'நவீன வர்த்தக ஒப்பந்தங்களின் பொன்னான தரநிலை' (gold standard) என்று கருதப்படும் இங்கிலாந்து-இந்தியா இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க உதவுவதால் வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானவை. ஆனால், எல்லா ஒப்பந்தங்களும் ஒரு பெரிய திருப்புமுனையை (game changer) ஏற்படுத்துவதில்லை. முக்கிய துறைகளில் கூட்டு வளர்ச்சியை ஊக்குவித்தல், அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தின் எல்லைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றைச் செய்யும் ஒப்பந்தமே அத்தகைய சிறப்பைப் பெறுகிறது. எனவே, 'விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்' (Comprehensive Economic and Trade Agreement (CETA)) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விவரிக்க வணிகங்களும் வர்த்தக சங்கங்களும் இச்சொல்லைப் பயன்படுத்துவதில் ஆச்சரியமில்லை. G-20 நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா உள்ளது. இதற்கு இணையாக, முதலீட்டிற்கான உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. 2025-ல் G-7 நாடுகளில் மூன்றாவது வேகமாக வளர்ந்த பொருளாதாரமாகவும் திகழ்ந்தது. இரு நாடுகளும் ஒன்றையொன்று சந்தைகளில் முன்னுரிமை அடிப்படையில் அணுகுவதை அனுமதிப்பதன் மூலம், இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெறும் இராஜதந்திர வெற்றியைத் தாண்டிச் செயல்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நீண்டகால நன்மைகளை அளிக்கும் வகையிலான வலுவான பொருளாதார நன்மையை உருவாக்குகிறது. நீண்டகால அடிப்படையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) £5.1 பில்லியனாலும், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) £4.8 பில்லியனாலும் உயர்த்துவதுடன், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு £25.5 பில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி
2025-ல் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு ஆண்டுக்கு £48 பில்லியனாக இருந்தது. இது ஜூலை 15 முதல், இரு நாடுகளுக்கும் இடையே வணிகங்கள் வர்த்தகம் செய்வது மலிவானதாகவும், விரைவானதாகவும், எளிதானதாகவும் மாறும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதைக் கண்டுள்ளோம். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கான இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையிலும், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சியின் புதிய காலகட்டம் தொடங்கும் நிலையிலும், இந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் குறையும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளும், இரு தரப்பு வணிகங்களும் எத்தகைய சாதனைகளைப் படைக்கப் போகின்றன என்பதைப் பார்க்க நாம் அனைவரும் ஆவலுடன் இருக்க வேண்டும். இவை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் அடையாளங்களாகும். ஆனால், இது வெறும் எண்களைப் பற்றியது மட்டுமல்ல. பரந்த மற்றும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் பரந்த அளவிலானதாகவும், வலுவானதாகவும், இரு நாடுகளுக்கும் நீண்டகால வளர்ச்சியைத் தரும் உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஆரம்பத்திலிருந்தே உடன்பட்டிருந்தனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலேயே பொருளாதாரரீதியாக இது மிக முக்கியமானதாகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, இந்தியா இதுவரை மேற்கொண்ட மிக விரிவான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. மொத்தத்தில், இந்த ஒப்பந்தம் வணிக நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் இரு நாடுகளின் பொருளாதாரங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகும். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான நன்மைகளை புரிந்துகொள்ள, இந்தியத் தயாரிப்புகளுக்கு இங்கிலாந்தின் 99 சதவீத வரிப் பட்டியலுக்கு (tariff lines) கீழ் சுங்கவரி விலக்கு அளிக்கப்படும். அதே நேரத்தில், இங்கிலாந்துப் பொருட்களுக்கான தனது 90% வர்த்தக வரிப் பிரிவுகளில் இந்தியா வரிகளை நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஜவுளி, தோல் மற்றும் ஆபரணங்கள் போன்ற அதிக மனிதவளம் தேவைப்படும் துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடும். அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் ஏற்றுமதியை பெருமளவில் அதிகரிக்கவும் இது வழிவகுக்கும்.
இதேபோன்று, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கான வரிகள் சுமார் 400 மில்லியன் பவுண்டுகள் வரை குறையும் என்றும், அடுத்தடுத்த கட்டங்களில் இது 900 மில்லியன் பவுண்டுகள் வரை குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளித் துறை, வாகன உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விஸ்கி (whisky) தயாரிப்பு போன்ற முக்கியத் துறைகள் அனைத்தும் இதனால் கணிசமான பலனைப் பெறும். இது இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் பவுண்டுகள் வருவாயைச் சேர்க்கும். இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமல்லாமல், இது ஒரு தொடக்கமாகவும் அமைகிறது.
மும்பை மற்றும் லண்டனைத் தாண்டிய நன்மைகள்
வர்த்தகக் கொள்கை குறித்த தொடர்ச்சியான விமர்சனங்களில் ஒன்று, அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே குவிந்துள்ளன என்பதுதான். இரு நாடுகளிலும் உள்ள முக்கிய நகரங்களைத் தாண்டி, உள்ளூர் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த ஒப்பந்தம் பயனளிப்பதை உறுதி செய்துள்ளது. இது, 30 அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பிலும் அதிக வளர்ச்சி மற்றும் அதிக மதிப்புள்ள துறைகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையிலான மற்றும் பிரத்யேகமான அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. நடைமுறைரீதியாகப் பார்க்கும்போது, உற்பத்தியாளர்கள், புத்தாக்கத்தை முன்னெடுப்போர், விநியோகச் சங்கிலி வணிகங்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் மிகவும் திறம்படப் போட்டியிட இது வழிவகுக்கும். இத்தகைய வணிகங்களில் பல, பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. மலிவான இறக்குமதி மற்றும் குறைவான வர்த்தகத் தடைகள் மூலம் அவை பயனடையும். உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு ஜவுளி உற்பத்தியாளரால் இனி இங்கிலாந்துக்கு மிகவும் தீவிரமாக வர்த்தகம் செய்யமுடியும். அதேபோல, பர்மிங்காமில் உள்ள வாகன உதிரிபாக உற்பத்தியாளரால் குறைந்த செலவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலும்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன?
நவீன வர்த்தகம் என்பது வெறும் சுங்க வரிகளைக் (tariffs) குறைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது சுங்க நடைமுறைகள், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளையும் உள்ளடக்கியது. இதனால்தான், இந்த அம்சங்கள் இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு உயர்தர மற்றும் நவீன வர்த்தக ஒப்பந்தமாக மாற்றுகின்றன. மேம்படுத்தப்பட்ட சுங்க நடைமுறைகள் சரக்குகள் சந்தையை விரைவாகச் சென்றடைய உதவும். இது அதிகப்படியான நிர்வாகச் சிக்கல்களைத் (red tape) தாங்க முடியாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இங்கிலாந்து உலகளவில் புகழ்பெற்ற துறையான சேவைகள் பிரிவில், முக்கிய சந்தைகளுக்கான அணுகலை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இதன்மூலம், இந்தியாவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இங்கிலாந்து நிறுவனங்களுக்கும், அதேபோல இங்கிலாந்தில் இந்திய நிறுவனங்களுக்கும் தேவையான நிலையான சூழல் (predictability) கிடைக்கிறது. ஊழல் தடுப்பு, பாலின சமத்துவம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்தியா மேற்கொள்ளும் முதல் தனித்துவமான அத்தியாயங்களையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. அத்துடன், வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா இதுவரை மேற்கொண்ட மிக விரிவான தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிமொழிகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஆனால், இது வெறும் சந்தை அணுகல் பற்றியது மட்டுமல்ல; உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்வது பற்றியதுமாகும். அந்த விஷயத்தில் இந்த ஒப்பந்தம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
உதாரணமாக, பால் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய்களுக்கான பாதுகாப்பை இந்தியா தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதேவேளையில், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட அரிசி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றிற்கான பாதுகாப்பை இங்கிலாந்து உறுதிசெய்கிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் வளர்ச்சி மட்டுமல்லாது, நிலைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையின் அடிப்படையிலும் மதிப்பிடப்படும் இந்தக் காலகட்டத்தில், அதை எவ்வாறு சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.
ஒப்பந்தத்தின் சிறப்பான பலன்கள்
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, அளவிடக்கூடிய பொருளாதாரப் பலன்கள், எதிர்காலத் துறைகளில் வலுவான சந்தை அணுகல், நடைமுறைக்கு ஏற்ற வர்த்தக எளிமைப்படுத்தல், வலுவான உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள நெறிமுறைகள் சார்ந்த அத்தியாயங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது என்பது தெளிவாகிறது. நவீன வர்த்தக ஒப்பந்தங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமைகிறது. இது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது, தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒரு உயர் தரத்தை நிறுவுகிறது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் தருவாயில், நடைமுறைப்படுத்த வேண்டியப் பணி தெளிவாக உள்ளது. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இரு நாடுகளின் வணிக நிறுவனங்களும் ஏற்றுமதியை முன்னிறுத்த வேண்டும், கொள்முதல் வாய்ப்புகளை ஆராய வேண்டும், புதிய மூல விதிகளைப் பின்பற்றி விநியோகச் சங்கிலிகளை வரைபடமாக்க வேண்டும், மேலும் விரைவாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் வர்த்தகத்தில், முதலில் செயல்படுபவரின் திறன் உண்மையானது, அது அரிதாகவே இருமுறை கிடைக்கும்.
ஹர்ஜிந்தர் காங் அவர்கள் தெற்காசியாவிற்கான மாட்சிமை பொருந்திய மன்னரின் வர்த்தக ஆணையராகவும், மேற்கு இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையராகவும் உள்ளார்.