இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறைக்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன? -குஷ்பூ குமாரி

 சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான "Deewar Mein Ek Khirki Rehti Thi (A Window Lived in the Wall) என்ற தலைப்பு, இந்தியாவின் மருந்துத் தொழில்துறையை விவரிப்பதாக  மனிஷ் சபர்வால் குறிப்பிடுகிறார்.

முக்கிய அம்சங்கள்:

— இந்தியா உலகின் 60% மருந்துகளை உற்பத்தி செய்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நோயாளிகளுக்கு 2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தைச் சேமித்துக் கொடுத்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (United States Food and Drug Administration (USFDA)) அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவற்றை இயக்குகிறது மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருந்துகளை விற்பனை செய்கிறது.

— சிப்லா (Cipla) நிறுவனத்தின் எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகளும் (antiretrovirals), லுபின் லிமிடெட் (Lupin Limited) நிறுவனத்தின் ரிஃபாம்பிசின் (Rifampicin - காசநோய் மருந்து) மருந்தும் இல்லையென்றால், உலகளவில் எய்ட்ஸ் மற்றும் காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 85% குறைந்திருக்காது என்றும் கூறப்படுகிறது. இது வெறும் வர்த்தக நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல — இது உயிர்காக்கும் உதவி என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் 1970-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் (India’s Patents Act, 1970) மற்றும் அமெரிக்காவின் ஹட்ச்-வேக்ஸ்மேன் சட்டம் (America’s Hatch-Waxman Act) போன்ற கொள்கை முடிவுகளால் சாத்தியமான இந்த வெற்றி, புத்திசாலித்தனமான அரசாங்கக் கொள்கைகளும் நாட்டின் தொழில்முனைவோரும் இணைந்து செயல்படும்போது என்ன மாதிரியான நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

— இந்தியாவின் 1970-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் (Patents Act), 35 ஆண்டுகளுக்கு 'பொருள் காப்புரிமைக்கு' பதிலாக 'முறைசார் காப்புரிமையை' நடைமுறைப்படுத்தியது. அமெரிக்காவின் 1984-ஆம் ஆண்டு ஹட்ச்-வேக்ஸ்மேன் சட்டம் (Hatch-Waxman Act), மருந்துகளுக்கான ஒப்புதல் நடைமுறையை எளிதாக்கியதுடன், முதல் வெற்றிகரமான ஜெனரிக் மருந்து (generic drug) விண்ணப்பதாரருக்கு ஆறுமாத கால தனிப்பட்ட விற்பனை உரிமையை வழங்கியது.

— இதன் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. அமெரிக்காவில், மொத்த மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளில் (prescriptions) பொதுவான மருந்துகளின் (generics) பயன்பாடு 1 சதவீதத்திலிருந்து இன்று 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத்திரை 2.62 டாலர் விலையில் இருந்த 'கிரெஸ்டர்' (Crestor) என்ற இதய நோய் மருந்து, இப்போது 90 சதவீதம் மலிவாகக் கிடைக்கிறது. இந்தியாவில், உள்நாட்டு மருந்து நுகர்வு இப்போது ஏற்றுமதிக்கு நிகராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

— இந்தியாவின் மருந்துத் துறை (Pharma) வெற்றிக்குக் காரணமான கொள்கை வகுப்பாளர்களான ராஜகோபால அய்யங்கார், ஜெய்சுக்லால் ஹாத்தி மற்றும் ஏனையோர், மற்றவர்கள் கவனிக்கத் தவறிய வாய்ப்புகளைக் கண்டறிந்தனர். ஆனால், சிப்லா (Cipla) நிறுவனத்தின் யூசுப் ஹமீத் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் (Dr. Reddy's) நிறுவனத்தின் அஞ்சி ரெட்டி போன்ற தொழில்முனைவோர் இல்லாமல் இவர்களது தொலைநோக்குத் திட்டம் வெற்றி பெற்றிருக்காது என்றும் கூறப்படுகிறது. லாபம் மற்றும் வருவாயைத் தாண்டி இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை இவர்கள் வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

— இந்திய மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய சவால், அளவிலிருந்து (Volume) — அதாவது உலகின் 60% மருந்துகளைத் தயாரிப்பதில் இருந்து — மதிப்பிற்கு (Value) — அதாவது உலகளாவிய மருந்து விற்பனையில் வெறும் 6% வருவாயை ஈட்டுவதில் இருந்து உயர்வதாகும். 2047-ஆம் ஆண்டிற்குள் 350 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய, இந்தியா ஐந்து முக்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். அவை பொதுவான மருந்துகள் (generics), உயிரியல் மருந்துகள் (biologics), கண்டுபிடிப்புகள் (innovation), உள்நாட்டு சந்தைக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஒப்பந்த உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி போன்றவை ஆகும்.

