சம்பல் நதியில் நடைபெறும் மணல் சுரங்க பணி ஏன் உச்சநீதிமன்றத்தை விரக்தியடையச் செய்கிறது? இந்தியாவின் பிற நதிகளுக்கு மத்தியில் சம்பல் நதி அமைப்பைத் தனித்துவமாக்குவது எது? சம்பல் நதி எதிர்கொள்ளும் முக்கியப் பாதுகாப்புச் சவால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி?
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சம்பல் காரியல் சரணாலயத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் சுரங்கம் குறித்து, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கண்டனம், பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வரும் நிர்வாக குறைபாடு மற்றும் செயலற்ற தன்மை குறித்து நீதித்துறைக்கு ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் நெருக்கடியும், நிர்வாகத் தோல்வியும் உருவாகியுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
1. மத்திய இந்தியாவில் யமுனை நதியின் துணை நதியாக விளங்கும் சம்பல் நதி, பரந்த கங்கை வடிகால் அமைப்பின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது. இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள விந்திய மலைத்தொடரின் தெற்கு சரிவில், இந்தூருக்கு அருகிலுள்ள மௌ நகருக்குத் தெற்கே அமைந்துள்ள ஜனப்பாவ் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது.
2. இந்த நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாக வட-வடகிழக்காகப் பாய்ந்து, சிறிது காலம் இராஜஸ்தான் வழியாக ஓடிய பிறகு, பின்னர் இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இடையிலான எல்லையை உருவாக்குகிறது. பின்னர், தென்கிழக்கு திசையில் திரும்பி, உத்தரப் பிரதேசத்தில் யமுனை நதியுடன் இணைகிறது.
3. சம்பல் நதியும் அதன் துணை நதிகளும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதிக்கு தேவையான நீரை வழங்குகின்றன. அதேசமயம், ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் அதன் துணை நதியான பனாஸ், தென்கிழக்கு ராஜஸ்தானுக்கு தேவையான நீரை வழங்குகிறது. இது உத்தரப் பிரதேச மாநிலத்தில், பிந்த் மற்றும் எட்டாவா மாவட்டங்களின் எல்லையில் உள்ள பரே அருகே பச்னதானில், சம்பல், குவாரி, யமுனை, சிந்து, பஹுஜ் உள்ளிட்ட ஐந்து நதிகள் சங்கமித்து முடிவடைகிறது.
4. சம்பல் ஆற்றில், முகர் (mugger) மற்றும் கரியால் (gharial) ஆகிய இரண்டு முதலை இனங்கள், எட்டு நன்னீர் ஆமை இனங்கள், மென்மயிர் நீர்நாய்கள், கங்கை ஆற்று டால்பின்கள், தத்திப்புள்கள் (skimmers), கருப்பு வயிற்று ஆலாக்கள், சாரஸ் கொக்குகள் மற்றும் கருங்கழுத்துக் நாரைகள் உள்ளிட்ட பல அற்புதமான நதி விலங்கினங்கள் வாழ்கின்றன.
5. சம்பல் ஒரு மழைநீர் பாசனப் பகுதியாகும். யமுனையுடன் சங்கமிக்கும் இடம் வரை மொத்த வடிகால் பரப்பளவு 143,219 சதுர கிலோமீட்டர்கள் (55,297 சதுர மைல்கள்) ஆகும்.
6. சம்பல் நதியின் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் விந்திய மலைத்தொடர்களும், வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.
7. சம்பலின் துணை நதிகளில் க்ஷிப்ரா, சோட்டி கலிசிந்த், சிவண்ணா, ரெட்டம், அன்சார், கலிசிந்த், பனாஸ், பர்பதி, சீப், குவாரி, குனோ, அல்னியா, மேஜ், சாகன், பார்வதி, சாம்லா, கம்பீர், லகுந்தர், கான், பாங்கேரி ஆகியவை அடங்கும்.
8. குறிப்பாக, கட்டுப்பாடின்றி மற்றும் அளவுக்கு மீறி மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதால், சம்பல் நதியின் நீர்வாழ் சூழலியல் அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வாழ் உயிரினங்களின் வாழிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், நதியின் இயற்கையான நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் விளிம்பில் உள்ள நீண்ட மூக்கைக் கொண்ட முதலை (Gharial), நன்னீர் டால்பின் மற்றும் ஆமை போன்ற உயிரினங்களின் உயிர்வாழ்வு ஆபத்தில் உள்ளன.
தேசிய சம்பல் சரணாலயம்
1. தேசிய சம்பல் சரணாலயம், தேசிய சம்பல் கரியால் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் உள்ள மூன்று மாநிலப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு அதிகரித்து இனங்களான கரியால் சிறிய முதலைகள், செந்தலை கூரை ஆமை மற்றும் அதிகரித்துவரும் இனமான கங்கை நதி டால்பின் போன்றவை வாழ்கின்றன.
2. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைக்கு அருகில் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சம்பல் சரணாலயம், முதன்முதலில் 1978-ல் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது, மூன்று மாநிலங்களாலும் ஒன்றாக இணைந்து நிர்வகிக்ககும் ஒரு நீண்ட, குறுகலான சூழல் காப்பகமாகத் திகழ்கிறது.
3. இந்தச் சரணாலயத்திற்குள், தூய்மையான சம்பல் நதியானது, கரைகளில் பல மணல்வெளிகளைத் தாங்கியவாறு, செங்குத்துப் பள்ளங்கள் மற்றும் குன்றுகளின் சிக்கலான பாதைகளின் ஊடே பாய்ந்து செல்கிறது. உலகின் மிகப்பெரிய நீண்ட மூக்கைக் கொண்ட முதலைகளின் கூட்டத்திற்கு இருப்பிடமாகவும், அவற்றின் கடைசிப் புகலிடமாகவும் திகழ்வதால், நாட்டின் மிக முக்கியமான ஈரநிலச் சரணாலயங்களில் ஒன்றாக சம்பல் சரணாலயம் விளங்குகிறது.
4. மேலும், இது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்ற வாழ்விடமாகவும் உள்ளது. இவற்றில் சதுப்புநில முதலை, நன்னீர் ஆமைகள் மற்றும் இரண்டு முக்கிய நீர்வாழ் பாலூட்டிகளான நீர்நாய் மற்றும் கங்கை டால்பின் ஆகியவை அடங்கும்.
5. சட்டவிரோத மணல் சுரங்கம், சரணாலயத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, சம்பல் சரணாலயத்தில் 2006-ஆம் ஆண்டில் சம்பல் சரணாலயத்தில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்டாலும், சட்டவிரோத கும்பல்கள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு, அதை பெரிய அளவில் நடத்தி வந்துள்ளன.
ஆரவல்லி மலைத்தொடர்கள்
1. 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள நிலவடிவங்களை மட்டுமே மலைகளாக வரையறுக்கும் ஆரவல்லிகளின் வரையறையை ஆராய்வதற்காக, இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மன்றத்தின் (Indian Council of Forestry Research and Education (ICFRE)) தலைமை இயக்குநரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (high-powered committee (HPC)) உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
2. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆரவல்லி மலைத்தொடர், உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது பிரிகேம்ப்ரியன் சகாப்தத்தில் புவியின் மேலோட்டுப் புவித்தட்டுகள் மோதியதன் காரணமாக உருவானது.
3. 700 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களிலும் 37 மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதில் 560 கி.மீ ராஜஸ்தானில் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் குரு ஷிகர் ஆகும். இது ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
4. இருப்பினும், ஆரவல்லி மலைத்தொடர் உருவான காலத்தில் இருந்ததை ஒப்பிடும்போது, இன்றைய மலைத்தொடர் மிகவும் அரிக்கப்பட்டுவிட்டது. சீரழிவுக்கு இயற்கைக் காரணிகளும் மனிதச் செயல்பாடுகளும் காரணமாகின்றன.
5. இருப்பினும், ஆரவல்லி மலைத்தொடர் விலைமதிப்பற்ற சூழலியல் சேவைகளை வழங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்ப இந்தியாவின் நீர் தேக்கமாகவும், பருவநிலை சீராக்கியாகவும் கருதப்பட்டால், ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்கு மற்றும் வட இந்திய சமவெளிகளுக்கு ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது.
6. இந்த மலைத்தொடர், மேற்கில் உள்ள தார் பாலைவனத்திலிருந்து மணல் வடக்கு சமவெளிப் பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதைத் தடுக்கிறது. இதனால் வட இந்தியாவின் காற்றுத் தரமும் பாதுகாக்கப்படுகிறது. மணல் ஊடுருவல் அதிகரித்தால், ஏற்கனவே உள்ளூர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் டெல்லிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
7. மேலும், இந்த மலைகள் கணிசமான அளவு மழையையும் கொண்டு வருகின்றன. இது அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் உழவுப் பணிகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும் முக்கியமானதாகும்.
Original article : Why is Chambal River in focus? -Roshni Yadav