மகாராஷ்டிர மழை: இந்த ஜூலை மாதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏன் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான மழை பெய்தது? -அஞ்சலி மாரார்

 மழைக்காலத்திலும் மற்றும் ஆண்டு முழுவதுமே மழைப்பொழிவு கணிசமாக அதிகரித்துவரும் ஒரு சில இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். மேற்குக் கடற்கரையில் உள்ள கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் மிகக் கடுமையான மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில், லோனாவாலா (Lonavala), மகாபலேஷ்வர் (Mahabaleshwar), தாம்ஹினி (Tamhini), பீரா (Bhira) மற்றும் மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி மலைத்தொடர்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல இடங்களில் மூன்று                 24 மணி நேரத்திற்குள் 600 மில்லி மீட்டருக்கும் (600 mm) அதிகமான வழக்கத்திற்கு மாறான, கடுமையான மழை பெய்தது. இதனால் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.


மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே ஒரு முக்கியமான பொருளாதாரரீதியாக மிக முக்கியமான இணைப்பாக விளங்கும் லோனாவாலாவின் (Lonavala) சில பகுதிகள் தற்காலிகமாக முடங்கின. இப்பகுதிகளில் பெரும்பாலானவை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதோடு, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன. மேலும், இப்பகுதிகள் கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளாகச் செயல்படுவதால், பிராந்தியத்தின் நீர் ஆதாரங்களுக்கும் இவை மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த நதிப் படுகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இவை மேற்கு மகாராஷ்டிராவின் கீழ்நிலை பகுதிகளுக்குத் தேவையான தண்ணீரை வழங்குகின்றன.



அப்படியானால், இவ்வளவு தீவிர மழைக்கு என்ன காரணம்? 


48 மணி நேரத்தில் 1000 மி.மீ-க்கு மேல் மழை


இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)), 24 மணி நேரக் கால அளவில் 204 mm முதல் 244.5 mm வரையிலான மழையை மிகவும் பலத்த மழை (Extremely heavy rain) என்றும், 244.5 mm-க்கு மேல் பெய்யும் மழையை அசாதாரணமான அதீத மழை (Exceptionally high rain) என்றும் வகைப்படுத்துகிறது. இந்த அதீத மழையானது, அந்த வானிலை மையத்தில் இதற்கு முன்பு பதிவான மிக அதிகபட்ச மழையின் அளவை நெருங்குவதாக இருக்கும்.


ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலான தேதிகளில், மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இத்தகைய அசாதாரணமான அதீத மழை பதிவாகியுள்ளது. லோனாவாலா (Lonavala), பீரா (Bhira) மற்றும் மஹாபலேஷ்வர் (Mahabaleshwar) ஆகிய இடங்கள் இதற்கு முன்பு இருந்த அனைத்து மழைப் பதிவுகளையும் முறியடித்து, வரலாறு காணாத மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. இந்த 48 மணி நேரத்தில், வழக்கமான அளவைவிட சுமார் 60 முதல் 160 விழுக்காடு வரை கூடுதல் மழை பெய்துள்ளது: லோனாவாலா (1290 mm, +161%), பீரா (1121 mm, +73%), தம்ஹினி (1110 mm, +125%), ஷிர்கான் (960 mm, +58%) மற்றும் மஹாபலேஷ்வர் (916 mm, +100%).


பருவமழையைத் தீவிரமான நிலைக்குக் கொண்டு சென்ற பல சாதகமான வானிலை சூழல்களே இத்தகைய பெருமழைக்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மத்திய இந்தியப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, பின்னர் அது ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்றை ஈர்த்தது.


மேலும், பருவமழைக் காலத்தில் பொதுவாகக் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியான 'பருவமழைத் தொட்டி' (Monsoonal trough) அமைந்திருந்த இடமும், மேற்கு கடற்கரைக்கு இணையாக நீண்டிருந்த மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் ஒன்றாகச் சேர்ந்து, மேற்கு மகாராஷ்டிராவில் இத்தகைய கனமழை பெய்வதற்குக் காரணமாக அமைந்தன.


புவியியல் அமைப்புடன் தொடர்புடைய பிராந்திய மழைப்பொழிவு


புவியியல் அமைவிடம் மற்றும் நில அமைப்பு — அதாவது மலைகள் மற்றும் மலைப்பகுதிகளின் உயரம், வடிவம் மற்றும் அவை அமைந்துள்ள விதம் — அதன் வானிலையை, முக்கியமாகத் தென்மேற்குப் பருவமழைக்கால மழையளவை வலுவாகத் தீர்மானிக்கிறது.


அரபிக்கடலில் வானிலைச் சூழல் தீவிரமாகவும் சாதகமாகவும் இருக்கும்போது, புனே, ராய்காட், சதாரா மற்றும் சஹ்யாத்ரி மலைத்தொடர்களுக்கு உட்பட்ட மலைப்பகுதி கிராமங்களில் மிகக் கடுமையான மழை பெய்யும். இந்தப் பகுதிகள் பொதுவாக ஆண்டுக்கு 100 சென்டிமீட்டருக்கும் (100 cm) அதிகமான மழையைப் பெறுகின்றன. இதில் கடலோர மாவட்டங்களான தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகியவற்றுடன், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள புனே, சதாரா மற்றும் கோலாப்பூரின் மேற்கு மலைப்பகுதிகளும் அடங்கும்.


புவியியல்ரீதியாக, காற்றின் திசையை நோக்கியுள்ள பகுதி (Windward side), காற்றிற்கு மறைவாக உள்ள பகுதியைவிட (Leeward side) மிக அதிகமான மழையைப் பெறுகிறது. புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 1981-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மத்திய மகாராஷ்டிராவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையே ஜூலை மாத மழையளவில் காணப்படும் இந்த மிகப்பெரிய வேறுபாட்டிற்கு மலைகளின் தாக்கமே முக்கியக் காரணமாகும். இந்த மலைகளின் தாக்கம், மழை மறைவுப் பிரதேசத்தின் குறிப்பிட்ட தூரம் வரை மழையளவைக் கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவில் மழைப்பொழிவு கணிசமாக அதிகரித்துவரும் ஒரு சில மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் கடுமையான மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பால்கர் (Palghar) மாவட்டத்தில் பருவமழைக் காலத்திலும் சரி, ஒட்டுமொத்த ஆண்டின் பிற நாட்களிலும் சரி மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பதிவாகியுள்ளது. ‘Observed Monsoon Rainfall Variability and Changes during Recent 30 Years (1989–2018)’ என்ற அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தொடர் கனமழை நிகழ்வுகளும் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. 


வரலாற்றுப் பதிவுகள்


மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மிகவும் அதிக மழையைப் பெறக்கூடிய மாதங்களான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், குறிப்பாக இந்த இடங்கள் பலவற்றில் மிகக் கடுமையான கனமழை என்பது வழக்கமான ஒன்றுதான்.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழைப்பொழிவுப் பதிவுகளின்படி (1941-1990), லோனாவாலா (Lonavala) பகுதி தன் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 1990-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஒரே நாளில் 578 மில்லிமீட்டர் மழையைப் பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில், மஹாபலேஷ்வர் (Mahabaleshwar) பகுதி 1896-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி ஒருநாள் அதிகபட்ச மழைப்பொழிவாக 458 மில்லிமீட்டரையும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பீரா (Bhira) பகுதி 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி 713 மில்லிமீட்டரையும் பதிவு செய்துள்ளன.


தாம்ஹினியில் (Tamhini) வழக்கமான வானிலை ஆய்வு மையக் கண்காணிப்புகள் இல்லாததால், பிற ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அங்கு பதிவான மிக அதிகமான 24 மணி நேர மழையளவு 695 மில்லிமீட்டர் என்றும், மிக அதிகமான 3 நாள் மழையளவு 1055 மில்லிமீட்டர் (1975-2013 காலகட்டத்தில்) என்றும் கூறப்படுகிறது. இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஆராய்ச்சியாளர்கள் தாம்ஹினியில் இந்தக் காலகட்டத்தில் பெய்த மழையை ஆய்வு செய்தனர். இந்த இடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பகுதியில் (Leeward side) அமைந்திருந்தபோதிலும், அங்கு பெய்யும் மழையானது மழைப்பொழிவுப் பகுதியில் (Windward side) உள்ள பல இடங்களைவிட அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வின்படி, தாம்ஹினி (Tamhini) பகுதியின் மழையளவு தீபகற்ப இந்தியாவின் (Peninsular region) வடபகுதியில் முதலாவது இடத்திலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் 5-வது இடத்திலும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.


மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஜூலை மாதத்தில்  தாம்ஹினி பகுதியின் சராசரி மழையளவு 2658 மில்லிமீட்டர் (mm) ஆகும். இது உலகின் மிக அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிரபுஞ்சியின் (Cherrapunji) ஜூலை மாத மழையளவுக்கு (2876 மி.மீ) மிக நெருக்கமாக உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளமான இப்பகுதியில் ஜூலை மாதத்தில் மிக அதிக சராசரி மழை பெய்யக்கூடிய இதுபோன்ற இடங்கள் இன்னும் பல உள்ளன: அவை, ஷிர்கான் (1953 மி.மீ), அம்பாவானே (2113 மி.மீ) மற்றும் தாவ்டி (2219 மி.மீ) ஆகியவை ஆகும்.


Original article : Maharashtra rain: Why the Western Ghats received historically high rainfall this July. -Anjali Marar

Share: