தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் (Foreign Contribution (Regulation) Act (FCRA)) ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (Non-Governmental Organization (NGO)) அல்லது சங்கத்தின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப் பதிவு (FCRA) இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாமல் போனாலோ, அந்த நிறுவனம் வெளிநாட்டு நிதியைக் கொண்டு உருவாக்கிய சொத்துக்களைப் பொறுப்பேற்க, நிர்வகிக்க அல்லது விற்பனை செய்ய ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் (NGO) "முக்கியப் பொறுப்பாளர்" என்பதற்கான வரையறையை விரிவுபடுத்துவது மற்றொரு முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தமாகும். இனி, "அலுவலகப் பொறுப்பாளர் அல்லது இயக்குநர்" (என்ற வரம்பைத் தாண்டி, அந்தப் பட்டியலில் இயக்குநர்கள், கூட்டாளிகள் (Partners), அறங்காவலர்கள் (Trustees), இந்து கூட்டமைப்பின் தலைவரான கர்த்தா (Karta), மற்றும் சங்கங்கள், அறக்கட்டளைகள் அல்லது தொழிற்சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அல்லது அதன் செயல்பாடுகள்மீது கட்டுப்பாடு கொண்டுள்ள அல்லது பொறுப்பு வகிக்கின்ற எவரேனும் ஒருவரும் இந்த வரையறைக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) நடைபெறும் விதிமீறல்களுக்கு அந்தந்த அமைப்புகளின் முக்கிய அதிகாரிகளையே பொறுப்பாக்கும் வகையில் இந்தத் திருத்தம் முன்மொழியப்படுகிறது.
வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதற்கு எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் (NGO) வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) பதிவு செய்வது அவசியமாகும். 2010-ஆம் ஆண்டுச் சட்டம் இதுவரை வெளிநாட்டு நிதி வருவதை மட்டுமே முறைப்படுத்தியது, ஆனால், அத்தகைய நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதற்கான முறையான சட்ட அமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026), சட்டப்பிரிவு 43-ல் மாற்றங்களை முன்மொழிகிறது. இதன்மூலம், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) தொடர்பான புகார்கள் குறித்து எந்தவொரு சட்ட அமலாக்க முகமையோ அல்லது மாநில அரசோ விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக, ஒன்றிய அரசிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் மக்களவை உறுப்பினர்களிடம் பகிரப்பட்ட இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில், தற்போது சுமார் 16,000 சங்கங்கள் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வோர் ஆண்டும் சுமார் ₹22,000 கோடி நிதியைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 (FCRA - Foreign Contribution Regulation Act) என்பது வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் சேவைகளை முறைப்படுத்துகிறது. இந்த நிதியுதவிகள் நாட்டின் நலன், பொது அமைதி அல்லது தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டம் மே மாதம் 1-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது, பின்னர் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில், குறிப்பாக ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும்போதோ, தாமாக முன்வந்து ஒப்படைக்கப்படும்போதோ அல்லது முடிவுக்கு வரும்போதோ, அந்நிய நாட்டு நிதி மற்றும் சொத்துக்களை நிர்வகிப்பதில் சில செயல்பாட்டு மற்றும் சட்டரீதியான இடைவெளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 15 (Section 15) சொத்துக்களைக் கையகப்படுத்தும் முறைக்கு வழிவகை செய்கிறது. இருப்பினும், அந்தச் சொத்துக்களை மேற்பார்வையிடவும், நிர்வகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் ஒரு தெளிவான நடைமுறை இல்லாதது நிர்வாகக் குழப்பத்தையும், அத்தகைய சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஒரே விவகாரத்தில் பலமுறை விசாரணைகள் நடத்தப்படுவது, தண்டனைகள் மற்றும் அபராதங்களில் சீரான தன்மை இல்லாதது, நிதியைப் பயன்படுத்துவதற்கு நிலையான காலக்கெடு நிர்ணயிக்கப்படாதது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு அமைப்பின் பதிவை ரத்து செய்வது குறித்து தெளிவான விதிகள் இல்லாததும், தற்காலிக இடைநீக்கத்தின்போது அந்த அமைப்பின் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவற்ற நிலை நீடிப்பதும் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மசோதா, முன் அனுமதி பெற்று வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் முடிந்தாலோ அல்லது அவை புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அவை தானாகவே ரத்து செய்யப்படுவதற்கும், இடைநீக்கக் காலத்தின்போது சொத்துக்களைக் கையாள்வதற்கான தெளிவான விதிகள் மற்றும் எளிமையாக்கப்பட்ட அபராத முறைகளுக்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மசோதா, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களுக்கான அதிகபட்சச் சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாகக் குறைக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், 2010-ஆம் ஆண்டுச் சட்டத்தில் காலவரம்பு ஏதுமின்றி இருந்த நடைமுறைக்கு மாறாக, "முன் அனுமதி" என்கிற பிரிவின்கீழ் (ஒரே ஒருமுறை மட்டும் பெறப்படும் நிதி) பெறப்படும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை இந்த மசோதா அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Original Link: Centre to amend the Foreign Contribution (Regulation) Act