இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்கள் இத்தகைய திட்டங்களுக்கும் இலவச மின்சாரம் போன்ற மக்கள் ஆதரவை ஈர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அதிக நிதியை ஒதுக்குவதால், பிற துறைகளில் செலவிடும் திறன் பாதிக்கப்படுவதாகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்திட்டங்களால் முதலீடுகளைத் முடக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், பல மாநிலங்கள் பெண்களுக்காகப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' (Ladli Behna Yojana), ஜார்க்கண்டில் 'மையா சம்மான் யோஜனா' (Maiya Samman Yojana) மற்றும் தமிழ்நாட்டில் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின்கீழ், பெண்களுக்கு வழக்கமாக மாதம் ₹1,000 முதல் ₹2,500 வரை வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது. ‘PRS Legislative Research’ அறிக்கையின்படி, 12 மாநிலங்கள் இணைந்து 2025-26-ஆம் நிதியாண்டில் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக ₹1.68 லட்சம் கோடி செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, இதே நிதியாண்டில் ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ₹86,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள் (Unconditional cash transfers) பெண்களின் நலம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளன. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு தேர்தல் உத்தியாகவும் உருவெடுத்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள "இந்தியாவில் பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள்" (EAC-PM Working Paper Series) என்ற சமீபத்திய ஆய்வு, இந்தத் திட்டங்களால் கிடைக்கும் நன்மைகளை உறுதிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை ஆய்வு செய்ததில், இவை பயனாளிகளின் அன்றாடப் பொருட்களின் நுகர்வு மற்றும் சேமிப்பை அதிகரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த குடும்ப நலனையும் மேம்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இத்திட்டங்களால் குடும்பங்கள் தங்களின் மருத்துவம், கல்வி மற்றும் சிறந்த வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக அதிக அளவில் செலவிடுகின்றனர். இந்தச் சாதகமான முடிவுகள் காரணமாகவே, இத்தகைய திட்டங்கள் தற்போது மாநிலங்களில் மிகவும் பரவலாகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசுகள் பணப்பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான பணத்தைச் செலவிடுவதால், மற்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைந்து வருகிறதோ என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய திட்டங்கள் நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதால், அவை புதிய முதலீடுகளைக் குறைத்துவிடக்கூடும் என்று ரிசர்வ் வங்கியும் எச்சரித்துள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலை குறித்த கவலைகள் அதிகரித்துவரும் இதே காலகட்டத்தில்தான், பணப்பரிமாற்றத் திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. ஆக்சிஸ் வங்கியின் (Axis Bank) அறிக்கை ஒன்றின்படி, மாநிலங்கள் பிற துறைகளுக்கான செலவினங்களை இதற்காக மாற்றுவதோடு, தங்களின் நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்துக் கொள்கின்றன. மாநிலங்களின் ஒட்டுமொத்தக் கடன் அளவு, 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 31 விழுக்காட்டில் இருந்து 2026-ஆம் ஆண்டில் (நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளின்படி) 29.2 விழுக்காடாகக் குறைந்திருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள கடனின் அளவு பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தின் கடன் அதன் ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 46.4 விழுக்காடாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்கம் 38.9 விழுக்காடாகவும், பீகார் 36.8 விழுக்காடாகவும் உள்ளன. அதிகப்படியான கடன், அரசு உத்தரவாதங்களால் எழும் தற்காலிகப் பொறுப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் பணப்பரிமாற்றத் திட்டங்கள் ஆகியவை மாநிலங்களின் நிதிநிலைக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எச்சரித்துள்ளது. இந்தக் கவலைகளுக்கு மிக நெருக்கமான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
Original article : Cash transfers in India: The safety net and the trade-off.