இராஜஸ்தானி மொழி தொடர்பான ஒரு வழக்கில், குழந்தைகள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் கல்வி பெறுவதை மறுக்க முடியாது என்றும், இது "ஒரு வசதி சார்ந்த விஷயம் அல்ல, மாறாக இருப்புரிமை சார்ந்த ஒரு விஷயம்" (not a matter of convenience, but a matter of existential rights) என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல ஆண்டுகளாக, இராஜஸ்தானின் பெரும்பகுதிகளில் உள்ள குழந்தைகள் தங்கள் வீடுகளில் மார்வாரி, மேவாரி, ஷேகாவதி, ஹரௌதி மற்றும் இராஜஸ்தானி மொழியின் பிற வடிவங்களைப் பேசி வளர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வகுப்பறைகளுக்குள் நுழையும்போது, அங்கு கற்பிக்கும் மொழி திடீரென மாறிவிடுகிறது. மே 12 செவ்வாயன்று, இந்த முரண்பாடு ஒரு அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
கல்வி நோக்கங்களுக்காக இராஜஸ்தானி மொழியை உள்ளூர் அல்லது பிராந்திய மொழியாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு கொள்கையை வகுக்குமாறு இராஜஸ்தான் அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், குழந்தைகள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் கல்வி பெறுவதை மறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒருவர் தனது சொந்த மொழியில் புரிந்துகொள்வதும், பிறரால் புரிந்துகொள்ளப்படுவதும் ஒரு வசதி சார்ந்த விஷயம் அல்ல, மாறாக அது இருப்புரிமை சார்ந்த ஒரு விஷயமாகும். ஏனெனில், சமூகத்திலும் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்கு, புரிந்துகொள்ளும் திறன் என்பது அவசியமாக முன்தேவையாக அமைகிறது," என்று குறிப்பிட்டது.
நவம்பர் 2024-ல், ஒரு பொதுநல மனுவை (PIL) தள்ளுபடி செய்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உயர்நீதிமன்ற உத்தரவில், மனுதாரர்கள் ஒரு "நடைமுறைப்படுத்தக்கூடிய சட்ட உரிமையை" நிலைநாட்டத் தவறிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு எதைப் பற்றியது என்பது குறித்த விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.
மனுவில் கோரப்பட்டவை என்ன?
மூன்றாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இராஜஸ்தானி மொழியைச் சேர்ப்பதற்கும், 'ஆசிரியர்களுக்கான இராஜஸ்தான் தகுதித் தேர்வு' (Rajasthan Eligibility Examination for Teachers (REET)) 2021-ல் அதை உள்ளடக்குவதற்கும், மேலும் தொடக்கக் கல்வியை இராஜஸ்தானி மொழியிலோ அல்லது அந்தந்தப் பகுதியின் உள்ளூர் மொழியிலோ கட்டாயமாக்குவதற்கும் கோரி மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இராஜஸ்தானி மொழி மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது. இது ஏற்கெனவே இராஜஸ்தானின் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் பட்டியலிடும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இது இடம்பெறவில்லை.
மாநில அரசின் தரப்பு வாதம் இங்குதான் நிலைபெற்றது. அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எனவே, இராஜஸ்தானியை பயிற்று மொழியாகவோ அல்லது ஆட்சேர்ப்புக்கான ஒரு பாடமாகவோ சேர்ப்பதற்கு எந்தக் கொள்கைக் கட்டமைப்பும் இல்லை, எந்தக் கடமையும் இல்லை என்று மாநில அரசு வாதிட்டது. 8-வது அட்டவணை எந்தெந்த மொழிகளுக்கு குறிப்பிட்ட அரசியலமைப்புப் பாதுகாப்புகள் கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பதால், பிற மொழிகளைப் பேசும் குழந்தைகளுக்காக ஒரு மாநிலம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான உச்சவரம்பை நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை.
உச்சநீதிமன்றம் இதை, அரசியலமைப்புச் சட்டக் கேள்வியைத் திறம்படத் தவிர்த்துவிடும் ஒரு தொழில்நுட்ப அடிப்படையின்மீது செயல்படும் "பொறுப்பற்ற பதில்" என்று குறிப்பிட்டது. பட்டியலில் இல்லாததை ஒரு காரணமாகக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது, "ஒரு கொள்கை இல்லாததை" சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகக் கருதுவதற்குப் பதிலாக, "தற்போதைய செயலற்றத் தன்மையை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணமாக" மாற்றிவிடுகிறது என்று நீதிமன்றம் கூறியது.
அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?
ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை, அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இராஜஸ்தான் மாநிலம் இப்பிரிவுகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசியலமைப்பின் 350A-வது பிரிவானது, "மொழிச் சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தொடக்கக் கல்வி நிலையில் (primary stage) தாய்மொழியில் கற்பிப்பதற்குப் போதுமான வசதிகளை ஒரு அரசு வழங்க வேண்டும்" என்று கோருகிறது. இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள ஒரு மாநிலத்தில், இராஜஸ்தானி பேசுபவர்கள் ஒரு மொழிச் சிறுபான்மையினர் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இந்தச் சட்டப்பிரிவு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பிற்குள் இராஜஸ்தானி பேசுபவர்கள் அடங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியலமைப்பு விதி 21A ஆனது, இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமையை உறுதி செய்கிறது. இதைத் தரமான கல்விக்கான உரிமையாக நீதிமன்றம் கருதியதுடன், ஒரு குழந்தையால் புரிந்துகொள்ள முடியாத கற்பித்தல் மொழியை இதற்குத் தகுதி பெறாது என்றும் தீர்ப்பளித்தது. மொழித் தடைகள் அல்லது அறிமுகமில்லாத பயிற்று மொழிகள் காரணமாக மாணவர்களால் போதுமான அளவு புரிந்துகொள்ள முடியாத அறிவுறுத்தலை, எந்தவொரு அர்த்தத்திலும் தரமான கல்வியாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
அரசியலமைப்பு விதி 19(1)(a)-இன் கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமைக்கு பரந்த பயன்பாடு வழங்கப்பட்டது. "மொழி என்பது கருத்து வெளிப்பாட்டிற்கான ஒரு கருவியாகத் திகழ்வதால், அதுவே ஒரு தனிநபரின் மிகச்சிறந்த அம்சமாக அமைகிறது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "சிந்தனைகள் வடிவம் பெறுவதற்கும், தனித்துவம் அங்கீகாரம் பெறுவதற்கும் அதுவே ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது."
மத்திய அரசால் வகுக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (NEP), குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலும், முன்னுரிமையாக எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கற்பிக்கப் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் நன்கு அறிந்த மொழியில் அடிப்படைக் கருத்துக்களை மிகவும் திறம்படப் புரிந்துகொள்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலும் உள்ள வகுப்பறைகளில் மொழித் தடைகளைக் களைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் இது கருத்தில் கொள்கிறது.
இராஜஸ்தானின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாட்டையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். ஏனெனில், அந்த மாநிலம் தனது பள்ளிப் பாடத்திட்டத்தில் குஜராத்தி, பஞ்சாபி மற்றும் சிந்தி மொழிகளைச் சேர்த்துள்ளது. இருப்பினும், இராஜஸ்தானி மொழியை மட்டும் அது விலக்கி வைத்துள்ளது. ஒரு மொழிக் குழு ஏன் சேர்க்கப்பட்டது, மற்றொன்று ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்குப் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை. இத்தகைய மாறுபட்ட அணுகுமுறை, அரசு பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ், 'தன்னிச்சையான செயல்' என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
முடிவடைந்த ஆசிரியர்களுக்கான இராஜஸ்தான் தகுதித் தேர்வு (REET) 2021 ஆட்சேர்ப்பு செயல்முறையை மீண்டும் தொடங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், கல்வியில் மொழி என்பது வெறும் "நிர்வாக வசதி அல்லது கற்பித்தல் விருப்பம்" (administrative convenience or pedagogical preference) சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது "அனைவரையும் உள்ளடக்குதல், அடையாளம் மற்றும் கற்றல் செயல்முறைக்கான அர்த்தமுள்ள அணுகல் ஆகியவற்றின் மிக அடிப்படையான அம்சம்" என்று மேலும் கூறியது.
அரசியலமைப்பு வாக்குறுதிகளுக்கும், களத்தில் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே உள்ள இடைவெளியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. "காகிதத்தில் மட்டுமே இருக்கும் ஒரு உரிமை, அதற்கேற்ற நிர்வாக விருப்பமோ அல்லது செயலாக்கமோ இல்லாமல் இருந்தால், அது உண்மையில் உரிமையே அல்ல" என்று அது கூறியது.
குழந்தை தனது தாய்மொழியில் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது குறித்து, 19(1)(a) பிரிவின்கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உத்தரவாதமானது, அர்த்தமுள்ள மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் தகவல்களைப் பெறும் உரிமையை உள்ளடக்கியது என்றும், தொடக்கப் பள்ளி நிலையில் இது குழந்தையின் சொந்த மொழியைக் குறிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.
இது, 'கர்நாடக அரசு vs ஆங்கில வழி தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த நிர்வாகம்' (State of Karnataka vs Associated Management of English Medium Primary and Secondary Schools) என்ற வழக்கில், 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மொழிச் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில், பயிற்று மொழியாகக் கன்னடத்தையே கட்டாயமாக்கும் மாநில அரசின் கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பில், "ஒரு குழந்தைக்கோ அல்லது அக்குழந்தையின் சார்பாக அதன் பெற்றோருக்கோ அல்லது பாதுகாவலருக்கோ, பள்ளிக் கல்வியின் தொடக்க நிலையில் அக்குழந்தை எந்தப் பயிற்று மொழியில் கல்வி கற்க விரும்புகிறதோ, அந்த மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திர உரிமை உள்ளது."
'கல்வி உரிமைச் சட்டம்-2009'-ன் பிரிவு 29(2)(f) ஆனது, "பயிற்று மொழியானது, இயன்றவரை, அக்குழந்தையின் தாய்மொழியாகவே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. குழந்தைகள் தங்களுக்குப் பரிச்சயமான மொழியில் அடிப்படைப் புரிதல்களை மிக எளிதாகப் பயின்றுக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வேற்று மொழியில் கற்பிப்பது "அக்குழந்தையின் அடிப்படை வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தையும், அக்குழந்தையிடம் ஒருவித அந்நியத்தன்மை அல்லது அச்ச உணர்வை உருவாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டவாறு, இச்சட்டப் பிரிவை ஒரு "முக்கியமான விதிமுறை" என்று வர்ணித்தது.
இறுதியாக, 'தேசியக் கல்விக் கொள்கை-2020'-ன் (NEP-2020) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தாய்மொழி சார்ந்த கல்வி குறித்த ஒரு விரிவான கொள்கையை வகுக்குமாறும், கல்வி நோக்கங்களுக்காக 'இராஜஸ்தானி' மொழியை ஒரு உள்ளூர் மற்றும் வட்டார மொழியாக அங்கீகரிக்குமாறும் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், தொடக்க நிலையில் பயிற்று மொழியாகவும், ஒரு பாடமாகவும் அம்மொழியைப் படிப்படியாக அறிமுகப்படுத்துமாறும் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
Original Link: How Supreme Court endorsed the right to be taught in one’s mother tongue?