2012-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, அரசாங்கம் கடவுச்சீட்டுக் கட்டணத்தைக் (passport fees) கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய கட்டண அமைப்பை விரிவாக விளக்கி, இந்த உயர்வுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களையும் எடுத்துரைக்கிறோம்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் அனைத்துப் பிரிவுகளுக்குமான கடவுச்சீட்டுக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கட்டணங்களில் செய்யப்படும் முதல் பெரிய திருத்தம் இதுவாகும். இந்தப் புதிய விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.
கடவுச்சீட்டுகளைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை ஈடுசெய்யும் விதமாகவே அரசு இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் (MEA) வெளியிடப்பட்ட, திருத்தப்பட்ட கடவுச்சீட்டுகள் (திருத்த) விதிகள்-2026 (Passports (Amendment) Rules), இன் படி, புதிய கடவுச்சீட்டு பெறுவதற்கும் அல்லது ஏற்கனவே உள்ளதை மீண்டும் பெறுவதற்கும் (reissue) பின்வரும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை,
36 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு : ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு : ரூ. 2,000-லிருந்து ரூ. 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
36 பக்கங்கள் கொண்ட தட்கல் (Tatkaal) கடவுச்சீட்டு : ரூ. 3,500-லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
60 பக்கங்கள் கொண்ட தட்கல் (Tatkaal) கடவுச்சீட்டு : ரூ. 4,000-லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் செய்யும் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பினும், காணாமல் போன அல்லது சேதமடைந்த கடவுச்சீட்டை மீண்டும் பெற விரும்புவோருக்கு, கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 36 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு கட்டணம் ரூ. 5,000 முதல் ரூ. 7,500 வரையிலும், 60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டு கட்டணம் ரூ. 6,000 முதல் ரூ. 8,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு இப்போது ஏன் கடவுச்சீட்டு (passport) விலையை உயர்த்தியுள்ளது?
அரசின் கடவுச்சீட்டு விண்ணப்ப இணையதளத்தில், கட்டண அமைப்புப் பிரிவின்கீழ், "கடவுச்சீட்டு சேவை திட்டம் நாடு முழுவதும் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு, கட்டண அட்டவணை மறுசீரமைக்கப்படும்" என்ற குறிப்பு உள்ளது.
எனவே, ஒரு நாள் முன்னதாக, ஜூன் 24 அன்று வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டு சேவை தினத்தைக் கொண்டாடியபோது, கடந்த 10 ஆண்டுகளில் கடவுச்சீட்டு வசதிகள் 77-லிருந்து 545 கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்கள் அதிகரித்து, கடவுச்சீட்டு சேவைத் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும் அறிவித்தது.
2025-ஆம் ஆண்டில் 1.5 கோடிக்கும் அதிகமான கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன என்றும், குடிமக்கள் இப்போது மையங்களில் சராசரியாக 45 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது. வழக்கமான கடவுச்சீட்டு செயலாக்க நேரம் (காவல்துறை சரிபார்ப்பைத் தவிர்த்து) ஆறு வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பாதுகாப்பான, சிப் வசதியுள்ள மின்னணு கடவுச்சீட்டுகளின் வெற்றிகரமான மற்றும் தொடர்ச்சியான அறிமுகப் பணிகளையும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.
2024-ஆம் ஆண்டு மே மாதம் அடுத்த தலைமுறை கடவுச்சீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியக் குடிமக்களுக்கு ஒரு கோடி மின்னணு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 10 கோடி கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் மின்னணு கடவுச்சீட்டுகளால் மாற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்படியானால், நாம் யாருக்குக் கூடுதல் பணம் செலுத்துகிறோம்?
ஒரு மின்-ஆளுமைத் திட்டமாக, கடவுச்சீட்டு வழங்கும் முறையைச் சீரமைத்து டிஜிட்டல் மயமாக்குவதற்காக, 2010-ல் கடவுச்சீட்டு சேவா திட்டம் தொடங்கப்பட்டபோது, அது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இந்த நவீன அமைப்பு, காவல்துறை அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் ஆவண மோசடியைத் தடுப்பதற்கும், பயோமெட்ரிக் தரவு மற்றும் டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறைகளை ஒருங்கிணைக்கிறது. மேலும், இந்தத்திட்டம் பாதுகாப்பான மைக்ரோசிப்களைக் கொண்ட அடுத்த தலைமுறை மின்-கடவுச்சீட்டுகளுக்கும் வழிவகுத்தது.
இருப்பினும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வலைத்தளத்தின்படி, கடவுச்சீட்டு சேவா திட்டம், கட்டமைத்து – உரிமையுடன் வைத்திருந்து – இயக்கி – பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் முறை' (Build-Own-Operate-Transfer (BOOT)) மாதிரியில் இயக்கப்படுகிறது. ஆரம்ப மூலதனச் செலவுகளைத் தனியார் நிறுவனங்களே ஏற்கிறார். இந்தத்திட்டத்திற்கு அரசாங்கம் முன்கூட்டியே நிதியளிப்பதில்லை. மாறாக, அது ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணங்களை நேரடியாக TCS-க்குச் செலுத்துகிறது. பின்னர், இந்தக் கட்டணங்கள் குடிமக்களால் செலுத்தப்படும் விண்ணப்ப மற்றும் செயலாக்கக் கட்டணங்களால் ஈடுசெய்யப்படுகின்றன.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரணீத் கவுர் மக்களவையில் அளித்த பதிலின்படி, அனைத்து கடவுச்சீட்டு சேவை மையங்கள் (PSK), மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள்/அஞ்சல் அலுவலகங்கள், காவல்துறை மற்றும் அஞ்சல் துறை ஆகியவற்றை இணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கி, ஒவ்வொரு சேவைக்கும் தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் வகையில், கடவுச்சீட்டின் மூன்று பக்க சேவைகளை வெளிப்பணிக்கு விடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.
இரண்டுகட்ட ஏல நடைமுறைக்குப் பிறகு மே 2008-ல் செயல்படுத்துவதற்கான சேவை வழங்குநராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மேற்கொண்ட முதலீட்டை, ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் மூலம், வழங்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மீட்டெடுக்க அனுமதிக்கப்பட்டது. இந்தச் சேவைக் கட்டணம் 27 கடுமையான சேவை வழங்கல் தரநிலைகளை (Service Delivery Levels) பூர்த்தி செய்வதைப் பொறுத்து இருக்கும். இந்த தரநிலைகள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்குகின்றன: வெளிப்புற மற்றும் உள்புற செயல்திறன் (External & Internal Efficiency), வெளிப்புற, உள்புற மற்றும் தொழில்நுட்ப செயல்பாட்டு திறன் (External, Internal & Technical Effectiveness), அலுவலகச் சூழல் மற்றும் வசதிகள் (Environment & Ambience), வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் சேவைத் தரம் (Customer Relations) ஆகும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்க்கு வழங்கப்படும் சேவைக் கட்டணம், கடவுச்சீட்டு சேவையின் தரம் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.