வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு தனியுரிமையையும், வெளிப்படையான நீதியையும், பேச்சு சுதந்திரத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது? மறக்கப்படுவதற்கான உரிமையைச் செயல்படுத்துவதில் என்ன சவால்கள் எஞ்சியுள்ளன? டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) என்ன பங்கு வகிக்கிறது? தகவல்களை அழித்தல் (erasure) அல்லது பட்டியலிலிருந்து நீக்குதல் (de-indexing) தொடர்பான கோரிக்கைகளை யார் தீர்மானிக்க வேண்டும்?
தற்போதைய செய்தி:
சில நாட்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில், 'மறக்கப்படுவதற்கான உரிமை' (right to be forgotten) தொடர்பான கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய தளங்களில் உள்ள தங்களின் டிஜிட்டல் தடயங்கள் (Digital Footprints) காரணமாக, வழக்குகள் தங்களுக்கு சாதகமாக முடிவடைந்த பிறகும் தொடர்ந்து பாதிக்கப்படும் நபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றம் புதிய சட்டக் கோட்பாட்டை (Jurisprudence) உருவாக்கியுள்ளது.
‘மறக்கப்படுவதற்கான உரிமை’ (right to be forgotten) என்றால் என்ன?
"மறக்கப்படுவதற்கான உரிமை" (Right to be Forgotten) என்பது, பொதுமக்கள் அணுகக்கூடிய டிஜிட்டல் சூழலில் (Public Digital Environment) இருக்கும் தகவல்கள், தொடர்ந்து கிடைப்பதால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தி, அதே நேரத்தில் பொதுநலனுக்கு எந்தப் பயனும் அளிக்காத நிலையில், அந்தத் தகவல்களை முழுமையாக நீக்க (Erasure) அல்லது பட்டியலிலிருந்து நீக்கம் (De-indexing) செய்யக் கோரும் உரிமையாகும்.
2014-ஆம் ஆண்டில், மரியோ கோஸ்டேஜா கொன்சாலஸ் என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குடிமகன், கடன் தீர்க்கப்பட்ட பின்னரும், பறிமுதல் செய்யப்பட்ட தனது வீட்டின் ஏலம் குறித்த பழைய செய்தித்தாள் அறிவிப்பை கூகுள் தொடர்ந்து காண்பிப்பதாக ஐரோப்பிய நீதி மன்றத்தில் புகார் அளித்தபோது, இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றது. வழக்கில் நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது, அந்தத் தீர்ப்பு, தகவலை அழித்தல் (Right to Erasure) என்ற உரிமைக்கான கோரிக்கைக்கு அடித்தளத்தை அமைந்தது. இந்த உரிமை பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் (General Data Protection Regulation (GDPR)) 17-வது பிரிவில் இணைக்கப்பட்டது.
இந்திய சட்டத்தில் மறக்கப்படுவதற்கான உரிமை என்ற கருத்து எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது?
2017-ஆம் ஆண்டு கே.எஸ். புட்டசாமி vs இந்திய யூனியன் (K.S. Puttaswamy v. Union of India) வழக்கில், உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் தனியுரிமை (Privacy) என்பது ஒரு அடிப்படை உரிமை (Fundamental Right) என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டன.
சில திருமண மற்றும் குற்றவியல் வழக்குகளில் பெயர்களை மறைக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற குறிப்பிட்ட சூழல்களில் அடையாளத்தை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், 'வெளிப்படையான நீதி' (open justice) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வேறு சில சூழல்களில் அது போன்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
முரண்பட்ட இந்த அணுகுமுறைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தும் ஒருங்கிணைந்த மற்றும் தெளிவான சட்டக் கட்டமைப்பு (Coherent Framework) இல்லாததே உண்மையான சவாலாக இருந்தது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காகவே மே 2026-ல் வெளியான டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க முயற்சி செய்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?
மே 29 அன்று, லக்ஷ் வீர் சிங் யாதவ் vs இந்திய யூனியன் (Laksh Vir Singh Yadav v. Union of India) வழக்கைத் தொடர்ந்து வந்த, 30-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், "மறக்கப்படுவதற்கான உரிமை" என்பது அரசியலமைப்பின் பிரிவு 21 வழங்கும் மனித கண்ணியத்திற்கான உரிமை (Right to Dignity) மற்றும் தகவல் தனியுரிமை (Informational Privacy) ஆகியவற்றிலிருந்து உருவாகும் உரிமை என்று கூறியது. முறையான விகிதாச்சாரச் சோதனை என்பது பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது: அதில் தரவுகளைத் தக்கவைப்பதற்குச் சட்டபூர்வமான நோக்கம் இருக்க வேண்டும். தனியுரிமைக்கு ஏற்படும் பாதிப்புக்கும் பொதுநலனுக்கும் இடையே சமநிலை காக்கப்பட வேண்டும். மேலும், தீர்ப்பை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாகப் பெயர்களை மறைப்பது போன்ற, தனிநபரின் தனியுரிமையில் மிகக் குறைந்த அளவே தலையிடும் செயல்முறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சட்டத் தரவுத்தளங்கள் இந்தமுறையைப் பின்பற்றுவதற்கு நீதிமன்றம் இரண்டு வார காலக்கெடுவை விதித்ததுடன், வழக்கின் உண்மைகளை நீக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்களை மட்டுமே மறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கமளித்தது..
மறக்கப்படுவதற்கான உரிமை, அரசியலமைப்பு கொள்கைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது?
இது ஒரு தனித்த உரிமை அல்ல. இது பெரும்பாலும் பிரிவு 19(1)(a)-ன்கீழ் உள்ள பேச்சு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் (freedom of speech and press), வெளிப்படையான நீதிக் கொள்கை மற்றும் பொதுமக்களின் அறியும் உரிமை ஆகியவற்றுடன் முரண்படுகிறது. குறிப்பாகக் கடுமையான குற்றவியல் வழக்குகளில் பொதுநலன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்போது, தனிநபர் தனியுரிமைக்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், ஒரு வழக்கு முடிவடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும், இணையத்தில் நிலைத்திருக்கும் டிஜிட்டல் தடயங்கள் (Digital Presence) காரணமாக ஒருவரின் வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படக் கூடாது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது. வழக்கு எண் அல்லது முக்கியச் சொல் தேடல் (keyword search) மூலம் தீர்ப்புகளை இப்போதும் பொதுவெளியில் பெறமுடியும். பெயரின் அடிப்படையில் தேடுவது மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நடைமுறைச் சவால்கள் என்னென்ன?
இதைச் செயல்படுத்துவதே மிகவும் சவாலான பணியாகும். ஒரு நபர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் என்ற (Acquittal) தீர்ப்பைப் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் அவரது பெயரின் அடிப்படையில் வரும் தேடல் முடிவுகளை (Name-based Search Results) நீக்க உத்தரவிட்ட பிறகும், அந்தத் தீர்ப்பு அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல்கள் தேடுபொறிகளில் (Search Engines) முதல் இடத்தில் தொடர்ந்து இருக்கும். தேடுபொறிகளின் செயல்பாட்டு முறை காரணமாக, அந்த நபர்மீது முன்பு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அல்லது “குற்றத்தின் நிழல்” (Shadow of Crime) என்ற எண்ணமே பயனருக்குத் தேடல்களில் முதலில் தெரியும். தேடல் பட்டியலிலிருந்து நீக்குவது (de-indexing) தேடுபொறியில் பலனளிக்கலாம். ஆனால், அது தகவலின் நகல் பிரதிகள் (mirrors), காப்பகப் பிரதிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைத் தடுக்க முடியாது. தளங்களுக்கு இடையே பயனுள்ள தொழில்நுட்ப இணக்கமும் ஒருங்கிணைப்பும் இல்லாவிட்டால், இந்த உரிமை நடைமுறையில் முழுமையாக செயல்படாமல், பெயரளவிலான உரிமையாகவே இருந்து விடும்.
மறக்கப்படுவதற்கான உரிமைக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act (DPDP)) சட்டத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
தற்போதைய சூழலில், 2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 12-இல் தரவை அழிப்பதற்கான (statutory right to erasure) வரையறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. இது முதன்மையாக ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டதுடன், மறக்கப்படுவதற்கான உரிமை மிகவும் தேவைப்படும் நீதித்துறைப் பதிவுகள் மற்றும் பொது ஆவணக்காப்பகங்களை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. விதிகள் அறிவிக்கப்படாததாலும், தரவுப் பாதுகாப்பு வாரியம் முழுமையான செயல்திறனுடன் செயல்படாததாலும் இந்தச்சட்டம் குறைகளை கொண்டதாக உள்ளது.
அழித்தல் அல்லது பட்டியலிருந்து நீக்குதல் தொடர்பான கோரிக்கைகளை யார் தீர்மானிக்க வேண்டும்?
செயல்திறனுக்கும் (Efficiency) பொறுப்புக்கூறலுக்கும் (Accountability) இடையேதான் சவால் உள்ளது. ஒவ்வொரு கோரிக்கையையும் நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவது குறிப்பிடத்தக்க தடைகளை உருவாக்கும். அதே, சமயம் அதுபோன்ற முடிவுகளை முழுவதுமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடம் விட்டுவிடுவது, முறையான செயல்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகிறது. இதைவிட ஒரு வேகமான அணுகுமுறை, ஒரு படிநிலை அமைப்பாகும். அந்த சூழலில் வழக்குகள் தளங்களாலும், ஆட்சேபிக்கப்பட்ட வழக்குகள் தரவுப் பாதுகாப்பு வாரியத்தாலும், நீதித்துறை வழக்குகள் நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்படலாம்.
டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்து, தரவுப் பாதுகாப்பு வாரியம் ஒன்றை அமைத்து, இணையத் தளங்களும் அதற்குக் கட்டுப்படும் வரை, இந்தத் தீர்ப்பு கொள்கை அளவிலான அறிவிப்பாக மட்டுமே இருக்கும். கருத்துச் சுதந்திரம் (Freedom of Expression) மற்றும் வெளிப்படையான நீதி ஆகியவற்றுக்கு இடையிலான மோதல் என்பது உண்மையான ஒன்றாகும். எனவே, இந்த இரண்டு உரிமைகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் நிறுவனங்களை உருவாக்குவதே இனி மேற்கொள்ள வேண்டிய முக்கிய உருவாக்குவதே முக்கியப்பணியாகும்.
ஜி. எஸ். பஜ்பாய், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார். அவர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் ஆய்வாளரான விபூதி ஷர்மாவின் உதவியை ஏற்றுக்கொள்கிறார்.
Original article : What is the right to be forgotten? -G S Bajpai