செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போர்முறையை மாற்றியமைக்கிறது: இந்தியா எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்? -ராஜ் சுக்லா

 ஈரான் முதல் வெனிசுலா வரையிலான உலகளாவிய உதாரணங்கள் காட்டுவது என்னவென்றால், இந்தியா தனது சொந்த இறையாண்மை அணுகுமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை அடிப்படையிலான போர் உத்திகள் ஆகியவற்றின் கூட்டுமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.


செயற்கை நுண்ணறிவு (AI), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை சார்ந்த போர்முறை (Algorithmic warfare) ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையானது, நவீன போர்கள் நடத்தப்படும் முறையையும், நாடுகள் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வழியையும் மாற்றி அமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவானது நேரடிப் போர் நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் அதேவேளையில், சுயாட்சி அமைப்புகள் மனிதர்களின் தலையீடு இன்றித் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவது எதுவென்றால், ‘Algorithms’ எனப்படும் கணினி வழிமுறைகள் வழங்கும் துல்லியமான இலக்குத் திறன்தான். இந்த மூன்று தொழில்நுட்பங்களும் இணைந்து, வரவிருக்கும் ஆண்டுகளில் போர்க்களத்தின் செயல்திறனையும், அதன் அழிவுத் திறனையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் ராஜதந்திர மற்றும் இராணுவத் தலைமை, தற்போதைய போர்க்களச் சூழலை ஒரு மேன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) போன்றதொரு வரலாற்றுத் தருணமாக அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில், இன்று போரியல் துறையில் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.




தொழில்நுட்ப மோதல்: உக்ரைன், வெனிசுலா மற்றும் ஈரான்


துப்பாக்கி மருந்து மற்றும் அணுஆயுதங்களுக்குப் பிறகு, ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய புரட்சி, ட்ரோன்கள் (Drones) ஆகும். இவை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அது சார்ந்த பிற தொழில்நுட்பங்களுடன் இணையும்போது, போரிடும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுடன், நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.


இவற்றின் தாக்கம் ரஷ்யா-உக்ரைன் போரில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் நாடு 'டெல்டா' (Delta) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தரவு பகுப்பாய்வு தளத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தளம் ரேடார் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே அறிவார்ந்த அமைப்பாக மாற்றுகிறது. டெல்டா தளம் பல்வேறு வகையான ட்ரோன்களுடன் இணைந்து செயல்பட்டு ஒரு டிஜிட்டல் 'Kill web' (இலக்குகளை அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்குகிறது. இது ஒரு இலக்கைக் கண்டறிவதற்கும் அதை அழிப்பதற்கும் இடைப்பட்ட நேரத்தை வெறும் சில நிமிடங்களாகக் குறைக்கிறது.


ரஷ்ய-உக்ரைன் எல்லை நெடுகிலும் உள்ள 35 கிலோமீட்டர் தூரப் பகுதி மரணப் பகுதி (Death zone) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில், பீரங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது, போர் பீரங்கிகளால் நகரவே முடியவில்லை. மேலும், தரைப்படை வீரர்கள் கண்காணிப்பு ட்ரோன்களால் உடனடியாகக் கண்டறியப்பட்டு, சில நிமிடங்களிலேயே ட்ரோன்கள் மூலமாகத் தாக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் போர் வீரர்களால் செய்யப்பட்ட பல பணிகளை இப்போது ஆளில்லா அமைப்புகளே செய்கின்றன. தகவல் சேகரிப்பது, இலக்குகளைக் கண்டறிவது, வெடிமருந்துகள் மற்றும் உணவுகளை வழங்குவது மற்றும் காயமடைந்தவர்களை மீட்பது ஆகியவை இதில் அடங்கும்.


கடந்த ஆண்டு உக்ரைன் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக, இந்த ஆண்டு சுமார் 80 லட்சம் ட்ரோன்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள், 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தரைப்படைகளுக்கு வான்வழி ஆதரவு தருவதில் தொடங்கி, 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று நீண்டதூரத் தாக்குதல்களை நடத்தும் அபாரத் திறனை ராணுவத் தளபதிகளுக்கு வழங்குகின்றன.


வெனிசுலாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிபரான நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடிப்பதற்காக அமெரிக்கா நடத்திய நடவடிக்கையின்போது, ‘Anthropic’ நிறுவனத்தின் 'Claude AI' என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மதுரோவின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், அவரது அடுத்தகட்ட நகர்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ராணுவத் தலைவர்களுக்கு உதவியது. அதன்பிறகு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக மின்னணுப் போர் (Electronic warfare) மற்றும் இணையவழித் தாக்குதல்கள் ஆகியவை 'Delta Force’ ஹெலிகாப்டர் தாக்குதலுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.


ஈரானில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது, மனிதர்கள் சிந்தித்துச் செயல்படும் வேகத்திற்குப் பதிலாக இயந்திர வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திட்டங்களைத் தயாரிக்க உதவியது. இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகத் துல்லியமான தாக்குதல்கள், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி காலை சில நிமிடங்களிலேயே ஈரானியத் தலைவர்கள் ஏறக்குறைய அனைவரையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


தானியங்கிக் கட்டுப்பாடு 


ராணுவத் தொழில்நுட்பம் மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானப் போர்முறை, மனிதர்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து மாறி, இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சுயமாகச் செயல்படும் தானியங்கி கட்டுப்பாட்டுக்கு மாறி வருகிறது. கடற்படைக் கப்பல்களும் மனித தளபதிகளுக்குப் பதிலாக, சுயமாக முடிவெடுக்கும் தானியங்கி மென்பொருள் அமைப்புகளை நோக்கி நகர்கின்றன. வான்வழிப் போரில், 'Anduril' என்ற பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனம் உருவாக்கியுள்ள YFQ-44A ‘Fury’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் தானியங்கி போர் விமானம், வான்வழிப் பாதுகாப்பின் எதிர்காலம் மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் (AI) இணைந்து செயல்படுவதைச் சார்ந்தே இருக்கும் என்பதைக் காட்டுகிறது. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், பெரிய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து சுறுசுறுப்பாகச் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை நோக்கி மெதுவாக நகர்வதையும் இது உணர்த்துகிறது.


அதேநேரத்தில், பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழில்நுட்பங்களும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. 'Mythos' எனப்படும் ஒரு மெய்நிகர் இணையவழி ஆயுதம் (Virtual cyber weapon), எதிரிகளின் கணினி இயங்குதளத்தையே முடக்கக்கூடிய திறன் கொண்டது. ‘DeepSeek’ மற்றும் தாவின் ஸ்கேலிங் விதி (Tau's Law of Scaling) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களும், ‘Nvidia’ நிறுவனத்தின் 4-நானோமீட்டர் ‘Blackwell’ சிப்களுக்குப் போட்டியாக 2031-ஆம் ஆண்டுக்குள் 1.4-நானோமீட்டர் டிரான்சிஸ்டர் அடர்த்தியை அடைய வேண்டும் என்ற ‘Huawei’ நிறுவனத்தின் இலக்கும், சீனாவின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு ராணுவ மற்றும் ராஜதந்திரரீதியான போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றன.


போர்க்களத்தில், ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒருமுறை புதிய மென்பொருட்களும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய வன்பொருட்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, இதுவரை முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பாதுகாப்பு அமைச்சகம், இனி மேம்பட்ட மென்பொருட்களையும் உருவாக்கும் ஒரு அமைப்பாக மாற வேண்டும்.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


பாதுகாப்புத் துறையின் எதிர்காலம் என்பது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இப்போதிலிருந்தே, செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் கணினி வழிமுறை போர்முறை (Algorithmic warfare) ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் பின்வரும் வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்:





'டெல்டா' (Delta) தளத்தைப் போன்ற, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு தரவு பகுப்பாய்வுத் தளத்தை  உடனடியாக உருவாக்க வேண்டும்.


ட்ரோன்களை மனித உதவியின்றித் தானாகவே ஒருங்கிணைக்கும் மென்பொருளை உருவாக்க வேண்டும். இது பறவைகள், உள்நாட்டு விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, இலக்குகளை அழிக்குமாறு தாக்குதல் நடத்துவோருக்கு வழிகாட்டும்.


2028-ஆம் ஆண்டிற்குள் 50 லட்சம் ட்ரோன்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு வகையான ட்ரோன்களின் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டும்.


ட்ரோன்களை தாக்கி அழிக்கும் குழுக்களுடன், லேசர் மற்றும் மைக்ரோவேவ் ஆயுதங்கள் போன்ற பல்வேறு வகையான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control (LoC)) மற்றும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் "Kill webs" (எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்க உதவும்.


பூமியின் தாழ்வட்டப் பாதையில் (Low-Earth orbit (LEO)) அதிகப்படியான செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். இதன் மூலம், வெறும் கண்காணிப்பு என்கிற அளவோடு நின்றுவிடாமல், எதிரிகளின் நகர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆக்கிரமிப்புடன் தாக்கும் உளவுத் துறை, கண்காணிப்பு மற்றும் உளவுப் பணி (Intelligence, surveillance and reconnaissance) என்ற நிலைக்கு நாம் மாற முடியும்.


2027-ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதிநிலைத் திட்டம் இந்த மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்படும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயில், குறைந்தபட்சம் 40 விழுக்காட்டை இத்தகைய தொழில்நுட்பத் தீர்வுகளுக்காகவே செலவிட வேண்டும்.




இது ஒரு மிகப்பெரிய சவாலாகும். இதற்கு நமது ராணுவக் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பில் பெரிய மாற்றம் தேவைப்படும். இருப்பினும், இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது போர்க்களத்தில் போர் முறையையே மாற்றியமைப்பதாக இருக்கும். இது நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்தியா செயல்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, பாகிஸ்தானைவிட போர்முனையில் அதிகப்படியான மேலாதிக்கத்தைப் பெறவும், சீனாவிற்கு எதிராக சமச்சீரற்ற தற்காப்புத் தடுப்பை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிவகுக்கும்.


ராஜ் சுக்லா, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணியாற்றி, ராணுவப் பயிற்சிப் பிரிவின் (ARTRAC) ராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.


Original article : AI is reshaping warfare: How India can keep pace. -Raj Shukla

Share: