இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது என்ன? -ஜேக்கப் கோஷி

பருவமழையின் முக்கிய மண்டலத்தில் அமைந்துள்ள 15 மாநிலங்கள், வட்டார அளவிலான முன்னறிவிப்புகளைப் பெறும் முதல் மாநிலங்களாக இருப்பது ஏன்?


தற்போதைய நிகழ்வு :


இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department(IMD)), பருவமழையின் வருகை குறித்த வட்டார அளவிலான புதிய முன்னறிவிப்புகளை முதன்முறையாக வழங்கும் ஒரு முறையை செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அமைப்பானது, 15 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தை உள்ளடக்கி, 3,196 வட்டாரங்களை (Blocks) உள்ளடக்கியுள்ளது. இது இந்தியாவின் சுமார் 7,200 வட்டாரங்களில் பாதிவானவையாகும். இதுவரை, பருவமழையின் தொடக்கம் குறித்த மதிப்பீடுகள் அதிகபட்சமாக மாநில அல்லது மாவட்ட அளவில் மட்டுமே கிடைத்து வந்தன.


இந்த நுணுக்கமான துல்லியம் ஏன் முக்கியமானது?


வழக்கமான மாவட்ட அளவிலான வானிலை முன்னறிவிப்பு, இந்தியப் பருவமழையின் ஒரு அடிப்படை அம்சமான, சீரற்ற தன்மையை மறைக்கிறது. பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமாக பருவமழை தொடங்கும் தேதிகளான மும்பைக்கு ஜூன் 10, டெல்லிக்கு ஜூன் 29 போன்றவை, பருவமழை ஒரு நகரம் அல்லது மாவட்டத்தின் எல்லையை அடைவதைக் குறிக்கின்றன. ஆனால், ஒரே மாவட்டத்திற்குள், பருவமழை அதிகாரப்பூர்வமாகத் "தொடங்கிய" பிறகும்கூட, பல வட்டாரங்களிலும் கிராமங்களிலும் மழை பெய்யாமல் இருக்கலாம். பயிர்களை எப்போது விதைப்பது என்று முடிவுசெய்யும் ஒரு விவசாயிக்கு, பருவமழை மாவட்டத் தலைமையகத்தை அடைந்துவிட்டது என்று தெரிந்திருந்தாலும், அந்த விவசாயியுடைய சொந்த வட்டாரப்பகுதி இன்னும் வறண்டு இருந்தால் அதனால் பெரியளவில் எந்த பயனும் இல்லை. இந்த இடைவெளியைக் குறைத்து, விவசாயிகள் தங்கள் விதைப்பு நேரத்தைத் திட்டமிட உதவுவதற்காகவே, மிகத் துல்லியமான உள்ளூர் முன்னறிவிப்புகள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) நீண்டகால இலக்காக இருந்து வருகின்றன


புதிய அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?


இந்த அமைப்பு முக்கியமாக இரண்டு முன்னறிவிப்பு மாதிரிகளைப் பயன்படுத்துவதுடன், அவற்றின் முடிவுகளைத் துல்லியமாக மேம்படுத்துவதற்காக ஒன்றிணைக்கப்படுகின்றன. கேரளாவில் பருவமழை தொடங்கும் நாளிலிருந்து, இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால வானிலை தரவுகள் மற்றும் உலகளாவிய வானிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, முன்பைவிட மிகவும் நுணுக்கமான அளவில் பருவமழையின் நகர்வைக் கணிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.


இந்த ஒருங்கிணைப்புக் கட்டமைப்பானது, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் (Indian Institute of Tropical Meteorology) உருவாக்கப்பட்டது. இது அடுத்த நான்கு வாரங்களுக்கான நிகழ்தகவு முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது.


இது ஏன் இந்த முறையில் உருவாக்கப்பட்டது?


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் குறிப்பிட்ட கோரிக்கையின் பேரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் தற்போதைய ஆலோசனை அமைப்பு, ஏறக்குறைய வாராந்திர முன்னறிவிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புதிய ஒருங்கிணைந்த கட்டமைப்பு, அந்த வழிமுறையுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஒரு புதிய வடிவத்திற்கு ஏற்ப மறுவடிவமைக்குமாறு அமைச்சகத்தைக் கேட்பதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கான அமைச்சகத்தின் தற்போதைய விநியோக முறைக்குப் பொருந்தும் வகையில் இந்திய வானிலை மையம் (IMD) இந்தத் தயாரிப்பை வடிவமைத்துள்ளது.



இந்தக் குறிப்பிட்ட 15 மாநிலங்கள் ஏன்?


இதில் உள்ளடக்கப்பட்டுள்ள மாநிலங்கள், வானிலை ஆய்வாளர்கள் பருவமழையின் முக்கிய மண்டலம் (monsoon core zone) என்று அழைக்கும் பகுதியின் அங்கமாக திகழ்கிறது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டபடி, இவை "பெரும்பாலும் மழையை நம்பி இருக்கும் மற்றும் தென்மேற்குப் பருவமழையின் இயக்கவியலுக்கு மிகவும் உணர்திறன் கொண்ட பகுதிகள்" ஆகும். மேலும், முன்னறிவிப்புப் பிழைகள் நேரடியாகப் பயிர் இழப்புகளாக மாறும் பகுதிகளும் இவைதான். இறுதியில், இந்தியா முழுவதும் வட்டார அளவிலான முன்னறிவிப்புகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். ஆனால், தற்போது பல மாநிலங்களில் கிடைப்பதைவிட கவனமான கண்காணிப்புத் தரவுகளின் வலையமைப்பு இதற்குத் தேவைப்படும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ரவிச்சந்திரன் கூறினார்.


அதன் முதல் பருவத்தில் இது எவ்வளவு சிறப்பாகச் செயல்படும்?


இந்த அமைப்பானது, இரண்டு சோதனைப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு இதற்கு ஒரு கடுமையான சோதனையாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) உலகளாவிய வானிலை மாதிரிகளும், ஜூலை மாதம் முதல் "இயல்பை விடக் குறைவான" மழைப்பொழிவை எதிர்பார்க்கின்றன. இந்த எல்-நினோ நிகழ்வானது, இந்தியாவில் பலவீனமான பருவமழையுடன் அடிக்கடி இணைந்து காணப்படுகிறது. வலுவான பருவமழையை முன்னறிவிப்பதை விட, ஒரு வட்டார (Block) அளவில் பலவீனமான மற்றும் சீரற்ற பருவமழையை முன்னறிவிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.


உத்தரப் பிரதேசம் குறித்த தனி அறிவிப்பு என்ன?


இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), உத்தரப் பிரதேச மாநிலத்திற்காகவே பிரத்யேகமாக ஒரு 10-நாள்கொண்ட பருவமழை முன்னறிவிப்பு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதிரி 1 கி.மீ துல்லியத் தெளிவுத்திறனில் செயல்படுகிறது. அதாவது, மிக நுணுக்கமான அளவில் வானிலை சார்ந்த அம்சங்களை இதனால் கண்டறிய முடியும். உத்தரப் பிரதேசத்தில் வழக்கத்திற்கு மாறாக விரிவான தானியங்கி வானிலை நிலையங்களின் வலையமைப்பு இருப்பதால் இது சாத்தியமாக அமைந்தது. இந்த நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள், இயல்பாக 12.5 கி.மீ. துல்லியத் தெளிவுத்திறனில் இயங்கும் 'மிதுனா' (Mithuna) எனப்படும் வானிலை முன்னறிவிப்பு மாதிரியை 1 கி.மீ துல்லியத்தில் செயல்படும் வகையில் "கீழ்நிலைப்படுத்தப்பட்டு" (downscaled) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற உயர் துல்லியத்தன்மை கொண்ட வானிலை முன்னறிவிப்புகளை மற்ற மாநிலங்களுக்கும் வழங்குவதற்காக, அவர்கள் தங்கள் வானிலை நிலையத் தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவதாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறினார்.


பரந்த கண்ணோட்டம் என்ன?


இரண்டு போக்குகள் ஒன்றிணைகின்றன. ஒன்று, வானிலை முன்னறிவிப்புகளை வெறும் வானிலை சார்ந்த துல்லியமாக மட்டும் இல்லாமல், விவசாயத்திற்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வேளாண் அமைச்சகத்தின் முயற்சியாகும். மற்றொன்று, பாரம்பரிய இயற்பியல் அடிப்படையிலான மாதிரிகளைச் செயற்கை நுண்ணறிவுடன் இணைப்பதற்கும், மாநில அளவிலான கண்காணிப்பு வலையமைப்புகள் இருக்கும் இடங்களில் அவற்றைச் சார்ந்திருப்பதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) அதிகரித்துவரும் விருப்பம். மேலும், மாநில அளவிலான கண்காணிப்பு வலையமைப்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ, அங்கெல்லாம் அவற்றை அதிகம் சார்ந்தும் வருகிறது. மேலும், எல்-நினோ உட்பட 2026-ம் ஆண்டுப் பருவமழை, அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான களமாக அமையும்.






Original Link: What has the IMD announced ahead of this year’s monsoon? 


Share: