எந்தவொரு மாநிலமும் தங்களது பிறப்பு விகிதத்தை (Fertility rate) அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் இன்னும் நிலையான மக்கள் தொகையை எட்டும் இலக்கிலிருந்து வெகு தொலைவில்தான் இருக்கிறோம். மக்கள்தொகை பற்றாக்குறை ஒன்றும் மாநிலங்களின் அதிவேக வளர்ச்சிக்குத் தடையாக இல்லை.
சமீபத்தில், மாதிரி பதிவு முறை (Sample Registration System (SRS)) மற்றும் ஆறாவது சுற்று தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS-6)) ஆகியவை தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டன. இந்த முடிவுகள் இந்தியாவின் எதிர்கால மக்கள்தொகை அளவைப் பற்றி என்ன சொல்கின்றன? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate (TFR)) 1.9-ஆக இருக்கும் என்று கணித்ததுடன், நாட்டின் மக்கள் தொகை 2048-ஆம் ஆண்டில் 160 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும் கணித்திருந்தது. இருப்பினும், மாதிரி பதிவு முறையின் (SRS) அறிக்கையின்படி இந்தியாவின் பிறப்பு விகிதம் (TFR) 2024-ஆம் ஆண்டிலேயே 1.9 என்ற அளவை எட்டிவிட்டதால், முந்தைய கணிப்பு மிகவும் முன்கூட்டியே நடந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. தொடர்ந்து மக்கள்தொகை கணிப்புகளைப் புதுப்பித்து வரும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவு, இந்தியாவின் மக்கள் தொகை 2062-ஆம் ஆண்டில் 170 கோடியை எட்டி உச்சத்தைத் தொடும் என்றும், அதன் பிறகு குறையத் தொடங்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. தற்போதைய புதிய தரவுகளின் அடிப்படையில், இதுவே நடப்பதற்கு அதிக சாத்தியமுள்ள ஒன்றாகத் தெரிகிறது.
முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருப்பதால், பல சவால்கள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. பொதுவாக பிறப்பின் போது இயல்பான பாலின விகிதம் (Normal sex ratio) 955-ஆக இருக்க வேண்டும். ஆனால், 2022-24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த பிறப்பு பாலின விகிதம் (Sex Ratio at Birth (SRB)) 918-ஆக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து "பெண் குழந்தைகள் பற்றாக்குறை" நிலவுவதைக் காட்டுகிறது. இதற்கு முன்னதாக 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது 907-ஆக இருந்தது. தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால், இயல்பான அளவை எட்டுவதற்கே இன்னும் சுமார் 13 ஆண்டுகள் ஆகும். மேலும், இந்தப் பெண் குழந்தைகள் பற்றாக்குறை நிலை இன்னும் நீண்டகாலத்திற்குத் தொடர வாய்ப்புள்ளது.
மிகப் பெரிய கவலை என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்கள்தொகை சார்ந்த இடைவெளிதான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொத்த பிறப்பு விகிதம் (TFR) 1.9-ஆக இருக்கும் வேளையில், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2.9 மற்றும் 2.6 என்ற மிக உயர்ந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. தற்போதைய வீழ்ச்சி வேகம் இப்படியே தொடர்ந்தால், மக்கள்தொகை காலப்போக்கில் நிலைத்தன்மை அடைவதற்கான 'மாற்று நிலை பிறப்பு விகிதமான' (Replacement fertility rate) 2.1 என்ற அளவை எட்டுவதற்கு பீகாருக்கு சுமார் 18 ஆண்டுகளும், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 10 ஆண்டுகளும் ஆகும்.
இதற்கு ஒரு சாத்தியமான தீர்வு என்னவென்றால், அதிக பிறப்பு விகிதம் (fertility rate) கொண்ட மாநிலங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை வேகமாகக் குறைப்பதும், அதேநேரத்தில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் அதை அதிகரிக்குமாறு ஊக்குவிப்பதும் ஆகும். பெண்களின் முன்னேற்றமும், பிறப்புக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் எளிதாகக் கிடைப்பதுமே பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணமான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இந்தியா முழுவதும், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 73.7% பேர் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை பீகாரில் (64.1%) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (70.1%) மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களில் 46.4% பேர் குறைந்தது 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். ஆனால், பீகாரில் 33.1% பெண்களும், உத்தரப் பிரதேசத்தில் 42.5% பெண்களும் மட்டுமே 10 ஆண்டுகள் படிப்பை முடித்துள்ளனர். 15 முதல் 49 வயதுடைய திருமணமான பெண்களிடையே ஏதேனும் ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவது தேசிய அளவில் 69.1%-ஆக உள்ளது. ஆனால், இது பீகாரில் வெறும் 59.3%-ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 62.4%-ஆகவும் மட்டுமே இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமானால், இந்த மாநிலங்களில் பெண்களின் கல்வி, அவர்களின் முன்னேற்றம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மிகக் குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில், அதை அதிகரிப்பதற்கு என்ன செய்ய முடியும்? சமீபத்தில், ஆந்திரப் பிரதேசம் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் வகையில் ஒரு புதிய மக்கள்தொகைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு ₹30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறப்பிற்கு ₹40,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், மூன்றாவது குழந்தைக்கு மாதந்தோறும் ₹1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை, 18 வயது வரை இலவசக் கல்வி மற்றும் நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஆகியவையும் இதில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், 1945-ஆம் ஆண்டு ஸ்வீடனில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவரும் பிரச்சனை குறித்து ஆய்வு செய்த ஆல்வா மிர்டல், தனது "Nation and Family" என்ற புத்தகத்தில், இது போன்ற ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எந்தவொரு மாநிலமாவது தனது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையே மக்கள்தொகை வளர்ச்சியில் காணப்படும் வேறுபாடுகள், பொருளாதாரரீதியாக மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏனெனில், எந்தவொரு மாநிலமும் தனது அரசியல் முக்கியத்துவத்தை இழக்க விரும்புவதில்லை. எனவே, இந்தச் சிக்கலுக்கு மக்கள்தொகைக் கொள்கையைத் தவிர்த்து, பிற வழிமுறைகளின் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும்.
எந்தவொரு மாநிலமும் தங்களுடைய குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இன்னும் மக்கள்தொகை நிலைத்தன்மையை அடைவதிலிருந்து சற்று தொலைவிலேயே உள்ளது. மக்கள்தொகை பற்றாக்குறை என்பது மாநிலங்களின் வேகமான வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு காரணி அல்ல. அதற்குப் பதிலாக, மக்கள்தொகையின் அளவு ஒரு மாநிலத்தின் அரசியல் செல்வாக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்களுக்கு மத்திய வரிகளைப் பகிர்ந்து அளிப்பதில், மக்கள்தொகையின் அளவு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு ஆகிய இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டது.
இந்தியா தனது மக்கள்தொகையின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS), பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் மொத்த பிறப்பு விகிதத்தை (TFR), மாதிரி பதிவு முறையின் (SRS) மதிப்பீடுகளைவிடக் குறைவாக இருப்பதாகக் கணித்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியா தனது மக்கள்தொகை நிலைத்தன்மையை எதிர்பார்த்ததைவிட விரைவாகவே எட்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாட்டின் மக்கள்தொகை குறித்து மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளைப் பெறுவதற்கு முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் அவசியமாகின்றன.
ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். சாதியா, இந்திய பொதுச் சுகாதார நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.