6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பொது சுகாதார அளவீடுகள் விடுபட்டிருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? -ரித்விகா பட்கிரி

 6-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS), ரத்த சோகை, சுகாதாரம் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தூய்மையான எரிபொருள் உள்ளிட்டவை தொடர்பான குறியீடுகளை நீக்கியுள்ளது. இந்தக்குறியீடுகள் நீக்கப்படுவது, இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் நிலையை மதிப்பிடும் திறனை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இரத்தசோகை (anaemia) நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. வரையறையின்படி, இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையே இரத்தசோகை ஆகும். இது குழந்தைகள் மற்றும் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை விகிதாசாரமின்றி பாதிக்கிறது. சத்தான உணவு இல்லாததால் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடே இரத்தசோகைக்கு பொதுவான காரணமாக கூறப்படுகிறது.


இருப்பினும், 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, இரத்தசோகை, சுகாதாரம் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் தொடர்பான குறியீடுகளை நீக்கியுள்ளது. முந்தைய NFHS தரவுத்தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த மொத்தம் 43 முக்கியக் குறியீடுகள் 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில்  நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட குறியீடுகளில், இரத்தசோகை மதிப்பீடுகள், குழந்தைகளின் இறப்பு விகிதம், பிறப்பின்போது ஏற்படும் பாலின விகிதம், சுகாதாரம் மற்றும் சமையலுக்குச் தூய்மையான எரிபொருள் கிடைப்பது போன்ற சுகாதாரம் மற்றும் சுகாதார வசதி சார்ந்த அளவீடுகள் இடம் பெற்று இருக்கும்.


கொள்கை வகுப்பவர்களுக்கு நம்பகமான தரவுகள் முக்கியமானவை என்பதால், இந்தக் குறிகாட்டிகளைத் தவிர்ப்பது இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டின் நிலையை மதிப்பிடும் திறனை எவ்வாறு கட்டுப்படுத்தக்கூடும்? இந்தக் கேள்விக்குள் ஆழமாகச் செல்வதற்கு முன், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) குறித்து ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.


தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) தரவுத்தொகுப்புகளின் முக்கியத்துவம்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு அல்லது NFHS, கருவுறுதல், குடும்பக் கட்டுப்பாடு, தாய் மற்றும் குழந்தை நலன், இனப்பெருக்க நலம், ஊட்டச்சத்து, இரத்தசோகை போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது. NFHS கணக்கெடுப்புகளின் வரலாறு, இந்தியாவின் சமூகநலத் துறை வளர்ச்சி குறித்த விவாதங்களின் நீண்ட பாரம்பரியத்தைப் காட்டுகிறது.


1992-ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS), அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமை (United States Agency for International Development (USAID)) தனது மக்கள்தொகை மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பு (Demographic and Health Survey (DHS)) திட்டத்தின்கீழ் செயல்படுத்தும் உலகளாவிய கணக்கெடுப்புத் தொடரின் ஒரு பகுதியாகும்.


1992-93 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் சுற்று (NFHS-1), சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மேற்பார்வையின்கீழ் நடத்தப்பட்டது. அந்த அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மக்கள்தொகை ஆய்வுக் கழகம் (Indian Institute of Population Studies (IIPS)), இந்தக் கணக்கெடுப்பிற்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்பட்டது.


தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தேசிய மற்றும் மாநில அளவிலான கருவுறுதல் விகிதம் (fertility), குடும்ப அளவு குறித்த விருப்பங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் பற்றிய தரவுகளை உருவாக்கியது. இந்தத் தரவுத்தளத்தின் நோக்கம், குடும்ப நலத் திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கைகளின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வடிவமைப்பாளர்களும் மதிப்பிட உதவுவது ஆகும்.



1998-99-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 2-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, இனப்பெருக்க ஆரோக்கியம், பெண்களின் தனிஉரிமை, குடும்ப வன்முறை, பெண்களின் ஊட்டச்சத்து, இரத்தசோகை மற்றும் உப்பு அயோடின் கலத்தல் உள்ளிட்ட சில புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட தலைப்புகளைச் சேர்த்தது. முக்கியமாக முதல் கட்டத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இரண்டாம் கட்டத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொக்ரான் சோதனைகள் அதனைத் தாமதப்படுத்தின.


Pokhran சோதனைகள் என்றால் என்ன?

பொக்ரான் அணு சோதனைகள் (Pokhran Tests) என்பது, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் மேற்கொண்ட அணு ஆயுதச் சோதனைகளை பற்றி குறிப்பதாகும்.


2005-06-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 3-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு, இதே போன்ற சிக்கல்களைத் தொடர்ந்ததுடன், குடும்பக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள் மற்றும் உடல்நலம் குறித்த ஆண்களுக்கான கேள்விகளை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், குடும்ப வன்முறையை (Domestic Violence) அளவிடுவதற்காக 3-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறை, 2-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட முறையுடன் ஒப்பிடும்போது அளவில் வேறுபட்டதோடு விரிவானதாகவும் இருந்தது.


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 2015-16-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 4-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு, 2019-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு மற்றும் 2023-24-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு போன்ற ஆய்வுகளும் அதே மரபைப் பின்பற்றியுள்ளன. பல ஆண்டுகளாக, தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகள் கருவுறுதல் போக்குகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் தாய்-சேய் நலம் ஆகியவை குறித்த முக்கிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன.



“கருவுறுதல் நெருக்கடி” (fertility crisis) குறித்த விவாதங்களுக்கு மாறுதல்


இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் கருவுறுதல் குறித்த விவாதங்கள் இப்போது "கருவுறுதல் நெருக்கடி" (fertility crisis) என்ற திசையை நோக்கி நகர்ந்துள்ளன. உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதங்கள் (Fertility rates) குறைந்துள்ளன. 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)), ஒரு பெண் தனது வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.0 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. இது மக்கள் தொகையைச் சமநிலையில் தக்கவைக்கத் தேவையான 2.1 என்ற அளவைவிடக் குறைவானதாகும். ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறை சரியாக அழைத்து செல்ல தேவைப்படும் எண்ணிக்கையே 'சமநிலைத் தக்கவைப்புக்கான  (replacement level TFR) எண்ணிக்கை ஆகும்.


இந்தியாவின் நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.6 ஆகவும், கிராமப்புறங்களில் 2.1 ஆகவும் உள்ளது. இருப்பினும், இதில்  மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் முறையே  2.7 மற்றும் 2.2 ஆகவும், அதே சமயம் அசாம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இது முறையே 1.6 மற்றும் 1.8 ஆகவும் உள்ளது.


மேலும், இளமைபருவ கருவுறுதல் (Adolescent Fertility) இன்னும் ஒரு முக்கியமான கவலைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, 15–19 வயதுடைய பெண்களில் 6.7% பேர் கணக்கெடுப்பு நடைபெற்ற நேரத்தில் ஏற்கனவே தாய்மார்களாக இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். இது 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் பதிவான 6.8%-லிருந்து மிகச் சிறிய அளவிலான குறைவாகும். இருப்பினும், 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பை போல் இல்லாமல், 6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுத் தாளில் 15-19 வயதுடைய பெண்களுக்கான பதின்பருவ கருவுறுதல் விகிதம் குறித்த நேரடித் தகவல்கள் இடம்பெறவில்லை.




'கருவுறுதல் சார்ந்த நெருக்கடி' (fertility crisis) என்பது கட்டாயம் பிறப்பு விகிதக் குறைவு பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாறாக, மக்கள் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெறுவதற்கோ அல்லது தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கோ இடையூறாக உள்ள தடைகள் இதில் அடங்கும். கருக்கலைப்புக்கான உரிமை உள்ளிட்ட பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்துவரும் அதே வேளையில், கருவுறுதல் குறித்த விவாதங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குறைந்து வரும் ஊதியங்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவின் அதிகரிப்பு போன்ற சிக்கல்களும் முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.


குழந்தை மற்றும் மகப்பேறு ஆரோக்கியம்


6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தகவல் அறிக்கை, குழந்தை மற்றும் தாய் நலன் குறித்த முக்கிய தகவல்களையும் வழங்கியுள்ளது. நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவாக, தங்கள் வயதுக்கு ஏற்ற உயரமின்றி இருக்கும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம், 2019-21-ஆம் ஆண்டுகளில் 35.5%-ஆக இருந்து தற்போது 29.3%-ஆகக் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. மேலும், குறைந்த எடையுடன் உள்ள குழந்தைகளின் விகிதம் 32.1 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இருப்பினும், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் நிலவுகின்றன. நகர்ப்புற இந்தியாவை (23.9%) விட கிராமப்புற இந்தியாவில் (30.9%) வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், இந்த விகிதங்கள் முறையே 35.6% மற்றும் 35%-ஆக அதிகமாகவே உள்ளன.


6-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, அதே காலகட்டத்தில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 88.6%-லிருந்து 90.6%-ஆக அதிகரித்துள்ளன. அதேபோல், 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் விகிதம் (immunisation) 83.8%-லிருந்து 87.1%-ஆக உயர்ந்துள்ளது.


இந்தப் புள்ளிவிவரங்கள் முன்னேற்றத்தைக் காட்டினாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. 4-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் 58.6% ஆகப் பதிவான நிலையில், 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில், ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 67% பேர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களைப் பொறுத்தவரை, 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் இந்த விகிதம் 57%-ஆக இருந்தது.


மேலும், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகையால் (anaemic) பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் ரத்தசோகை தொடர்பான 7 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அவை அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. 6 முதல் 59 மாத வயதுடைய குழந்தைகள், 15 முதல் 49 வயதுடைய கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத பெண்கள், 15 முதல் 49 வயதுடைய அனைத்துப் பெண்கள், 15 முதல் 19 வயதுடைய இளம் பெண்கள், 15 முதல் 49 வயதுடைய ஆண்கள் மற்றும் 15 முதல் 19 வயதுடைய இளம் ஆண்கள் ஆகியோரிடையே இரத்த சோகையின் பரவல் குறித்த குறியீடுகள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.


இரத்தசோகையின் தொடர்ச்சி மற்றும் அரசாங்கத்தின் பதில்


முன்பே குறிப்பிட்டதுபோல, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ரத்தசோகை பாதிப்புக்குள்ளான மக்களைக் கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருந்துவருகிறது. இரத்தசோகை தொடர்ந்து நிலவுவதற்குப் பல்வேறு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து மற்றும் இரத்தசோகை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எண்ணற்ற கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன அவற்றுள் சில:







1. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


2.  மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Scheme) தொடங்கப்பட்டது.


3. 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான விரிவான திட்டம் (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment (POSHAN)) தொடங்கப்பட்டது


4. இரத்தசோகை இல்லாத இந்தியா (Anaemia Mukt Bharat programme) திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


இது போன்ற முயற்சிகள் நடைபெற்ற போதிலும், இந்தியாவில் நலிவடைந்த குழுக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்கிறது. சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான பொதுச் செலவினக் குறைப்பு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், மதிய உணவுத் திட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்களைச் சேர்ப்பது குறித்த சமீபத்திய விவாதங்கள், சத்தான உணவுப் பொருட்களின் நுகர்வு குறைவதையே குறிக்கின்றன. மேலும், குடும்பங்களுக்குள் நிலவும் பாலின அடிப்படையிலான படிநிலைகளும் சத்து அதிகமாக கொண்ட உணவுப் பொருட்கள் சமமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கும் நுகரப்படுவதற்கும் காரணமாக அமைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கின்றன.


இந்த முயற்சிகளுடன், இரத்தசோகையை எதிர்கொள்ள இரும்புச்சத்து போன்ற தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நுண் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு அரிசியைச் செறிவூட்டும் முறையையும் அரசு அதிகமாக நம்பியிருந்தது. இருப்பினும், நுகர்வோர் விவகாரங்கள், 2026-ஆம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் பிப்ரவரி மாதம் இந்தத்திட்டத்தை நிறுத்தியது. அரிசியில் இரும்புச்சத்தைச் சேர்ப்பது அறிவியல் பூர்வமற்றது, பயனற்றது மற்றும் வீணானது என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பல பாரம்பரிய அரிசி வகைகள் அதிக சத்துக்களையும் இரும்புச்சத்தையும் கொண்டவை. எனவே, இந்தியாவின் ஊட்டச்சத்து சார்ந்த சவால்களை எதிர்கொள்ள ஒரு பரந்த கொள்கை அணுகுமுறை தற்போது  தேவைப்படுகிறது.

தூய்மையான சமையல் எரிபொருளைப் பெறுதலின் சமூக-பொருளாதாரப் பரிமாணங்கள்


மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் ஆகியவற்றை வீட்டு அளவில் பெறுவது தொடர்பான குறியீடுகள் சமீபத்திய தரவுத் தொகுப்பிலிருந்து விடுபட்டுள்ளன. 5-வது தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவில் 58.6% குடும்பங்களே சமையலுக்கு தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்தின. இதில், கிராமப்புறங்களில் இந்த விகிதம் 43.2% மட்டுமே இருந்தது. நன்கு படித்த மற்றும் இளைய வயதுடைய குடும்பத் தலைவர்களைக் கொண்ட, சிறிய குடும்ப அளவு மற்றும் அதிகச் செல்வ வளம் கொண்ட நகர்ப்புறக் குடும்பங்கள் தூய்மையான சமையல் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


சமையல் எரிபொருள் பயன்பாட்டிலும் சாதி மற்றும் பொருளாதாரரீதியிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தரமற்ற அல்லது முறைசாரா சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்தும் அபாயத்திற்கு அதிகமாக உள்ளன. தூய்மையற்ற சமையல் எரிபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏறபடுத்துகிறது. இந்தப்பிரச்சினைகளால் பெண்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் சமையலில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) போன்ற திட்டங்கள்   செயல்படுத்தப்பட்டுள்ளன


சுகாதாரத்தைப் பொறுத்தவரை, 5-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, மக்கள்தொகையில் 70% மட்டுமே மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியைப் பயன்படுத்தும் வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், இந்தக் குறிக்காட்டி  6-வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள்தொகையின் விகிதம் 95.9%-இலிருந்து 96.5%-ஆக அதிகரித்துள்ள போதிலும், சுகாதாரம் குறித்த விடுபட்ட தரவுகள் முக்கிய குறைபாடாக உள்ளது.


விடுபட்ட தரவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை


அதே நேரத்தில், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் எச்சரிக்கையுடன் அணுகுவது முக்கியமான நடவடிக்கையாகும். உதாரணமாக, கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பதும் அல்லது அவற்றை அணுகும் வசதி இருப்பதும், அவை உண்மையில் பயன்படுத்தப்படுகின்றன என்று பொருள்படாது என்று சான்றுகள் கூறுகின்றன. அரசாங்கத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் பாதிப்படைகின்றன அல்லது புதுப்பிக்கப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், ஒரு குடும்பத்தின் கல்வி, தொழில் மற்றும் வயது ஆகியவை கழிப்பறைகளின் பயன்பாட்டில் முக்கியப்பங்கு வகிக்கக்கூடும் என்பதையும் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.


சுருக்கமாக, இரத்தசோகை, சுகாதாரம் மற்றும் தூய்மையான சமையல் எரிபொருள் குறித்த முக்கியக் குறிகாட்டிகள் விடுபட்டிருப்பது, இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டின் நிலையை மதிப்பிடும் நமது நாட்டின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. கொள்கை வகுப்பவர்களுக்கு நம்பகமான தரவுகள் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக, இரத்தசோகையின் பாலின மற்றும் சமூகத் தன்மை காரணமாக, அதைக் மேம்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இந்தக்காலத்தில், பிரிக்கப்பட்ட சாதி-வகுப்புத் தரவுகள் கொள்கை வகுப்பவர்களுக்குச் சிறந்த தகவல்களை வழங்கும். சுகாதார வசதி மற்றும் சமையல் எரிபொருள் தொடர்பான விவாகரங்களிலும் இது போன்ற ஒரு நடைமுறையை பொருந்தும்.


Original article : What are the potential implications of missing public health metrics in NFHS-6? -Ritwika Patgiri

Share: