நமது நாடு தனது நிலக்கரித் தேவையில் 25-30% இறக்குமதி செய்வதால், 20-25 ஆண்டுகால வளங்களின் இருப்புநிலையானது எரிபொருள் விலையின் அபாயத்தைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) உற்பத்தி, தொடர்ச்சியான எரிபொருள் விநியோக அபாயங்களுக்கான தன்மையைக் குறைப்பதுடன், செலவு அமைப்பை ஆரம்பக்கட்ட முதலீடு மற்றும் அமைப்புரீதியிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக மாற்றியமைக்கிறது.
மார்ச் 2026-ல், ஒன்றிய மின்சார ஆணையம் 2026-2027 முதல் 2035-2036 வரையிலான தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தை (National Generation Adequacy Plan (NGAP)) வெளியிட்டது. 2035–36-ஆம் ஆண்டிற்கான மின் உற்பத்தி ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காக, குறைந்தபட்சச் செலவு மிகையாக்கம் (combining least-cost optimization), மின் விநியோக மாதிரி உருவாக்கம் மற்றும் நிகழ்தகவு சார்ந்த நம்பகத்தன்மைப் பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும், மிகவும் விரிவான மின் திட்டமிடல் பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் 1,100 ஜிகாவாட்க்கும் அதிகமான மொத்த மின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. இத்திறனில், 70% புதைபடிவமற்ற எரிபொருள் சார்ந்த திறனாகவும், 174 GW / 888 GWh அளவிலான மின் சேமிப்புத் திறனையும் உள்ளடக்கியுள்ளது.
2025-26 மற்றும் 2035-36-க்கு இடையில் 87.2 ஜிகாவாட் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தித் திறனை கூடுதலாகச் சேர்க்கப்படுவது ஒரு முக்கியமான விளைவாகும். இதன் உற்பத்தித் திறன் அளவையும், நீண்டகால தாக்கங்களையும் கருத்தில் கொண்டு, ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது திட்டமிடப்பட்ட இந்த நிலக்கரி சார்ந்த திறனை, அதே அளவிலான போதுமான மற்றும் நம்பகத்தன்மை தரநிலைகளைப் பராமரிக்கும் அதே வேளையில், கூடுதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) மற்றும் மின் சேமிப்பு வசதிகள் மூலம் ஈடுசெய்ய முடியுமா?
திட்டமிடப்பட்ட 87.2 ஜிகாவாட் நிலக்கரி சேமிப்பின் எதிர்பார்க்கப்படும் கூடுதல் ஆற்றல் மற்றும் போதுமான பங்களிப்பை, எளிமைப்படுத்தப்பட்ட அழுத்த நிலைகளின் கீழ், கூடுதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பின் மூலம் தோராயமாக மதிப்பிட முடியுமா என்பதை ஆய்வு செய்வதற்காக, ஆய்வாளர்கள் ஒரு தீர்மானகரமான மின்-அழுத்தச் சோதனை மாதிரியாக்கப் பயிற்சியை மேற்கொண்டனர்.
பயன்படுத்தப்பட்ட திட்டவட்டமான கருத்துகணிப்புகளின்கீழ், இந்த ஆற்றலின் பங்களிப்பை தோராயமாக அடைவதற்கு கூடுதலாக 191 ஜிகாவாட் சூரிய ஆற்றல், 51 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல், 29 ஜிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் 9 ஜிகாவாட் நீரேற்று சேமிப்பு ஆற்றல் தேவைப்படலாம் என சுட்டிக்காட்டும் மாதிரிகள் (Indicative modelling) தெரிவிக்கின்றன. இது, தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்ட (NGAP) வழித்தடத்தில் இருந்த சுமார் 764 ஜிகாவாட் உடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிலையங்களை சுமார் 1,006 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்.
இருப்பினும், தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தைப் (NGAP) போலல்லாமல், இந்தச் செயல்முறை முழு மின் உற்பத்தித் தொகுப்பிலும் உள்ள முழு-அமைப்பு சார்ந்த இடைவினைகளை மதிப்பீடு செய்வதில்லை. எனவே இதனை ஒரு முழு-அமைப்பு மிகையாக்க விளைவாகக் (full-system optimization study) கருதாமல், ஒரு குறிப்பிட்ட மின்-அழுத்தச் சோதனையாகவே கருத வேண்டும்.
குறைவான காற்றின் நிலைகள் போன்ற நெருக்கடியான காலகட்டங்களைச் சமாளிக்கத் தேவையான கூடுதல் கட்டமைப்பு மற்றும் சேமிப்புத் திறனுக்கான தேவைகள் குறித்த மிதமான கருத்துகணிப்புகளின் கீழும், அத்தகைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறையானது, அமைப்புச் செலவுகளை ஒவ்வொரு ஆண்டும் ₹1.4 லட்சம் கோடிக்கும் மேலாகக் குறைக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், எரிபொருள் விலைகள், சேமிப்புச் செலவுகள், நிதி நிலைமைகள் மற்றும் மின் அமைப்பு ஒருங்கிணைப்புத் தேவைகள் தொடர்பான நிலைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. காலப்போக்கில் நிலக்கரி எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டால், வளங்களின் இருப்பு நிலை முழுவதும் இந்த வேறுபாடு இன்னும் அதிகமாகிறது.
கூடுதலாக, இந்தியா தனது நிலக்கரியில் 25-30% இறக்குமதி செய்வதால், 20-25 ஆண்டுகால வளங்களின் இருப்பு நிலையைப் பொருத்து எரிபொருள் விலையின் அபாயத்தைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, தொடர்ச்சியான எரிபொருள் விநியோக அபாயங்களுக்கான பாதிப்பைக் குறைத்து, செலவுக் கட்டமைப்பை முன்கூட்டிய முதலீடு மற்றும் அமைப்பு ஒருங்கிணைப்பை நோக்கி மாற்றுகிறது.
தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தின் (NGAP) ஒரு முக்கிய அம்சமானது, மின் உற்பத்திக்கு போதுமான தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் முக்கியத்துவம் ஆகும். எனவே, நிலக்கரிக்கு மாற்றாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்தப்பட்டால், அந்த அமைப்பு அனைத்து நேரங்களிலும் அதன் தேவையை நம்பகத்தன்மையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் காரணத்திற்காக, மூன்று அமைப்புசார் கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முதலாவதாக, சேமிப்பின் தொடர்ச்சி இன்றியமையாதது. அடுத்தடுத்த தேவைச் சுழற்சிகள் முழுவதும் சேமிப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். பல நாட்களுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி குறைவாக இருந்தால், சேமிப்பின் அளவு குறையக்கூடும். சேமிப்பு தீர்ந்துவிட்டால், அமைப்பு பாதிப்புக்குள்ளாகி, தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளிகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
இரண்டாவதாக, மின்னேற்றப் போதுமான அளவை (charging sufficiency) உறுதிசெய்யப்பட வேண்டும். சேமிப்பகத்தால் (Storage systems), மின்னேற்றம் செய்யப்பட்டதை மட்டுமே வெளியேற்ற முடியும். 80-88% வரையிலான இருவழித் திறன்களுடன், மின்சுமையைப் பூர்த்தி செய்வதற்கும் மின்னேற்றம் செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, தேவையை விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த கூடுதல் உற்பத்தி, தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சேமிப்பு அமைப்புகளை மீண்டும் மின்னேற்றம் செய்வதற்கும் தேவைப்படுகிறது. இதன் விளைவாக, மின் அமைப்புக்கு உபரித் திறன் அல்லது அதிகப்படியான கட்டுமானம், அத்துடன் அவ்வப்போது குறைப்பும் தேவைப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அமைப்பின் செயல்பாட்டைச் சோதித்ததில், போதுமான திறன் என்பது நிறுவப்பட்ட திறனை (MW) மட்டும் சார்ந்தது அல்ல, மாறாகக் கிடைக்கக்கூடிய சேமிக்கப்பட்ட ஆற்றலையும் (MWh) சார்ந்துள்ளது என்பது தெரியவருகிறது.
மூன்றாவதாக, வருடாந்திர ஆற்றல் வழங்கல் போதுமானதாக இருந்தாலும், குறிப்பிட்ட காலங்களில் பற்றாக்குறைகள் ஏற்படலாம். உதாரணமாக, சூரிய ஆற்றல் நேரத்திலிருந்து சூரிய ஆற்றல் அல்லாத நேரங்களுக்கு மாறும் போது, அல்லது நீண்டகாலத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது பற்றாக்குறைகள் ஏற்பட்டு, தொகுதி அளவில் மின் பற்றாக்குறைகளை உருவாக்கக்கூடும்.
தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டம் (NGAP) ஏற்கனவே மேம்பட்ட நிகழ்தகவு மாதிரியாக்கம் (sophisticated probabilistic modelling) மற்றும் காலவரிசை விநியோகப் பகுப்பாய்வு (chronological dispatch analysis) மூலம் இந்தச் சூழ்நிலைகளில் பலவற்றைக் கண்டறிகிறது. இருப்பினும், வெளியிடப்பட்ட முடிவுகள், வெளிப்படையான நிலக்கரி மாற்று அழுத்தச் சூழ்நிலைகளின்கீழ், குறிப்பாகத் தொடர்ச்சியான குறைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அல்லது சேமிப்புத் தீர்வு காலங்களில், இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிடுவதை எளிதாக்குவதில்லை.
நிர்ணயவாத அழுத்தச் சோதனைகள் (Deterministic stress tests), இந்த அமைப்பு நடத்தைகளை மேலும் வெளிப்படையானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம் தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டக் (NGAP) கட்டமைப்பிற்குத் துணைபுரிய முடியும். இது தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டத்தின் (NGAP) வழிமுறையை மாற்றிவிடாது. ஆனால் முக்கிய திட்டமிடல் தேர்வுகள் குறித்த வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தக்கூடும். மேலும், கண்டறியப்பட்ட நிலக்கரித் திறன், சேமிப்புக் காலம், பரிமாற்றத் தயார்நிலை அல்லது நிறுவுவதற்கான காலக்கெடு போன்ற கட்டுப்படுத்தும் அமைப்புசார் கட்டுப்பாடுகளைப் பிரதிபலிக்கிறதா அல்லது காலப்போக்கில் மாறக்கூடிய கருத்துகணிப்புகளால் முடிவுகள் பாதிக்கப்படுகின்றனவா என்பதை நிறுவவும் இது உதவும்.
அனல் மின் நிலையங்களைச் (thermal plants) செயல்பாட்டுக்குக் கொண்டுவர பொதுவாக 6-8 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேமிப்பு அமைப்புகளைப் (storage systems) பெரும்பாலும் விரைவாக நிறுவ முடியும் என்பதால், மாற்று வழிகளை வெளிப்படைத்தன்மையுடன் மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எல்-நினோ மற்றும் லா-நினோ நிகழ்வுகள் மின்சாரத் தேவையைப் பாதிக்கின்றன. எனவே, இதற்கான பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கான இருப்புத் திறன் திட்டமிடலில், அனல் மின்சாரம், சேமிப்பு மற்றும் நீர்மின்சக்தி ஆகியவை பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதால், அத்தகைய காலநிலைத் தாக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள், ஒரு எரிசக்தி மாற்ற நிலையின் ஒரு பகுதியாகவே கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மாறாக, நிச்சயமற்ற தன்மையின் கீழ் போதுமான தன்மையையும், அமைப்புரீதியான நம்பகத்தன்மையையும் தக்கவைத்துக் கொண்டே, நுகர்வோருக்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சேமிப்பு மற்றும் அனல் மின் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தேசிய மின் உற்பத்திப் போதுமான திட்டம் (NGAP) கடுமையான வழிமுறை, ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, மலிவுத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பைச் சிறந்த முறையில் அதிகரிக்கக்கூடிய வழியைக் கண்டறிய, நெருக்கடியான சூழ்நிலைகளின்கீழ் மாற்று வழிகளைச் சோதிக்க வேண்டும்.
அலெக்சாண்டர் ஹோகவீன் ரூட்டர், வளப் போதுமான திட்டமிடலில் அனுபவமுள்ள ஒரு தன்னார்வ எரிசக்தி நிபுணர் மற்றும் எரிசக்தி கொள்கையில் கவனம் செலுத்தும் எமர்ஜென்ட் வென்ச்சர்ஸ் மானியதாரர் ஆவார். மார்தாண்ட் ஷர்துல், GWEC-இன் முன்னாள் கொள்கை இயக்குநர் (இந்தியா) ஆவார்.
Original Link: Why India’s generation adequacy plan needs a clear counterfactual.