— அதேநேரத்தில், இது ஐந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அவை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், துணிச்சலான முதலீடுகளுக்கான சூழலை மேம்படுத்துதல், தொழில் செய்வதை எளிதாக்குதல், சீனாவுடன் போட்டியிடுதல் மற்றும் வர்த்தகத் தடைகளைக் கடந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

— ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் இந்திய மருந்துத் துறை கொள்கை 2.0-க்கான (Indian Pharma Policy 2.0) வழிகாட்டியாக அமைகின்றன: அறிவியல் துறையில் கூடுதல் முதலீடு, குறைவான கட்டுப்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அதிக சுயாட்சி ஆகியனவாகும். 

— இந்தியாவின் மருந்துத் தயாரிப்புத் துறை (Pharma industry), வேதியியல் பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் சிப்லா (Cipla), அலெம்பிக் (Alembic), லுபின் (Lupin) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (Dr. Reddy’s) போன்ற நிறுவனங்களைத் தொடங்கியபோதே ஒரு நீண்டகாலத் தீர்வை கண்டறிந்துவிட்டது. அரசாங்கம் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தால் என்னென்ன சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு இவர்களின் உலகளாவிய வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. 

— சில அரசியல் வாரிசு குடும்பங்கள், பழைய காலத்து சிந்தனைகளால் இன்னும் வணிகத்துறையை சந்தேகத்துடனேயே பார்க்கின்றன. இருப்பினும், நம்பிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நீக்கம் (decriminalisation), கட்டுப்பாடுகள் குறைப்பு (deregulation) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சமீபத்திய கொள்கைகளும் நிதிநிலைத் திட்டங்களும், தொழில்முனைவோரின் வலிமையை அங்கீகரிக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 

உங்களுக்குத் தெரியுமா?

— பயோசிமிலர்ஸ் (Biosimilars) என்பது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயிரியல் மருந்தைப் போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு உயிரியல் மருந்தாகும். இவை 'தொடர் உயிரியல் மருந்துகள்' (Follow-on biologics) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை அசல் மருந்தைப் போலவே அதே நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை என்கின்றனர். மேலும் அசல் மருந்தின் அதே அளவிலான செயல்திறனையும் பாதுகாப்பையும் கொண்டவையாகக் கூறப்படுகிறது. 

— இருப்பினும், பயோசிமிலர்கள் (Biosimilars) சாதாரண ஜெனரிக் (Generic) மருந்துகளைவிட வேறுபட்டவை என்கின்றனர். ஜெனரிக் மருந்துகள் பொதுவாக வேதிப்பொருட்களைக் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை என்றும் அவற்றின் ஒவ்வொரு தொகுப்பிலும் (batch) ஒரே மாதிரியான மூலப்பொருட்களே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, பயோசிமிலர்கள் உயிருள்ள செல்கள் அல்லது உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை உயிருள்ள அமைப்புகளிலிருந்து உருவாக்கப்படுவதால், தயாரிப்புச் செயல்பாட்டின்போது ஒவ்வொரு தொகுப்பிற்கும் இடையே இயற்கையான சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். 

— பயோசிமிலர் (Biosimilars) சந்தையில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது. மேலும், ஹெபடைடிஸ் பி (Hepatitis B) நோய்க்கான பயோசிமிலர் மருந்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா தான் என்றும் கூறப்படுகிறது. இந்திய பயோசிமிலர் சந்தையின் மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 349 மில்லியன் டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 25.2% என்ற விகிதத்தில் வளர்ந்து, 2030-ஆம் ஆண்டிற்குள் 2,108 மில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article : What are the opportunities available to India’s pharmaceutical industry? -Khushboo Kumari

Share: