நோய் சார்பிலிருந்து, தனிநபரை மையப்படுத்தும் பராமரிப்பிற்கு -ரம்யா அனந்தகிருஷ்ணன், அனுபமா சீனிவாசன்

காசநோயை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு முறையானது பொது சுகாதாரத் திறனை மேம்படுத்தி, பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.


காசநோய் (Tuberculosis (TB)) ஒரு தனிநபருக்கு அரிதாகவே ஒரு தனிப்பட்ட நோயாக வெளிப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், காசநோய்க்கான சிகிச்சையில் இருக்கும்போதே, அவர்கள் அதேநேரத்தில் சமாளிக்க வேண்டிய பிற இணை நோய்கள் (comorbidities) அல்லது உடல்நலம் குறித்து சில நிலைகளும் (disease conditions) உள்ளன. இதன் காரணமாக, காசநோய்க்கு மட்டும் சிகிச்சை அளிப்பது போதுமானதல்ல. நோய் சார்ந்த கவனிப்பிலிருந்து ஒரு தனிநபர் சார்ந்த பராமரிப்புக்கு மாறுவதன் மூலம் ஒருங்கிணைந்த பரமரிப்பு அணுகுமுறைகளைப் பின்பற்றுவது, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் காசநோய் ஒழிப்பு ஆகிய இரண்டையும் அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளை விரைவுபடுத்தும். எளிமையாகச் சொன்னால், நாம் நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல், நபருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.


2023-ல் காசநோயால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 48 வயதான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அவர் பல ஆண்டுகளாக நீரிழிவு (diabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் (hypertension) வாழ்ந்து வந்தார். மேலும், அவருக்குக் காசநோய் ஏற்படுவதில் அவரது நீரிழிவு நோய் ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக, அவரது HbA1c அளவு 10-க்கு மேல் இருந்ததால், அவரின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு அதிகளவாக இருந்தது. இந்த மோசமான இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு அளவு, அவரது காசநோய் சிகிச்சை மற்றும் குணமடைதலை நேரடியாகப் பாதித்தது.


HbA1c பரிசோதனையானது, கடந்த 2-3 மாதங்களின் சராசரி இரத்தச் சர்க்கரை அளவுகளை அளவிடுகிறது. இது நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு முதன்மைக் கருவியாகச் செயல்படுகிறது.


காசநோய் போன்ற தொற்று நோய்கள், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சமூக, பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஆகியவை பெரும்பாலும் தனிநபர்களிடமும் குடும்பங்களிடமும் தவிர்க்க முடியாமல் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. இதற்கான சிகிச்சைக்கான முடிவுகளையும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த பலதரப்பட்ட பாதிப்புகளின் ஒன்றோடொன்று இணைந்த தன்மையை அங்கீகரிப்பதே, ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதற்கான முதல் படியாகும்.


உலக காசநோய் தினம் 2026


காசநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளித்தல்


திவ்யாவின் விஷயத்தில் காணப்படுவதுபோல, இந்தியாவில் நீரிழிவு நோயின் சுமை அதிகரித்து வருவதால், காசநோய் மற்றும் நீரிழிவு நோயை ஒருங்கிணைக்க வேண்டிய வலுவான தேவை உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Programme (NTEP)), நீரிழிவு நோயை காசநோய்க்கான ஒரு முக்கிய இணை நோயாக அடையாளம் கண்டு, காசநோய்-நீரிழிவு நோய்க்கான (TB-diabetes) முறையான இருவழிப் பரிசோதனை வழிகாட்டுதல்களை (bidirectional screening guidelines) வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களின்படி, காசநோய் இருப்பது கண்டறியப்பட்ட ஒவ்வொரு நபரும் நீரிழிவு நோய்க்காகப் பரிசோதிக்கப்பட வேண்டும். அதேபோல், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காசநோய்க்காகப் பரிசோதிக்கப்படுவது சிறந்தது. நீரிழிவுநோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தீவிர காசநோய் உருவாகும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதேபோல், காசநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் உள்ளவர்களுக்கு, காசநோய் சிகிச்சையின் முடிவுகள் மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


சென்னையில், மூன்று ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்ட 9,000-க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (34%) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இந்தக் குழுவில் 41% பேருக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மோசமாக இருந்தது. இதுவே மிகப்பெரிய சவாலாகும். எனவே, காசநோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ள ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை காசநோய் சிகிச்சை காலம் முழுவதும் கண்காணிப்பது அவசியமாகும். அதேபோல், காசநோய்க்கான முதன்மை வழிகாட்டுதலில் இருந்து வழங்கப்படும் மருத்துவ மேலாண்மை மற்றும் ஆலோசனைகளை விரிவுபடுத்தி, ஒட்டுமொத்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

சுவாசப் பராமரிப்பை ஒருங்கிணைத்தல்


ஒருங்கிணைப்பதற்கான மற்றொரு முக்கியமான வாய்ப்பு, காசநோய் மற்றும் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) போன்ற நாள்பட்ட சுவாச நோய்களின் (Chronic Respiratory Diseases (CRD)) ஒருங்கிணைப்பு, பரிசோதனை நிலையிலேயே உள்ளது. சுவாச அறிகுறிகள் உள்ளவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே இறுதியில் காசநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு வைரஸ் காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்றவை இருக்க வாய்ப்புள்ளது. பீகார் மற்றும் தமிழ்நாட்டின் தலா இரண்டு மாவட்டங்களில் REACH அமைப்பின் தற்போதைய காசநோய்-நாள்பட்ட சுவாச நோய் (CRD) ஒருங்கிணைந்த பராமரிப்பு முன்னோட்டத் திட்டத்தில், காசநோய்க்காகப் பரிசோதிக்கப்பட்டு காசநோய் இல்லை எனக் கண்டறியப்பட்ட 26,000 பேரில், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் ஆஸ்துமா உள்ள சுமார் 3,000 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சையுடன் இணைக்கப்பட்டனர். மேலும், காசநோய் சிகிச்சையை முடித்த பலருக்கும் சுவாசக் குறைபாடுகள் தொடர்வதால், ஒருங்கிணைந்த பராமரிப்பு சிகிச்சையானது சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் கண்காணிப்பையும் மேம்படுத்தும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற ஆபத்துக் காரணிகளும் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய பிற பொதுவான காரணிகளாகும். சமூக மற்றும் ஆரம்ப சுகாதார நிலைகளில் விரிவான பராமரிப்பை வழங்குவதற்காக, இந்த பல நோய்களுக்கான அணுகுமுறை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களின் (Ayushman Arogya Mandir) கட்டமைப்பில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.


இருப்பினும், பெரிய அளவில் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவது சவாலானதாக இருக்கலாம். சுகாதார அமைப்பு அதன் நிலையில், இது ஏற்கனவே குறைவாக உள்ள மனிதவளத்தின்மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இதன் அதிகரித்த பணிச்சுமையின் பெரும்பகுதியை சமூக சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ள நேரிடலாம். கூடுதலாக, இந்தியாவின் பல முக்கிய சுகாதாரத் திட்டங்கள் தனித்தனி நோய் சார்ந்த கட்டமைப்புகளில் செயல்படுகின்றன. மேலும், அவை மனிதவளம் மற்றும் தரவு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் எப்போதும் ஒன்றோடொன்று ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வுகள் தேவைப்படும். ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதற்குப் போதுமான மற்றும் கூடுதல் மனிதவளம், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கவனிப்பு பெறுபவர்களுக்கும் இடையிலான விகிதம் கவனமாகச் சரிசெய்தல் மற்றும் வழக்கமான மற்றும் காலமுறைப் பயிற்சிகளில் முறையான முதலீடு செய்தல் ஆகியவை தேவைப்படும்.


முழுமையான நல்வாழ்வு


தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) இந்தியாவின் மிகவும் வலுவான, நன்கு கட்டமைக்கப்பட்ட பொது சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக இருப்பதால், நீரிழிவு, நாள்பட்ட சுவாச நோய்கள் (CRD), ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அதனுடம் நெருங்கிய தொடர்புடைய பிற நோய்களைக் கண்டறிந்து தீர்வுகாண காசநோயை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவது, சுகாதார சேவையை மேம்படுத்தவும் பொது சுகாதாரத் திறனை அதிகரிக்கவும் உதவும். மிக முக்கியமாக, இந்த முறை நோயறிதலில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, பல சுகாதார மையங்களுக்குச் செல்லவேண்டிய தேவையைக் குறைத்து, தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பிற்கான தடைகளை அகற்றவும் இது உதவும்.


சுகாதாரப் பராமரிப்பு, பரிவுணர்வுடன் வடிவமைக்கப்பட்டு, தனிநபரின் மீது கவனம் செலுத்தினால், ஒருங்கிணைந்த சுகாதார சேவையானது, காசநோயால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இரு தரப்புக்கும் வெற்றி தரும் ஒன்றாக அமையும்.


அனுபமா சீனிவாசன் REACH அமைப்பின் துணை இயக்குநர் ஆவார். டாக்டர் ரம்யா அனந்தகிருஷ்ணன் REACH அமைப்பின் இயக்குநர் ஆவார்.


Original Link: From disease-specific to person-centred care 


Share: