வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது ஒழுக்கமற்றது நாகரிகமற்றது என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகத் தாக்குகிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது.
ஐக்கிய நாடுகள் பெண்கள் (UN Women) அமைப்பில் பணியாற்றிய ஆண்டுகளில், லத்தீன் அமெரிக்காவின் பெலேம் டோ பாரா மாநாடு (Latin America’s Belém do Pará Convention) மற்றும் பெண்ணினக் கொலை மீதான அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான மாதிரிச் சட்டம் (Inter-American Model Law on femicide/feminicide) ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண்களாக இருப்பதாலேயே கொல்லப்படுதல் என்ற கருத்தாக்கத்தை அங்கீகரிப்பதை நாங்கள் ஊக்குவித்தோம். இந்தியாவில் எந்தவொரு குற்றத்தையாவது உண்மையாகவே பெண்ணினக் கொலை (femicide) என்று வகைப்படுத்த முடியுமானால், அது வரதட்சணைக் கொலைதான்.
வரதட்சணையுடன் தொடர்புடைய ஒவ்வொரு துயரச் சம்பவமும், அடுத்த செய்திச் சுழற்சியில் மறைந்துபோவதற்கு முன்பாக, தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. தற்போது விசாரணையில் உள்ள சம்பவங்கள், பரபரப்பு அல்லது உணர்ச்சிப் பொங்குதல்களுக்கான சந்தர்ப்பங்களாக மாறக்கூடாது. மாறாக, அவை ஒரு நாகரிக முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் சமூகத்தை நிர்பந்திக்க வேண்டும். பெண்களைத் திரிதேவிகள், லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதியாகப் போற்றும் இந்தியாவானது எப்படி அவர்களின் கண்ணியத்தை எப்படிப் பணையம் வைத்து, நாரி சக்தியை அவமதிக்க முடியும்? 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை அடைய விரும்பும் இந்தியாவில், மகள்களைக் கார்கள், பணம், தங்கம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஈடாக எடைபோடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
வரதட்சணை (Dowry) என்பது ஒரு பழக்கமோ, பரிசோ, அல்லது திருமணங்களின் பகட்டிற்குப் பின்னால் மறைந்திருக்கும் 'குடும்பக் கௌரவமோ' அல்ல. அது திருமணம் தன் ஆன்மாவை இழக்கும் ஒரு சந்தை ஆகும்.
பெண்ணின் சொத்து என்ற கோட்பாடு (concept of stree dhan) வரதட்சணை கொடுக்கும் வழக்கத்தை நியாயப்படுத்தாது. பாரம்பரியமாக, அது ஒரு மகளின் நிதிப் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை வழங்குவதற்காக, அவருடைய தனிப்பட்ட உரிமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், அவருக்குத் தானாக முன்வந்து வழங்கப்படும் சொத்துக்கள், நகைகள், உடைமைகள் அல்லது பரிசுகளைக் குறித்தது. அதன் நோக்கம் பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பதே தவிர, கணவனின் குடும்பத்தை வளப்படுத்துவதல்ல. நவீன வரதட்சணை என்பது, தொடக்கத்தில் ஒரு பாதுகாப்புக் கருத்தாக இருந்ததன் ஒரு பயங்கரமான திரிபு ஆகும்.
வரதட்சணை என்பது ஒரு பழைய சமூகத் தீமை மட்டுமல்ல. அது வன்முறையின் ஒரு தொடர்ச்சி. அது கோரிக்கையாகத் தொடங்கி, உரிமை கோரலாக வளர்ந்து, வற்புறுத்தலாக இறுகி, பெரும்பாலும் துன்புறுத்தல், தாக்குதல், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொலைக்குக் கூட வழிவகுக்கிறது. அது வர்க்கம், சாதி, மதம் மற்றும் பிராந்தியம் ஆகிய எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 5,737 வரதட்சணைக் கொலைகள் பதிவாகியுள்ளன. இதன் பொருள், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 16 பெண்கள் இறக்கின்றனர். விசாரணைகள் முடிவடைந்த வழக்குகளில், சுமார் 35 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோக்கு, பெரும்பாலான பிற தெற்காசிய நாடுகளிலும் காணப்படுகிறது. வரதட்சணையானது, பாலின சமத்துவம், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கு உலகை அர்ப்பணிக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு-5-ன் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகவும் உள்ளது.
வரதட்சணை என்பது ஒரு ஆணின் கண்ணியத்திற்கு இழைக்கப்படும் அவமதிப்புமாகும். வரதட்சணையைக் கேட்கும் அல்லது ஏற்கும் ஒருவன், தனக்குத்தானே ஒரு சந்தை விலையை நிர்ணயித்துக் கொள்கிறான். அவன் தனது புருஷார்த்தத்தையும் புருஷத்துவத்தையும், அதாவது தனது திறமை, குணம் மற்றும் ஆண்மையையும் பலவீனப்படுத்திக் கொள்கிறான். இத்தகைய ஆண்மை, தன்னை மற்றவர்கள் அங்கீகரிப்பதற்காக மிரட்டிப் பறிப்பதைச் சார்ந்துள்ளது. இது ஆண்மையின் ஒரு பலவீனமான மற்றும் பிறரைச் சார்ந்த வடிவமாகும்.
துயரம் என்னவென்றால், வரதட்சணையானது எதிர்பார்ப்பு, தகுதி, 'குடும்பங்களை இணைத்தல்', 'வெறும் ஒரு கார்' அல்லது 'வீடு அமைக்க உதவுதல்' போன்ற பல்வேறு வடிவங்களில் வருகிறது. ஆனால் வரதட்சணைக்கான முதல் கோரிக்கை ஒரு பேரம் பேசுவதல்ல, அது ஒரு எச்சரிக்கை மணி. இளம் பெண்கள் இந்த முதல் அபாயச் சின்னத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கல்வியும் வேலைவாய்ப்பும் முக்கியமானவை. ஆனால் உளவியல்ரீதியான தயார்நிலையும் அதே அளவு முக்கியமானது. வரதட்சணை கேட்கும் உறவிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரு தோல்வியுற்ற நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ அல்ல. அது ஒரு சுய மீட்புச் செயல்.
பெண்ணின் பெற்றோருக்கும் ஒரு தீவிரமான பொறுப்பு உள்ளது. முதலாவதாக, அவர்கள் வரதட்சணை கொடுக்கவே கூடாது. திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்கப்படும்போது, அவர்களின் உள்ளுணர்வு, 'எப்படியாவது திருமணத்தைக் காப்பாற்று' என்பதிலிருந்து 'எப்படியாவது மகளைக் காப்பாற்று' என்பதற்கு மாற வேண்டும். பல இளம் பெண்கள் அனுசரித்துச் செல்லவோ, சமரசம் செய்துகொள்ளவோ அல்லது குடும்ப கௌரவத்தைப் பற்றி சிந்திக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், வன்முறை நிறைந்த வீட்டில் கௌரவம் இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்ற வேண்டுமே தவிர, நீதிமன்றமாக அல்ல.
வரதட்சணைக் கொடுமையில் ஈடுபடும் மாமியார், நாத்தனார் அல்லது பெண் உறவினர், மற்றொரு பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காவல்காரராக ஆகிறார். ஆணாதிக்கம் என்பது ஆண் ஆதிக்கத்தால் மட்டுமல்ல, பெண்களின் உடந்தையாலும் நிலைத்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த வலியானது, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கொடுமையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவில் வரதட்சணையைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பு உள்ளது. 1961-ம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டம் (Dowry Prohibition Act), வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தண்டிக்கிறது. பாரதிய நியாய சம்ஹிதையின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவு-80 ஆனது வரதட்சணைக் கொலைகளைக் கையாள்கிறது. அதேசமயம், பிரிவு-85 கொடுமை மற்றும் துன்புறுத்தலைக் கையாள்கிறது. இருப்பினும், முறையாகச் செயல்படுத்தப்படாத ஒரு சட்டம் என்பது சாவி இல்லாத பூட்டப்பட்ட கதவைப் போன்றது. மேலும், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதை, அந்த வழக்குகள் பொய்யானவை என்பதற்கான ஆதாரமாகக் கருதக்கூடாது. தாமதமான விசாரணைகள், விரோதமான சாட்சிகள், சமூக அழுத்தம், களங்கம் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே செய்யப்படும் சமரசங்கள் ஆகியவற்றால் விடுதலைகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
முன்னேறிச் செல்வதற்கான வழி, நான்கு 'பி'க்கள் கட்டமைப்பைச் (P’s framework) சார்ந்திருக்க வேண்டும். தடுப்பு (Prevention) என்பது மணப்பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை உருவாக்குவது மற்றும் கடுமையான அமலாக்கத்தின் மூலம் தடுப்பை வலுப்படுத்துவது ஆகும். பாதுகாப்பு (Protection) என்பது பாதுகாப்பான புகார் அளிக்கும் அமைப்புகள், உதவி எண்கள் மற்றும் உடனடிப் பதிலளிக்கும் காவல் துறை ஆகும். வழக்குத் தொடருதல் (Prosecution) என்பது கணவர், மாமியார்-மாமனார் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீது விரைவான பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நெருக்கடி கால சேவைகளை வழங்குதல் (Provision of crisis response services) என்பது தங்குமிடங்கள், ஆலோசனை, சட்ட உதவி, நிதி உதவி மற்றும் மனநலப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதாகும்.
வரதட்சணை சட்டவிரோதமானது என்பதால் மட்டுமல்ல, அது மனசாட்சியற்றதும் நாகரிகமற்றதும் ஆகும் என்பதாலும் ஒழிக்கப்பட வேண்டும். அது பெண்களை வன்மையாகச் சிதைக்கிறது, ஆண்களைக் சிறுமைப்படுத்துகிறது, குடும்பத்தைச் சீரழிக்கிறது. மேலும், சமமான பங்களிப்பின் அடிப்படையில் அமைய வேண்டிய திருமணத்தை மோசமானதாக்குகிறது. எந்தவொரு சடங்கும் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியாது. எந்தவொரு குடும்ப கௌரவமும் மிரட்டிப் பணம் பறிப்பதை நியாயப்படுத்த முடியாது. ஒரு விலையுடன் தொடங்கும் திருமணம் புனிதமானதாகக் கருதப்பட முடியாது.
கட்டுரையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ஆவார்.
Original link:
Practice of dowry violates women, diminishes men. It has no place in Bharat.