சட்லஜ் (Satluj) திரைப்படம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் உள்ள சட்டரீதியான கேள்விகள் குறித்து ... -ரிஸ்மி லியா எம்.

 ஒரு திரைப்படத்தை நீக்குமாறு ஓடிடி தளத்திற்கு (OTT platform) அரசாங்கம் சட்டப்பூர்வமாக உத்தரவிட முடியுமா? அதற்கான என்னென்ன சட்டப் பாதுகாப்புகள் உள்ளன? இந்தத் தடை உத்தரவை இரகசியமாக வைத்திருக்க முடியுமா? அதற்கான சட்டரீதியான தீர்வுகள் என்ன?


தற்போது வரையிலான நிலவரம் குறித்து : சட்லஜ் (Satluj) திரைப்படத்தை வெளியிட்ட உடனேயே ZEE5 தனது ஓடிடி தளத்திலிருந்து (OTT platform) சேவைகளை நீக்கியுள்ளது. அரசாங்கம்தான் இந்த நீக்கத்திற்கு உத்தரவிட்டது என திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின்கீழ் அப்படத்தை ஆய்வுசெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தடை உத்தரவு எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.


ZEE5 தளத்திலிருந்து சட்லஜ் திரைப்படம் ஏன் நீக்கப்பட்டது? இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?


ஹனி ட்ரெஹான் இயக்கி, தில்ஜித் தோசாஞ்ச் நடித்த 'சட்லஜ்' திரைப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துடனான (Central Board of Film Certification (CBFC)) கருத்து வேறுபாடு காரணமாக பல வருட தாமதங்களுக்குப் பிறகு, ஜூலை 3 அன்று ZEE5-ல் வெளியானது. இருப்பினும், வெளியான இரண்டு நாட்களுக்குள்ளேயே, இந்தத் தளம் தனது இந்தியத் தளத்திலிருந்து இப்படத்தை நீக்கியது. அதே வேளையில், 'ZEE5 Global' மூலம் சர்வதேச அளவில் இப்படத்தை ஒளிபரப்புவதைத் தொடர்ந்து மேற்கொண்டது.


“தற்போதைய நிகழ்வுகள்” காரணமாக திரைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ZEE5 பதிலளித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், அந்த ஸ்ட்ரீமிங் தளம் குறிப்பிட்டதாவது, “தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை ‘சட்லஜ்’ திரைப்படம் இந்தியாவில் கிடைக்காது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, கூடிய விரைவில் இப்படத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு மீண்டும் கொண்டுவர, பொருத்தமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”


பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. முதலில் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) தடைகளைச் சந்தித்தது. தகவல்களின்படி, படத்திற்குச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, இந்த வாரியம் மொத்தம் 127 காட்சிகளை நீக்கப் பரிந்துரைத்தது. இந்தத் தாமதங்கள் இறுதியில் தயாரிப்பாளர்களைப் பல வெளியீட்டுத் திட்டங்களை ஒத்திவைக்க நிர்பந்தித்தன. இதனால், இப்படம் திரையரங்குகளில் வெளியாகவே இல்லை.



பஞ்சாபில் கிளர்ச்சி நிலவிய காலகட்டத்தை மையமாகக் கொண்டு, செயற்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையாக இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது. 1980கள் மற்றும் 1990களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் கட்டாயக் காணாமல் போதல்கள், சட்டவிரோதக் காவலில் வைப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் (extrajudicial killings) குறித்த குற்றச்சாட்டுகளை இது ஆராய்கிறது.


ஒரு திரைப்படத்தை நீக்குமாறு ஓடிடி தளத்திற்கு அரசாங்கம் சட்டப்பூர்வமாக உத்தரவிட முடியுமா?


திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களைப் போலல்லாமல், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் உள்ளடக்கத்திற்கு, 1952-ம் ஆண்டின் திரைப்படச் சட்டத்தின் (Cinematograph Act) கீழ் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) இருந்து முன்-சான்றிதழ் பெறத் தேவையில்லை. மாறாக, ஓடிடி தளங்கள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகளின் (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.


இருப்பினும், தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் பிரிவு 69A, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, இந்தியாவின் தற்காப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவுகள் மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்கள், அல்லது தண்டனைக்குரிய குற்றம் நிகழ்வதைத் தடுப்பது உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக இணைய உள்ளடக்கத்தைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடுப்பதற்கு முன் அரசு சட்டப்பூர்வ நடைமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.





இணைய உள்ளடக்கத்தைத் தடுப்பதற்குமுன் என்ன சட்டப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகள் பொருந்தும்?


வழக்கறிஞரும் இணைய சுதந்திர அறக்கட்டளையின் (Internet Freedom Foundation) நிறுவனருமான அபர் குப்தாவின் கூற்றுப்படி, சட்லஜ் திரைபடத்திற்கு எதிரான நடவடிக்கை, தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 உடன் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும் பிரிவு 69A-இன் கீழ் தொடங்கப்பட்டிருந்தால், அரசாங்கம் சில "செயல்முறைகள் மற்றும் பாதுகாப்புகளை" பின்பற்ற வேண்டும். பிரிவு 69A(1)-ன்கீழ் உள்ள சட்டப்பூர்வ காரணங்களில் ஒன்றாக உள்ளடக்கம் எவ்வாறு அமைகிறது என்பதை விளக்கும் காரணங்களுடன் கூடிய எழுத்துப்பூர்வ உத்தரவு, வெளியீட்டாளர் தனது தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு மற்றும் நியமிக்கப்பட்ட குழுவின் மறுஆய்வு ஆகியவை இதில் அடங்கும் என்று குப்தா விளக்குகிறார்.


ஷ்ரேயா சிங்ஹால் vs இந்திய ஒன்றியம்-2015 (Shreya Singhal vs Union of India) வழக்கில், பதிவு செய்யப்பட்ட காரணங்கள் மற்றும் விசாரணைக்கான வாய்ப்பு உள்ளிட்ட இந்த நடைமுறைப் பாதுகாப்புகள் சட்டக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததால், உச்சநீதிமன்றம் பிரிவு 69A-ஐ உறுதி செய்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021-ன் சில பிரிவுகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை டெல்லி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரசாங்கம் இந்தப் பிரிவுகளை இன்னும் பயன்படுத்தும் முறைக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


தடை உத்தரவுகள் (blocking orders) இரகசியமாக வைக்கப்பட முடியுமா?


ஒரு உள்ளடக்கத்தை நீக்குவதற்கான உத்தரவுக்கான காரணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமா என்பது முக்கிய கேள்விகளில் ஒன்றாகும். தடை விதிகளின் (Blocking Rules) 16-வது விதியானது, இரகசியத்தன்மைக்கான ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்துகூட தடை உத்தரவுகளை மறைத்து வைக்க, அரசாங்கம் இந்தப் பிரிவை அதிகளவில் நம்பியுள்ளது. இரகசியமாக வைக்கப்படும் ஒரு முடக்குதல் உத்தரவை நீதிமன்றத்தில் அர்த்தமுள்ள வகையில் சவால் செய்ய முடியாது என்பதால், ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்சநீதிமன்றம் 69A பிரிவை உறுதிசெய்த அடிப்படையை இது பலவீனப்படுத்துகிறது.


தனுல் தாக்கூர் vs இந்திய ஒன்றியம்-2022 (Tanul Thakur vs Union of India) வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குப்தா சுட்டிக்காட்டுகிறார். அந்த வழக்கில், ஒரு கேலிச்சித்திர இணையதளத்தை உருவாக்கியவருக்கு எதிராக இரகசியத்தன்மை குறித்து வாதிட முடியாது என்பதை அங்கீகரித்து, முடக்குதல் உத்தரவு மற்றும் தீர்ப்புக்குப் பிந்தைய விசாரணை ஆகியவற்றை அந்த இணையதளத்தை உருவாக்கியவருக்கு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


தடை உத்தரவுக்கான அணுகல் இல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர்களால் அந்த முடிவை திறம்பட எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. மேலும், கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம்-2017 (K.S. Puttaswamy vs Union of India) மற்றும் அனுராதா பாசின் vs இந்திய ஒன்றியம்-2020 (Anuradha Bhasin vs Union of India) போன்ற தீர்ப்புகளில் வகுக்கப்பட்டுள்ள அரசியலமைப்புரீதியான விகிதாசாரச் சோதனையை இந்தத் தடை பூர்த்தி செய்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு நீதிமன்றங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதில்லை.


இந்த வழக்கு, ஓடிடி தளங்களின் ஒழுங்குமுறையில் ஒரு பரந்த மாற்றத்தைக் குறிக்கிறதா?


நடைமுறையில், இணையவழியில் திரைப்படங்கள் வெளியான பிறகு அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக நிர்வாகம் தனது தடுப்பு அதிகாரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. திரைப்படச் சட்டத்தின்கீழ் முன்-சான்றிதழ் பெறுவதிலிருந்து, பிரிவு 69A மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் மூலமான வெளியீட்டிற்குப் பிந்தைய நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஓடிடி தளங்கள் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) சான்றிதழின் வரம்பிற்குள் வராததால், இந்த நிர்வாகத் தடுப்பு அதிகாரங்கள், திரைப்படச் சான்றிதழுடன் தொடர்புடைய வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் இல்லாத ஒரு இணை தணிக்கை அமைப்பாகச் செயல்படும் அபாயத்தைக் கொண்டுள்ளன.


குப்தா குறிபிடுவதாவது, “நிர்வாகம், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இன் பிரிவு 69A மற்றும் பகுதி III-ஐ, சட்டப்பூர்வ தரநிலைகள், பொது விசாரணைகள் அல்லது மேல்முறையீட்டுத் தீர்வுகள் இல்லாத ஒரு மாற்றுத் தணிக்கை வாரியமாக மறுபயன்பாடு செய்துள்ளது.”


திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு என்னென்ன சட்டரீதியான தீர்வுகள் உள்ளன?


ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ் ஒரு நீதிப்பேராணை மனுவின் மூலம் உயர்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். அந்த உத்தரவு, அரசியலமைப்பின் 69A பிரிவுக்கு முரணானது என்றும், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் எந்தவொரு தொழிலையும் செய்வதற்கான அல்லது எந்தவொரு தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பின் 19(1)(a) மற்றும் 19(1)(g) பிரிவுகளை மீறுவதாகவும் கூறி சவால் விடுக்கலாம்.


குப்தாவின் கூற்றுப்படி, ஸ்ரேயா சிங்கால் வழக்கானது, உள்ளடக்கத்தைத் தடுக்கும் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்ற மறுஆய்வு கோரும் உரிமையை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தயாரிப்பாளர்கள் அந்தத் தடை உத்தரவின் விவரங்களை வெளிப்படுத்தக் கோருவதுடன், துறைகளுக்கு இடையிலான குழுவின் (Inter-Departmental Committee) விசாரணைகளில் தங்கள் ஆட்சேபனையைப் பதிவு செய்தவாறு பங்கேற்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்ப விதிகளின்கீழ் வழங்கப்பட்டுள்ள மறுஆய்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.


Original article : Legal questions behind the row over Satluj movie. -Rizmi Lia M.

Share: