகியவை அவசியமாகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அமைப்புகள் பாகுபாடற்ற முறையில் தணிக்கை செய்யப்பட வேண்டும், பொது நிதியில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்க வேண்டும், மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படாமல், பழைய முறையிலான மருத்துவச் சேவைகள்  எப்போதும் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


மனிதப் பராமரிப்பிற்குத் துணைபுரிதல்


ஒரு முக்கியமான கொள்கை என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதப் பராமரிப்பிற்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமையக்கூடாது. ஆவணப்படுத்துதல் மற்றும் தரவுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவலாம், ஆனால் சுகாதாரத் துறையின் முடிவுகள் எப்போதும் பொறுப்புள்ள மனிதர்களிடமே இருக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்களே மருத்துவக் கட்டமைப்பின் அடிப்படை என்பதை நினைவில் கொண்டு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் செய்யப்படும் அனைத்துப் பணிகளிலும் மனிதர்களின் கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும். ஏற்கனவே பணிப்பாதுகாப்பு அற்ற சூழல் நிலவும் சுகாதார அமைப்புகளில், பணியாளர் குறைப்பு, தற்காலிகப் பணி நியமனம், பணிச்சுமை அதிகரிப்பு அல்லது ஆஷா (ASHA) மற்றும் பிற களப்பணியாளர்களை படிமுறைகளின் மூலம் கண்காணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒரு காரணமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு அனுமதி அளிக்கும் முன், அவை தொழிலாளர்கள்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த மதிப்பீடு அவசியம் என்கின்றனர். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு அந்தக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாக விளக்கப்பட வேண்டும் மற்றும் பணியாளர்குறைப்பு இருக்காது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும், அவை சுகாதாரப் பணியாளர்களின் திறனையும் கண்ணியத்தையும் மேம்படுத்த வேண்டுமே தவிர, அவர்களை இடமாற்றம் செய்யக்கூடாது.


செயற்கை நுண்ணறிவின் அரசியல் பொருளாதாரம்


செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுமா என்பது அல்ல, அது யாருக்குப் பயன்படும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது நடுநிலையானது அல்ல; அது பெரும்பாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, தனியுரிமை சார்ந்த (monopolistic) நிறுவனங்களின் மாதிரிகளிலேயே இயங்குகிறது. நோயாளிகளின் தரவுகளைத் தன்னிடம் குவிக்கும் வணிகரீதியான தளங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால், அது மருத்துவத்துறையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை  அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் சமமான மருத்துவ வசதியை வழங்குவதற்குப் பதிலாக, வசதி படைத்தவர்களுக்கு மட்டும் உயர்தர சிகிச்சையையும், சந்தை விரிவாக்கத்தையுமே உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுமக்களின் தரவுகள் மற்றும் பொது நிதியைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அமைப்புகள் உருவாக்கப்பட்டால், அவற்றின் முதன்மை நோக்கம் பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, பெருநிறுவனங்களின் லாபத்திற்குத் துணையாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு சுகாதார அமைப்பின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். முதன்மை மற்றும் தடுப்புச் சிகிச்சைகளை மேம்படுத்தவும், நோயாளிகளுக்கு அதிகாரம் அளிக்கவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். குறிப்பாக, முறையான மருந்துப் பயன்பாடு, சிறந்த மருத்துவப் பரிந்துரை முறைகள், தெளிவான மருத்துவமனை கட்டண விவரங்கள் மற்றும் எளிமையான மருத்துவத் தகவல்களை வழங்க இது உதவும் என்கின்றனர். இருப்பினும், இந்தியாவின் சுகாதாரப் பிரச்சினைகள் வெறும் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டுமல்ல என்றும் அவை குறைந்த பொதுச் சுகாதார நிதிஒதுக்கீடு, பயிற்சிபெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை, தனியார் மருத்துவமனைகள் மீதான பலவீனமான ஒழுங்குமுறை மற்றும் நோயாளிகள் நேரடியாகச் செலவிடும் அதிகப்படியான மருத்துவச் செலவுகள் போன்ற அரசியல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார்ந்த சிக்கல்களாகும். இவை முறையான நிறுவனரீதியான தோல்விகள் என்பதால், தொழில்நுட்பத்தால் மட்டுமே இவற்றுக்குத் தீர்வுகாண முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். 


சுருக்கமாகச் சொன்னால், அடிப்படையான கொள்கை மற்றும் கட்டமைப்பு சார்ந்த சிக்கல்களுக்குத் தொழில்நுட்பம் மட்டுமே தீர்வாகிவிடும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது (இது 'தொழில்நுட்பத் தீர்வுவாதம்' (techno-solutionism) எனப்படுகிறது). மற்ற தொழில்நுட்பங்களைப் போலவே, செயற்கை நுண்ணறிவும் நோயாளிகளின் உரிமைகள், சுகாதாரச் சமநிலை மற்றும் பொது நலனுக்காகச் செயல்பட வேண்டும் என்கின்றனர். அதேவேளையில், சுகாதாரப் பணியாளர்களும் நிபுணர்களுமே மருத்துவக் கட்டமைப்பின் அடிப்படையாகத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். சுகாதாரத் தரவுகள் அனைத்திற்கும் மேலாக நோயாளிகளுக்கும் மக்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்தத் தரவுகளிலிருந்து பெறப்படும் எந்தவொரு தகவலும் அவர்களுக்கே பொறுப்பானதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்திய சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவியாக இருக்கலாம். ஆனால் மக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவையே எப்போதும் மையப்புள்ளியாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


டாக்டர் அபய் சுக்லா, ஒரு பொது சுகாதார மருத்துவர் மற்றும் மக்கள் சுகாதார இயக்கம் (ஜன் ஸ்வஸ்த்ய அபியான்) அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இங்கு பகிரப்பட்டுள்ள கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே. இந்தக் கட்டுரையை உருவாக்க உதவிய மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கிய சுர்ஜித் நுந்தி, RAXA குழுவினர் மற்றும் 'சுகாதாரத்தில் மக்கள் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு' (People-Led AI in Health) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.


Original aritcle :People above platforms: AI in healthcare -Abhay Shukla

Share: