காசியாபாத்தில் உள்ள கழிவுநீர் மாதிரி ஒன்றில் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் (vaccine-derived polio virus (VDPV)) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் என்றால் என்ன? இது இந்தியாவின் போலியோ- இல்லாத நிலையைப் பாதிக்குமா?
தற்போதைய செய்தி :
காசியாபாத்தில் கழிவுநீர் மாதிரியில் தடுப்பூசி வழி போலியோ வைரஸ் (VDPV) கண்டறியப்பட்டு ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில், ஜூன் 11-ஆம் தேதி அதிகாரிகள், 12 பகுதிகளில் உள்ள 30,000 வீடுகளை உள்ளடக்கிய விரிவான வீடு வீடாகச் சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஐந்து வயதுக்குட்பட்ட 2,590 குழந்தைகளைக் கொண்ட 5,421 வீடுகளை ஆய்வு செய்தனர்.
முக்கிய அம்சங்கள்:
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசித் திட்டங்களுக்குப் பிறகு, 2014-ஆம் ஆண்டில் இந்தியா காட்டுப் போலியோ வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் போலியோ வைரஸ் இல்லாத நாடு எனச் சான்றளிக்கப்பட்ட 11 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இருந்த போதிலும், ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பாக, கழிவுநீரில் வைரஸின் தடயங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2. காசியாபாத்தில் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கழிவுநீர் வலையமைப்பை ஆய்வு செய்து, 150,000 மக்கள் வசிக்கும் 12 பகுதிகளை அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் கண்டு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (National Centre for Disease Control (NCDC)) மற்றும் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) ஆகியவற்றின் மேற்பார்வையின்கீழ் தடுப்பூசிக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தினர்.
3. கண்டறியப்பட்ட இந்தத் தொற்று வகை பெரும்பாலும் வீரியம் அற்றது என்றும், இதுவரை தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வாரணாசி மற்றும் மேகாலயாவில் இதற்கு முன்னர் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
4. உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) போலியோ அல்லது போலியோமைலிடிஸ் நோயை, "முக்கியமாக சிறு குழந்தைகளைப் பாதிக்கும், மிக எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய்" என்று குறிபிடுகிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இது முக்கியமாக மலம் கலந்த நீர் அல்லது உணவு மூலமாகவும் (faecal-oral route) அல்லது அரிதாக அசுத்தமான நீர் அல்லது உணவு போன்ற பொதுவான இடங்கள் மூலமாகவும் பரவுகிறது. குடலில் அதிகரிக்கும் இந்த வைரஸ், அங்கிருந்து நரம்பு மண்டலத்தைப் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.
5. போலியோவின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்தில் விறைப்பு மற்றும் கை கால்களில் வலி போன்றவை அடங்கும். சில நேர்வுகளில், இந்நோய் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நிரந்தரமானது. போலியோவை குணப்படுத்தும் சிகிச்சை ஏதுமில்லை; தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.
6. இயற்கையான போலியோ வைரஸில் மூன்று வகைகள் உள்ளன. வகை 2 வைரஸ் செப்டம்பர் 2015-ல் ஒழிக்கப்பட்டது. வகை 3 வைரஸ் நவம்பர் 2012-க்குப் பிறகு கண்டறியப்படவில்லை என்பதோடு, அது அக்டோபர் 24, 2019 அன்று ஒழிக்கப்பட்டதாகச் சான்றளிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டின் நிலவரப்படி, வகை 1 இயற்கையான போலியோ வைரஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே தொடர்ந்து இருந்து வருகிறது.
தடுப்பூசியால் ஏற்படும் போலியோ தொற்று என்றால் என்ன?
தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் (vaccine-derived poliovirus) என்பது வாய்வழி போலியோ தடுப்பூசியில் (OPV) உள்ள வீரியம் குறைக்கப்பட்ட போலியோ வைரஸுடன் தொடர்புடைய ஒரு வகையாகும். 'போலியோ சொட்டு மருந்துகள்' பொதுவாகப் பாதுகாப்பானவை. இவை பெரும்பாலான நாடுகளில் நோய்த்தொற்றை வெற்றிகரமாக ஒழிக்க உதவியுள்ளன. ஆனால், அரிதான சூழல்களில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் இவை நோயை ஏற்படுத்தக்கூடும்.
2. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, போலியோ பரவலைத் தடுக்க 'உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சி' (Global Polio Eradication Initiative) இரண்டு வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது: செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசி (inactivated polio vaccine (IPV)) மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து (oral polio vaccine (OPV)). 1955-ல் டாக்டர் ஜோனாஸ் சால்க் உருவாக்கிய செயலற்ற போலியோ தடுப்பூசி, வாய்வழி போலியோ தடுப்பூசியைப் போல் இல்லாமல், மூன்று வகையான போலியோ வைரஸ்களின் செயலற்ற வைரஸ் வகைகளைக் கொண்டுள்ளது. இதில் தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் தொடர்பான ஆபத்து ஏதுமில்லை.
3. வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் (Christian Medical College Vellore (CMC)) முன்னாள் நச்சுயிரியல் (virology) துறை பேராசிரியரான டாக்டர் டி. ஜேக்கப் ஜான், வாய்வழி போலியோ தடுப்பு மருந்தால் இரண்டு வழிகளில் தடுப்பூசி தொடர்பான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று கூறினார்.
(i) சில சூழல்களில், வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்குப் பரவிக்கொண்டே இருக்கலாம். அப்போது, அது வேகமாகப் பரவும் திறனை மீண்டும் பெற்று, பரவும் ஒவ்வொரு முறையும் கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
(ii) தடுப்பூசியில் உள்ள வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் நாள்பட்ட நோய்த்தொற்றையும் ஏற்படுத்தக்கூடும். இது அவர்களின் குடல்பகுதியில் பல ஆண்டுகளாகப் அதிகரித்து, மெதுவாகக் கடுமையான நோயை உண்டாக்கும் திறனைப் பெறக்கூடும்.
4. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் (vaccine-derived polio virus (VDPV)) மிகவும் அரிதானவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களிடையே காணப்பபடுவதோடு, மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளிலும் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் உருவாகலாம்.
இந்தியா போலியோவை எவ்வாறு ஒழித்தது?
5. அக்டோபர் 24-ஆம் தேதி உலக போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1950-ஆம் ஆண்டுகளில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் என்பவரின் பிறந்தநாளை நினைவுப்படுத்தும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் இந்த தினம் உருவாக்கப்பட்டது. போலியோவுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.
6. அனைவருக்குமான போலியோ ஒழிப்பு முயற்சியின்படி, 2009-ஆம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இதுவே உலகில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். ஜனவரி 2011--ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இந்தியாவின் கடைசி போலியோ பாதிப்பு பதிவானது. இந்த மாற்றம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் ஒரு வெற்றிக் கதையாக அமைந்தது.
7. போலியோவுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கி, 1985-ல் நாடு முழுவதும் அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டம் (Universal Immunisation Programme (UIP)) என்று விரிவுபடுத்தப்பட்டது. போலியோவுக்காக, நாடு முழுவதற்கும் ஒரே நோய்த்தடுப்பு நாள் நிர்ணயிக்கப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. போலியோ சொட்டு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய்வழியாகக் கொடுக்க முடிந்தது ஒரு நன்மையாக இருந்தது. இதனால் சிறப்புப் பயிற்சி இல்லாமலேயே உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களால் அவற்றை வழங்க முடிந்தது.
8. 1995-ஆம் ஆண்டு, இந்தியா பல்ஸ் போலியோ (Pulse Polio) தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது. இதற்கு முன்பு, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதாரச் சபை (World Health Assembly), 2000-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் போலியோவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் துணை-தேசிய தடுப்பூசிச் செலுத்தும் போது (குறிப்பாக அதிக ஆபத்து உள்ள பகுதிகளில்) வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
9. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அறிக்கையின்படி, தொலைக்காட்சி தொடர்களின் (soap operas) செல்வாக்கைப் பயன்படுத்தி, போலியோ மற்றும் பிற சுகாதார விழிப்புணர்வு செய்திகள் அவற்றின் கதைக்களங்களிலும் அத்தியாயங்களிலும் இயல்பாக இணைக்கப்பட்டன.
10. உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத்தின்படி, வழக்கமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர, இந்தியா கடுமையான தளர்வாதக் கண்காணிப்பையும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது. இந்தச் சுற்றுச்சூழல் கண்காணிப்பில், மலத்தில் உள்ள போலியோ வைரஸைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து கழிவுநீர் மாதிரிகள் தவறாமல் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுகின்றன.
கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (Wastewater and Environment Surveillance (WES) )
1. கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (WES) என்பது, ஒரு தொகைக்குள் நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்காக, ஒழுங்கமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்பு அல்லது ஒழுங்கமைக்கப்படாத வடிகால்கள் மற்றும் ஓடைகள் வழியாகச் சேகரிக்கப்படும் சமூகக் கழிவுநீரைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு முறையாகும். இந்திய சுகாதார நிதியத்தின்படி, இந்தியாவில் கழிவுநீர் மூலம் நோய் கண்காணிப்பு, 2001-ஆம் ஆண்டில் போலியோவுக்காக மும்பையில் தொடங்கப்பட்டது.
2. கோவிட்-19-ஐக் கண்காணிப்பதில் கழிவுநீர் கண்காணிப்பு (Wastewater surveillance) ஒரு பயனுள்ள கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, நோயாளிகளுக்கு மருத்துவரீதியாக நோய் கண்டறியப்படுவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாகவே, கழிவுநீரில் அந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டது.
3. கழிவுநீர் கண்காணிப்பின் முக்கிய நன்மை, அது மருத்துவப் பரிசோதனையைச் சார்ந்திருப்பதில்லை. மருத்துவப் பரிசோதனை பரவலாக மேற்கொள்ளபடாதபோது அல்லது சில நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாலோ அல்லது அறிகுறிகளே இல்லாததாலோ அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. புதிதாக உருவாகும் தொற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிக முக்கியமானது. ஏனெனில், மனிதர்களிடையே நோயின் பரவல் குறைவாக இருக்கும்போதே அதை திறமையாக கட்டுப்படுத்த முடியும்.
Original article : Why is vaccine-derived poliovirus (VDPV) in news? -Khushboo Kumari