இந்திரா முனை: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கலங்கரை விளக்கத்தைப் பாதுகாக்கவும், ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் ஒன்றிய அரசு ஏன் விரும்புகிறது? -நிகில் கனேகர்

 அந்தப் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட பணி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் அமைந்திருப்பதால், இதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.


மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்திரா முனை (Indira Point) மற்றும் அங்குள்ள புகழ்பெற்ற கலங்கரை விளக்கத்தில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. ஸ்ரீ விஜய புரத்தில் (முன்னர் போர்ட் பிளேர் (Port Blair) என்று அழைக்கப்பட்டது) உள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகம் மூலமாக, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியைக் கோரி ஒன்றிய அரசு விண்ணப்பித்துள்ளது.


இந்திரா முனை என்றால் என்ன?


இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள கடைசி எல்லை இந்திரா முனை (Indira Point) ஆகும். இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் அமைந்துள்ளது. இது கடல்சார் போக்குவரத்தில் ஒரு முக்கியமான அடையாளமாகும். மேலும், இது கலாத்தியா வளைகுடாவிற்குத் (Galathea Bay) தெற்கே அமைந்துள்ளது. இந்த வளைகுடாவில்தான் கிரேட் நிக்கோபார் தீவு பெருந்திட்டத்தின்கீழ் ஒரு சர்வதேச சரக்கு மாற்று முனையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.


இந்திரா முனை கலங்கரை விளக்கம் சிங்கப்பூர்-கொழும்பு சர்வதேசக் கடல்சார் கப்பல் போக்குவரத்துப் பாதையில் உள்ள ஒரு முக்கியமான அடையாளமாகும். இது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய உதவுகிறது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சரக்கு மாற்று முனையம் கட்டி முடிக்கப்படும்போது, கலாத்தியா வளைகுடாவை நோக்கிவரும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, இந்திரா முனை பகுதியானது பிக்மேலியன் முனை (Pygmalion Point) என்று அழைக்கப்பட்டது. கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகத்தின் கூற்றுப்படி, 1985-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இதற்கு இந்திரா முனை என்று மறுபெயரிடப்பட்டது. ஏப்ரல் மாதம் 1972-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த இந்த கலங்கரை விளக்கம் 35 மீட்டர் உயரமுடையது; இது வார்ப்பிரும்பினால் (Cast iron) செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையங்கள் தீட்டப்பட்டு வடிமைக்கப்பட்டுள்ளது.




பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு முன்மொழிவு


துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான பொது இயக்குநரகம் மூலமாக, முதலில் இந்த கலங்கரை விளக்கத்தைப் பழுதுபார்க்கவும், அதன் பின்னர் அதைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.


இந்தக் கலங்கரை விளக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்கு அருகில் உள்ள கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது தொடர்பாகப் பல மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு முன்மொழிந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், கிரேட் நிக்கோபார் தீவிற்குச் சென்று, கலாத்தியா விரிகுடாவில் (Galathea Bay) முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கொள்கலன் மாற்று முனையத்தின் (International Container Transshipment Port (ICTP)) இடத்தை ஆய்வு செய்தார். அவர் இந்திரா முனை பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, தகுந்த சுற்றுலா வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் அதை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு யூனியன் பிரதேசம் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


பின்னர், இந்தத் திட்டத்திற்கு கடல்சார் பயணக் கருவிகளுக்கான மத்திய ஆலோசனைக் குழு (Central Advisory Committee of Aids to Navigation) ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment (EIA)) அறிக்கையின்படி, கடல்சார் பாதுகாப்புக்காகக் கலங்கரை விளக்கத்தைப் பாதுகாப்பதும், இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தைக் காப்பதும், வருங்கால தலைமுறையினருக்காக அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதுமே இந்த ஒப்புதலின் முக்கிய நோக்கங்களாகும்.





இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, கட்டுமானப் பணிகளில் கலங்கரை விளக்கத்தின் அடித்தளத்தைப் பழுதுபார்த்து வலுப்படுத்துதல், அனைத்துக் காலநிலைகளுக்கும் ஏற்ற அணுகுசாலை அமைத்தல், கோபுரத்தைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்க அலைதாங்கிகள் (Breakwaters) கட்டுதல் மற்றும் மின் உற்பத்தி நிலையம், ஆய்வு மற்றும் பணியாளர் குடியிருப்புகள், சுற்றுச்சுவர் மற்றும் உள்வழிகளைப் பழுதுபார்த்தல் ஆகியவை அடங்கும்.


மேலும், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றில் சூழல்-சுற்றுலா (Eco-tourism) வசதிகள், மாநாட்டு மையம், உணவகம், காட்சி கோபுரம் (Viewing tower), மிதிவண்டிப் பாதைகள், சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் மற்றும் ஒரு நினைவுச் சின்னக் கட்டடம் ஆகியவை அடங்கும்.


கடலோரப் பாதுகாப்பு மற்றும் அனுமதிகள்


முன்மொழியப்பட்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல (Island Coastal Regulation Zone (ICRZ)) அறிவிப்பு 2019-ன்கீழ் பாதுகாக்கப்படும் எளிதில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வருகின்றன. எனவே, இதற்கு அந்த யூனியன் பிரதேசத்தின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.


2019-ஆம் ஆண்டின் அறிவிப்பாணையானது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகள், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் மற்றும் மீனவர்கள் மற்றும் இதர கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வழங்குகிறது.


கடலோர மண்டல வரைபடங்கள் மற்றும் திட்ட முன்மொழிவின்படி, இந்த விவரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான முதல் பகுதிகளிலும் (ICRZ-IA), மேலும் சில பணிகள் தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான நான்காம் (ICRZ-IVA) பகுதிகளிலும் அமைகின்றன. இதில் தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான முதல் பகுதி (ICRZ-IA) என்பது சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியமான பகுதிகளாகும். இதில் அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், மணல் குன்றுகள், சேற்று நிலங்கள், தேசியப் பூங்காக்கள், கடல்சார் பூங்காக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட காடுகள், உப்பள சதுப்பு நிலங்கள் மற்றும் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் ஆகியவை அடங்கும். மற்றொரு பகுதியான தீவு கடலோர மண்டலத்தின் மிக முக்கியமான நான்காம் பகுதி (ICRZ-IVA) என்பது, கடலின் குறைந்த அலை மட்டக் கோட்டிலிருந்து கடல் நோக்கி 12 கடல் மைல்கள் வரையிலான நீர்ப்பரப்பு மற்றும் கடல் தரை பகுதிகளை உள்ளடக்கியதாகும்.


பாதுகாப்புப் பணிகள் ஏன் தேவைப்படுகின்றன?


காலப்போக்கில் ஏற்பட்ட வானிலை மாற்றங்களால் இந்த கலங்கரை விளக்கம் சேதமடைந்துள்ளது. இதனுடைய உள்கட்டமைப்புச் சிக்கல்கள், டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை உள்ளிட்ட பேரழிவோடும் தொடர்புடையவை ஆகும். இந்த இயற்கை பேரிடர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பெரிதும் பாதித்தது. இதனால் சில இடங்களில் நிலப்பகுதி மேலெழும்பியது, சில இடங்களில் நிலம் உள்வாங்கியது.


இந்த பேரிடரின்போது, இந்திரா முனை (Indira Point) பகுதியின் நிலப்பரப்பு நிரந்தரமாகவே கீழே மூழ்கியது. நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கு முன்பு, இந்த கலங்கரை விளக்கம் அமைந்திருந்த இடம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.5 மீட்டர் உயரத்தில் இருந்தது. நிலம் உள்வாங்கி, கடல் நீர் நிலப்பகுதிக்குள் புகுந்த பிறகு, இந்த கலங்கரை விளக்கத்தின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது. மேலும், அதற்கு அருகில் இருந்த குடியிருப்புகளும் அழிந்து போயின. நிக்கோபார் தீவுகள் சுமார் 2.04 மீட்டர் கீழே மூழ்கியதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இதனால் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதியும் கடல்நீருக்குள் மூழ்கின.


இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) நடத்திய ஆய்வின்படி, 2004-ஆம் ஆண்டு முதல் இந்த புவியியல் மற்றும் கடற்கரை மாற்றங்களால் கலங்கரை விளக்கத்தின் அடித்தளம் தொடர்ந்து கடல்நீரிலும், அதிக அலைகளின்போது பலத்த அலைகளின் தாக்குதலுக்கும் ஆளாகி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது 3.86 டிகிரி சாய்ந்துள்ளது, ஆனால் இது அதன் உள்கட்டமைப்பு நிலைத்தன்மைக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று கருதப்படுகிறது.


மேலும், கடற்கரை அரிப்பு, அலைகளின் வேகம் மற்றும் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்த கலங்கரை விளக்கமும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளன என்றும், இதனால் அஸ்திவாரத்தை வலுப்படுத்தும் பணிகள் அவசியமாகின்றன என்றும் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்களுக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


Original article : Indira Point: Why Centre wants to protect landmark lighthouse and develop tourism hub. -Nikhil Ghanekar

Share: