மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையவுள்ள நீர்மின் திட்டத்திற்கு (hydroelectric project) எதிரான போராட்டங்கள் இப்பொழுது புதிய வேகமெடுத்துள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், சராவதி நீரேற்ற மின் திட்டத்திற்காக (Sharavathi Pumped Storage Hydroelectric Project) வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க மண்டலமான 'சராவதி சிங்கவால் குரங்கு வனவிலங்கு சரணாலயத்தில்' இத்திட்டத்தை செயல்படுத்த மாநில வனவிலங்கு வாரியம் அளித்த அனுமதியை எதிர்த்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நீதிமன்ற உத்தரவு, 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை எதிர்த்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
கர்நாடக மின் கழகம் (Karnataka Power Corporation Limited (KPCL)) சராவதி நதிப் பள்ளத்தாக்கில் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த நதி அரபிக்கடலை அடைவதற்கு முன்னதாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாக சுமார் 130 கி.மீ தூரம் பாய்கிறது. ஏற்கனவே இந்த நதியின் குறுக்கே நான்கு முக்கிய மின் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், இது அந்த மாநிலத்தின் முதன்மையான நீர்மின் ஆதாரமாக (hydropower source) விளங்கி வருகிறது.
கர்நாடக மின் கழகம் (KPCL), ஒரு நாளைக்கு 18,000 மெகாவாட் வரை உயரும் உச்சகட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தத் திட்டத்தின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் (non-fossil fuel) திறனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு, மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)) தூய்மையான எரிசக்திக்கு மாறப் பரிந்துரைத்துள்ளதால் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருப்பினும், இத்திட்டத்திற்கான செலவு 2017-ஆம் ஆண்டில் சுமார் ₹4,800 கோடியாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ₹10,240 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், இந்தத் திட்டம் மாநில வனவிலங்கு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய வனவிலங்கு வாரியத்திடமிருந்து (National Board for Wildlife (NBWL)) கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தாலும், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (Forest and Environmental Clearances) இறுதி அனுமதிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள்
கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நிபந்தனைகளுடன் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. தொடக்கத்தில், கர்நாடக மின் கழகம் (KPCL) இந்தத் திட்டத்திற்காக 16,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை 7,000 முதல் 8,000 மரங்களாகக் குறைக்க வேண்டும் என்று வாரியம் பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஷிவமொக்கா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர்வாசிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல கூட்டங்களை நடத்தியுள்ள அவர்கள், இத்திட்டத்தினால் காடுகளுக்கும், அப்பகுதிக்கே உரிய 'சிங்கவால் குரங்கு' (Lion-tailed Macaque) போன்ற அழிந்துவரும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். சமீபகாலங்களில் பெய்த கனமழையின் போது நிலச்சரிவுகளை நேரில் கண்ட இப்பகுதி மக்கள், சுரங்கப்பாதை அமைப்பது தங்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர். மேலும், மின்சாரக் கம்பிகள் அமைப்பதற்காக கூடுதல் காடுகள் அழிக்கப்படலாம் என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அகிலேஷ் சிப்ளி உள்ளிட்ட மனுதாரர்கள், வனப்பகுதி அல்லாத செயல்பாடுகளைத் தடை செய்யும் சட்டங்களை இத்திட்டம் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF)) மண்டல அலுவலகத்தில் வனத்துறை துணை ஆய்வாளர் ஜெனரலாகப் பணிபுரியும் பிரனீதா பால் சமர்ப்பித்த கள ஆய்வு அறிக்கை, இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்கின்றனர். புதிய சாலைகளை அமைப்பதும், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்துவதும் பசுமை மாறா சதுப்பு நிலக்காடுகளை முற்றிலுமாக அழித்துவிடும் என்றும், மரங்களை வெட்டுவது சிங்கம் போன்ற வால் கொண்ட குரங்குகள் (lion-tailed macaques) மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அறிக்கையைத் தங்கள் வாதங்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா மின் கழகம் (KPCL) பிரதிநிதிகள், அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளின் சில இடங்களில் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசுவதற்காகக் கூட்டங்களை நடத்தினர். இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஒரு குழு அதிகாரி மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், எரிசக்தி உற்பத்திக்காக நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி, இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
தொடர்ச்சியான போராட்டம்
இருப்பினும், கர்நாடகா மின்கழகத்தின் முயற்சிகள் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கடும் எதிர்ப்பு நிலவிய காரணத்தால், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEF) அந்த இடத்தை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அனுப்பியது. அந்த நிபுணர் குழு அளித்த அறிக்கையில், இந்தத் திட்டத்தால் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நன்மைகளைவிட, அதனால் ஏற்படப்போகும் சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல், சூழலியல் மற்றும் சமூக பாதிப்புகளே மிக அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டரீதியான பின்னடைவுகளும், நிபுணர் குழுவின் எதிர்மறையான அறிக்கையும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பவர்களுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மின் கழகம் நீதிமன்றத்திலும், தேசிய வனவிலங்கு வாரியத்திலும் (NBWL) மேற்கொள்ளப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Original Link: Sharavathi Hydroelectric Project: The cost of energy transition