ராஜஸ்தானின் இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டம், அரசின் தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்தியதுடன், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி கடைக்கோடி மக்களுக்கான தீர்வுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றியது. இதன்மூலம் அந்தப் பகுதிகளில் நீடித்த நீர் மேலாண்மை (Water Resilience) மேம்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கருவியானது மிகவும் எளிமையானதாகவும், களப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைப்பை சார்ந்து செயல்படும் பெரிய திட்டங்களுக்கு ஏற்ப எளிதில் பொருந்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது.
இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் ஒரு மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது. விவசாயம், மருத்துவம், நிதி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில், சமூகத்தின் கடைக்கோடி மனிதருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளைக் கொண்டு சேர்க்க வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாட்பாட்கள் (Chatbots) விவசாயிகளுக்கு உதவுகின்றன, டிஜிட்டல் கருவிகள் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்த வழிகாட்டல்களை வழங்குகின்றன. மேலும், ஆலோசனை தளங்கள் சரியான பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியான நேரத்தில் உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றன.
இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை ஒரேமாதிரியான கருத்தாக்கத்தைப் பின்பற்றுகின்றன. அதாவது, மக்களுக்குத் தேவையான தகவல்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்றும், அந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நிரப்பிவிடும் என்றும் அவை கருதுகின்றன. ஆனால், சமூகங்களுக்குத் தேவையானது வெறும் தகவல்கள் மட்டும்தானா?
பொதுச் சேவைகளைப் பொறுத்தவரை, மக்களுக்கும் தகவல்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைவிட, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய உள்ளூர் நிறுவனங்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியே ஒரு பெரிய குறையாக உள்ளது. இந்திய கிராமப்புறங்கள் சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் நில உரிமை போன்ற காரணிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு திட்டம் வெற்றியடைவதற்கோ அல்லது தோல்வியடைவதற்கோ தரவுகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. ஒரு தன்னார்வலர் ஏன் பணியை விட்டு விலகுகிறார், ஒரு பெண் கிராம சபையில் பேசுவதற்கு ஏன் தயங்குகிறார், அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை போன்ற முக்கியமான கள நிலவரங்கள் பெரும்பாலும் அந்தத் திட்டத்தை வடிவமைப்பவர்களுக்கோ அல்லது அதற்கு நிதி வழங்குபவர்களுக்கோ தெரிவதில்லை.
நிறுவனங்கள் இத்தகைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது இதற்குக் காரணம் அல்ல. பல நேரங்களில், இது போன்ற தகவல்களைத் தொடர்ச்சியாகவும் பெரிய அளவிலும் சேகரிப்பதற்குத் தேவையான கால அவகாசம், முறையான கருவிகள் அல்லது போதிய வசதிகள் அந்த நிறுவனங்களிடம் இருப்பதில்லை.
செயற்கை நுண்ணறிவுக்கான மாறுபட்ட கேள்வி
ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ள மாவட்டங்களான சிரோஹி (Sirohi) மற்றும் பாலி (Pali) ஆகியவற்றில், ஆய்வாளர்கள் (Artificial Intelligence for Water Policy) AI4 Water Policy) என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினர். பொதுவாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (AI) மக்களுக்குத் தகவல்களை அனுப்புவதற்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் அதற்கு மாறாக, மக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது.
‘Centre for Microfinance’ என்ற களப்பணி பங்குதாரர் மற்றும் ‘Colectiv’ என்ற தொழில்நுட்ப பங்குதாரருடன் இணைந்து, ஓர் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி உருவாக்கப்பட்டது. இது ஆறுமாத காலப்பகுதியில் 50 கிராமங்களில் 352 நேர்காணல்களை நடத்தியது. இந்தத் திட்டத்தின் சூழல் மற்றும் அது கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த விவரங்களைக் கொண்டு, அந்தக்குழு இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியைத் தயார் செய்திருந்தது.
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், 'Pani Mitras' (சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள்), பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ‘Centre for Microfinance’ ஊழியர்களுடன் ஹிந்தி மற்றும் உள்ளூர் வட்டார மொழிகளில், குரல் பதிவுகள் அல்லது உரையாடல் வழியாக 20 நிமிடங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் கலந்துரையாடியது. ஒவ்வொரு நபரின் பதில்களுக்கும் ஏற்ப, அது அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டு விவரங்களைச் சேகரித்தது. இறுதியாக, அந்த உரையாடல்களின் பெயரிடப்படாத பிரதிகளை, இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியானது மொழிபெயர்த்து, தலைப்புகளின் வாரியாகப் பிரித்தது; பின்னர் அவை களப்பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டன.
அந்த பதில்கள் மூன்று விஷயங்களை வெளிப்படுத்தின:
(i) விளைவுகளால் பெருமிதம்: என் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடியிலிருந்து 100 அடிக்கும் குறைவான ஆழத்திற்கு உயர்ந்துள்ளது. இதைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
(ii) பெண்களின் மீதான இரட்டைச் சுமை: குடும்பத்தைப் பராமரிக்க நான் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறேன், பிறகு தண்ணீர்ப் பிரச்சனைகள் குறித்துப் பேச மற்ற பெண்களைச் சந்திக்கிறேன், வீட்டிற்குத் திரும்பிய பிறகு, எனது வீட்டு வேலைகளைத் தொடர்கிறேன்.
(iii) நிதி மற்றும் அனுமதியைப் பெறுவதில் தாமதம்: பஞ்சாயத்து துறையிடமிருந்து அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தினால், எங்களால் குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்க முடியவில்லை.
இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, இந்தத் திட்டம் ‘Pani Mitras’ எனப்படும் சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்களை அறிமுகப்படுத்தியது. மேலும், பங்கேற்பாளர்கள் தங்களின் ஆய்வறிக்கைகளை விவாதிப்பதற்காக, முறையாகத் திட்டமிடப்பட்ட 'Pause and Reflect' என்ற பயிலரங்குகளை நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சில கருத்துகளுடன் உடன்பட்டனர், ஆனால் மற்றவற்றை மறுத்தனர். குறிப்பாக, ஊராட்சி நடைமுறைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த போதிய தெளிவு இல்லாததுதான் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலாக, ‘Centre for Microfinance’ குழுவானது தனது பயிற்சித் திட்டத்தை பாதியிலேயே மாற்றியமைத்தது. இதில் பஞ்சாயத்து ராஜ் குறித்த அறிமுகத்தை இணைத்ததுடன், ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர் வளத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வட்டார அளவிலான அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியது. இந்த மாற்றம் முதலில் திட்டமிடப்படாத ஒன்றுதான், இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிடைத்த தகவல்களை, அதே திட்டக் காலத்திற்குள் விரைவாகச் செயல்படுத்த முடிந்ததால் இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சமூக நீர்மேலாண்மை தன்னார்வலர்களிடம் ‘Pani Mitras’ நடத்தப்பட்ட நேர்காணல்கள், சமூக உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரசு அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்தியது. இது, அவர்கள் முன்பு தயங்கிய ஒரு செயலாகும். அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதில் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் உணர்ந்தனர், மேலும் தாங்கள் அளித்த கருத்துகள் பஞ்சாயத்துகளும் அரசுத் துறைகளும் விரைந்து செயல்பட உதவியதாகத் தெரிவித்தனர்.
கூர்ந்து கவனித்தல்
இங்கே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது: பதிலளிக்கும் அமைப்புகளும் (Responsive systems) மற்றும் தீவிரமாகக் கவனிக்கும் அமைப்புகளும் (Actively listening systems) ஒன்றல்ல. பதிலளிக்கும் அமைப்புகள் என்பவை சமூகத்திடமிருந்து கருத்துக்களைப் பெற்று அதற்கு ஒரு பதிலை மட்டும் வழங்கும். ஆனால், தீவிரமாகக் கவனிக்கும் அமைப்புகள் என்பவை, அவை கேட்கும் கருத்துக்களின் அடிப்படையில் தங்களையே மாற்றியமைத்துக் கொள்கின்றன. இங்கே அந்தச் சமூகம் என்பது வெறும் பயனாளர்களாக மட்டும் இருக்காமல், அந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் ஒரு இணை வடிவமைப்பாளராகப் பங்கேற்கிறது.
இந்த முன்னோடித் திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூன்று வழிகளில் தீவிரமாகக் கவனிக்கும் திறனை செயல்படுத்தியது. முதலாவதாக, வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக உருவாக்கப்பட்ட குரல்வழிச் சேவை, சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள் (Pani Mitras) தங்களின் கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்த ஒரு தனிப்பட்ட இடவசதியை வழங்கியது. இதை ஒரு பயனாளி கூறுகையில், யாராவது நேரில் இருந்தால் பேசுவதற்குத் தயக்கமாக இருக்கும், ஆனால் நமது சொந்த கைபேசியில் பேசும்போது அந்தத் தயக்கம் இல்லை என்று கூறினார். இரண்டாவதாக, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் 352 உரையாடல்களில் உள்ள பொதுவான கருத்துக்களை, வாரக்கணக்கிலான கடின உழைப்பு தேவைப்படாமல் மிக எளிதாகக் கண்டறிந்தது. மூன்றாவதாக, இதற்கான முடிவுகள் சில வாரங்களிலேயே தயாரானதால், பயிற்சியின்போதே தேவையான மாற்றங்களை அந்தக் குழுவினரால் செய்ய முடிந்தது. வழக்கமான கண்காணிப்பு முறைகளில், இதை இவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது.
AI4WaterPolicy முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றதற்கு அதன் தொழில்நுட்ப வழிமுறைகள் மட்டும் காரணமல்ல; பங்கேற்பாளர்களுடன் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர்களுடன் இணைந்தே உருவாக்கவும் திட்டமிட்ட கால அவகாசம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மையே முக்கியக் காரணங்களாகும். ‘Centre for microfinance’ அமைப்பு ஏற்கனவே அந்த கிராமங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்களைத் (Pani Mitras) தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்திருந்தது. நேர்காணல்களின்போது, மக்களிடம் திறன்பேசிகள் இல்லாத நேரங்களில், களப்பணியாளர்கள் அவர்களுக்குத் தேவையான சாதனங்களை வழங்கி உதவியதுடன், இணையத் தொடர்புச் சிக்கல்களைத் தீர்த்து, 'Pause and Reflect' என்ற கலந்துரையாடல் அமர்வுகளை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றினர். வலுவான மனித உறவுகள் மூலமாகவே மக்களிடையே நேர்மையான உரையாடல்களுக்கான நம்பிக்கை ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்ததால், இந்த செயற்கை நுண்ணறிவால் பரவலான அளவில் மக்களின் கருத்துகளைக் கேட்க முடிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
நீக்குவது அல்ல, திறனை மேம்படுத்துவது
டிஜிட்டல் இடைவெளி என்பது ஒரு நிதர்சனமான உண்மை; இது பாலினம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையில் வேறுபடுகிறது. எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவது குறித்த எந்தவொரு நேர்மையான விவாதமும் இந்த கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பமானது 'சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள்' (Pani Mitras) போன்ற களப்பணியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருக்கவேண்டுமே தவிர, அவர்களை இடமாற்றம் செய்வதாக இருக்கக்கூடாது.
இது ராஜஸ்தானில் மட்டும் ஒருமுறை செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் அல்ல. இந்த அணுகுமுறை, ஏற்கனவே உள்ள அரசுத் திட்டங்களில் மக்களின் கருத்துக்களைக் கேட்டுப் பெறும் முறையை வலுப்படுத்தியும், அரசின் சேவைகள் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை இன்னும் சிறப்பாக மாற்றியும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. இது, களப்பணியாளர்களின் மனமாற்றம் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைப்பைச் சார்ந்திருக்கும் எந்தவொரு பெரிய திட்டத்திலும் எளிதாகப் பொருத்தக்கூடிய வகையில் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
குடிநீர் வழங்கல் திட்டம் (Jal Jeevan Mission (JJM)), வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) போன்ற திட்டங்கள் மற்றும் பிற துறைசார் விரிவாக்க அமைப்புகள் அனைத்தும், கடைக்கோடி வரை சேவைகளைச் சென்றடையச் செய்யும் இத்தகைய செயல்பாட்டையே உள்ளடக்கியுள்ளன.
சுசிரதிப்தா பட்டாச்சார்ஜி, சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தில் கொள்கை ஈடுபாடு நிபுணராகப் பணியாற்றி வருகிறார். ஆலன் நிக்கோல், அந்த நிறுவனத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.
Original link:
How AI helped promote community-led development in Rajasthan.