கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால், வழக்கமான ஒழுங்குமுறைகளைத் தாண்டி அதற்கென அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.
போப் பதினான்காம் லியோ (Pope Leo XIV) தனது 'Magnifica Humanitas' என்ற அதிகாரப்பூர்வ திருச்சபைக் கடிதத்தில், தற்போதைய தொழில்நுட்ப நெருக்கடியை ஆன்மீக அடிப்படைகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இறைவனின் படைப்பில் மனிதனே முதன்மையான மையப்புள்ளி என்பதை அவர் மனிதகுலத்திற்கு நினைவூட்டுகிறார். இருப்பினும், புனிதமான இந்த மனித கண்ணியம் முன்னெப்போதும் இல்லாத ஒரு சவாலை எதிர்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவை (AI) நாம் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது நம்முடைய தனிப்பட்ட தரவுகளின் உரிமையைப் பறித்து, 'டிஜிட்டல் அடிமைத்தனம்' (Digital slavery) என்ற புதிய வடிவத்திற்கு நம்மைத் தள்ளிவிடும் என்று போப் எச்சரிக்கிறார். இது மனிதர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக நடத்திய பழைய கொடுமைக்கு இணையானது என்றும் இந்த விவகாரம் மனித கண்ணியத்தோடு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதை வெறும் நல்லெண்ணங்களின் அடிப்படையிலோ அல்லது இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பொறியாளர்களின் மனசாட்சியின் பொறுப்பிலோ மட்டும் விட்டுவிட முடியாது என்று போப் உறுதியாகக் கூறுகிறார். மாறாக, வெறும் வெற்று உபதேசங்களுக்குப் பதிலாக வலுவான மற்றும் கட்டாயமாக்கப்பட்ட சட்டங்களும், சிலிக்கான் வேலியின் (Silicon Valley) நவீன பெருநிறுவன அதிபர்களின் வெற்று வாக்குறுதிகளை நம்பாமல் சுதந்திரமான பொதுக் கண்காணிப்பு அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், ஒருவருக்கு வங்கி கடன் கிடைப்பதா, வேலை கிடைப்பதா, மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதா அல்லது கல்வி வசதி கிடைப்பதா என்பதை ஒரு தானியங்கி கணினி அமைப்பு தீர்மானிக்கும் போதெல்லாம், அந்த முடிவிற்கு ஒரு மனிதரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற தெளிவான விதிமுறை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். போப் பதினான்காம் லியோவின் முக்கியக் கோரிக்கை என்னவென்றால், இந்த புதிய மின்னணு நிர்வாக அமைப்பு, பெரும்பாலான இறையாண்மை கொண்ட அரசாங்கங்களைவிடவும் அதிகப் பணமும் செல்வாக்கும் கொண்ட ஒரு சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் கைகளில் ரகசியமாகச் சிக்கிவிடக் கூடாது. அது கடுமையான சட்டங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதாகும். இதற்காக, தேவையெனில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைத் திட்டமிட்டுச் சற்றே தாமதப்படுத்தவும் வேண்டும் என்றும் குறிப்பிடுள்ளார்.
விதிமுறைகள் பின்தங்கும்போது
இருப்பினும், ஒரு அடிப்படையான பிரச்சனை இன்னும் நீடிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியடையும் வேகமும், அதற்கான ஒழுக்கநெறி மற்றும் சட்ட விதிகள் உருவாக்கப்படும் வேகமும் ஒன்றாக இருப்பதில்லை. புத்தொழில் (Start-up) நிறுவனங்களின் கலாச்சாரத்திற்கே உரிய அதிவேகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. வேகமாக முன்னேற வேண்டும், வளர்ச்சி என்ற பெயரில் சமூகத்தின் மீது தொடர்ச்சியான ஆரம்பக்கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமே இதனை இயக்குகிறது. இந்த அசுர வேகத்திற்கு வணிகப் போட்டிகள் மட்டுமின்றி, சிலிக்கான் வேலி (Silicon Valley) முதல் ஷென்சென் (Shenzhen) நகரம் வரை இடைவிடாது நடக்கும் கணிதக் கண்டுபிடிப்புகளும் முக்கியக் காரணமாகும். இது உலகெங்கிலும் உள்ள சட்டமியற்றுபவர்களுக்கு ஒரு பெரிய சவாலை ஏற்படுத்துகிறது. ஒரு நாடாளுமன்றத்தால் மனிதன் என்ன செய்கிறான் என்பதைக் கட்டுப்படுத்த முடியும், ஆனால் ஒரு புதிய கணிதக் கோட்பாடு, ஒரு கண்டுபிடிப்பு அல்லது ஒரு சமன்பாடு (Equation) உருவாக்கப்படுவதை ஒருபோதும் தடுத்து நிறுத்தமுடியாது. இப்படியிருக்க, போப் ஆண்டவரின் விருப்பங்களைச் சட்டமியற்றுபவர்கள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? என்ற கேள்வி எழுகிறது.
பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் சட்டங்கள் மிகவும் மெதுவாகவே இயற்றப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 'செயற்கை நுண்ணறிவுச் சட்டம்' (AI Act) அல்லது இங்கிலாந்தின் 'இணையப் பாதுகாப்புச் சட்டம்' போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவதற்குள்ளாகவே, அவை எந்தத் தொழில்நுட்பப் பாதிப்புகளைத் தடுக்க உருவாக்கப்பட்டனவோ, அந்தப் பாதிப்புகள் தங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றன. இதனால் ஒரு முழுத் தலைமுறையுமே டிஜிட்டல் உலகப் பாதிப்புகளுக்கு இடையில் எந்தவொரு பாதுகாப்பும் இன்றி வளர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் வேகத்தோடு ஒப்பிடும்போது, கொள்கை வகுப்பாளர்கள் எப்போதுமே பின்தங்கியே இருந்துள்ளனர். இப்போதைய சூழலிலும் நாம் மீண்டும் பின்தங்கவே போகிறோம்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைவிட சட்டங்கள் எப்போதுமே மிகவும் மெதுவாகத்தான் இயற்றப்படும் என்பது விதியாகிப் போனால், அதன் விளைவுகள் ஜனநாயகக் சமூகங்களுக்கு வெறும் சட்டரீதியான சிக்கலாக மட்டும் இருக்காது. அது அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கே சவாலாக மாறிவிடும். குடிமக்களால் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டால், அங்கு ஜனநாயகம் செயல்பட முடியாது. அதன் அடிப்படையில் பார்த்தால், ஜனநாயக ஆட்சி முறை என்பது ஒரு பொதுவான உண்மைத் தளத்தை நம்பியே உள்ளது. அதாவது, பொது விவாதங்கள், கொள்கைகள் மற்றும் தேர்தல் தேர்வுகள் ஆகிய அனைத்தும் அடிப்படை உண்மைகளை அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொள்வதில் இருந்தே தொடங்குகின்றன. அந்த அடித்தளமே திட்டமிட்டுத் தகர்க்கப்படும்போது, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் ஆபத்து ஏற்படுகிறது. இன்று, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களும், மேம்பட்ட போலி ஊடக வடிவங்களும் (Deepfakes) எந்த அளவுக்கு உண்மையாகத் தோற்றமளிக்கின்றன என்றால், மனிதக் கண்களாலோ அல்லது காதுகளாலோ அவை போலி என்பதை இனி துல்லியமாகக் கண்டறிய முடியாது. இது ஏற்கனவே நிஜ வாழ்க்கையாக மாறிவிட்டது. அரசியல் தலைவர்களின் குரல் மற்றும் காணொளிகள் மிகத் துல்லியமாகப் போலியாக உருவாக்கப்பட்டு, தேர்தல் நேரங்களில் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்களை வாக்களிக்க வராமல் தடுக்கவும், இல்லாத ஒரு ஊழலை திடீரெனப் புதிதாக உருவாக்கவும், அரசு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை நொடிப்பொழுதில் சிதைக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பாதிப்பை, சமூக ஊடகங்களின் கணினி வழிமுறை (Algorithmic manipulation) இன்னும் பல மடங்கு தீவிரமாக்குகிறது. பெருநிறுவனங்களின் சமூக ஊடகத் தளங்கள், பயனர்களைத் தங்கள் பக்கங்களிலேயே எப்போதும் மூழ்கடித்திருக்கச் செய்யும் வணிக மாதிரியைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் ஆத்திரம், பயம் மற்றும் பரபரப்பான செய்திகள்தான் அதிக பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. இதனால், இந்தத் தளங்களின் கணினி வழிமுறைகள் திட்டமிட்டே தீவிரமான, ஒருதலைப்பட்சமான கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை அதிகளவில் பரப்புகின்றன. இது மக்களைத் தீவிரவாதப் போக்கை நோக்கித் தள்ளுகிறது. குடிமக்களை அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட சிந்தனைக் குமிழிகளுக்குள் (Echo chambers) அடைத்து வைப்பதன் மூலம், இந்த அமைப்புகள் இணைய வழி வெறுப்பைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி, சமூகப் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம், இந்தத் தனியார் சமூக ஊடகத் தளங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. சமூக ஒற்றுமையை அழித்து, தங்களுடைய காலாண்டு பெருநிறுவன லாபத்தை பெருக்குவதற்காக, பொதுவெளியின் விதிகளை இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கின்றன.
ஜனநாயகத்தின் டிஜிட்டல் பாதிப்பு
ஒரு சமூகம் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான உண்மை இல்லாத நிலைக்குத் தள்ளப்படும்போது, அது வெளிநாடுகளின் தலையீட்டிற்கு மிக எளிதான இலக்காக மாறிவிடுகிறது. இந்தியாவின் எதிரி நாடுகளும், சில தனிநபர் அமைப்புகளும் சமூக ஊடகங்களின் இத்தகைய பலவீனங்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அவற்றை நவீனத் தகவல் போர்க்களமாக (Information warfare) மாற்றியுள்ளன. வெளிநாட்டினரின் இத்தகைய தகவல் மோசடித் திட்டங்கள் இப்போது பழையபடி சாதாரண 'தானியங்கி கணக்குகள்' (Bot) மூலமாக பரப்பப்படும் தேவையற்ற விளம்பரங்கள் போல இருப்பதில்லை. மாறாக, அவை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் அதிநவீன உளவியல் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளன. இலக்கு வைக்கப்படும் நாட்டில் ஏற்கனவே இருக்கும் மதம், இனம் அல்லது பொருளாதாரரீதியிலான பிளவுகளை ரகசியமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களுக்கு ரகசியமாகப் பணம் கொடுத்து, அவற்றை உருவாக்கி, மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதன் மூலம், எதிரி நாடுகள் ஒரு ஜனநாயக நாட்டை உள்ளிருந்தே சீர்குலைத்து, அதன் சொந்த குடிமக்களையே ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப முடியும். திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய பிரச்சாரங்கள், ஒரு ஜனநாயக நாட்டின் இறையாண்மைக்கே நேரடியாக விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாகவும் இருக்கும் இந்தியா, இந்த நெருக்கடியின் மிக முக்கியமான மையப்புள்ளியில் உள்ளது. டிஜிட்டல் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து, அதற்கேற்ற டிஜிட்டல் பயன்பாட்டு அறிவு (Digital literacy) மக்களிடம் முழுமையாகச் சென்றடையாத ஒரு சூழலில், செயற்கையான போலித் தகவல்களும் சமூக ஊடகங்களின் கணினி வழிமுறை அமைப்பு ஏற்படுத்தும் பிரிவினைகளும் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
வழக்கமாக, ஒரு பிரச்சனை நடந்தபிறகு கொண்டுவரப்படும் சட்டங்கள் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் எப்போதும் பின்தங்கியே இருக்கும் என்றால், இந்தியா பழைய பாணியிலான ஒழுங்குமுறைச் சட்டங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அதற்குப் பதிலாக, இந்தியாவிற்கான ஒரு நிலையான சட்டம் மற்றும் கொள்கை வடிவமைப்பு, ஒரேநேரத்தில் செயல்படக்கூடிய ஐந்து முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, செயற்கை நுண்ணறிவு (AI) மேலாண்மை என்பது முழுக்க முழுக்க மக்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தனிமனித கண்ணியத்திற்கும், டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிமக்களுக்குத் தங்களின் தனிப்பட்ட தரவுகள்மீது முழு உரிமை இருப்பதையும், கடுமையான அனுமதி நடைமுறைகள் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும்; மேலும் வேலைவாய்ப்பு, கடன் மற்றும் மருத்துவச் சேவைகள் போன்ற முக்கியமான துறைகளில் கணினி வழிமுறைகள் மூலம் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு (Algorithmic discrimination) எதிரான தெளிவான பாதுகாப்பை வழங்க வேண்டும். இரண்டாவதாக, சமூக ஊடக நிறுவனங்கள் ஜனநாயகத்திற்குப் பொறுப்பேற்கக் கூடியவைகளாக மாற்றப்பட வேண்டும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் கணினி வழிமுறை அமைப்புகள் நாட்டின் அமைதியைக் சீர்குலைக்கும் போலிச் செய்திகளைப் பரப்பி லாபம் ஈட்டும் அதேவேளையில், தங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறி இனி தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரச் சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், அவர்கள் எந்த அடிப்படையில் தகவல்களைப் பயனர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் என்பதைத் தன்னிச்சையான குழுக்கள் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், கணினி வழிமுறை அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் போலித் தகவல்களுக்கு அந்த நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்க வழிவகை செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, இத்தகைய புதிய விதிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் போதிலும், மக்களின் பேச்சு சுதந்திரப் பாதுகாப்பு முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தவறான தகவல்களை வரையறுக்கும் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், ஒருபோதும் அரசாங்க ஆதரவுடைய தணிக்கையாகவோ அல்லது மாற்று அரசியல் கருத்துக்களை முடக்கும் ஒரு கருவியாகவோ மாறிவிடக் கூடாது. இந்த விதிமுறைகளின் கவனம் முழுவதும், தனிமனிதர்களின் கொள்கை சார்ந்த பேச்சுகளைக் கடுமையான முறையில் ஒடுக்குவதற்குப் பதிலாக, தானியங்கி போலிக் கணக்குகள் மற்றும் போலி காணொளிகள்/புகைப்படங்களை (Deepfake) உருவாக்குபவர்கள் போன்ற சமூக ஊடகத் தளங்களின் செயல்பாட்டு அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே இருக்க வேண்டும்.
நான்காவதாக, மக்களிடையே சிந்திக்கும் திறனை வளர்க்காமல், வெறும் தொழில்நுட்பத் தீர்வுகள் மட்டுமே முழுமையான பலனைத் தந்துவிடாது. எனவே, ஊடக அறிவு (Media literacy) மற்றும் டிஜிட்டல் குடியுரிமை (Digital citizenship) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மாபெரும், அரசாங்க ஆதரவுடைய கல்வித் திட்டத்தை இந்தியா தொடங்க வேண்டும். குடிமக்கள் தங்களுக்கு வரும் டிஜிட்டல் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயவும், உணர்ச்சிகளைத் தூண்டி ஏமாற்றும் உத்திகளைக் கண்டறியவும் பயிற்சி அளிக்கும் வகையில், இந்தப் பாடத்திட்டம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கிராமப்புற சமூக மையங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இறுதியாக, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க, திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களை உடனுக்குடன் கண்டறியக்கூடிய அதிநவீன, பல்துறை சார்ந்த 'முன்னெச்சரிக்கை அமைப்புகளை' இந்தியா உருவாக்க வேண்டும். மேம்பட்ட கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள், சுதந்திரமான உண்மைக்கண்டறியும் குழுக்கள் மற்றும் நெறிசார் முடக்குநர்கள் (Ethical hackers) ஆகியோரிடையே ஒத்துழைப்பை உருவாக்குவதன் மூலமும், வெளிநாடுகளிலிருந்து நடத்தப்படும் தகவல் போர்முறைப் பிரச்சாரங்கள் இணையத்தில் பரவுவதற்கு முன்பே அவற்றை அடையாளம் கண்டு முறியடிக்க முடியும்.
அரசியலமைப்புரீதியான கட்டாயம்
இறுதியாக, நம் காலத்தின் பாடம் மிகவும் தெளிவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மேலாண்மை என்பது வெறும் ஒழுங்குமுறை விதிகளாகவோ அல்லது தொழில்நுட்ப விதிகளாகவோ மட்டுமே சுருங்கிவிட முடியாது. தகவல் அமைப்பைச் சிதைக்கும் இத்தகைய செயல்களை, பெருநிறுவனங்களின் சிறிய தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலமாகவோ அல்லது ஒரு சில சட்டத் திருத்தங்கள் மூலமாகவோ சரிசெய்துவிடலாம் என்று நினைப்பது ஒரு மிகப்பெரிய தவறாகும். ஏனெனில், இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உண்மையை மாற்றியமைக்கவும், சமூகத்தைப் பிளவுபடுத்தவும், வாக்காளர்களின் சுதந்திரமானத் தேர்வைச் சிதைக்கவும் கூடிய தனித்துவமான ஆற்றல் உள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மை என்பது ஒரு நாட்டின் 'அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயக் கடமையாக' இருக்க வேண்டும். பெருநிறுவனங்களோ அல்லது அரசாங்கங்களோ உருவாக்கும் பொய்களில் இருந்து உண்மையை மக்கள் தெளிவாகப் பிரித்தறியும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தத் தடையற்ற, நேர்மையான தகவல் அமைப்பைப் பெறும் உரிமையை, குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றின் நீட்சியாகவே கருத வேண்டும்.
மேலும், இந்த மேலாண்மை முறை முற்றிலும் ஜனநாயகப்பூர்வமாக இருக்க வேண்டும். சிலிக்கான் வேலி (Silicon Valley) நிறுவனங்களின் தலைவர்களுக்கும் நம் நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே ரகசியமாக விவாதிக்கப்படக் கூடாது. டிஜிட்டல் பொதுவெளியை வழிநடத்தும் விதிகள் நாடாளுமன்றத்தின் திறந்த விவாதங்கள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் வெளிப்படையான நிறுவனக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலமாகவே உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்பம் என்பது ஒரு சில பெருநிறுவன கூட்டமைப்பின் நிதி நலன்களுக்காக இல்லாமல், மக்களின் ஒட்டுமொத்த நன்மைகளுக்காகச் செயல்படுவதை உறுதிசெய்ய முடியும். அதேநேரத்தில், இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மை உலக அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனிப்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய உலகளாவிய போர்க்களத்தின் புதிய முனையாக இந்தத் தகவல் தொழில்நுட்ப வெளிதான் உருவெடுத்துள்ளது. இறையாண்மை கொண்ட இந்திய நாடு, இத்தகைய கணினி வழிமுறை சார்ந்த (Algorithmic) முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, போர்க்களத்தில் நாமாகவே ஆயுதங்களைக் கீழே போடுவதற்குச் சமம் ஆகும். நமது பொதுவெளியை இயக்கும் மென்பொருள் குறியீடுகள், நாட்டின் எல்லை உள்கட்டமைப்பைப் போன்றே தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்பதை ஜனநாயக நாடுகள் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேலாண்மையை ஒரு அரசியலமைப்பு அரணாகவும், ஜனநாயகக் கட்டளையாகவும், தேசிய இறையாண்மையின் முதன்மைத் தூணாகவும் உயர்த்துவதன் மூலம் மட்டுமே, இந்த டிஜிட்டல் யுகத்தின் சவால்களைச் சமாளித்து இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்க முடியும்.
சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியின் நான்காவது முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (காங்கிரஸ் கட்சி) ஆவார். மேலும், அவர் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளராகவும் திகழ்கிறார். அவர் இதுவரை 29 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் மிக சமீபத்திய புத்தகமாக ‘The Sage Who Reimagined Hinduism: The Life, Lessons and Legacy of Sree Narayana Guru’ என்பது குறிப்பிடத்தக்கது.